!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2005/06 - 2005/07 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, June 29, 2005



கானல் காட்டில் கவிதைக் கருத்தரங்கம்

கொடைக்கானல் மலைத் தொடரில் கானல் காடு என்ற தோட்டப் பகுதியில் கவிதைக் கருத்தரங்கு ஒன்று, அண்மையில் நடந்தது. திசைகள் இயக்கமும் சிவகாசி பாரதி இலக்கியச் சங்கமும் இணைந்து ஜூன் 18, 19 ஆகிய நாட்களில் இதனை நடத்தின. மிகவும் இயற்கை எழில் சூழ்ந்த இந்தப் பகுதியில், மெல்லிய குளிரில், சுடாத வெய்யிலில் கவிதை குறித்து உரையாடினோம்.

பொன்னீலன் (மணிகட்டிப் பொட்டல்), தொ.பரமசிவம் (திருனெல்வேலி), பிரம்மராஜன் (தருமபுரி), திலகபாமா (சிவகாசி), தேவேந்திர பூபதி (மதுரை), ரெங்கநாயகி (ஆழ்வார் குறிச்சி), லட்சுமிஅம்மாள் (சிவகாசி), நித்திலன் (கோவை), பெரியசாமி (மதுரை), கண்ணன் (தருமபுரி), சிவக்குமார் (மதுரை), மதுமிதா (இராஜபாளையம்), பா.வெங்கடேசன் (ஓசூர்), த. பழமலய் (விழுப்புரம்), ஜெயச்சந்திரன் (விழுப்புரம்) பா.சத்தியமோகன்(நெய்வேலி), சென்னையிலிருந்து மாலன், இந்திரன், ஆர்.வெங்கடேஷ், வைகைச்செல்வி, கிருஷாங்கினி, இராதாகிருஷ்ணன், தேசபந்து ஆகியோருடன் நானும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டேன்.
யுகபாரதி, அய்யப்ப மாதவன் ஆகியோர் முதலில் வர இசைந்திருந்து, பின்னர் வரவில்லை.

நன்கு திட்டமிட்டு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ஒவ்வோர் ஊரிலிருந்தும் யார் யார், எப்படி எப்படி வருகிறார்கள், அவர்களுக்கான வாகன வசதி, அவர்களை எப்படி குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் ஒன்று கூட்டுவது, உணவு, உறையுள், பானங்கள்... என அவர்களுக்கான வசதிகள், நிகழ்ச்சிக்கான ஒழுங்குகள், பேசப்படவேண்டிய கருப்பொருட்கள், எதை எதை எவ்வளவு நேரம் பேசுவது என்பவை தொடங்கி, எழுவது, உறங்குவது வரை ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துக் கவனித்துச் செய்திருந்தார்கள்.

அறைக்குள் தூங்குவோருக்கு அதற்கேற்பவும் கூடாரத்தில் தங்குவோருக்கு அதற்கு ஏற்பவும் உதவத் தயாராய் இருந்தார்கள். உணவைப் பொறுத்தவரை சைவ / அசைவ விரும்பிகளுக்கு அவரவர்க்கு ஏற்ற உணவை வழங்கினர். அதுவும் மலைப்புறத் தோட்டப் பகுதியில் 'டாண் டாண்' என்று குறித்த நேரத்தில் உணவு வழங்கியது, உரையாடலுக்கு உதவியாக அமைந்தது. காலை, நண்பகல், இரவு என மூன்று வேளை உணவு மட்டுமின்றி, மணிக்கு மணி கொறிப்பதற்கும் ஏதாவது கொடுத்து, வயிற்றைக் குளிர வைத்துவிட்டார்கள். குளிர்ப் பகுதி ஆயிற்றே! வேண்டுவோருக்கு, காலையில் எழுந்ததும் குளிப்பதற்கு வெந்நீர் வழங்கினர். மிகவும் நடுக்கும் குளிர் இல்லை என்றாலும் வந்திருப்பவர்கள் மீதான அவர்களின் அக்கறை வெளிப்பட்டது.

திலகபாமாவின் பிறந்த ஊரான பட்டிவீரன்பட்டியில் ஜூன் 18 அன்று காலை செளந்திரபாண்டியனார் இலக்கியச் சந்திப்பு என்ற நிகழ்ச்சி நடந்தது. அதில் மாலன், பொன்னீலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், தாம் பிறந்த நாடார் குலம் உயரப் பாடுபட்டு, பின்னர் அந்த நாடார் பட்டத்தைத் துறந்து, சாதி நல்லிணக்கத்துக்கு உழைத்த செந்திரபாண்டியனாரைப் பற்றி இருவரும் பேசினர். உள்ளூர்ப் பேச்சாளர்களும் கவிஞர்களும் கலந்துகொண்டனர்.

மதியம் அங்கிருந்து கிளம்பி, கானல் காட்டிற்குப் பயணித்தோம். மாலை போய்ச் சேர்ந்தோம். மலையும் காடுமான பகுதி வழியே நடந்து சென்றோம். இதுவரை பார்த்திராத ஏராளமான மரங்கள், செடிகொடிகள், கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்து அளித்தன. அங்கு உலவிய அடர்த்தியான - கலவையான நறுமணம், இன்னும் நாசியில் நிற்கிறது.

முதலில் சுய அறிமுகமும் கவிதை வாசிப்பும் நிகழ்ந்தன. அதைத் தொடர்ந்து கவிதை, தற்காலக் கவிதை, கவிஞர்களிடம் வாசிப்புக் குறைவு, பொருள் புலப்பாடு, இருண்மை... எனப் பலவற்றைப் பற்றியும் கலந்துரையாடினோம். தனிக் கவிதை, பொதுக் கவிதை என்பது பற்றி உரத்த விவாதம் நிகழ்ந்தது. குறிப்பிட்ட கட்டத்தில் தனிக் கவிதையும் பொதுக் கவிதையாகிவிடும் என்ற கருத்து முன்வைக்கப்பெற்றது.

இரவு உணவிற்குப் பிறகும் விவாதம் தொடர்ந்தது. நள்ளிரவில் தொ.பரமசிவன் எப்படியோ வந்து சேர்ந்தார். அவரும் உரையாடலில் சேர்ந்துகொண்டார். படுக்கச் சென்ற சிலர், உரையாடலைக் கேட்டு மீண்டும் எழுந்து வந்தனர். பாலியல் சொற்களைப் பெண்கள் கையாளும் முறை குறித்து, பிரம்மராஜன் ஆதரவான கருத்துத் தெரிவிக்கவில்லை. "கலிங்கத்துப் பரணியின் காதல் பாடல்களில் காமம் மிதமிஞ்சி இருந்தாலும் அவை, கவிதைகளாக இருந்தன. இக்காலத்தவர் எழுதுபவை, கவிதைகளாக இல்லை" என்றார்.

காலையில் trecking என்று அழைக்கப்பெறும் மலைநடைக்குச் சென்றோம். இரவில் முன்பின்னாக உறங்கியதில் எல்லோரும் ஒரே நேரத்தில் இப்படி நடந்து செல்லவில்லை. நான் கொஞ்சம் பின்னதாகத்தான் நடந்தேன். காலையில் மெல்லிய குளிரில் நடந்தது, நல்ல அனுபவம்.

காலை உணவிற்குப் பிறகு, பேரா. தொ.பரமசிவம், இதுவரை கவிதை என்ற தலைப்பில் ஒன்றரை மணிநேரம் அருமையான உரை நிகழ்த்தினார். "ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஒரு செவ்வியல் இலக்கியம் தலைமை இடத்தை வகித்தது", "மது என்ற ஒரு சொல்லைக் குறிக்கப் பல சொற்கள் உள்ளன. இது, தமிழர்கள் மதுவை எந்த அளவு பயன்படுத்தினார்கள் என்பதைக் காட்டுகிறது", "பண்பாடு மட்டுமின்றி மொழியும் பெண்களின் வழியேதான் தொடர்ந்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்குச் செல்கிறது. பெண்கள் பயன்படுத்தாததால்தான் சமஸ்கிருதம் அழிந்தது".... போன்ற பல கருத்துகளைத் தெரிவித்தார். "சங்க காலத்துப் பாடல்களில் எட்டுத் தொகையை மட்டும் குறிப்பிட்டது ஏன்?" என்று உரைக்குப் பின் பழமலய் கேட்டார். பத்துப் பாட்டு, காலத்தால் சற்றே பிந்தையது என்ற கருத்து இருப்பதாகத் தொ.ப. கூறினார்.

அவரைத் தொடர்ந்து பிரம்மராஜன், ஐரோப்பியக் கவிதைகளுடனான தம் அனுபவங்களையும் தம்மைக் கவர்ந்த கவிஞர்களையும் தாம் மொழிபெயர்த்தவற்றையும் பற்றிச் சுருக்கமாகப் பேசினார். அவரை அடுத்து இந்திரன், ஆப்பிரிக்கக் கவிதைகளுடன் தமக்கு எப்படி அறிமுகம் ஏற்பட்டது, அவற்றை மொழிபெயர்த்தது எப்படி?, அவை எத்தகைய வரவேற்பைப் பெற்றன? என்று கூறிவிட்டு, தாம் மொழிபெயர்த்த ஒரு கவிதையையும் வாசித்தார்.

அதன் பிறகு, பாலுக்கும் அப்பால்: சமகாலக் கவிதைகள் என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. அதில் பல விமர்சனங்களை முன்வைத்தனர். வழக்கம்போல் திலகபாமா, வைகைச்செல்வி, மதுமிதா, ரெங்கநாயகி ஆகியோர் பால்மொழிகளைக் கண்டித்தனர். "எங்களைப் பலரும் ஒரு மாதிரியாகப் பார்க்கின்றனர்" என வைகைச்செல்வி குறிப்பிட்டார். "அது, அவர்களின் விடுதலைக்கான குரல் எனில் அதை முன்வைப்பதில் என்ன தவறு?" என இந்திரன் கேள்வி எழுப்பினார். மாலன் உள்பட பலரும், பால்மொழியானது கவன ஈர்ப்புக்கான கருவி, வணிகத்திற்கு உதவும் உத்தி என்ற கருத்துகளைக் கொண்டிருந்தனர்.

"பெண்களின் பால்மொழி, சமூகத்தின் சகல விதமான அடக்குமுறைகளுக்கும் (பாலியல் உள்பட) எதிரான ஆயுதம். மொழி, ஆண்களால் கட்டமைக்கப்பெற்றுள்ளது. அதை உடைக்கப் பெண்கள், பாலியல் சொற்களை ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர். பாலுணர்வை எழுதுவதைத் தவறாகக் கருதுகிற சமூகக் கண்ணோட்டத்திற்குப் பதிலடி கொடுக்கும் முயற்சியாகவும் இதைக் கருதலாம். இது இப்போதுதான் அரும்பு விட்டுள்ளது. இதற்கே இப்படி உணர்ச்சி வயப்பட்டால் பெண்கள், உண்மையிலேயே தங்கள் பாலுணர்வை வெளிப்படுத்தத் தொடங்கினால், அதை உங்களால் தாங்க முடியாது" என்ற கருத்தை நான் முன்வைத்தேன். கிருஷாங்கினியும் இக்கருத்தை ஆதரித்தார். பலரும் உரத்த குரலில், ஆவேசமாகக் கருத்துரைத்தனர். அனைவரும் தங்கள் கருத்தை முன்வைக்கும் தன்மையில் விவாதம் அமையவில்லை. "எனக்கு மனநிலை பாதிக்கப்பெற்ற மூன்று குழந்தைகள் இருந்தால் நான் கவிதை எழுதிக்கொண்டிருக்க மாட்டேன்" என்று கிருஷாங்கினி கூறினார்.

பெரும்பாலும் பெண் கவிஞர்களின் படைப்புகள் குறித்தே விவாதம் சென்றது. விக்ரமாதித்யன், மகுடேஸ்வரன் ஆகியோரின் பெயர்களைச் சிலர் குறிப்பிட்டாலும் விவாதமாக அது வளரவில்லை. எனினும் கவிதையைக் குறித்துப் பலரும் பல்வேறு கருத்துகளைக் கொண்டிருக்கின்றனர் என்பதை உறுதிப்படுத்தவும் யார் யார் என்னென்ன கருத்துகள் உடையவர்கள் என்பதைச் சிறிது அறியவும் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் தங்கவும் நல்ல காற்றை நுகரவும் இந்த நிகழ்ச்சி, ஒரு வாய்ப்பாக அமைந்தது.

கவிதையை எவ்வாறு புரிந்துகொள்வது, கவிதைக் கலையின் நுணுக்கங்கள், உத்திகள் எனப் பல, இந்த நிகழ்வில் இடம்பெறவில்லை. பிரம்மராஜன், இந்திரன் போன்றோர், இந்தப் பணியைச் செய்வார்கள் என மாலன் நினைத்திருக்கலாம். ஆனால், அவர்கள் வேறு கோணத்தில் உரை நிகழ்த்தினர்.

பல நூறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளதால், எனக்கு ஒரு கருத்து உறுதிப்பட்டு வருகிறது. கவிதை போன்ற நுண்கலைகளைப் பேச்சின் மூலம் அல்லாது எழுத்தின் மூலம் அறிவதே சிறந்ததோ என்று தோன்றுகிறது. பேசும்போது கவிதைகளை அப்படியே மேற்கோள் காட்டுவது கடினம். வெறும் வாய்மொழியிலேயே அனைத்தையும் ஆற்றொழுக்காக, எதையும் விட்டுவிடாமல், முழுமையாகக் கருத்துரைக்கும் அளவுக்கு நம்மவர்கள் திறனை வளர்த்துக்கொள்ளவில்லை. அதற்கு அளப்பரிய நினைவாற்றல் தேவை.

திறந்த வெளியில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வோர், ஒலிவாங்கி ஒன்றை அவசியம் வைத்திருப்பது நல்லது. திறந்த வெளி என்பதால் அதில் ஒலி இழப்பு அதிகம் ஏற்படுகிறது. 'நானும்' என்பது 'ஞானம்' எனச் சிலருக்குக் கேட்கிறது. வாக்கியத்தின் முடிவில் குரல் தேயும்போது, இறுதிச் சொற்களைச் சரியாகக் கேட்க முடியவில்லை. அறைக்குள்ளாவது ஒலிஇழப்புக் குறையும். பதிவு செய்வதிலும் ஒவ்வொருவரும் ஒவ்வோர் ஒலிஅளவில் பேசுவதால் பொது இடத்தில் வைத்திருக்கும் ஒலிப்பதிவுக் கருவியால் துல்லியமாக அவர் பேச்சைப் பதிய இயலாது. கழுத்துப் பட்டை ஒலிவாங்கி போன்றவை இருந்தால் இந்தப் பதிவு, இன்னும் சிறந்ததாக இருக்கும்.

வைகைச்செல்வியுடன் வந்த இராதாகிருஷ்ணன் என்ற வில்விஜயன், சுற்றுச் சூழல் கலைக்குழுவில் பணியாற்றி வருபவர். இவர், இரண்டு நாள்களும் 'மிமிக்ரி' என்ற பல்குரல் கலையின் மூலம் அபாரத் திறமையை வெளிப்படுத்தினார். மு.கருணாநிதி, வைரமுத்து, கமலகாசன், எம்.ஆர்.ராதா, ஜனகராஜ், எம்.ஜி.ஆர்., கிருபானந்த வாரியார்.. எனப் பலரின் குரலில் அன்றைய விவாதத்தில் பேசிய கருத்துகளுக்கு மறுமொழி போல் பேசியமை, அவரின் கவனிப்புக்கும் நினைவாற்றலுக்கும் ஆற்றொழுக்குத் தன்மைக்கும் சான்றாக விளங்கியது.

இலக்கிய நண்பர்களின் அணுக்கத்துடன் கவிதை குறித்து விவாதிக்க ஒரு வாய்ப்பாக, இந்நிகழ்வு அமைந்தது. அந்த மட்டில் இந்த நிகழ்ச்சி, வெற்றிதான். இதே போன்று சென்னைக் கடற்கரையில் தொடர்ந்து நிகழ்ச்சி நடத்தலாம் என்று மாலன் கூறியுள்ளார். இது தொடர்ந்தால், தமிழுக்கு நல்லது.

Friday, June 10, 2005

புத்தகங்களும் நானும்



அண்ணாகண்ணன்

வலைப்பதிவு உலகில் நூல்களின் சங்கிலி வரிசையாகச் சிலர் எழுதி வருகின்றனர். அவ்வரிசையில் இணையுமாறு ஜெயந்தி சங்கர் அழைத்தார். அவர் அழைத்திராவிட்டால் இப்பொழுது இதை நான் எழுதியிருக்க மாட்டேன். அதற்காக அவருக்கு என் நன்றி. சற்றே வேறான ஒரு கோணத்தில் என் நூலுறவுகளைக் குறிப்பிடுகிறேன்.

சுமார் ஐந்து வயதிலிருந்தே எனக்குப் புத்தகங்களுடனான உறவு தொடங்கிவிட்டது. ராணி காமிக்ஸ், லயன் காமிக்ஸ்..., அம்புலிமாமா, கோகுலம்... எனச் சில கிடைத்தன. கிடைக்கும் எல்லாவற்றையும் ஆர்வத்துடன் வாசித்துக்கொண்டிருந்தேன். காமிக்ஸ் புத்தகங்களை அடுத்து, கல்கி, சாண்டில்யன் போன்றோரின் வரலாற்றுப் புதினங்கள், பாலகுமாரன், சுஜாதா போன்றோரின் சமூகப் புதினங்கள் என ஏராளமாக வாசித்திருக்கிறேன்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள வேப்பத்தூரில் என் உறவினர் ஒருவர் நூலகராய் இருந்தார். எனவே விடுமுறைக்கு ஊருக்குச் செல்லும்போதெல்லாம் விரும்பும் நூல்களையெல்லாம் எடுத்து வாசிக்க முடிந்தது.

திருவாரூரில் நான் ஒரு விடுதியில் தங்கிப் படித்தேன். அப்போது அந்தப் பள்ளியின் தாளாளர் ஜானகி அம்மாள் அவர்கள், நூலகத்திலிருந்து நூல்கள் எடுத்து வாசிக்க ஊக்குவித்தார். அதுமட்டுமின்றி, படித்த நூல்களில் உங்களுக்குப் பிடித்த/ பிடிக்காத அம்சங்கள் என்னென்ன என்று ஒரு குறிப்பேட்டில் எழுதிவரச் சொன்னார். அப்படிச் சில புத்தகங்களைக் குறித்து, ஓர் ஏட்டில் எழுதி வந்தேன். அப்போது எனக்கு 15 வயது. புத்தகத்தின் பெயர், ஆசிரியர், பதிப்பகம், பக்கம், விலை எனச் சில விவரங்களையும் எழுதினேன். பின்னர் நாட்குறிப்பு எழுதத் தொடங்கியபோதும் இந்தப் பழக்கம் தொடர்ந்தது. அன்றன்று படித்த புத்தகத்தைப் பற்றி ஒரு சிறிய குறிப்பு / விமர்சனம் எழுதி வைத்தது உண்டு.

பதின்ம வயதில் மாலைமதி வாசித்தேன். அப்போது அதில் பாலியல் சார்ந்த காட்சிகள் இல்லாமல் கதையே இருக்காது. 'மாலைமதி படிக்காதே. கெட்டுப் போய்விடுவாய்' எனப் பெரியவர் ஒருவர் எச்சரித்தார்.

அதே பருவத்தில் அகிலனின் 'சித்திரப் பாவை'யையும் வாசித்த நினைவு உண்டு. பூவண்ணனின் 'புதையல் வீடு' கூட படித்துள்ளேன். சிலவற்றை நூல்களாகவும் தொடராக வெளிவந்த பலவற்றைத் தைத்துக் கட்டிய (பைண்டு செய்த) தொகுதிகளாகவும் வாசித்துள்ளேன்.

கதைகளுக்குப் பிறகு வாழ்க்கை வரலாறுகள், பயண இலக்கியங்கள், அறிவியல் புனைகதைகள் என என் கவனம் திரும்பியது. 'காரின் அழிவுக் கதிர்' என்ற இரஷ்ய மொழிபெயர்ப்பு நூல், என் கவனத்தைப் பெரிதும் கவர்ந்தது. அது குறித்து, நானும் நண்பர்கள் சிலரும் சேர்ந்து நடத்திய இலக்கியப் பாசறை என்ற சிற்றிதழில் ஒரு விமர்சனம் எழுதினேன்.

நான் மிகவும் விரும்பிப் படித்த நூல்கள் சில உண்டு. 'ஜே.ஜே. சில குறிப்புகள்' நூலை வாசிக்க எடுத்திருந்தேன். அந்நேரம் எனக்கு வேறு வேலைகளும் இருந்தன. என்ன செய்வது? உடற்பயிற்சி செய்யும் போது, பலவித ஆசனங்களைச் செய்துகொண்டே அந்நூலை வாசித்தேன். குனிந்து செய்யும் உடற்பயிற்சியின்போது நூலைத் தரையில் வைத்தேன். அண்ணாந்து பார்த்துச் செய்பவற்றில் நூலை ஆகாயத்தில் தூக்கிப் பிடித்துக்கொண்டேன். பக்கவாட்டில் சாய்ந்து செய்யும் ஆசனங்களில் நூலையும் பக்கவாட்டுக்குக் கொண்டு சென்றேன். நான் எந்தக் கோணத்தில் சென்றாலும் என் கண்களுக்கு எதிரே அந்த நூலைக் கொண்டு சென்றேன்.

ஆனால், இப்படித் தீவிரமாகப் படித்த நூல்களின் கருத்துகளை எல்லாம் நான் ஏற்றுக்கொண்டு விட்டேனா என்றால் இல்லை. கண்ணுக்குத் தெரியாத ஒரு தீச்சுவர் நம் மனத்தில் உள்ளது. அது, நம் மனம் விரும்பாதவற்றை உள்ளே அனுமதிக்காது.

பலவிதமான தருணங்களில் எனக்குப் பலவிதமான நூல்கள் பரிசாகவும் அன்பளிப்புகளாகவும் வந்துள்ளன. போட்டிகள் பலவற்றில் வெல்பவருக்கு நூல்கள் அளிப்பது வழக்கம். கவியரங்கம், கருத்தரங்கம் ஆகியவற்றில் கலந்துகொள்ளும்போதும் இந்த வழக்கம் உண்டு.

பழைய புத்தகக் கடைகளில் பலவிதமான நூல்களை மிகவும் குறைவான விலையில் வாங்கிப் படித்தது உண்டு. நண்பர்களிடம் இரவல் வாங்கிப் படித்ததும் உண்டு. நானும் பலருக்கு நூல் இரவல் அளித்துள்ளேன். இரவல் நூல்கள் பலவும் போனவரிடம் தங்கி விடுவது உண்மை. அதனால் அடுத்த வேறு யாரேனும் நூல் கேட்டாலும், முன் எச்சரிக்கையோடு 'இல்லை' என்று கூறியிருக்கிறேன். ஆயினும் மனம் கேட்காமல் கொடுத்த நூல்கள், நண்பர்களிடம் இன்னும் பத்திரமாக இருக்கின்றன!

நூல்களைப் பாதுகாக்கும் பணி, இன்னும் சிரமமானது. அடிக்கடி தூசி அடையும் அவற்றைத் தூய்மை செய்வது, கடினம். தூசி ஒவ்வாமை உள்ள எனக்கு, இன்னும் மிகக் கடினம். வேறு யாரையேனும் இதைச் செய்யப் பணித்தால், துறை வாரியாக நான் பிரித்து வைத்த நூல்கள் கலைந்து, மூலைக்கு ஒன்றாக, அட்டை மாறிப்போய், ஓரங்கள் கிழிந்துபோய்க் கிடக்கும்.

வாசகராக மட்டுமின்றி, வேறு வகைகளிலும் புத்தகங்களுடன் எனக்கு உறவு உண்டு.
நான் படைப்பாளியாக உருவெடுத்த பின், இன்று வரை 8 நூல்கள், நூல்வடிவம் பெற்றுள்ளன. அவை:
1. பூபாளம் (கவிதைகள் - 1996)(சொந்த வெளியீடு)
Image hosted by Photobucket.com
2. உச்சம் அடம் ஞானம் உயிர்ப்பு (கவிதைகள் - 1997)(சொந்த வெளியீடு)
Image hosted by Photobucket.com
3. காந்தளகம்-20 ஆண்டுகள் (வணிக வரலாறு -2000)(காந்தளகம் வெளியீடு)
Image hosted by Photobucket.com
4. தகத்தகாய தங்கம்மா (வாழ்க்கை வரலாறு - 2001)(காந்தளகம் வெளியீடு)
Image hosted by Photobucket.com
5. சிங்களவர் வரலாற்று நூல்களின் நம்பகத்தன்மை (மறவன்புலவு க. சச்சிதானந்தனுடன் இணைந்து மொழிபெயர்ப்பு / 2002)(காந்தளகம் வெளியீடு)
Image hosted by Photobucket.com
6. கலாம் ஆகலாம் (சிறுவர் பாடல் / 2002)(கங்காராணி பதிப்பகம்)
Image hosted by Photobucket.com
7. நூற்றுக்கு நூறு (சிறுவர் கதை / 2003)(கங்காராணி பதிப்பகம்)
Image hosted by Photobucket.com
8. தமிழில் இணைய இதழ்கள் (ஆய்வு / 2004)(அமுதசுரபி வெளியீடு)
Image hosted by Photobucket.com

இவை தவிர, சில நூல்களை எழுதி அளித்துள்ளேன். இன்னும் அச்சாகவில்லை. அத்தகையவை:
1. அரசுக்கு எதிராக இரண்டு வழக்குகள் (தஞ்சையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டிற்கு வந்திருந்த ஈழத் தமிழர்கள் சிலரைத் தமிழக அரசு திருப்பி அனுப்பியது. அதை எதிர்த்து மறவன்புலவு க. சச்சிதானந்தனும் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமனும் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் தொடர்பான நூல்)

2. ஈழத்திற்கு மருந்துகள் கடத்தச் சதி செய்ததாக மறவன்புலவு க. சச்சிதானந்தன் உள்பட சிலரைத் தமிழக அரசு கைது செய்தது. பின்னர், தகுந்த ஆதாரம் இல்லை என்று இவர்களை நீதிமன்றம் விடுவித்தது. இது தொடர்பான விவரங்களைத் திரட்டி, ஒரு நூல் எழுதி அளித்துள்ளேன்.

வெளிவராத என் நூல்கள்:
1. சோதனை முயற்சியாக என் இரண்டு கவிதைகளை 33 மொழிகளுக்கு மொழிபெயர்க்கச் செய்துள்ளேன். அவை: தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு, இந்தி, சிந்தி, குஜராத்தி, கொங்கணி, மராத்தி, ஒரியா, சமஸ்கிருதம், மைதிலி, போஜ்புரி, பஞ்சாபி, லடாகி, இராஜஸ்தானி, செளராஷ்டிரா, அவதி, பெங்காலி, உருது, பெர்சியன், அரபி, மகஹி, பிரிஜ்பாஷா, ஆங்கிலம், சிங்களம், இரஷ்யன், ஜப்பானீஸ், ஸ்பானிஷ், ஹீப்ரூ, காசி(Khasi)..... இவற்றை, கவிதைகள் குறித்த மொழிபெயர்ப்பாளர் கருத்துகளோடு ஒரே நூலாக வெளியிடத் திட்டம். தகுந்த வெளியீட்டாளர் அமையாததால் தாமதமாகிறது.

2. அ.க. 47 / AK 47:
என்னுடைய 47 கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணி நடந்து வருகிறது. இது முடிந்தால் இடது பக்கம் தமிழும் வலது பக்கம் ஆங்கிலமுமாக, இருமொழி நூலாக வெளியிட எண்ணம். இவை இரண்டுக்கும் நல்ல பதிப்பாளரை எதிர்நோக்கியுள்ளேன்.

3. நான் எடுத்த நேர்காணல்கள், எழுதிய கட்டுரைகள், வானொலி உரைச்சித்திரங்கள், கவிதைகள், சிறுவர் பாடல்கள்... எனச் சுமார் 10 நூல்கள், இன்னும் நூல் வடிவம் பெறவேண்டி உள்ளது.


இவை தவிர, நான் பதிப்பாசிரியராகவும் சில நூல்களுக்குப் பணியாற்றியுள்ளேன். அவை:
1. விவாதங்கள்... சர்ச்சைகள்... - வெங்கட் சாமிநாதன் (அமுதசுரபி வெளியீடு)
2. மலர்மன்னன் கதைகள் - மலர்மன்னன்(அமுதசுரபி வெளியீடு)
3. காப்டன் கல்யாணம் - வசுமதி ராமசாமி (அமுதசுரபி வெளியீடு)

நான் தயாரித்து அளித்த நூல்கள்:
1. பாரதியார் சரித்திரம் - செல்லம்மா பாரதி(அமுதசுரபி வெளியீடு)
2. தங்கம்மாள் பாரதி படைப்புகள் - தங்கம்மாள் பாரதி(அமுதசுரபி வெளியீடு)

இவை தவிர நூற்றுக்கணக்கான நூல்களுக்கு மெய்ப்பாளராக(proof reader)ப் பணியாற்றியுள்ளேன்.

எழுத்துத் திறம் குறைவான சிலருக்காக, அவர்களிடமிருந்து கருவைப் பெற்று நூலாக்கித் தந்துள்ளேன் (நூல், அவருடைய பெயரில் வரும்).

நூலாக்கத்தில் மட்டுமின்றி, இதழ்களிலும் அரங்குகளிலும் பல முறைகள் நூல் திறனாய்வு புரிந்ததும் உண்டு.

என் இல்லத்தில் புதிதும் பழையதுமாக 500க்கும் மேலான புத்தகங்கள் உள்ளன. என் அலுவலகத்தில் இரண்டு ஆயிரத்திற்கும் மேலான நூல்கள் உள்ளன. மாதந்தோறும் சுமார் 100 புத்தகங்கள், அமுதசுரபி நூல் விமர்சனத்திற்கு வருகின்றன. இவை அனைத்தையும் நான் படித்ததில்லை. அதற்கு நேரமும் இல்லை. தேவைக்கு ஏற்பவும் மனநிலைக்கு ஏற்பவும் சிலவற்றைப் படிக்கிறேன்.

மூன்று நூலகங்களில் நான் உறுப்பினராக உள்ளேன். இந்த நூலகங்களுக்கு நூல் எடுப்பதற்காகச் சென்று, ஆண்டுக் கணக்கில் ஆகின்றன. இணையத்தில் இலவச மின்னூல்களும் மதுரைத் திட்டம், சென்னை நெட்வொர்க் போன்ற தளங்களில் நல்ல தொகுப்புகளும் கூடிக்கொண்டே வருகின்றன. இன்று நம் வீட்டில் எவ்வளவு புத்தகங்கள் உள்ளன என்பது முக்கியமில்லை. படிப்பதற்கு நமக்கு எவ்வளவு நேரம் உள்ளது என்பதே முக்கியம்.

இன்னொரு முக்கிய நோக்கு: நான் இன்று வரை சில ஆயிரம் நூல்களைப் படித்திருப்பேன். அவை அனைத்தும் என் நினைவில் இல்லை. அப்படி இருப்பது சாத்தியமும் இல்லை. நான் படித்து மறந்து போய்விட்டேனே! அந்தப் புத்தகங்களை நான் எந்த வகையில் சேர்ப்பது? படித்த வகையிலா? படிக்காத வகையிலா?

என் வாசிப்பு, இந்த அழகில் இருக்கும்போது, நான் இன்று படிக்கும் நூல்கள் எதிர்காலத்தில் என் நினைவில் இருக்குமா? இருக்காது எனில் நான் இன்று படிப்பதன் பயன் என்ன? இன்பமோ, துன்பமோ, உடனடியாகக் கிடைக்கும் ஏதோ ஓர் உணர்வுதான் பயனா? எழுத்து, என் வாழ்வை மாற்றி அமைக்க நான் அதை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டாமோ?

வரி விடாமல் படித்த ஒரு தலையணைப் புத்தகம், ஒரு கனவுக் காட்சியைப் போல் தோன்றுகிறது. சில வேளைகளில் ஒரு நூலில் வாசித்த காட்சி, வேறொரு நூலுடையதாகத் தோன்றுகிறது. எங்கோ படித்திருக்கிறேன்... ஆனால், எங்கே என்று நினைவில்லை என்ற நிலையிலும் பல வாசகங்கள், சம்பவங்கள் நினைவில் ஆடுகின்றன.

யாருக்கேனும் இளவயதில் படித்த பாடப் புத்தகங்கள் முழுதும் நினைவில் உள்ளனவா? கட்டுரைப் போட்டிகளில் குறிப்புத் திரட்டி நான் எழுதிய ஆக்கங்கள், பேச்சுப் போட்டிகளில் நான் பேசிய பேச்சுகள், நண்பர்களுடன் உரையாடிய நாட்கள்... இவை யாவற்றையும் புகை நடுவேதான் காண முடிகிறது.

நான் எழுதுவதற்கான பல காரணங்களில் ஒன்று: எழுதாவிட்டால் நான் மறந்துவிடுவேன்.

இளவயதில் நான் நூல்களைக் கண்டு மலைத்ததில்லை. வாசிப்பதாயினும் படைப்பதாயினும் இன்றுவரை அது எனக்கு எளிதே. எழுத்தாளர் ஒருவர் (அலெக்சாண்டர் டூமாஸ் என்று நினைவு), உலகிலேயே அதிக அளவாக 1,400 நூல்கள் எழுதியதாக ஒரு செய்தி படித்தேன். 'இந்தச் சாதனையை நான் முறியடித்துக் காட்டுகிறேன்' என்று அப்போது நான் சொல்லிக்கொண்டேன்.

உலகிலேயே அதிகப் பக்கங்கள் உள்ள ஒரு நூல் என ஏதோ ஒன்றைப் பற்றிப் படித்தேன். அப்போதும் 'இதைத் தாண்ட என்னால் முடியாதா, என்ன?' என என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் என்ற செய்தியைக் கேள்விப்பட்டேன். 'ஆகா, இந்தப் பெருமையையும் நான் விட்டுத் தரமாட்டேன்' என எனக்குள்ளேயே கூறினேன்.

அளவு மட்டுமே சாதனை ஆகாது. உள்ளடக்கமே முக்கியம் என அறிவேன். சிறப்பான உள்ளடக்கத்துடனேயே பேரெண்ணிக்கையில் படைப்பது சாத்தியம் என எண்ணியிருந்தேன்.

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பானது, வெளியான நூல்களில், கிடைத்த சிலவற்றை ஆராயும் சிலரின் கருத்தே தவிர, அறிவிக்கப்படும் அவர் உலகிலேயே சிறந்த படைப்பாளி எனக் கருத முடியாது. என் சமகாலப் படைப்பாளி, என் எழுத்துக்குப் பதில் சொல்லிவிட்டு என்னைக் கடந்து போகட்டும். வெற்றியோ, தோல்வியோ அதைப் பற்றிக் கவலையில்லை. ஒரு கடும் போட்டி அவருக்குக் காத்திருக்கிறது என்றெல்லாம் சொல்லிக்கொண்ட காலம், அது.

மிதமிஞ்சிய தன்னெழுச்சியுடன் நான் நூல்களை அணுகினேன். புத்தகத்தை எடுக்கும்போது, அடிமைச் சிந்தனையுடன் கண்ணில் ஒற்றிக்கொள்ளுவோர், பலர். நானோ, அவற்றைச் செவ்வி கண்டேன். 'நீ இப்போது புதிதாக என்ன சொல்லப் போகிறாய்?' எனக் கேள்விக்குறியோடு பலவற்றை நான் அணுகியுள்ளேன்.

சில நிகழ்வுகள், இதை வலுப்படுத்தின. என் கருத்தினை யாரோ ஒரு வெளிநாட்டுச் சிந்தனையாளனின் பொன்மொழிகளில் வாசித்தபோதும், நான் எழுதியதுபோன்ற கவிதைகளைச் சில மொழிபெயர்ப்புகளில் கண்டபோதும், என் உணர்வுகளை வேற்றுநாட்டுப் படைப்பாளி பிரதிபலித்த போதும் என்னைப் போலவே இவர்களும் சிந்தித்திருக்கிறார்களே என எண்ணியது உண்டு. அவர்களுக்கு நான் எந்த வகையிலும் குறைந்தவன் இல்லை; அவர்களை விடவும் சிறந்த உயரங்களுக்கு என்னால் செல்ல முடியும் என்று கூறினேன்.

அ·து, ஒரு காலம். பிற்பாடு நான், மாறினேன். யாவற்றின் மீதும் பற்றற்ற மனநிலையை நோக்கி இப்போது பயணிக்கிறேன். பயணச் சீட்டு எடுத்துவிட்டேன்; போய்ச் சேர்ந்தேனா என்பதை உடனே சொல்ல இயலாது. இது மிகப் பெரிய பிம்பமாக இருந்தால், பற்றுக் குறைந்த நிலை என்று வைத்துக்கொள்ளுங்கள். நடப்புகளின் மீது, நான் ஆவேசம் கொள்ளுவது இல்லை. அப்படி நான் உணர்ச்சிவயப்படுவேன் ஆயின் அது என் பொருட்டு அன்று. மருத்துவர், கத்தியைக் கையில் எடுப்பது, உணர்ச்சிவயப்பட்டு அன்று. சிகிச்சையின் பொருட்டே.

'இங்கே ஒருவன் இருக்கிறேன், இருக்கிறேன் என்று இந்தச் சமூகத்திற்கு நான் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கவேண்டுமா, என்ன? தேவையானால் சமூகமே, உனக்கு என்ன வேண்டும் என்று கேள். தர முயல்கிறேன்' என்று இப்போது என் மனம் சொல்கிறது.

புத்தகங்கள், எப்போதும் எனக்கு எண்ணற்ற சிறகுகளை அளிக்கக் கூடியவை. பறந்துகொண்டே இருக்கிறேன். சிறகடிக்காமலும் சில நேரங்கள் என்னால் பறக்க முடிகிறது. அது, ஏற்கெனவே சிறகசைத்ததாலேயே இயல்கிறது. பரந்த வானில் ஒரு புள்ளியாகப் பறக்கிறேன்; பறந்துகொண்டே இருக்கிறேன்.

Sunday, June 05, 2005

தமிழில் மிதிவண்டி உதிரி பாகங்கள்



அண்ணாகண்ணன்

மூன்று மாதங்களுக்கு முன் முதல்வர் ஜெ. ஜெயலலிதா, சட்டப் பேரவையில் பேசினார். விவாதத்திற்கு இடையில் 'சைக்கிள் ஸ்பேர் பார்ட்சுகள் நூற்றினைத் தமிழில் சொல்ல முடியுமா?' எனக் கோ.க. மணியிடம் கேட்டார். அதற்கு அவரால் உடனே பதில் சொல்ல முடியவில்லை.

கடந்த இரண்டு வாரங்களாக இது குறித்துத் தொடர்ந்து சிந்தித்து வந்தேன். மிதிவண்டி உதிரி பாகங்களுக்கான ஆங்கிலப் பெயர்களை முதலில் பட்டியலிட்டேன்; http://www.firstflightbikes.com உள்பட பல்வேறு இணைய தளங்களில் தேடினேன். தொழிற்கருவிகள், துணைப் பொருள்கள், செய்யும் வேலைகள் ஆகியவற்றையும் சேர்த்துக்கொண்டேன். பிறகு, அவற்றுக்குப் பொருத்தமான தமிழ்ச் சொற்கள் குறித்து ஆராய்ந்தேன். என் இளவல், எந்திரப் பொறியாளர் பிரசன்னா ஒத்துழைத்தார்.

உதிரி பாகங்களை அவற்றின் உருவம், செயல்பாடு, பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தமிழாக்கியுள்ளேன். பெரும்பாலும் காரணப் பெயர்களாக வருமாறு அமைத்துள்ளேன். மிதிவண்டியின் முன்பகுதியிலும் பின்பகுதியிலும் உள்ளவற்றைத் தனித்தனியே கூற வேண்டியுள்ளது. ஏனெனில் அவை, ஒரே மாதிரியானவை அல்ல. முன்னதைப் பின்னதன் இடத்திலோ, பின்னதை முன்னதன் இடத்திலோ பயன்படுத்த இயலாது. எனவே, இரண்டும் தனித்தவை ஆகின்றன. ஆகவே, தனித் தனிப் பொருட்களாகக் காட்டியுள்ளேன். இப்போதைக்கு 153 சொற்கள் கிடைத்துள்ளன. அவை பின்வருமாறு:

Tube - மென் சக்கரம்
Tyre - வன் சக்கரம்
Front wheel - முன் சக்கரம்
Rear wheel (or) Back wheel - பின் சக்கரம்
Free wheel - வழங்கு சக்கரம்
Sprocket - இயக்குச் சக்கரம்
Multi gear sprocket - பல்லடுக்குப் பற்சக்கரம்
Training wheels - பயிற்சிச் சக்கரங்கள்

Hub - சக்கரக் குடம்
Front wheel axle - முன் அச்சுக் குடம்
Rear wheel axle - பின் அச்சுக் குடம்
Rim - சக்கரச் சட்டகம்

Gear - பல்சக்கரம்
Teeth - பல்
Wheel bearing - சக்கர உராய்வி
Ball bearing - பந்து உராய்வி
Bottom Bracket axle - அடிப்புறத் தண்டியக்கட்டை அச்சு
Cone cup - கூம்புக் கிண்ணம்
Mouth valve - மடிப்பு வாய்
Mouth valve cover - மடிப்பு வாய் மூடி

Chain - சங்கிலி
Chain link - சங்கிலி இணைப்பி
Chain pin - இணைப்பி ஒட்டி
Adjustable link - நெகிழ்வு இணைப்பி
Circlip - வட்டக் கவ்வி
Chain lever - சங்கிலி நெம்பி

Frame - சட்டகம்
Handle bar - பிடி செலுத்தி
Gripper - பிடியுறை
Cross Bar - குறுக்குத் தண்டு
Cross Bar cover - குறுக்குத் தண்டு உறை
Sissy Bar - சிறுமியர் இருக்கைத் தண்டு

Dynamo - மின் ஆக்கி
Head light - முகப்பு விளக்கு
Danger light (or) Light reflector - அபாய விளக்கு (அ) ஒளிதிருப்பி
Rearview Mirror - பின்காட்டி

Back Carrier - பொதி பிடிப்பி
Front Carrier Basket - பொதி ஏந்தி
Carrier support legs - பொதி பிடிப்பித் தாங்கு கால்கள்
Side box - பக்கவாட்டுப் பெட்டி

Stand - நிலை
Side stand - சாய்நிலை
Speedo meter (Odo meter) - வேகம்காட்டி
Fender - வண்டிக் காப்பு
Derailleurs - பற்சக்கர மாற்றி
Peg - ஆப்பு
Air pump - காற்றழுத்தி
Shock absorber - அதிர்வு ஏற்பி

Break - நிறுத்தி
Break shoes - நிறுத்துக்கட்டை
Break wire - நிறுத்திழை
Break Lever - நிறுத்து நெம்பி
Front break ankle - முன் நிறுத்துக் கணு
Back break ankle - பின் நிறுத்துக் கணு
Disc brake - வட்டு நிறுத்தி
Break connecting links - நிறுத்தி இணைப்பிகள்

Pedal - மிதிக்கட்டை
Reflecting Pedal - ஒளிதிருப்பி மிதிக்கட்டை
Pedal cover - மிதிக்கட்டை உறை
Pedal cup - மிதிக்கட்டைக் குமிழ்
Pedal rod - மிதிக்கட்டைத் தண்டு
Spindle - சுழலும் மிதிக்கூடு

Seat (Saddle) - இருக்கை
Seat Post - இருக்கை தாங்கி
Baby Seat - குழந்தை இருக்கை
Seat cover - இருக்கை உறை
Leather Seat - தோல் இருக்கை
Cushion seat - மெத்திருக்கை

Washer - நெருக்கு வில்லை
Tension washer - மிகுநெருக்கு வில்லை
Screw - திருகுமறை
Nut - ஆணி இறுக்கி
Bolt - திருகாணி
Spring - சுருள்
Bush - உள்ளாழி
Lever - நெம்பி
Rust - துரு
Balls - பொடிப்பந்துகள்
Crank - வளைவு அச்சு
Rivet - கடாவு ஆணி
Axle - அச்சு
Spring chassis - சுருள் அடிச்சட்டம்
Nose spring - சுருள் முனை
Fork - கவை
Horn - ஒலியெழுப்பி
Cable - கம்பியிழை
Knuckles - மூட்டுகள்
Clamp - கவ்வி
Ring - வளையம்
Hole - ஓட்டை
Hook - கொக்கி
Spokes - ஆரக்கால்கள்
Spoke guard - ஆரக் காப்பு
Spoke fixing screw - ஆரக்கால் திருகாணி
Spanner - மறைதிருகி
Spokes spanner - ஆரக்கால் மறைதிருகி
Screw driver - திருப்புளி
Tools - கருவிகள்
Pocket tools - பையடக்கக் கருவிகள்

Front Mud Guard - முன் மணல் காப்புறை
Back mud guard - பின் மணல் காப்புறை
Chain Guard - சங்கிலிக் காப்புறை
Dress Guard - ஆடைக் காப்புறை
Gloves - கையுறை
Head set - தலைக்கவசம்
Wrist band - மணிக்கட்டுப் பட்டை

Bell - மணி
Bell lever - மணி நெம்பி
Bell cup - மணி மூடி
Bell spring - மணிச் சுருள்
Bell frame - மணிச் சட்டகம்
Bell rivet - மணி கடாவி
Bell fixing clamp - மணிப் பொருத்தி

Lock - பூட்டு
Lock fixing clamp - பூட்டுப் பொருத்தி
Key - சாவி
Key chain - சாவிக் கொத்து
Chain lock - சங்கிலிப் பூட்டு

Inner wire - உள்ளிழை
Electrical parts - மின்னணுப் பாகங்கள்
Lighting Spoke - ஒளிரும் ஆரக்கால்
Spokes with balls - மணிகோத்த ஆரக்கால்
Extra fittings - கூடுதல் பொருத்திகள்

Foot rest - கால்தாங்கி
Baby foot rest - குழந்தைக் கால்தாங்கி
Water bottle - தண்ணீர்க் குடுவை

Racing cycle - பந்தய மிதிவண்டி
Mini cycle - சிறு மிதிவண்டி
Mountain cycle - மலை மிதிவண்டி
Foldable cycle - மடக்கு மிதிவண்டி
Wheel chair - சக்கர நாற்காலி
Beach cruiser - கடற்கரைத் துரிதவண்டி
One-wheel cycle - ஒரு சக்கர மிதிவண்டி
High-tech bike - அதிநுட்ப வண்டி
Kid cycle - சிறுவர் மிதிவண்டி
Ladies cycle - மகளிர் மிதிவண்டி
Tri cycle - முச்சக்கர வண்டி (அ) பொதி மிதிவண்டி
Cycle with motor - உந்து மிதிவண்டி

Inflating - காற்றடித்தல்
Patch - பட்டை
Patching - பட்டை வைத்தல்
Patch work - சிறு வேலை (அ) சில்லறை வேலை
Over hauling - முழுச் சீரமைத்தல்
Painting - வண்ணம் தீட்டல்
Lubrication - எண்ணெய் இடல்
Wheel bend removal - கோட்டம் எடுத்தல்

Puncture - துளை
Puncture closure - துளைமூடல்
Puncture lotion - துளைமூடு பசை
Emory paper (Abrasive sheet) - தேய்ப்புப் பட்டை (உப்புத் தாள்)
Wooden mallet - மரச் சுத்தி

Grease - உயவுப் பசை
Lubricant oil - உயவு எண்ணெய்
Waste oil - கழிவு எண்ணெய்

இந்தச் சொற்களை விடச் சிறந்த - பொருத்தமான சொற்கள் உங்களுக்குத் தோன்றினால் தெரிவியுங்கள்; மாற்றலாம். இவை தவிர மேலும் உள்ள சொற்களை, படிக்கிற நீங்கள் தெரிவியுங்கள். அவற்றையும் தமிழாக்க முயல்வோம். முதலில் சொற்களை வரையறுப்போம்; பின்னர் அவற்றைப் பயன்படுத்துவோம்.

Wednesday, June 01, 2005

கவிதாயினி பூரணி

பாட்டுக்கும் கவிதைக்கும் வேறுபாடு உண்டா? இல்லையா?

உறுதியாக உண்டு. ஒழுங்கமைவு உள்ள ஓசையே இசை. அந்த இசை பயின்று வருவதே பாடல். சாதாரண பேச்சுவழக்குச் சொற்களைக்கூட விருப்பம்போல வளைத்துப் பாடலாக்கிவிடலாம். இதனால்தான் 'இழுக்குடைய பாட்டுக்கு இசை நன்று' என்றார்கள். இவை, காதுகளுக்கானவை.

பாடலுக்குள் இடம்பெறும் எதுகை, மோனை, இயைபு, சந்தம் அல்லது இசை, பாடுபவரின் குரல், பக்க வாத்தியங்கள், பின்னணி இசை ஆகியவை, கேட்பவரை ஏமாற்றக் கூடியவை; கவிதை போன்ற ஒரு மயக்கத்தைத் தரவல்லவை. பாடலின் கருத்தையோ, கவிநயத்தையோ(அப்படி ஒன்று இருந்தால்) அணுக விடாமல் கேட்பவரின் கவனத்தைத் திசைதிருப்பக் கூடியவை.

இப்படி எதிர்மறையாக இல்லாமல் சில தருணங்களில் இவை, கவித்துவத்திற்கு உதவும் கூறுகளாகவும் திகழும். அனைத்தும் சேர்ந்து கவிதையை மிக ஆழமாக நம் மனத்தில் பதியவும் வைக்கும். அது, அரிதாகத்தான் நிகழும்.

பாடல், கவிதை என்ற வடிவங்களின் மேல் தவறில்லை. அவற்றைக் கையாளுவோரின் திறனுக்கு ஏற்ப, பாடலுக்குள் கவிதையும் கவிதைக்குள் பாடலும் இடம்பெற வாய்ப்பு உண்டு. அத்தகைய இணைவு, அரிதாகத்தான் நிகழும். திரைப்படப் பாடல்கள் கவிதை ஆகுமா என்ற கேள்விக்கும் இந்தப் பதில் பொருந்தும்.

தமிழ் யாப்பு வடிவங்களுக்குப் பா என்றே பெயர். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பவை, நான்கு வகைப் பாக்கள். இந்தப் பா என்பது, பாட்டைக் குறிக்கிறதா? இல்லை. பாடப்படுபவையே பாடல்கள்; பாடப்படாத நிலையில் இவை செய்யுள்களே. செய்யப்பட்டவை என்பதால் இப்பெயர்.

இந்தச் செய்யுள், பாடல் ஆகியவற்றிலிருந்து கவிதையை எப்படிப் பிரித்து அறிவது? ஓர் எளிய வழி உண்டு. இசையையும் அலங்காரங்களையும் படைப்பிலிருந்து உருவி எடுத்த பின்னும் ஓவியம், புகைப்படம் ஆகியவற்றிலிருந்து விலக்கி வைத்தபின்னும் படைப்பு, உயிர்த் துடிப்புடன் உள்ளதா? நம் உள்மனத்தைக் கவருகிறதா? அத்தகைய படைப்பிற்குள் கவிதை வாழ்கிறது. இன்றைய சூழலில் அதைக் காண்பது கொஞ்சம் கடினம்தான். இந்தச் சிக்கலைப் பிறகு அவிழ்த்துக்கொள்ளலாம். இப்போது பூரணியின் படைப்புகளுக்குள் நுழைவோம். 'படைப்பு' எனச் சொல்லக் காரணம் உண்டு. அது, பாடலா, செய்யுளா, கவிதையா எனக் காணும் வேலையை நான் உங்களிடமே அளிக்கிறேன்.

இன்று 92 வயதுள்ள பூரணி, 1913இல் பிறந்தவர். பாரதி மறைந்த 1921ஆம் ஆண்டு பூரணிக்கு 8 வயது. அடுத்த ஏழு ஆண்டுகளில், தன் 15ஆவது வயதிலிருந்து பூரணியும் படைப்பு முயற்சியில் இறங்குகிறார். அந்தக் காலத்தில் எத்தகையவற்றைப் படைத்தனர் எனப் பூரணியின் ஆக்கங்களிலிருந்து நாம் காணலாம். இவற்றைப் படிக்கும்போது பாரதியை மகாகவி என அழைப்பதன் பொருத்தத்தை உணரலாம்!

புராண, இதிகாசக் கதைமாந்தர்களை வைத்து பாடலுக்குள் கதைசொல்லும் முயற்சியில் பூரணியும் ஈடுபட்டுள்ளார். தமயந்தி ஸ்வயம்வரக் கும்மி என்பதை 1929ஆம் ஆண்டு படைத்துள்ளார். 15 பாடல்களில் தமயந்தியின் கதையைச் சொன்ன பூரணி, இதில் ஒரு புதுமை செய்துள்ளார். 15 பாடல்களையும் அக்காலத்தின் பிரபல பாடல் மெட்டுகளில் வழங்கியுள்ளார்.

நொண்டிச் சிந்தை அடுத்து, "பொன்னுலவு சென்னிகுள", "பத்தொன்பதாம் நூற்றுக்குமேல்", "வாழ்க திலகர் நாமம்", "தந்தனமடி", "ரத்ன ஊஞ்சல் ஆடினார்", "அன்னையே என்", "மாதவர் போற்றிடும்", "கானகம் தாண்டி", "நந்தவனத்தில்", "ஐயா, பழனி மலை", "மருவே சரித்த", "அம்மா வயிற்றைப் பசிக்குது", "வேட்டையாடினான்", "மங்களம் மாதவற்கு" ஆகிய பாடல்களின் மெட்டுகளில் தமயந்தி கதையைக் கூறியுள்ளார். ஒரு கதையை இவ்வளவு பாடல்களின் மேல் ஏற்றிச் சொன்ன பூரணியின் இசையார்வத்தைப் பாராட்டலாம். மூலப் பாடலுடன் ஒப்புநோக்கினால் மட்டுமே இவை எவ்வாறு அந்த இசையில் பொருந்தியுள்ளன எனப் பார்க்க முடியும். ஆனால், இங்கே பாடலின் கருத்தைவிட வடிவத்திற்கே முக்கியத்துவம் தந்துள்ளது தெளிவாகிறது.


1930 முதல் 1945 வரை ஆக்கியவற்றில் அக்கால வழக்கங்களை நன்கு பதிந்துள்ளார். முக்கியமாக முடுகுச் சந்தத்தில்,

சுட்டி பட்டம் ஜடை
சிங்காரம் போச்சு
இஷ்டமுடன் தலையிலே
சிலைடு ரிப்பன் ஆச்சு...

- எனத் தொடங்கும் பாடலின் மூலம் அந்தக் காலத்தில் நிகழ்ந்த பல்வேறு மாற்றங்களை அறிய முடிகிறது. அந்த வகையில் இதற்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு. இதே காலத்தில் நலங்குப் பாடல்களும் இயற்றியுள்ளார். அவற்றில் மீண்டும் பிரபல மெட்டுகளைக் கையாண்டுள்ளார். "மாயப் பிரபஞ்சத்தில்", "நந்தகே லாலா", "பஜனை செய்வோம்", "உள்ளம்தான்" மெட்டுகளில் இந்த நலங்குப் பாடல்கள் அமைந்துள்ளன.

எல்லா உணவுப் பண்டங்களையும் சேர்த்து, 'போஜனப் பாட்டு' என்ற ஒன்றை மெல்லிய நகைச்சுவையுடன் இயற்றியுள்ளார். அக்காலத்தில் என்னென்ன உணவுகள் இருந்தன என்பதை இதன் வழியே அறியலாம். இதையும் "சதா போரே" மெட்டில் பாடியுள்ளார்.

பல பாடல்களில் இவர் என்ன கருவில் பாட்டு எழுதியுள்ளார் என்பதைவிட என்ன மெட்டில் பாட்டு எழுதியுள்ளார் என்பதே முக்கியமாய் இருக்கிறது. ஏனெனில் அக்காலத்தில் இன்னின்ன பாடல்கள் பிரபலமாக இருந்தன என்பதற்கான வரலாற்றுச் சான்றாக இந்த முயற்சி இருக்கிறது. "யாவரும் சுதந்திரமாக", "ஸ்ரீ கண்டேசனை", "பார்க்கப் பார்க்க" ஆகிய மெட்டுகளிலும் இவரிடம் பாடல்கள் உண்டு.

பாரதி பாடல்களின் மெட்டிலும் இவர் பாடல் புனைந்துள்ளார். "விடுதலை விடுதலை", "விட்டு விடுதலையாகி", "ஒளி படைத்த கண்ணினாய்", "ஆடுவோமே பள்ளு பாடுவோமே", "என்று தணியும்" ஆகிய பாடல்களின் மெட்டிலும் இசை நகல் எடுத்துள்ளார். இந்தப் பாடல்கள், மிகச் சாதாரணமானவை; ஆழமற்றவை; ஏதோ விளையாட்டுப் போல் எழுதியுள்ளார்.

திரைப்படப் பாடல்களை அடியொற்றியும் எழுத முயன்றுள்ளார். "சிட்டுக் குருவி", "தங்கத்திலே", "கண்ணும் கண்ணும்", "சொல்லத்தான் நினைக்கிறேன்", "காதலிக்க நேரமில்லை", "நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம்"...போன்ற திரையிசைப் பாடல் மெட்டுகளிலும் பாடல் இயற்றிப் பார்த்துள்ளார்.

பூரணியம்மாளின் தொடக்கக் கால எழுத்து முயற்சிகள், ஏதேனும் ஒன்றைப் பார்த்துப் போலச் செய்தல் முயற்சியிலேயே உள்ளன. தொடக்க நிலைக்கு அது சரி. ஓவியம் கற்க விழைவோர், ஒரு படத்தை மாதிரியாக வைத்தே வரைவது வழக்கம். ஆனால், சில ஆண்டுகளிலேயே அவர், சிறந்த கவிதையை நோக்கி நகர்ந்திருக்கவேண்டும். ஆயினும் பூரணியின் படைப்புகளை வைத்துப் பார்க்கும்போது, அவர் எழுதத் தொடங்கி 40 ஆண்டுகள் வரையும் இப்படி இசை நகல் எடுத்துள்ளார். இது, மிக அதிகமான காலம்.

தன் சொந்த வலுவின் மேல் நம்பிக்கை இல்லாத படைப்புத்தான், இன்னொன்றின் செல்வாக்கை வேண்டி நிற்கும். பிரபலமான ஒன்றைப் பிரதி எடுப்பது, பிரச்சாரத்திற்கு வேண்டுமானால் உதவலாம். அதற்கு இலக்கியம் என்று பெயரில்லை.

படைப்பாளியை ஊக்குவிக்கும் எண்ணமுள்ள நம் நாட்டுப் பெரிய மனிதர்கள் பேரிலும் குற்றமுண்டு. பூரணி என்ன எழுதினாலும் பாராட்டியுள்ளார்கள். ஏனெனில் அதற்கு மேல் சிறப்பாக எழுதுவோர் இல்லை போலும். இது, உண்மையாகவும் இருக்கலாம். ஏனெனில், பெண்கள் படிப்பதே கூடாது என்று இருந்த காலத்தில் பிறந்த பூரணி, ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். அதன்பிறகு தன் சொந்த முயற்சியின் பேரில் இந்த அளவு எழுதியதே அவருக்குப் பெரியதாகத்தான் இருந்திருக்கும்.

ஆனால், அவரை மேலும் மேலும் எழுதத் தூண்டியவர்கள், அவரின் இசையாற்றலைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர். தலைவரை வரவேற்க, ஆண்டுவிழாவில் பாட, நாடகத்துக்கு இடையே பாட.. என்று பாடலாசிரியரைச் சிறிய வட்டத்திற்கு உள்ளேயே சுற்றி வரச் செய்திருக்கிறார்கள்.

பாரதி, காந்தி, நேரு போன்ற தேசத் தலைவர்களைப் போற்றும் துதிகள் எழுதிய பிறகு பூரணி, அடுத்த கட்டத்தை எட்டியுள்ளார். அது, இன்றும் கூட பலரும் பின்பற்றும் உத்திதான். அதாவது, ஒரு கருப்பொருளைப் பல்வேறு விதமாக உவமிப்பது, அந்த உவமைகளை அடுக்குவது. இதன்படி, வாசலில் இட்ட கோலம் எப்படியெல்லாம் இருக்கிறது?, மின்னல் எப்படியெல்லாம் தெரிகிறது?, அலை, கரையை நோக்கி ஏன் ஓடிவருகிறது?, மலை எப்படி தோன்றுகிறது?, வாழ்க்கை எப்படியெல்லாம் நம்முன் நிற்கிறது? எனக் காட்டுகிறார். இங்குதான் கொஞ்சம் உருப்படியான யாப்பமைவு இருக்கிறது.

இதன் பிறகு காட்சி விவரணைகளுக்கு வருகிறார். என்ன பார்த்தார், கேட்டார், உணர்ந்தார் என்பதை அப்படியே அழகாகச் சொல்லத் தெரிந்துவிட்டது. இங்கு பூரணி, தன் பெயர் சொல்லும் அளவுக்குச் சில படைப்புகளை வழங்கியுள்ளார்.

கட்டிவிட்ட கருந்திரையாய்
கங்குல் தன் இருட்பரப்பில்
வெட்டவெளி வானிடையே
மெளனத்தின் சொற்பொழிவாய்
கண்சிமிட்டும் தாரகைகள்
காலக்கதை உரைக்க
மண்சுமக்கும் மானுடங்கள்
மயங்கித் துயின்றுவிட

உறங்கும் உலகத்தில்
உறங்கா ஒரு ஜீவன்
கிறங்கக் குழலெடுத்து
கீதம் இசைக்கிறது.
வெள்ளை மணற்பரப்பில்
வேய்ங்குழலின் மோகனத்தில்
உள்ளம் லயித்திருக்க
ஒரு மனிதன் இசைத்தவமாய்
பரவச நிலை அடைந்து
பாட்டாய் மாறிவிட்டான்

-'நாதம்' என்ற தலைப்பிலான இந்தப் பாடல், இவருடைய முந்தைய படைப்புகளிலிருந்து வேறான ஒரு படைப்பு. 'மெளனத்தின் சொற்பொழிவு' என்ற சொற்சேர்க்கை, பூரணியிடமிருந்து வெளிப்பட்டுள்ளது, அவருடைய மாற்றத்திற்கான சான்று.

அவைகள் மனிதர்கள்
அல்ல, அதனால்
இணையைப் பிரித்து
இஞ்சக்ஷன் செய்து
இனத்தைப் பெருக்கி
இலாபமடை;

நீயோ மனிதன் ஆகையால்,
கருத்தடை மூலம்
குழந்தைகள் ஒழித்து
கட்டற்றுக்
கலவியில் திளை

-'கலி நீதி' என்ற இந்தப் படைப்பில் மனிதனின் முரணை நறுக்கெனக் கூறுகிறார். இதன் மூலம் தன்னால் சுருக்கமாகவும் வலுவாகவும் ஆழமாகவும் ஒரு கருத்தை முன்வைக்க முடியும் எனக் காட்டியுள்ளார்.

அண்மைக் காலமாக இவர் எழுதியுள்ள பாடல்களில் நல்ல பல கேள்விகள் உள்ளன. அவர், சமூகத்தைக் கூர்ந்து கவனிப்பதோடு அதை விமர்சிக்கிறார். அதற்கு எதிர்வினையும் ஆற்றுகிறார்.

போக்குவரத்துப்
பாதைகளும்
நாக்கு வறளாமல்
நல்ல குடிநீரும்
நாட்டு மக்களுக்கு நல்குவது
அரசாங்கத்தின் கடமை.
இதைப்போய் ஏன்
விளம்பரப்படுத்துகிறார்கள் டி.வி.யில்?
கிராமங்கள் அந்நிய நாடா?
தர்மம் செய்கிறார்களா அதற்கு?

- என்ற கேள்வியை அரசியல்வாதிகளின் முன் உரக்க வைக்கிறார்.

ஒற்றைச் சிலம்பால் குற்றவாளி கோவலன்
மற்றதால் நிரபராதி

- என்று சிலப்பதிகாரக் காதையை இரண்டே வரிகளில் கூறுகிறார்.

தாம்பத்யம், போலிகள், கொழுப்பு, எண்ணமும் செயலும், சலிப்பு, பண்பாடு, ஆண் குணம், பெண்களின் நிலை, முதுமை, பெண்ணியம்...இவையெல்லாம் இவரின் படைப்புகளுக்கான தலைப்புகள். தலைப்பு வைப்பதில் பூரணி இன்னும் கவனம் செலுத்தவேண்டும். இவருடைய தலைப்புகளில் கவித்துவத்தை மத்திய புலனாய்வுப் பிரிவேனும் கண்டுபிடிக்குமோ, என்னவோ!

மிக அரிதான ஒன்றைக் குறிப்பிடவேண்டும். பாரதியின் சமகாலத்தில் வாழ்ந்த ஒருவர், இன்றும் நம்மிடையே இருக்கிறார்; அதுவும் அவ்வப்போது ஏதாவது எழுதியபடி. கவிஞர்கள், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, கவிதையின் மீது சலிப்படைவது இயல்பு. பூரணி அவ்விதம் இல்லாமல் தொடர்ந்து இயங்குவதே பாராட்டத்தக்கது. இக்காலச் சூழலுக்கு ஏற்ப, புதுக்கவிதையிலும் எழுத முயலுகின்றார்.

பூரணியின் இயற்பெயர், சம்பூர்ணம். பிறந்த ஊர், பழனி. புகுந்த ஊர், தாராபுரம். இப்போது சென்னையில் வசிக்கிறார். தமிழாசிரியரின் மகளாகப் பிறந்தார். மிக இளம் வயதிலிருந்தே எழுதி வந்தாலும் 2001ஆம் ஆண்டில்தான் இவரின் முதல் நூல் வெளிவந்துள்ளது. அதன் தலைப்பு, பூரணி கவிதைகள். இவர், கபீர் கவிதைகளை தமிழாக்கியுள்ளார். இவருடைய மகளே கிருஷாங்கினி. நூற்றாண்டை நோக்கி வீறு நடைபோடும் பூரணி, நல்ல உடல்நலத்தோடும் மனநலத்தோடும் படைப்பாற்றலோடும் விளங்க வாழ்த்துகிறோம்.

கடமைகள் ஓய்ந்தாலும்
முதுமைநிலை வந்தாலும்
செயலற்ற நினைவோட்டம்
சலியாது தொடர்கிறது
- என்கிறார் பூரணி.

முதியவர்கள், குழந்தைகளுக்குச் சமானம்; குழந்தைகள், தெய்வங்களுக்குச் சமானம்.