!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2009/02 - 2009/03 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, February 07, 2009

தமிழ் சிஃபி: கணப் பொழுதில் மறைந்த கனமான தளம்

செலவைக் குறைக்கும் நோக்கத்துடன் சிஃபி நிர்வாகம், தமிழ் உள்பட தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய தன் அனைத்து வட்டார மொழித் தளங்களையும் 6.2.2009 அன்று மதியம் முன்னறிவிப்பு இல்லாமல் மூடிவிட்டது.

கடந்த மூன்றரை ஆண்டுகளாக தமிழ் சிஃபிக்குப் பல்வேறு புதுமைமிகு ஆக்கங்களின் மூலம் வலிவும் பொலிவும் சேர்த்த நினைவுகள் மட்டுமே இப்போது என்னிடம் எஞ்சியுள்ளன.

ஒருங்குறிக்கு (யூனிகோடு)க்குத் தமிழ்சிஃபியை மாற்றிடத் தூண்டினேன். அதன் தொடர்ச்சியாகத் தெலுங்கு, மலையாளம் மொழித் தளங்களும் ஒருங்குறிக்கு மாற்றப்பட்டன.

மாலன் | வெங்கட் சாமிநாதன் | மலர் மன்னன் | நாகேஸ்வரி அண்ணாமலை | மறவன்புலவு சச்சிதானந்தன் | சக்தி சக்திதாசன் | விமலா ரமணி் | கே.ஆர். மணி | ஆமாச்சு | மதுமிதா | ரமணன் | ராசி அழகப்பன் | பாக்கியம் ராமசாமி | நேசகுமார் | பி.கே.சிவகுமார் | கல்யாணி வெங்கட்ராமன் | விசாலம் | தமிழ்த்தேனீ | ஹெச். ராமகிருஷ்ணன் | ஆல்பர்ட் பெர்னாண்டோ | ஆர்.செல்வக்குமார் உள்ளிட்ட பலரின் பத்திகள், வாசகர்களுக்குப் பெரும் விருந்து அளித்தன.

நா. கண்ணன் | ஆர்.எஸ். மணி | ஷைலஜா | சுகதேவ் | வ.ஐ.ச. ஜெயபாலன் | குடவாயில் சகோதரிகள் | ஸ்ரீதேவி ஆகியோரின் ஒலிப் பத்திகள், வாசகர்களுக்குப் புதிய அனுபவத்தை வழங்கின. இணையம் என்பது, எழுத்துடன் முடிவதில்லை; அது பல்லூடகத் தளம் என்ற உணர்வை இவை வழங்கின.

அண்ணா நூற்றாண்டுச் சிறப்பிதழில் அவரின் சுமார் 18 சொற்பொழிவுகளை அவரின் சொந்தக் குரலிலேயே கேட்க வழி செய்தேன்; இதே போன்று 1947இல் நள்ளிரவில் சுதந்திரம் பெற்ற போது நேரு ஆற்றிய உரை, ராஜாஜியின் உரை ஆகியவற்றையும் கேட்க வாய்ப்பளித்தேன்.

இசைச் சிறப்பிதழில் வாய்ப்பாட்டு, வாத்திய இசை, ஃபியூஷன் எனப்படும் கலப்பிசை, மெல்லிசை... எனப் பலவற்றையும் கேட்டு மகிழும் வண்ணம் வலை ஏற்றினேன்.

கனடாவிலிருந்து ஆர்.எஸ்.மணியின் ஒளிப் பத்தி, மிகவும் தனித்துவமான ஒன்று; தம் மெக்சிகோ பயண அனுபவத்தை 'ஓலா மெக்சிகோ' என்ற தலைப்பில் அவர் வாரந்தோறும் காணொளி வடிவில் (வீடியோ) வழங்கினார். அது மட்டுமின்றி ஒரே நேரத்தில் அவரின் எழுத்து, ஒலி-ஒளிக் கோப்பு, ஓவியம், புகைப்படம், பின்னணி இசை ஆகிய அனைத்தும் சேர்ந்த பல்லூடகப் பத்தியாக இது மலர்ந்தது. அந்த வகையில் தமிழ் இணையத்தில் இதுவே முதல் முயற்சி.

கொரியாவிலிருந்து நா.கண்ணன் வாரந்தோறும் ஒலிப் பத்தி வழங்கினார். உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின்போது அவர் ஒவ்வோர் ஆட்டம் குறித்தும் தன் சொந்தக் குரலில் கருத்துகள் உரைத்தார். தக்க பின்னணி இசை சேர்த்தார். நேரப் பற்றாக்குறை உள்ளவர்கள், நேரடியாகப் பேசியே அனுப்பலாம் என்ற என் தூண்டுதலின் பேரில் இந்த ஒலிப் பத்தி வெற்றிகரமாக நடைபெற்றது.

வடக்கு வாசல் மாத இதழின் இணையப் பதிப்பைக் கொணர்ந்தேன்.

வாசகர்களின் கேள்விகளுக்கு நிபுணர்களின் பதில்களைப் பெற்று அனுப்பினேன். வாஸ்து தொடர்பான நிறைய கேள்விகளுக்கு விசாலம் பதில் அளித்தார். இதய மருத்துவம் தொடர்பான கேள்விகளுக்கு இதய மருத்துவர் செங்கோட்டுவேல் பதில் அளித்தார்.

சிறுவர் சிறப்பிதழை ஆண்டுதோறும் தயாரித்தேன். இணையம், பெரும்பாலும் பெரியவர்களுக்கு மட்டுமே உரிய தளமாக உள்ளது; இதில், சிறுவர்களுக்கான வெளியை இந்தச் சிறப்பிதழ்கள் அதிகரித்தன.

'உலக நாடுகளில் தமிழ்' என்ற கருவில் தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்பிதழ் ஒன்றைத் தயாரித்தேன். இதில் உலகின் சுமார் 20 நாடுகளில் தமிழ் எவ்வாறு உள்ளது என்பதை அந்தந்த நாட்டில் வாழும் எழுத்தாளர்களைக் கொண்டு எழுதுவித்தேன்.

இப்படியாக 60 சிறப்பிதழ்கள்; ஒவ்வொரு சிறப்பிதழிலும் பல்வேறு புதுமைகள். பல்வேறு விவாதங்கள், கருத்து மோதல்கள், சுவையான அனுபவப் பகிர்வுகள்... எனக் கண்டும் கேட்டும் வாசித்தும் மகிழத்தக்க பல்லாயிரம் பக்கங்களை என் கரங்களின் வழியாக அரங்கேற்றினேன்.

கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள், புகைப்படக் கலைஞர்கள், பாடகர்கள்... எனப் பலரையும் அறிமுகப்படுத்தினேன்.

தமிழ்ச் செய்திச் சேவை (டி என் எஸ்) என்ற புதிய செய்தி முகாமையாளரை அறிமுகப்படுத்தினேன்.

சூடான செய்திகள், சுவையான திரைப்படப் பக்கங்கள், மனோபலம் அளித்த ஆரூடங்கள் (நன்றி: வேதா கோபாலன்)... எனப் பலவும் சேர்ந்து மாதத்திற்கு 30 லட்சம் பக்கங்கள் புரட்டப்படும் தளமாக தமிழ் சிஃபியை உயர்த்தின.

இவை அனைத்தும் கணப்பொழுதில் மறைந்துவிடும் என்பதை எவரேனும் கற்பனை செய்து பார்க்க முடியுமா? ஆனால், அப்படித்தான் நிகழ்ந்துவிட்டது.
இணையத்தில் ஏறியவை, நிலைபேறு அடையும் என்ற கருத்து, ஒரு நீர்க்குமிழி போல் உடைந்துவிட்டது. வாழ்க்கை நிலையற்றது என்பதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு, இது.

இந்தத் தருணத்தில் என் வேண்டுகோளை மதித்து, படைப்புகள் அனுப்பிய, பங்களித்த அனைத்து நல்ல உள்ளங்களையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

என்னை சிஃபிக்கு ஆற்றுப்படுத்திய ஆர்.வெங்கடேஷ், இந்தக் காலத்தில் என் உதவியாளர்களாகப் பணியாற்றிய வெங்கட சுப்பிரமணியம், ஞானசுந்தர், சிவகுமார், அமிர்தராஜ், நூருல், ஜோசப் ஆகிய அனைவருக்கும் உள்ளன்போடு நன்றி நவில்கிறேன்.

சிஃபியின் இதர மொழித் தளங்களின் ஆசிரியர்கள், அலுவலக சகாக்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், பல்லூடகப் பிரிவினர், தரப் பரிசோதகர்கள், வணிகப் பிரிவினர், நிதிப் பிரிவினர்... என அனைவரின் ஒத்துழைப்புக்கும் நன்றி.

திரைப்பட மக்கள் தொடர்பாளர்கள் நிகில், ஜான்சன், ஜான், பாலன், சிவா, ஜேம்ஸ் ஆகியோருக்கும் நன்றி.

தமிழ் சிஃபியை 2005ஆம் ஆண்டின் சிறந்த வலை மனையாகத் தேர்ந்தெடுத்த அமரர் சுஜாதாவுக்கும் நன்றி.

கனவுகள் இன்னும் மிச்சமிருக்கின்றன; காலமும்கூட.

Sunday, February 01, 2009

காதல்னா சும்மா இல்ல - திரை விமர்சனம்

சன் தொலைக்காட்சிக்கு அடுத்தபடியாக, ராஜ் தொலைக்காட்சியும் திரைப்படத் தயாரிப்பில் இறங்கியுள்ளது. ராஜ் டிவி தயாரிப்பில் வந்துள்ள முதல் படம், 'காதல்னா சும்மா இல்ல'. அப்ப, காதல்னா என்னங்க? அதைக் கொஞ்சம் வித்தியாசமாகச் சொல்லியுள்ளார் இயக்குநர் இளங்கண்ணன்.

'கம்யம்' தெலுங்குப் படத்தின் மறு உருவாக்கம், இது. ஆயினும் சிறு சிறு மாற்றங்களுடன் நேரடி தமிழ்ப் படம் போன்றே உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் மையக் கரு, வால்டர் சால்லஸின் 'மோட்டார்சைக்கிள் டைரீஸ்' என்ற படத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. மாபெரும் புரட்சிப் போராளியான சே குவேரா ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, அவரது வாழ்வின் தோற்றமே மாறியது எப்படி என்பதை அந்தப் படம் அழகாகக் காட்டியது.

'காதல்னா சும்மா இல்ல' படத்திற்கு வருவோம். பெரும் பணக்காரனான நம் கதாநாயகன், தன் காதலியைத் தேடி மோட்டார் சைக்கிளில் பயணிக்கிறான். அவன் வழியில் என்னவெல்லாம் காண்கிறான்; அவை அவன் வாழ்வில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதே கதை.

அபிராம் (ஷர்வானந்த்), 500 கோடிக்குச் சொந்தக்காரரின் (நாசர்) ஒரே மகன்; பார்ட்டிகளுக்குப் போய், குடித்து, கூத்தடிப்பதே வாழ்க்கை என்று இருக்கும் இளைஞன். தற்செயலாக ஒரு நாள் அவன், மருத்துவர் ஜானகியை (கமலினி முகர்ஜி) சந்திக்கிறான். அவளோ, அநாதை இல்லத்தில் வளர்ந்தவள்; ஏழை எளிய மக்களின் மீது அன்பு செலுத்துகிறாள்; அவர்களுக்குத் தொண்டு செய்கிறாள். அபிராம், ஜானகியைக் காதலிக்கிறான்; ஆனால், அவளது சமூக சேவைப் பணிகளை ஏற்க மறுக்கிறான். இதனால் இருவருக்குள்ளும் பிரிவு ஏற்படுகிறது. ஜானகி சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிப் போய்விடுகிறாள். அவளை எண்ணி ஏங்கும் அபிராம், அவளைத் தேடிக் கிளம்புகிறான்.

20 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஜப்பானிய மோட்டார் சைக்கிளில் அவளைப் பற்றி விசாரித்துக்கொண்டே செல்கிறான். வழியில் மோட்டார் சைக்கிள் திருடும் வெட்டி வேலு (ரவிகிருஷ்ணா), இவன் வண்டியைத் திருடப் பார்க்கிறான். பிறகு இருவரும் ஒருவருக்கு ஒருவர் உதவி, நண்பர்கள் ஆகின்றனர். இருவரும் சேர்ந்தே ஜானகியைத் தேடிச் செல்கிறார்கள். இவர்கள் வழிநெடுக எங்கெல்லாம் சென்றார்கள்? யாரையெல்லாம் சந்தித்தார்கள்? அது அவர்களிடம் எத்தகைய மாற்றத்தைக் கொண்டு வந்தது என்பதை மீதிப் படம் சொல்கிறது.

மோட்டார் சைக்கிள் திருடனாக வரும் ரவிகிருஷ்ணா, துணிந்து நடித்துள்ளார். ஏற்கெனவே கதாநாயகனாக நடித்துள்ள அவர், இத்தகைய பாத்திரங்களில் நடித்ததன் மூலம் இமேஜ் வட்டம் எதுவும் தனக்கு இல்லை என்று கூறியுள்ளார்; மேலும் கதாநாயகன் வேடத்தில் மட்டும்தான் நடிப்பேன் என அவர் நினைக்கவில்லை; இப்படி நகைச்சுவையான குணச்சித்திர வேடத்தையும் ஏற்பேன் எனக் காட்டியுள்ளார். அதற்காக அவரைப் பாராட்ட வேண்டும். ஏற்றுக்கொண்ட பாத்திரத்தை முழுமையாக உள்வாங்கி, படு அநாயாசமாக நடித்துள்ளார். அவரது இயல்பான பேச்சும் சிரிப்பைத் தூண்டும் செய்கைகளும் நன்று. அவரது குரல், அவருக்கு நன்றாகத் துணை புரிகிறது.

ரவிகிருஷ்ணாவுக்கு நேர் எதிரான பாத்திரம், ஷர்வானந்த் உடையது. மிகப் பணக்காரராக, பந்தாவாக, ஒயிலாக (ஸ்டைலாக) நடித்துள்ளார். அவரே காதலிக்காக ஊர் ஊராக அலையும் போதும் உண்மையான மனிதநேயத்தை வெளிப்படுத்தும் போதும் உருக்கத்தையும் காட்டியுள்ளார்.

கமலினி முகர்ஜி, அழகான சிரிப்பும் பளிச்சென்ற முகமுமாக வந்து மனத்தில் பதிகிறார். சேவையுள்ளம் கொண்ட மருத்துவராக அந்தப் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார். கோபப்படும் போதும் அழகாகத் தோன்றுவது, சிலரால்தான் முடிகிறது. மகிழுந்தில் குழந்தைப் பிரசவம் பார்க்கும் அந்தக் காட்சி, மிக அருமை.

படத்தின் வசனம் நன்றாக இருக்கிறது. 'நீ பார்த்தது இடங்களை; உலகத்தை இல்லை' என்பது போன்ற நல்ல கருத்துள்ள வரிகள் கவனத்தைக் கவர்கின்றன.

எம்.எஸ்.பாஸ்கரின் நகைச்சுவை செயற்கை. படத்தில் வரும் நக்சலைட்டு காட்சிகளும் செயற்கையே. பிறகு மேடையில் துணியவிழ்க்கச் சொல்லும் அந்தக் காட்சியும். இப்படியாகப் படத்தில் செயற்கைக் காட்சிகளுக்குப் பஞ்சமில்லை.

வித்யாசாகர், மணிசர்மா, ஈ.எஸ்.மூர்த்தி ஆகியோர் இணைந்து இசையமைத்தும் பாடல்கள் சுமார்தான். நிறைய தெலுங்கு வாசனை அடிக்கிறது. தமிழுக்கான தனிக் கவனிப்பு இல்லை. 'என்னமோ செய்தாய் நீ' என்ற பாடல், கொஞ்சம் கேட்கும்படியாக உள்ளது.

ஆயினும் கதையின் மீதும் நடிகர்களின் திறமை மீதும் நம்பிக்கை வைத்துப் படத்தை இயக்குநர் நகர்த்தியுள்ளார். தன் திரைக் கலையை மேலும் கூர்தீட்டினால், எதிர்காலத்தில் அவர் மின்னுவார்.

நன்றி: தமிழ் சிஃபி

அ ஆ இ ஈ - திரை விமர்சனம்

முன்பு 'ஏபிசிடி' என்ற பெயரில் ஒரு படம் வந்தது. அந்தப் படத்தின் விமர்சனத்தின் போது நான் எழுதியதாவது:

"ஆனந்த்(ஏ), பாரதி(பி), சந்திரா(சி), திவ்யா டெய்சி(டி) இந்த நால்வரின் ஆங்கிலப் பெயரின் முதல் எழுத்துகளை வைத்தே படத்திற்குத் தலைப்பு இட்டுள்ளார்கள். தமிழ்ப் பெயர்களின் முதல் எழுத்துகளை எடுத்து அ, ஆ, இ, ஈ (அமுதா, ஆனந்தி, இனியா, ஈசன் என்ற ஈஸ்வரன்) எனக் கூட பெயர் வைக்கலாமே."

இப்போது அது நடந்திருக்கிறது. பெயர்களில் மட்டுமே மாற்றம். அனிதா, ஆகாஷ், இளங்கோ, ஈஸ்வரி ஆகிய நால்வரைச் சுற்றியே கதை நடக்கிறது. எனவே தான் இதற்கு இப்படி ஒரு பெயர்.

ஒரு கிராமத்தில் சுப்பிரமணியம் (பிரபு) என்ற பெரிய நில உடைமையாளர் இருக்கிறார். அவரின் ஒரே மகள் அனிதா (மோனிகா). அவளுக்கு அந்த ஊரில் உள்ள இளங்கோ (அரவிந்த்) என்பவரைத் திருமணத்திற்காக நிச்சயம் செய்கிறார் சுப்பிரமணியம். இதற்கிடையே இளங்கோவைத் தனிமையில் சந்திக்கும் அனிதா, தனக்குச் சென்னையில் ஆகாஷ் (நவ்தீப்) என்ற காதலர் இருப்பதாகச் சொல்கிறார். இந்த ஆகாஷ், தொலைக்காட்சி நிலையத்தில் நேரடி நிகழ்ச்சித் தயாரிப்பாளர். உடனே இளங்கோ, சென்னைக்குச் சென்று ஆகாஷைக் கிராமத்துக்கு அழைத்து வருகிறார். வந்தவர், அனிதாவின் ஒன்றுவிட்ட தங்கை ஈஸ்வரி (சரண்யா மோகன்) மீது காதல் வசப்படுகிறார்.

பெரியோர்களின் முந்தைய திட்டப்படி அனிதா - இளங்கோ ஜோடிக்கும் ஆகாஷ் - ஈஸ்வரி ஜோடிக்கும் திருமணம் உறுதியாகி மணமேடை வரை வந்துவிடுகிறது. மாறிவிட்ட இந்த ஜோடிகள், தங்கள் விருப்பமான இணையுடன் சேருகிறார்களா என்பதே கதை.

விஜய் ஆண்டனி இசை, படத்திற்குப் பக்க பலமாய் அமைந்துள்ளது. 'நட்ட நடு ராத்திரியில்' என்ற பாடல், கேட்க இதமாய் இருக்கிறது. ஹனீபா, மனோரமா, கஞ்சா கருப்பு ஆகியோரின் நகைச்சுவை முயற்சிகளில் நிறைய செயற்கை இருக்கிறது.

படத்தின் காட்சி அமைப்பே, கொஞ்சம் நாடக பாணியில்தான் அமைந்துள்ளது. ஏவிஎம் தன் பழைய படங்களின் வாசனையை இன்னும் மறக்கவில்லை போலும். குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கும்படியான படமாக இருக்க வேண்டும் என்ற முயற்சியில் ஓரளவு வெற்றி பெற்றுள்ளார்கள். ஆனால், விறுவிறுப்பைக் காணவில்லை. முன்கூட்டியே கணிக்கக்கூடிய விதத்தில் கதையும் காட்சிகளும் அமைந்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

பிரபு அன்பான அப்பாவாக, கம்பீரமாக நடித்திருக்கிறார். சில இடங்களில் சென்டிமென்டில் பிழிந்து எடுக்கிறார். அவர் மகளாக நடித்துள்ள மோனிகா, பரவாயில்லை. சரண்யா மோகன், எப்போதும் போல் விடலைத்தனமாக, கலகல சிரிப்போடு கலக்கி இருக்கிறார். அரவிந்த், பாடல் காட்சிகளில் இயல்பாகவும் அசல் காட்சிகளில் ஒன்றும் தெரியாத பேக்கு மாதிரியும் நடித்துள்ளார். நவ்தீப், மிரட்டலாக நடித்துள்ளார். துணிவான வெளிப்பாடு, அவருடையது.

ஹனீபா, கடைசியில் 'உங்க அந்தஸ்துக்காகத்தான் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்' எனப் பேசுவது சகிக்கவில்லை. பிறகு பிரபு நீண்ட வசனம் பேசுவதும் அதுக்குப் பிறகு ஹனீபா சம்மதிப்பதும்... அரத பழசப்பா இதெல்லாம்.

கஞ்சா கருப்பு, நீண்ட தாடியும் கண்ணாடியுமாக போலி சாமியார் வேடத்தில் செல்லுவது அசல் நாடகக் காட்சி. காதல் ஜோடி மாறிய நிலையில் எப்படி அவர்களை ஒன்று சேர்ப்பது என இயக்குநர் சபாபதி தெட்சிணாமூர்த்தி திணறியிருக்கிறார். அசட்டுத்தனமான பல காட்சிகளை நகைச்சுவை என்ற பெயரில் அனுமதிக்கத்தான் வேண்டுமா?

அ, ஆ, இ, ஈ... எனத் தமிழில் தலைப்பு வைத்ததற்காகப் பாராட்டலாம். ஆனால், கதையே சிறப்பாக இல்லாத போது, படம் சிறப்பாக இருக்க வேண்டும் என எப்படி எதிர்பார்ப்பது?

நன்றி: தமிழ் சிஃபி

எல்லாம் அவன் செயல் - திரை விமர்சனம்

ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான 'சிந்தாமணி கொலை கேஸ்' என்ற படத்தின் மறு உருவாக்கம்தான் 'எல்லாம் அவன் செயல்'. தமிழிலும் ஷாஜியே இயக்கியிருக்கிறார். மருத்துவக் கல்லூரி மாணவியான சிந்தாமணியின் மர்ம மரணத்தைத் துப்பு துலக்கி, உண்மையான குற்றாவாளிகளுக்குத் தண்டனை தருவதுதான் படத்தின் ஒருவரிக் கதை.

மிகவும் புத்திசாலியான குற்றவியல் வழக்கறிஞர் எல்.கே. (லட்சுமண் கிருஷ்ணா). (உண்மையான பெயர் ஆர்கே). எல்.கே. என்பதற்கு விளக்கமாக அவரே சொல்லிக்கொள்வது License to Kill என்பது. குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுத்தால் அவர்கள், மேல் நீதிமன்றத்தில் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி, வெளியே வந்துவிடுகிறார்கள். எனவே, அத்தகைய குற்றவாளிகளுக்காக எல்.கே. வாதாடி, அவர்களைச் சட்டப்படி வெளியே கொண்டு வருகிறார். பிறகு, அடுத்த நாளே, எவரும் அறியாமல் அவர்களை இவரே தீர்த்துக் கட்டுகிறார். இப்படியாகத் தன் ஆசிரியையே கற்பழித்தவர், தன் மகளுடனே உறவு கொண்டவர் ஆகியோரைச் சட்டத்தின் பிடியிலிருந்து விடுவித்து, கொடூரமாகக் கொல்கிறார்.

ஒவ்வொரு கொலைக்குப் பின்பும் நம் கதாநாயகன், சில சமஸ்கிருத ஸ்லோகங்களைச் சொல்கிறார்; கூடவே ஆங்கிலப் பொன்மொழிகள். உப்பு தின்னவன் தண்ணியைக் குடிப்பான்; தப்பு செஞ்சவன் தண்டனையை அனுபவிப்பான். இத்தகைய 'cosmic law'வையே தான் பின்பற்றுவதாகச் சொல்கிறார் எல்.கே. ஏன் அவர் இப்படி செய்கிறார்? அதற்கும் படத்தில் ஒரு பின்கதை இருக்கிறது.

இந்த நிலையில், அடுத்து இவரிடம் 'சிந்தாமணி கொலை வழக்கு' வருகிறது. கிராமத்து ஏழை மாணவியான சிந்தாமணி (பாமா), மருத்துவக் கல்லூரியில் சேர வருகிறார். அவரை அதே மருத்துவக் கல்லூரியின் பணக்கார மாணவிகள் 9 பேர் (சுருக்கமாக 'மிர்ச்சி கேர்ள்ஸ்') வன்பகடி (ராக்கிங்) செய்கிறார்கள். ஒருசில நாட்களிலேயே அவள் கொடூரமாகக் கொல்லப்படுகிறாள். அவர்களைக் கொன்றதாக 'மிர்ச்சி கேர்ள்ஸ்' மீது வழக்கு நடக்கிறது. அவர்கள் மீதான பழியை அகற்ற, பல்வேறு ஆதாரங்களை உருவாக்கி, அந்த 9 மாணவிகளையும் புத்திசாலித்தனமாக விடுவிக்கிறார் எல்.கே. அதன் பிறகு உண்மையான கொலையாளிகளை அவர் கொன்றாரா என்பதே மிச்ச சொச்ச கதை.

எண்ணெய் தடவிப் படிய வாரிய தலை, ஒரு கறுப்புக் கண்ணாடி, கறுப்பு கவுன் ஆகியவற்றுடன் சூப்பர் மேன் போல் பறந்து பறந்து சண்டை போடுகிறார் எல்.கே. அவருடைய தோற்றம் கம்பீரமாக இருக்கிறது. மிக முக்கியமாக, வசனங்களும் அவற்றை உச்சரிக்கும் விதமும் மிகச் சிறப்பாக உள்ளன. 'வெற்றிக்காக நான் எல்லைக்கும் போவேன்' என்பது போன்ற வசனங்கள், படத்திற்கு வலு சேர்த்துள்ளன. நீதிமன்ற வாத - பிரதி வாதங்கள் சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஆயினும் தனியார் வழக்கறிஞரான எல்.கே., அரசு வழக்கறிஞருக்கே தெரியாத அரசுத் தடயவியல் பரிசோதனை விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது எப்படி என்ற கேள்வி எழுகிறது. நீதிமன்ற வளாகத்தைத் தவிர வெளியிடங்களில் கருப்பு கவுனைப் பயன்படுத்தக் கூடாது என்ற விதியை மீறி, குற்றவாளிகளைக் கருப்பு கவுனுடன் சென்று கொல்கிறார். ஒவ்வொரு முறை எல்.கே. யாரைக் காப்பாற்றினாலும் அவர் உடனே கொல்லப்படுகிறார். அப்படி இருக்க, அடுத்தடுத்து குற்றவாளிகள் அவரிடமே தங்கள் வழக்கைக் கொண்டு செல்லத் தயக்கம் காட்ட மாட்டார்களா என்ன?

அப்பாவியான தோற்றத்துடன் கூடிய பாமா, தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். பாமாவின் அப்பாவாக மணிவண்ணன்; விவரம் போதாத காவல் துறை அதிகாரியாக நாசர்; அக்மார்க் வில்லனாக ஆஷிஷ் வித்யார்த்தி, மருத்துவக் கல்லூரி நிர்வாகியாக மனோஜ் கே. ஜெயன் ஆகிய பல முகங்கள் இந்தக் கதையில் இருந்தாலும் நாயகன் எல்.கே.வை மையமாக வைத்தே கதை நகர்கிறது. ரகுவரனின் கடைசிப் படமான இதில் அவர் அலட்டிக்கொள்ளாத சிபிஐ அதிகாரியாக வந்து உண்மைகளைக் கண்டுபிடிக்கிறார்.

கவர்ச்சிக்காகவே 'மிர்ச்சி கேர்ள்ஸை' வைத்து ஒரு பாட்டு அமைத்துள்ளார்கள். படத்தின் தொடக்கத்தில் உள்ள கற்பழிப்புக் காட்சி படமாக்கப்பட்ட விதமும் மோசமாக இருக்கிறது. மிர்ச்சி பெண்கள், மருத்துவமனையின் ஆய்வகத்தில் உள்ள பிணத்துக்கும் சிந்தாமணிக்கும் திருமணம் செய்வதும் சிந்தாமணியைப் பிணத்துக்கு முத்தம் கொடுக்கச் சொல்வதும் சகிக்கவில்லை.

வித்யாசாகரின் இசை, பரவாயில்லை. படத்தில் அதிகப் பாடல்கள் வைக்காததன் மூலம் நல்லது செய்திருக்கிறார். இந்தியாவில் ஸ்பாட் எடிட்டிங் செய்யப்பட்ட முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனையின் பிரீ சீட்டுக்கு 50 லட்சம் விலை; அதைக் காசாக்க அதன் நிர்வாகம் எதுவும் செய்யும் என்ற நிலை ஆகியவற்றை நம்ப முடியவில்லை. ஆயினும் வழக்கறிஞரின் வாதத்தின் மூலம் 'உருவாக்கப்பட்ட' சாட்சிகளின் மூலமும் எந்தக் குற்றவாளியையும் தப்புவிக்க முடியும் என்பதை இந்தப் படம் மீண்டும் அழுத்தமாக எடுத்துரைக்கிறது. இதன் மூலம், இந்திய நீதித் துறை, சட்டத் துறை, காவல் துறை ஆகியவற்றைச் சமுதாயத்தின் குற்றவாளிக் கூண்டில் ஏற்றியிருக்கிறது, இந்தப் படம்.

நன்றி: தமிழ் சிஃபி

பூ - திரை விமர்சனம்

ஒரே எழுத்திலான இந்தப் படத்தைப் பாராட்ட, ஓராயிரம் சொற்களைப் பெய்தாலும் போதாது.

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய 'வெயிலோடு போய்' என்ற சிறுகதையே 'பூ' என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்துள்ளது. சிறுகதை அல்லது நாவலைத் திரைப்படமாக எடுக்கும் போது பற்பல சமரசங்களுக்கும் ஆளாக வேண்டியிருக்கும். அந்தச் சிக்கல்களை எல்லாம் வெற்றிகரமாகத் தாண்டிவந்து திரையிலும் ஒரு வாழ்வை தத்ரூபமாகக் காட்டியுள்ளார் இயக்குநர் சசி.

தனக்கு அதிகப் பரிச்சயம் இல்லாத நிலப்பரப்பில் கதை நிகழ்ந்தாலும் கதை நிகழும் இடத்திலேயே ஆறு மாதங்கள் தங்கியிருந்தார் சசி. அங்குள்ள மக்களையும் அவர்களின் வாழ்வியலையும் கூர்ந்து கவனித்து அவற்றை வெள்ளித் திரையில் பதிந்து, வரலாற்று ஆவணமாக்கி உள்ளார்.

ஐ என எழுதுவதற்கு ஜ என எழுதும் பிள்ளைகள், தூங்கும் போது பாயில் சிறுநீர் கழிக்கும் சிறுமி, எதிர்காலத்தில் என்ன ஆகப் போகிறோம் எனத் தெரியாத மாணவிகள், காதலனை அடைவதற்காகச் சாமியை மாற்றிக்கொள்ளும் காதலி, பொட்டல் வெளியில் இரட்டைப் பனை மரங்கள், தவறாகவேனும் ஆங்கிலம் பேச முயலும் கிராமத்து மக்கள், பேனாக்காரர் என அழைப்பதில் பெருமை கொள்ளும் வண்டிக்காரர், ஆடு மேய்க்கும் சிறுவன் கையில் செல்பேசி... எனக் கதையின் ஒவ்வொரு துளிக் காட்சியிலும் வாழ்க்கை நிரம்பி வழிகிறது.

பார்வதி இந்தப் படத்தில் மாரியம்மாளாக நடிக்கவில்லை; வாழ்ந்திருக்கிறார். நவரசங்களையும் அவர் காட்டும் அழகு, வர்ணனைக்கு அப்பாற்பட்டது. தன் ஆசை மச்சான் தங்கராசு (சிறீகாந்த்) மீது அவர் கொண்ட காதல், அதை வெளிப்படுத்தத் தயக்கம், அவன் தன் கையைப் பிடிக்க வேண்டும் என ஏக்கம், அதைத் தொடர்ந்த கனவுகள், செய்யும் தியாகம்.... என அந்தப் பாத்திரத்திற்கு உயிர் ஊட்டியுள்ளார் பார்வதி. வெகு சில காட்சிகளில் ஒப்பனை சரியில்லை என்றாலும் அவரின் கண்கள் பேசுகின்றன.

'உனக்குத்தான் கொடுக்க முடியலை; நீ சாப்பிடும் தோசைக்காவது கொடுக்கிறேன்' என அவர் தோசைக்கு முத்தம் தருகிறார்; காதலனுக்காக நள்ளிரவில் காட்டுக்குள் சென்று கள்ளிப் பழம் பறிக்கிறார்; காதலன் நன்மைக்காக வேறு திருமணம் செய்யச் சம்மதிக்கிறார்...... இவ்வாறான பற்பல காட்சிகள், உள்ளத்தை உருக்கக் கூடியவை. அவளுடைய கனவு நிறைவேறாத போது, அவளுக்காக நம் மனம் விம்முகின்றது. பாசாங்கு இல்லாத அழகு, அச்சம், கூச்சம், தயக்கம், ஆனாலும் உள்ளுக்குள் ஆசை... எனக் கிராமத்துப் பெண்ணை நம் கண் முன் நிறுத்திவிடுகிறார். மலையாளத்திலிருந்து தமிழுக்கு அறிமுகம் ஆகியுள்ளார் பார்வதி. இந்தப் படத்தின் நடித்தமைக்காக இவருக்கு விருது கிடைக்காவிட்டால்தான் வியக்க வேண்டும்.

சிறீகாந்துக்கு இந்தப் படம், ஒரு நல்ல வாய்ப்பு. கிராமத்தில் பிறந்து, நகரத்தில் படிக்கச் செல்லும் மாணவனுக்கு முதலில் ஏற்படும் பிரமிப்பு சரிதான். அந்த இடத்தில் தங்கராசின் உடையும் ஒப்பனையும் இன்னும் கொஞ்சம் கிராமத்துத்தனமாக இருந்திருக்கலாம். சிறு வயதில் இருந்து இவ்வளவு அன்பும் காதலுமாய் ஒருத்தி இருப்பதை எப்படி அவரால் கண்டுகொள்ளாமல் இருக்க முடிகிறது? சின்னஞ் சிறுமியான மாரியிடம் என்ன ஆகப் போகிறாய் என ஆசிரியர் கேட்டதற்கு, 'தங்கராசுக்குப் பொண்டாட்டியா ஆகப் போறேன்' என அவள் சொன்னது தெரிந்தும் அதைச் சட்டையே செய்யாமல் சாதாரண நட்பு போல அவர் பழகுவது சற்றே நெருடுகிறது. ஆயினும் அவரின் நடிப்பில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.

இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியிருக்கிறார் எஸ்.எஸ்.குமரன். நா.முத்துக்குமாரின் வரிகளில் 'சூ சூ மாரி', 'ஆவாரம் பூ', 'தீனா', 'மாமன் எங்கிருக்கா'... என ஒவ்வொரு பாடலும் மனத்தை ஈர்க்கின்றன. அவை படமாக்கப்பட்ட விதமும் நேர்த்தி. வறண்ட கிராமத்தின் நயங்களைப் பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு ஒரு பக்கம் காட்டி நிற்க, குமரனின் இசை நம் உயிருக்குள் ஊடுருவுகிறது. படத்தின் பின்னணி இசையும் அருமை. தேவையான இடங்களில் மவுனத்தை இருத்தி, காட்சிக்கு வலுவூட்டி இருக்கிறார். இது இவருக்கு முதல் படம் என்பதை நம்புவது கடினம்.

வெடிப்பு விழுந்த கிராமத்து நிலம், அங்கு ஒரு மிதிவண்டியில் ஏராளமான பிளாஸ்டிக் குடங்கள் விற்பனைக்குச் செல்கின்றன என்ற காட்சியிலேயே அங்கு நிலவும் தண்ணீர்ப் பஞ்சத்தை இயக்குநர் காட்டி விடுகிறார். அது போல் ஒரு லாரியில் ஏஏஏஏஏஏராளமான கதிர்களை ஏற்றியதும், காதலியின் சிறிய மனத்தினுள் காதலன் எவ்வாறு பேருருக் கொண்டுள்ளான் என்று காட்டும் ஒரு குறியீடே ('சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கிவள் உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே' என்ற குறுந்தொகைப் பாடலை நினைவுபடுத்தும் காட்சி இது).

இரட்டைப் பனை மரம், ஒரு குறியீடாக, காட்சிக் கவிதையாக மிளிர்ந்துள்ளது. அதில் ஒரு மரம் ராட்டினம் போல் சுற்றுவது, அபாரமான ரசனை. இதற்கு ஒளிப்பதிவாளரையும் படத் தொகுப்பாளரையும் சேர்த்தே பாராட்ட வேண்டும்.

'சின்ன பனைமரம் நான்; பெரிய பனைமரம் நீ' எனக் காதலர்கள் சிறு வயதிலேயே சொல்லிக்கொள்வது, இயற்கையோடு இயைந்த அவர்களின் வாழ்வைப் பளிச்செனக் காட்டுகிறது.

அலோ டீக்கடை நடத்துபவர், நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்த தன் மனைவியை ஊருக்குக் கூட்டி வராமல் இருப்பதற்கான காரணமும் சரியில்லை; தனக்கு மூளை - உடல் வளர்ச்சி குறைந்த குழந்தை இருப்பதை ஊர் அறிந்தால், கிண்டல் செய்வார்கள் என்பதால் அவனை வீட்டிலேயே வைத்து வளர்ப்பது சரியான முறையில்லை. இப்படியான குழந்தைகளுக்குக் கல்வி கற்பித்து, தொழில் பயிற்சி அளித்து, அவர்களைச் சொந்தக் காலில் நிறுத்தும் பணியில் உன்னத மனிதர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர். அவனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க வழியுண்டு என்பதை இயக்குநர் காட்டியிருக்க வேண்டும்.

மருத்துவக் காரணத்தால் சொந்தத்தில் திருமணம் செய்யக் கூடாது என்பதை இந்தப் படம், மிக ஆழமாக எடுத்துச் சொல்லிவிடுகிறது. ஆனால், இதன் பின்விளைவுகள் மிகவும் வலி தரக் கூடியவை. நெருங்கிய சொந்தத்தில் ஒருவரை ஒருவர் விரும்பும் ஆயிரக்கணக்கான காதலர்களின் மனது, இந்தப் படத்தைப் பார்க்கும் போது என்ன பாடு படுமோ! இனி அந்தக் காதலர்களே நினைத்தாலும் அவர்களின் பெற்றோர் இத்தகைய திருமணத்திற்குச் சம்மதிப்பார்களா? காதல் என்பது எந்த நேரத்திலும் எந்த வடிவத்திலும் மலரும் அற்புதப் பூ ஆயிற்றே. நம் ஊர் சிறுசுகளுக்குச் சொந்தத்தில் தானே முதலில் 'ஆள்' கிடைப்பார்கள்! அதற்கு இப்படி ஒரே அடியாக வேட்டு வைக்கலாமா? ஆயிரத்தில் ஒரு குழந்தை அப்படி பிறக்கும் என்றால் அதற்காக ஆயிரம் காதலர்கள் பிரிய வேண்டுமா? சரி, அந்நியத்தில் மணம் முடித்தால் இப்படி குழந்தை பிறக்காது என்று அறுதியிட்டு கூற முடியுமா?

'சிவகாசி ரதியே' என்ற பாடல், இந்தப் படத்திற்குத் தேவையற்றது. அந்தப் பாடலை எடுத்துவிட்டால் அதனால் படத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை. இவ்வளவு இயல்பான படத்தில் இந்தச் செயற்கை தேவைதானா? அலோ டீக்கடைக் காட்சிகள் பல, நகைச்சுவைக்காக நுழைக்கப்பட்டுள்ளன. இவை, வணிகத் திரைப்படத்தின் பாதிப்புகள். கலையம்சத்தை நீர்க்கச் செய்யும் காட்சிகள். ஆயினும் முழுப் படத்தின் தாக்கத்தை நோக்க, இவை சிறியவை. மன்னிக்கலாம்.

பார்வதி, சிறீகாந்த் உள்ளிட்ட நடிகர்கள், எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், இயக்குநர் சசி, ஒளிப்பதிவாளர் முத்தையா, இசையமைப்பாளர் குமரன், மோசர்பேர் தனஞ்செயன்.... எனப் பலரின் உண்மையான உழைப்பும் அர்ப்பணிப்பும் பூ படத்தை மகத்தான படமாக முன்னிறுத்துகின்றன.

காப்பியடிப்பதும் ரீமேக் செய்வதுமாக அந்நியப்பட்டு நிற்கும் தமிழ்த் திரையுலகில் இது ஒரு புது நகர்வு. தனக்குள் தன்னைத் தேடும் அரிய பயணத்தில் தமிழ்த் திரை மேலும் ஓர் அடி எடுத்து வைத்துள்ளது. துணிவும் கலை வேட்கையும் வாழ்வின் நெருக்கமும் கொண்ட இந்த முயற்சியைத் தமிழ் மக்கள் உறுதியாக வரவேற்பார்கள்.

நன்றி: தமிழ் சிஃபி