!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2006/07 - 2006/08 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, July 28, 2006

தமிழில் பெயரும் வரிவிலக்கும்

தமிழில் பெயர் கொண்ட திரைப்படங்களுக்கு வரிவிலக்கு என்று நடப்பு நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு அறிவித்துள்ளது. உடனே இது தொடர்பான விவாதம் தொடங்கிவிட்டது.

பெயரை மட்டும் தமிழில் வைத்தால் போதுமா? படம் முழுக்கத் தமிழில் இருந்தால்தான் வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று ஒரு தரப்பு. பா.ம.க.வோ, பெயரை மட்டும் தமிழில் வைத்திருந்தால் 50 சதமும் படம் முழுக்கத் தமிழில் பேசி, தமிழ்ப் பண்பாட்டைக் காக்கும் விதத்தில் படம் எடுத்திருந்தால் முழுமையான நூறு சத வரிவிலக்கும் அளிக்கலாம் என்று கூறியது.



'தமிழில் பெயர் வைக்கும் எல்லா தமிழ் திரைப்படங்களுக்கும் வரி விலக்கு என்பதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழ்க் கலாசாரத்தைச் சீரழிக்கும் வகையில் இன்றைய தமிழ் திரைப்படங்கள் அமைந்துள்ளன. அவற்றுக்கு வரி விலக்கு அளிக்கக் கூடாது. முழுக்க முழுக்க தமிழில் பேசி, தமிழ் கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை உள்ளடக்கி, எல்லா வயதினரும் பார்க்கக் கூடிய தமிழ்த் திரைப்படங்களுக்கு மட்டுமே வரி விலக்கு அளிக்க வேண்டும்' என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

இந்த அறிவிப்பை அடுத்து 'சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்' என்ற தலைப்பிலான புதிய படத்தை, 'உனக்கும் எனக்கும்' என்று பெயர் மாற்றிவிட்டார்கள்.





அதே போல் சூர்யா-ஜோதிகா-பூமிகா நடிக்கும் ஜில்லுன்னு ஒரு காதல் என்ற படமும் சில்லுனு ஒரு காதல் எனப் பெயர் மாறியுள்ளது. எந்தப் போராட்டமும் நடத்தாமலே இந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் இந்த முடிவை எடுத்திருப்பது தமிழக அரசுக்கு வெற்றிதான்.

இதே பாணியை இனி வரும் திரைப்படங்களும் பின்பற்றும் என்று எதிர்பார்க்கலாம். வடமொழிப் பெயர்களிலும் பல்வகை பெயர்ச் சொற்களிலும் பெயர் வைத்தால் அப்போது என்ன ஆகும்?

இப்போது எடுக்கப்பட்டு வரும் திரைப்படங்கள் அனைத்தும் ஓரளவு தமிழ்ப் பெயர்களுடனே உள்ளன என்பது ஆறுதல் தரும் செய்தி.

மாயக் கண்ணாடி, கிழக்குக் கடற்கரைச் சாலை, தர்மபுரி, நான் கடவுள், திமிரு, பேசும் தெய்வங்கள், தாமிரபரணி, தீபாவளி, அரண், தண்டாயுதபாணி, தீக்குச்சி, வசந்தம், முனி, பீமா, கண்ணம்மாபேட்டை, திருடி, ஆவணித் திங்கள், அகரம், ஒரு பொண்ணு ஒரு பையன், பொறி, மனசுக்குள்ளே, பண்டிகை, தொடாமலே, செல்லா, சிபி, பொன்னரசன், பிரியாமலே, வெடக்கோழி, நெஞ்சம் மறப்பதில்லை, மெய்க்காவலன், இது காதல் வரும் பருவம், ஆடும்
கூத்து, புதுப் புது ராகம், என் உயிரினும் மேலான, மனதோடு மழைக்காலம் ஆகியவை ஓரளவு தமிழ்ப் பெயர்களே (சிலவற்றில் வடமொழி ஆதிக்கம் உள்ளபோதிலும்).

இதில் என்ன சிக்கல் என்றால் நிறைய ஒற்றுப் பிழைகளோடு இந்தப் படங்கள் வெளிவருகின்றன. 'திருட்டுப் பயலே' என்று இருக்கவேண்டிய பெயர், 'திருட்டு பயலே' என்று இருந்தது. 'கிழக்குக் கடற்கரைச் சாலை' என இருக்க வேண்டிய படம், 'கிழக்கு கடற்கரை சாலை' என அமைந்துவிடும். இவை, தமிழ்ப் பெயர்கள் என்றாலும் பிழையான
தமிழ்ப் பெயர்கள். சொல்வதற்கு எளிதாக இருக்கவேண்டும் என்பதால் 'தினத்தந்தி' தமிழில் இந்தப் பெயர்கள் வெளிவர வாய்ப்பு உண்டு. எண்சோதிடம், எழுத்துச் சோதிடம், பெயர் சோதிடம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட திரையுலகினர் இப்படிப் பெயர் வைத்து விடுகின்றனர். இப்படிப் பெயர் வைத்தாலும் வரிவிலக்கு உண்டா?

மேலுள்ளவை மட்டுமல்லாமல் மேலும் பல திரைப்படங்களும் தயாரிப்பில் உள்ளன. ஜோகி, ஜாம்பவான், சக்கரவர்த்தி,ஜூலை காற்றில், குருஷேத்திரம், சூர்யா, கிளியோபாட்ரா, 1999, காதல் துரோகி, எம்டன் மகன், நெஞ்சில் ஜில் ஜில், போக்கிரி, செவன், வாத்தியார், வைத்தீஸ்வரன்... என வரும் தலைப்புகள், தமிழக அரசின் அறிவிப்பினால் மாறுமா?

நன்றி: தமிழ்சிஃபி

Monday, July 17, 2006

இம்சை அரசன் 23-ம் புலிகேசி - திரை விமர்சனம்

Photobucket - Video and Image Hosting


நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் வந்திருக்கும் சரித்திர காலப் படம். விகடனில் வெளிவந்த கேலிச் சித்திரங்கள், இரண்டரை மணி நேரப் படமாக நீண்டுள்ளன. வடிவேலு இரட்டைக் கதாநாயகனாக மிகச் சிறந்த முறையில் நடித்துள்ளார். அவருடைய மேல்நோக்கிய கூர்மீசை, அவருடைய பாத்திரப் படைப்புக்கு மெருகு சேர்த்துள்ளது.

நாகேஷ், மனோரமா ஆகியோர், அரசன் - அரசி. அவர்களின் 22 பிள்ளைகள் பிறந்து உடனே இறந்துவிடுகின்றனர். அதன் பிறகு இரட்டைப் பிள்ளைகள் பிறக்கிறார்கள். சோதிடர்களின் உதவியால் அவர்களில் ஒருவன் சொல்புத்தியுடனும் அடுத்தவன் சுயபுத்தியுடனும் இருப்பார்கள் என்று தெரிகிறது. நாசர், மனோரமாவின் தம்பியாகவும் அரசவையில் ராஜகுருவாகவும் இருக்கிறார். அவருக்கு அரச பதவியின் மீது ஒரு கண். இதனால், பிறக்கும் குழந்தையைத் தன் சொல்கேட்கும் கிளிப்பிள்ளையாக ஆக்க முடிவு செய்கிறார். ஒரு குழந்தையைக் கண் காணாத இடத்தில் விடச் சொல்கிறார். ஆற்றில் விடப்படும் அந்தக் குழந்தை, உக்கிரபுத்தன் என்ற பெயரில், வெண்ணிற ஆடை மூர்த்தியிடம் வளர்கிறது. அறிவாளியாகவும் தேசப் பற்று மிக்கவனாகவும் இந்தக் குழந்தை வளர்கிறது.

அதே நேரத்தில் 23ஆம் குழந்தையாகப் பிறந்து அரண்மனையில் வளரும் சொல்புத்தி குழந்தைக்கு 23ஆம் புலிகேசி என்று பெயர் சூட்டுகிறார்கள். அவனை இளம் வயதிலிருந்தே அசடாக வளர்க்கிறார், ராஜகுருவாக வரும் நாசர். அவன், வளர்ந்தாலும் முழு முட்டாளாகவும் பித்துக்குளித்தனத்துடனும் விளங்குகிறான். ஆங்கிலேய ஆட்சிக்குக் கப்பம் கட்டுபவனாக, கோழையாக, பெண்பித்தனாக, மக்கள் நலனில் அக்கறை அற்றவனாக, இன்னும் கேட்டால் அவர்கள் நலனுக்குக் கேடு விளைவிப்பவனாக, கள்வர்களின் கூட்டாளியாக, பேராசைக்காரனாக... இப்படிப் பல குணங்கள் கொண்டவனாக முதல் வடிவேல் விளங்குகிறார். இவை அனைத்தையும் தூக்கிச் சாப்பிடும் விதமாக அவரின் கோமாளித்தனம் உள்ளது. படிக்கட்டுப் பிடியில் பட்டுத் துணியைப் போட்டுச் சறுக்கு மரம் விளையாடுவதில் தொடங்கி, 'தட்டானுக்குச் சட்டை போட்டால் குட்டைப் பயல் கட்டையால் அடிப்பான். அவன் யார்?' என விடுகதை போடுவது வரைக்கும் அவர் கலக்கியிருக்கிறார்.

கோமாளி வடிவேலுவை வைத்துச் சந்தடி சாக்கில் நடப்பு விவகாரங்களை அருமையாகக் கிண்டல் அளித்துள்ளார், இயக்குநர் சிம்புதேவன். கொக்ககோலா, பெப்சி பானங்களைக் கிண்டல் செய்யும் விதமாக, அக்காமாலா, கப்சி என்ற பெயர்களில் பானங்களை ஆங்கிலேயர்கள் வந்து தொடங்குகின்றனர். அந்தப் பானங்களை வாங்கிக் குடியுங்கள் என்று உள்ளூர் நடிகர்கள் விளம்பரம் செய்கிறார்கள். 2 வீசம் அடக்க விலையுள்ள அவற்றை 10 வீசம் என அநியாய விலைக்கு விற்கிறார்கள். இப்படியாக அயல்நாட்டுப் பானங்களைக் கிண்டல் செய்கிற இயக்குநர், அடுத்துக் கிரிக்கெட்டையும் கேலி செய்துள்ளார்.

இருவேறு சாதியினர் மோதிக்கொள்ள, ஜாதிச் சண்டை மைதானம் என்ற ஸ்டேடியத்தை அரசன் வடிவேலு தொடங்கிவைக்கிறான். அதில் அதிகம் பேரை அடித்த சச்சிதானந்தத்துக்கு சிறப்பாகச் சண்டை போட்டவன் என்பதற்காகப் பரிசு கொடுக்கிறார்கள். இந்தச் சண்டையின் இடைவேளையில் அக்காமாலா, கப்சி பானங்களை விற்கிறார்கள் என்ற நையாண்டி ரசிக்கவைத்தது.

நோஞ்சானான தன்னை, பெரிய பலசாலி போல வரைந்து பிரமாண்டமாக நிறுத்துகிறான். 'எதிர்வரும் தலைமுறைக்கு 23-ம் புலிகேசி எப்படி இருந்தான் என்று தெரியவா போகிறது? வரலாறு ரொம்ப முக்கியம்' என்று வடிவேலு பேசும்போது, அந்த இடத்தில் அவரைக் கோமாளியாகக் கருத முடியவில்லை. இது, உண்மையிலேயே மிகவும் புத்திசாலித்தனமான யோசனை.

நடை, உடை, பாவனை அனைத்தின் மூலமும் வடிவேலு இந்தப் பாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். இவரோடு ஒப்பிடும்போது உக்கிரபுத்தனாக வரும் தம்பி வடிவேலுவிற்கு வாய்ப்பு குறைவுதான். ஆனால், அவன் ஆங்கிலேய ஆட்சியை எதிர்க்கும் புரட்சிப் படையை அமைக்கிறான். ஆங்கிலேய ஆட்சிக்குக் கப்பம் செலுத்தி அடிமையாக விளங்கும் 23-ம் புலிகேசியை வீழ்த்தவும் எண்ணுகிறான். இருவரின் தோற்ற ஒற்றுமையை வைத்து, உக்கிரபுத்தன், 23-ம் புலிகேசியாக மாறி, நாட்டில் பெரும் மாற்றத்தை உண்டாக்குகிறான்.

கடைசியில் ராஜகுருவின் சூழ்ச்சி வென்றதா? உக்கிரபுத்தனின் புரட்சி வென்றதா? என்பதே இறுதிக் கட்டக் காட்சி.

இது, வடிவேலுவுக்கு அவர் வாழ்நாளிலேயே தலைசிறந்த படம். சிம்புதேவனுக்கு முதல் படமே முத்திரைப் படம். 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் கதை நடக்கிறது. அந்தக் காலத்தைக் கண்முன் நிறுத்துவதில் கலை இயக்குநர் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறார். முக்கியமாக, அரசவை தொடர்பான காட்சிகள் இயல்பாக உள்ளன. பாடல்களைக் காட்டிலும் படத்திற்கான பின்னணி இசையைச் சபேஷ் முரளி அருமையாக அமைத்துள்ளார்கள். பழைய பாடல்களை ஒத்துள்ள இசையும் நடன அசைவுகளும் உடைகளும் சிரிக்க வைக்கின்றன. வசனங்கள், ரசிக்கும்படியாக உள்ளன.

இரட்டை வடிவேலுவிற்கும் ஆளுக்கொரு நாயகி. வழக்கம்போல் தேஜாஸ்ரீயும் மோனிகாவும் பாடல் காட்சிகளில் மட்டும் தொட்டுக்கொள்ளும் ஊறுகாய்கள்தான். அமைச்சராக வரும் இளவரசுவும் தளபதியாக வரும் ஸ்ரீமனும் சிறப்பாக நடித்துள்ளார்கள். நாகேஷையும் மனோரமாவையும் அதிகம் பயன்படுத்தவில்லை.

படத்தில் ஆள் பற்றாக்குறை நன்றாகத் தெரிகிறது. புலிகேசியைத் தாக்கப் படையெடுத்து வரும் தமிழ் மன்னன், சிலரோடுதான் வருகிறான். இறுதிக் காட்சிகளில் 'புரட்சிப் படை வெளியில் நிற்கிறது' என்று சொல்கிற இடத்தில் ஐந்தாறு பேர்கள் நிற்கிறார்கள்.

வடிவேலுவுக்கு வசன உச்சரிப்பு, பல இடங்களில் உதைக்கிறது. புலிகேசி என்பதை புலிக்கேசி என்கிறார். ற/ர, ல/ள போன்ற மயங்கொலிகளைத் தவறாக உச்சரிக்கிறார். இருபதாம் நூற்றாண்டுச் சொற்கள் பலவும் இந்த 18ஆம் நூற்றாண்டுப் படத்தில் வருகின்றன. 23-ம் புலிகேசி என்று எழுதுவது தவறு; 23ஆம் புலிகேசி என்றே இருக்கவேண்டும்.

இவற்றை எல்லாம் கடந்துவிட்டுப் பார்த்தாலும்கூட இம்சை அரசன், கிச்சுகிச்சு மூட்டுகிறான். அனைத்துத் தரப்பினரும் குடும்பத்தோடு பார்ப்பதற்கு ஏற்ற வகையில் படம் அமைந்துள்ளது. இந்தப் படத்தைத் தயாரித்ததற்காக ஷங்கரும் இயக்கியதற்காகச் சிம்புதேவனும் பாராட்டுக்கு உரியவர்கள்.


===============================================
இம்சை படங்களைக் காண....

இம்சை டிரெய்லரைக் காண...
===============================================

நன்றி: தமிழ்சிஃபி

புதுப்பேட்டை - திரை விமர்சனம்

Photobucket - Video and Image Hosting

நரம்பைப் போல் இருக்கும் தனுஷை ஒரு பேட்டைக்குத் தாதாவாகக் காட்ட முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கிறார் செல்வராகவன். அழகு, நிறம், புஜ பல பராக்கிரமம்... இவையெல்லாம் கொண்டவர்தான் தமிழ்த் திரையுலகின் கதாநாயகன் என்ற எண்ணத்தை ஏற்கெனவே உடைத்த தனுஷ், புதுப்பேட்டையின் மூலம் புதிய செய்தியைக் கூறியுள்ளார். உடல் பலத்தை விட மனோபலமே முக்கியம் என்பதுதான் அது.

சேரிச் சிறுவன் குமார், தன் அம்மாவை அப்பாவே கொல்வதைப் பார்த்துவிட்டுச் சென்னைக்குத் தப்பி வருகிறான். சந்தர்ப்பவசத்தில் கஞ்சா விற்கும் அன்புவின் கூட்டத்தில் சேருகிறான். அங்கு 'பொருள்' எடுத்துச் சென்று, 'தொழில்' கற்கிறான். ஒரே அடியில் எதிராளியைக் கொன்றதன் மூலம் அவன் புகழ் பெறுகிறான். அங்கு பாலியல் தொழில் செய்யும் சிநேகாவுடன் சிநேகமாகிறான். அவளை அங்கிருந்து மீட்க வேண்டி, தாதா அன்புவை எதிர்த்துக் கொன்று தானே அந்தப் பேட்டையின் தாதா ஆகிறான். பிறகு கொக்கி குமார் ஆகி, படிப்படியாக அரசியலுக்குள் நுழைகிறான் என்பதே புதுப்பேட்டை படத்தின் கதை.

கொக்கி குமார் என்ற பாத்திரத்தில் ஒற்றை அடியில் ஒரு ஆளைக் கொல்வதில் தொடங்கி, ஒரு கும்பலை ஒரே ஆளாக வெட்டிச் சாய்ப்பது வரை தனுஷ் இந்தப் படத்தில் செய்திருப்பது, மாயாஜாலம். பல மணி நேரமாக அடியை எல்லாம் தாங்கிக்கொண்டு, அடித்தவனை ஒரே அடியில் கொல்லும் உக்கிரம்; ரத்த விகாரமான முகத்துடன் 'எனக்கு வலிக்கவே இல்ல, வாங்கடா' என்று ஒரு கும்பலையே சண்டைக்கு அழைக்கும் ஆண்மை; தன்னைக் கொல்ல ஆள் அனுப்பிய தாதாவின் தலையை வெட்டி எடுத்துச் செல்லும் மூர்க்கம்; தன்னைக் கொல்லச் சொல்லும் அரசியல் தலைவரிடம் 'நீங்க என்னைக் கொல்லாம விட்டா, நான் உங்களைக் கொல்லாம விடுறேன்' என்று பேசும் தைரியம்; தன் தாயைக் கொன்ற தந்தையை உயிரோடு புதைக்கும் வன்மம்... என தனுஷின் பாத்திரம் வலிமையாக உருவாக்கப்பட்டுள்ளது.

வெளிப்படையாகப் பார்க்கும் போது, இது ரவுடிக் கும்பலின் கதை. ஆனால், சற்றே ஆழமாகப் பார்த்தால், இந்தப் படத்தில் மிகச் சிறந்த சமூக விமர்சனமும் அரசியல் நையாண்டியும் உள்ளன. அடியாள் உலகை எதார்த்தமாகக் காட்டியிருக்கிறார்கள். அடியாள்களுக்கும் காவல் துறைக்கும் அரசியலுக்கும் பாலியல் தொழிலுக்கும் எவ்வளவு நெருக்கமான தொடர்பு இருக்கிறது என்பதை இந்தப் படம் மேலும் ஆழமாகக் காட்டியிருக்கிறது.

அடியாள் தொழிலில் ஒருவன் எப்படி நுழைகிறான்? ஏன் நுழைகிறான்? அவர்களின் பின்னணி என்ன? தேவைகள் என்ன? மனோபாவம் என்ன... எனப் பலவற்றைப் படம் தெளிவாகச் சொல்லிவிடுகிறது. நான் என்ற ஆணவம், அடியாள் பலருக்கும் அதிகமாகவே இருக்கும். இதை ஒரு வசனத்தின் மூலம் பாலகுமாரனும் செல்வராகவனும் காட்டிவிடுகிறார்கள்.

படத்தின் பிற்பகுதியில் வரும் அரசியல் காட்சிகள், படத்தில் நகைச்சுவைப் பகுதி இல்லாத குறையைப் போக்குகின்றன. கொக்கி குமார், ஒரு கட்சியின் பகுதிச் செயலாளர் ஆனதும் அவருக்குக் கிடைக்கும் மரியாதை; மைக் முன் தோன்றும் முந்தைய நொடி வரை ரவுடியைப் போல் பேசும் அரசியல் தலைவர் (அழகம்பெருமாள்), மைக் முன் வந்ததும் 'செந்தமிழ்க் கவிஞன் நான்' என்பது ஆகியவற்றைச் சிறந்த அரசியல் அங்கதம் எனலாம். எதிர் தாதா மூர்த்தி, கொக்கி குமாரால் கொல்லப்படுவதை விரும்பாமல் தானே தன் கழுத்தை அறுத்துக்கொள்கிறான். மூர்த்தியின் கட்சியிலேயே குமார் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். அங்கு, மேடையில் அண்ணாந்து பார்த்து 'மூர்த்தி' என்று குமார் உருகுகிறார்; 'மூர்த்தி என்றால் அன்பு, மூர்த்தி என்றால் தாய்மை' என்று வசனம் பேசுகிறார். நடப்பு அரசியலைச் சிறந்த முறையில் செல்வராகவன் காட்சிப்படுத்தியுள்ளார்.

படத்தில் பாலியல் தொழிலாளியாகச் சிநேகா சிறப்பாக நடித்துள்ளார். முதல் காட்சியில் மிகையான பவுடர் பூச்சுடனும் உதட்டுச் சாயத்துடனும் அவர் தோன்றும்போது சொல்லாமலே அவரின் தொழில் தெரிந்துவிடுகிறது. அவர் முழுகாமல் இருக்கும்போது, 'இது என் குழந்தைதானா என்ற சந்தேகம் உன் நெஞ்சில் இன்னும் இருக்குதானே' என்று தனுஷிடம் உருகிக் கேட்கிறார். ஆனால், சோனியா அகர்வாலின் பங்கு, படத்தில் மிகவும் குறைவுதான். தன் திருமணத்தில் தாலி எடுத்துக் கொடுக்க வந்த தனுஷே, தனக்குத் தாலி கட்டியதை அவர் அவ்வளவு லேசாகவா எடுத்துக்கொண்டார்? சோனியாவின் உணர்வுகள் இன்னும் கொஞ்சம் விரிவாகப் பதிவாகி இருக்கலாம்.

தலைமறைவு வாழ்க்கை வாழும் அடியாள்களின் வாழ்க்கையை அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு சிறந்த முறையில் காட்டுகிறது. நெருக்கமாக (குளோசப்) காட்சிகளின் மூலம் பாத்திரங்களின் உணர்வுகளை இன்னும் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார். யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை, படத்திற்கு வலிமை சேர்த்துள்ளது. நடனக் காட்சிகளும் இயல்பாக உள்ளன. உடைகளும் காட்சியைச் சித்திரிக்கும் பொருள்களும் மிகுந்த கவனத்துடன் கையாளப்பட்டுள்ளன.

நவீன உலகில் பெரும்பாலான அடியாள்கள், துப்பாக்கிகளுக்கும் வெடிகுண்டுகளுக்கும் மாறிவிட்ட நிலையில் புதுப்பேட்டையில் வரும் அடியாள்கள், அரிவாளையே பெரிதும் பயன்படுத்துகிறார்கள். பிச்சையெடுத்த தனுஷ், பிஸ்தாவான பிறகும் அவருடைய உடல்மொழியும் குரலும் ஒரே மாதிரி உள்ளன. சாதாரணமான ஆளாகவே அவர் உலவுகிறார். பொது இடங்களில்கூட தாதா என்ற நினைப்புடன் அவர் இல்லாதது, முரட்டுத் தோரணையோ, அதட்டலான குரலோ இல்லாதது, வியப்புதான். ஆயினும் தனுஷ் இந்தப் படத்தில் வளர்ந்திருக்கிறார் என்பதை மறுக்க முடியாது.

படத்தில் ரத்தமும் கொலையும் வன்முறையும் மிதமிஞ்சிய நிலையில் உள்ளதற்காக இயக்குநரைக் குறை சொல்ல முடியாது; அப்படி ஓர் உலகம் இருக்கிறதே, என்ன செய்ய?


==============================================
புதுப்பேட்டை படங்களைக் காண...

புதுப்பேட்டை முன்னோட்டத்தை (டிரெய்லரை)க் காண...
==============================================

நன்றி: தமிழ்சிஃபி