!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2009/01 - 2009/02 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, January 31, 2009

வாரணம் ஆயிரம் - திரை விமர்சனம்

கண் மூடித் திறப்பது போல்தான் இருக்கிறது வாழ்க்கை. ஆனால், அதற்குள்தான் எத்தனை சம்பவங்கள்! ஒருவன் தனி மனிதன் என்ற நிலையிலிருந்து வளர்ந்து, குடும்பமாக, சமுதாயமாக உருவெடுப்பது தன்னிச்சையாக நிகழ முடியுமா? இந்த அடுக்கடுக்கான மாற்றங்களை ஒரே படத்தில் சுவையாகக் கொண்டு வரமுடியுமா? முடியும் என்று காட்டி இருக்கிறார் கவுதம் வாசுதேவ் மேனன்.

வாரணம் ஆயிரம், உண்மையில் ஒரு சுயசரிதை. கவுதம் மேனனின் அப்பா, 2007ஆம் ஆண்டு இறந்தார். தன் நேசத்துக்குரிய அப்பாவின் வாழ்வைத் திரைப்படத்துக்கு உரிய சுதந்திரங்களுடன் 3 மணி நேரப் படமாக நம் முன் வைத்துள்ளார் இயக்குநர். அவர் அப்பாவின் ஆளுமை படம் முழுக்க விரவி நிற்கிறது.

இது, அப்பா - மகனுக்கு இடையிலான உறவைப் பேசும் படம் மட்டுமில்லை; கவித்துவமான காதல்; அம்மா - அப்பா அன்னியோன்யம்; வழிப்பயண நட்பின் வாஞ்சை... என மனித உறவுகளின் மகத்தான சங்கமமாக இந்தப் படம் விளங்குகிறது.

இதில் சூர்யாவுக்கு இரட்டை வேடம். ஆனால், விதவிதமான வயதில், தோற்றங்களில், உணர்வுகளில் வந்து கலக்கியிருக்கிறார். கல்லூரி மாணவனிலிருந்து துடிப்பான இளைஞன், கவர்ச்சிகரமான காதலன், மிடுக்கான ராணுவ அதிகாரி, போதை அடிமை, நடுத்தர வயனினன், முதியவன், நோயாளி... என ஏராளமான தோற்றங்களில் அப்படியே பொருந்தி இருக்கிறார் சூர்யா. கிடாரைச் சுமந்து அலையும் அவரது தோற்றம், எவரையும் சுண்டி இழுக்கும். 6 படி கட்டுடல் (அதாங்க, சிக்ஸ் பேக்ஸ்), முதிய தோற்றம்... எனப் பாத்திரத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றிக்கொள்ளும் மாயத்தைச் சூர்யா கற்றுள்ளார். இது மிகப் பெரிய முன்னேற்றம்.

ராணுவ அதிகாரியான சூர்யா, ஒரு மீட்புப் பணிக்காக ஹெலிகாப்டரில் செல்கிறார். வானில் பறக்கையில் தன் அப்பா கிருஷ்ணனின் மரணச் செய்தியைப் பெறுகிறார். தன் அப்பாவுடனான நிகழ்வுகளை ஒவ்வொன்றாக நினைத்துப் பார்க்கிறார். தன் அப்பா காதலித்தது, 2 பிள்ளைகள் பெற்றது, அவர்களைப் படிக்க வைத்தது.. எனக் காட்சிகள் விரிகின்றன. ஆனாலும் விரைவில் இது, பிள்ளையின் வாழ்க்கைக் கதையாக மாறிவிடுகிறது. பிள்ளையின் படிப்பு, காதல், காதல் தோல்வி, போதையில் வீழ்ச்சி, அதிலிருந்து மீண்டது, வேலை, வேறு பெண்ணுடன் திருமணம்... என மகன் சூர்யாவின் கதையாக மாறிவிடுகிறது.

அப்பா கிருஷ்ணன் (சூர்யா), மத்திய அரசு ஊழியர்; அம்மா மாலினி (சிம்ரன்) குடும்பத் தலைவி; தங்கை ஷ்ரேயா மாணவி; இந்தக் குடும்பத்தில் சூர்யா என்ற பெயரிலேயே வருகிறார் சூர்யா.

தன் அப்பாவை ரோல் மாடலாக நினைக்கிறான் மகன் சூர்யா. அப்பா - அம்மாவின் காதல் கதைகளைக் கேட்டுத் தானும் அது போல் வாழ விரும்புகிறான். இந்நிலையில் திருச்சி மூகாம்பிகை பொறியியல் கல்லூரியில் சூர்யா சேர்கிறான். அவன் கல்விக் கட்டணங்களுக்காக அப்பா கடன் வாங்கி அனுப்பி வைக்கிறார். மகனோ, வகுப்புகளை விடத் திரையங்குகளுக்கு அதிகம் போகிறான். கடைசி செமஸ்டர் தேர்வு முடிந்ததும் மகன் சொந்த ஊருக்கு ரயில் ஏறுகிறான். அந்த ரயிலில் எதிர் இருக்கையில் அழகிய பெண் மேக்னா (சமீரா ரெட்டி). சூர்யா பார்க்கிறான். கண்டதும் காதல். அவளிடம் தன் காதலைச் சொல்லும் விதமாகத் தன் கிடாரை எடுத்து, 'என் இனிய பொன் நிலாவே' என வாசிக்கிறான்.

திருச்சி RECஇல் முதல் மதிப்பெண் பெறும் மேக்னா, கலிபோர்னியாவில் பெர்க்கிலி பல்கலைக்கழகத்தில் மேற்படிப்புக்காகச் செல்கிறாள். மேக்னா, சூர்யாவின் காதலை ஏற்கவில்லை. ஆனாலும் சூர்யா, "I will come into your life and sweep you off your feet" என்கிறான். அதன் பிறகு மேக்னாவுக்கு ஏற்படும் எதிர்பாராத முடிவு, திவ்யாவின் வரவு, சூர்யாவின் பாதை மாற்றங்கள்.... எனக் கதை நீள்கிறது.

கதை இப்படி ஒரு பக்கம் இருக்க, படத்தில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் நெஞ்சுக்கும் பெய்திடும் மாமழை, அனல்மேல் பனித்துளி, அடியே கொல்லுதே... எனப் பெரும்பாலான பாடல்கள் இதயத்தை வருடுகின்றன. தாமரையின் கவித்துவமான வரிகள், பாடலுக்குக் கூடுதல் வலிமை சேர்த்துள்ளன. ரயிலில் சூர்யா தன் காதலைச் சொல்லும் இடம், அமெரிக்காவில் மேக்னா 'ஐ லவ் யூ' சொல்லும் இடம், பல பாடல் காட்சிகள்... ஆகியவை மிக அழகாகப் படமாக்கப்பட்டுள்ளன. ரத்தினவேலின் ஒளிப்பதிவு, மிக நன்று. கலிபோர்னியா, டேராடூன், தில்லி, இராமேஸ்வரம், சென்னை, ஜம்மு காஷ்மீர்.... எனப் பல பகுதிகளும் திரைச் சட்டங்களுக்குள் அழகாக இடம் பெற்றுள்ளன.

சமீரா ரெட்டி மிக அழகாகத் தோன்றுகிறார். அவரின் பேச்சு, சிரிப்பு, நடை உடை பாவனை அனைத்தும் மிக யதார்த்தமாக, அழகாக, கவித்துவமாக அமைந்துவிட்டன. பள்ளிச் சீருடையில் வருமளவு திவ்யாவுக்குத் துணிச்சல் இருக்கிறது. ரேடாடூனில் சேலை கட்டி அவர் வரும் காட்சி, அருமை.

படத்தில் சிற்சில குறைகள் உள்ளன. தமிழ் நடுத்தரக் குடும்பத்தினர் சரளமாக இவ்வளவு உயர்தர ஆங்கிலம் பேசுவது சற்றே நெருடுகிறது. தில்லியில் கடத்தப்பட்ட குழந்தையைச் சூர்யா தனியனாகச் சென்று மீட்பது, தெளிவான இடைச்செருகல். அந்தப் பகுதி இல்லாவிட்டாலும் படத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை. சூர்யா சொந்தத் தொழில் தொடங்கி இருந்தாலும் அமெரிக்கா சென்று 3 மாதங்கள் தங்கிக் காதலிக்கும் அளவுக்குப் பணம் எப்படி கிடைத்தது என்பதை இன்னும் விரிவாகக் காட்டியிருக்கலாம். அப்பாவின் கதை என்றாலும் இளம் சூர்யாவின் கதையாகவே பெருமளவு இது விளங்குகிறது. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் வேகம் கூட்டியிருக்கலாம்.

'வாரணம் ஆயிரம்' என்ற தலைப்புக்கான விளக்கத்தைக் கடைசிக் காட்சியில் அப்பாவுக்குக் கொள்ளி வைத்த பிறகு வைத்துள்ளதைத் தவிர்த்திருக்கலாம். ஒரு மனிதன் இறந்த தருணத்தில் அவன் உடல் வலிமை பற்றியா மக்கள் முதலில் பேசுவார்கள்?

ஆயினும், புதிய கதைக் கரு; புத்துணர்வுடன் கூடிய திரை மொழி; அனைவரின் சிறந்த நடிப்பு; அற்புதமான இசை; அபாரமான ஒளிப்பதிவு; கண்ணுக்கு இனிய நிலக் காட்சிகள்.... எனப் பல சேர்ந்து 'வாரணம் ஆயிரம்' படத்தைத் தரமான படமாக உயர்த்தி நிறுத்துகின்றன.

நன்றி: தமிழ் சிஃபி