!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2010/11 - 2010/12 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, November 29, 2010

மலேசியாவில் அண்ணாகண்ணன்

2010 நவம்பர் 28 அன்று காலை, சென்னையிலிருந்து பினாங்கை நோக்கி விமானம் புறப்பட்டது. 10.15க்குப் புறப்பட வேண்டிய ஏர்ஏசியா விமானம், 10.40க்குத்தான் கிளம்பியது. எனக்கு ஜன்னலோர இருக்கை கிடைத்தது. பட்டப் பகலாய் இருந்ததால், அனைத்தும் துல்லியமாகத் தெரிந்தன.  சென்னையின் பிரமாண்ட கட்டடங்கள் அனைத்தும் குட்டிக் குட்டியாய்க் குறுகின. மேலே மேகக் கூட்டங்கள் கட்டற்றுத் திரிந்தன. சிறிது நேரத்தில் மேகங்களையும் கடந்து, விமானம் உயர்ந்தது.

ஒரு கட்டத்தில் மேகங்கள் அனைத்தும் குட்டிக் குட்டியாய்த் தெரிந்தன. சற்றே நிமிர்ந்து பார்த்தால் விமானத்திற்கு மேலும் மேகங்கள் இருந்தன. தரையிலிருந்து பார்க்கையில் ஒரே அடுக்கில் மேகங்கள் தெரிகின்றன. ஆனால், உண்மையில் மேகங்களில் பல அடுக்குகள் உள்ளன.

மேகங்களைத் தவிர கடலை மட்டுமே பார்க்க முடிந்தது. தரையே தெரியவில்லை. முழுக்க முழுக்க, கடல். நீல நிற நீர்ப் பரப்பில் வரி வரியாய் அலைகள். 3.15 மணி நேரப் பயணத்தின் முடிவில் மலேசியக் கரை, கண்ணுக்குத் தெரிந்தது. ஆனால், வானிலை சாதகமாக இல்லாததால் விமானம் உடனே தரையிறங்கவில்லை.

தரையிறங்கிய தருணம், மிக இனிது. விதவிதமான மேகக் கூட்டங்கள். ஒவ்வொன்றும் ஒரு மலையளவுக்கு இருந்தன. அந்திச் சூரியன் அருள் ஒளி பொழிய, பிரமாண்டமான வெண்மேகக் குன்றுகளுக்கு நடுவில், மரகதத் தீவு போல் பினாங்கு மின்னியது. பச்சையம் பூசிய கடல். அதன் மீது ஓரிரு கப்பல்கள், நீரைக் கிழித்துச் சென்றன. அது, ஒரு வெள்ளைக் கோடு போல், நீண்ட வால் போல் தெரிந்தது.

மலேசிய நேரப்படி அன்று மாலை 5 மணியளவில் விமானம், பினாங்கில் தரையிறங்கியது. நண்பர் சேது குமணனின் உறவினரான பூபாலன் மாணிக்கம், இணையவழித் தோழி யமுனேஸ்வரி ஆறுமுகம் ஆகியோர், விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றனர். அங்கிரிட் விடுதியில் எனக்கு அறை பதிந்திருந்தனர். தமிழ்ப் பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியரான சங்கர், உடனே அறைக்கு வந்தார். இருவரும் கலந்துரையாடினோம்.

பினாங்கில் உள்ள உளவியல் பேராசிரியரும் சைவத் தத்துவங்களில் தோய்ந்தவருமான கி.லோகநாதன் அவர்களைச் சந்தித்தேன். சுமேரிய ஒலி வடிவங்கள், தமிழுடன் ஒத்திருப்பதை விளக்கினார். அவை, முதற்சங்கத் தமிழாக இருக்க வேண்டும் என்ற அவரின் கருத்து, எனக்குப் புதிது. சுமேரிய களிமண் பலகைகளிலிருந்து பெயர்த்து எழுதிய வரிவடிவங்களை அவர் படித்துக் காட்டினார். நினைவிலிருந்து பலவற்றை மனப்பாடமாகச் சொன்னார். அவை, தமிழின் ஒலி வடிவங்களுடன் நெருக்கமாக உள்ளன. அவற்றுக்கு அஸ்கிரிய மொழியின் அடிப்படையில் அவர் பொருள் கூறினார். என் ஐயங்களைக் கேட்டுத் தெளிந்தேன்.

10 ஆயிரம் நூல்களைக் கொண்ட நூலகத்தைத் தன் இல்லத்தில் பராமரித்து வருகிறார். சைவத் தத்துவங்கள் தொடர்பான வகுப்புகளை நடத்தி வருகிறார். ஆகம உளவியல் என்ற பிரிவினை உருவாக்கியுள்ளார். இதன் வழி, ஒருவரின் மனத்தினைத் துல்லியமாகப் படிக்க முடியும் என அறிந்து வியந்தேன்.

முனைவர் கி.லோகநாதன், தம் இல்லத்திலேயே தங்க அழைத்தார். அதை ஏற்று, நவம்பர் 29 அன்று காலை, அங்கிரிட் விடுதியிலிருந்து பெயர்ந்து, அவர் இல்லத்திற்கே  வந்து சேர்ந்தேன். இங்கு மேலும் நண்பர்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளேன். 2010 டிசம்பர் 6ஆம் தேதி காலை, சென்னைக்குத் திரும்புகிறேன்.

=========================
படத்திற்கு நன்றி: விக்கிப்பீடியா

Monday, November 22, 2010

வெள்ளையர் பாடும் தமிழ்ப் பாடல்

ஏ.ஆர்.ரகுமான் இசையில் சிவாஜி படத்தில் இடம் பெற்ற ‘பல்லேலக்கா’ பாடலை, கனடாவின் வெள்ளைக்கார மாணவர்களைக் கொண்ட கல்லூரிக் குழு ஒன்று, இசைக்கிறது.



ஆஹா, வெள்ளையர் உதடுகளில் தமிழ்ப் பாடலைக் கேட்கும்போது மகிழ்ச்சி கரை புரள்கிறது. தமிழர்கள் ஆங்கிலம் பேசுவதில் ஆவலாய் இருக்க, அவர்கள் தமிழ்ப் பாடலைப் பாடுவது எத்தகைய முன்னேற்றம்!

வாழ்க ரகுமான். வெற்றி எட்டுத் திக்கும் எட்ட, கொட்டு முரசே!

Saturday, November 06, 2010

இலங்கை காவல் துறையின் தீபாவளி விழா

இலங்கை காவல் துறை, முதன் முதலாகத் தீபாவளி விழாவை 2010 நவம்பர் 6 அன்று நடத்தியது. இது, கொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ் மைதானத்தில் நடைபெற்றது. இலங்கை அரசின் கால்நடை கிராமிய அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான், பொலிஸ் மா அதிபர் கலாநிதி மகிந்த பாலசூரியா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி, இலங்கை பொலிஸ் பெளத்த மற்றும் ஏனைய மத அலுவல்கள் சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் இலங்கைக்கான மொரீசியஸ் கெளரவத் தூதர் தெ.ஈஸ்வரன் அழைப்பின் பேரில் நான், பார்வையாளனாகப் பங்கேற்றேன். ‘தீபாவளி, நவம்பர் 5ஆம் தேதி என இருக்க, விழாவினை 6ஆம் தேதி நடத்துவது ஏன்?’ எனக் கேட்டேன். ‘சனிக்கிழமை விடுமுறை என்பதால் அனைவரும் கலந்துகொள்ள வசதியாக இன்று நடத்தியிருக்கலாம்’ என ஈஸ்வரன் கூறினார்.

காவல் துறை மைதானம் முழுக்க மின்விளக்குச் சரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேடை அலங்காரம், மிக நேர்த்தியாக இருந்தது. நடு நாயகமாக நடராஜரும் விநாயகரும் கிருஷ்ணரும் அவருக்கு இரு புறங்களிலும் வீற்றிருந்தார்கள். மேடைக்கு முன்னதாக இருந்த சிறு மேடை முழுக்கக் குத்து விளக்குகள் நிறைந்திருந்தது. அதில் பெரிதான ஒன்றுக்குச் சிறப்பு விருந்தினர்கள் ஒளி ஏற்றினார்கள். மேடைக்குப் பக்கத்தில் இருந்த தனி மேடையில் அகல் விளக்குகள் வரிசை வரிசையாக ஒளிர்ந்தன. காற்றில் அணைய அணைய, அவற்றைத் தொண்டர்கள் மீண்டும் மீண்டும் ஏற்றிக்கொண்டிருந்தார்கள்.

விழாவின் தொடக்கத்தில் விநாயகருக்குப் பூஜைகள் நடந்தன. வாண வேடிக்கைகள் வானை நிறைத்தன. விழாவை நடத்திய அமைப்பின் தலைவர் மகிந்த பாலசூரியா, வரவேற்புரை ஆற்றினார்.  ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே ஆலோசனையின் பேரில் இந்த விழா நடைபெறுவதாகவும் இனி விசாக் பண்டிகையைப் போல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் ஆகியவையும் அரசின் சார்பில் கொண்டாடப்படும் என்றும் கூறினார். அடுத்த ஆண்டிலிருந்து மாவட்டங்கள்தோறும் ஊராட்சி அளவில் இந்தப் பண்டிகைகள் கொண்டாடப்படும் என்றும் கூறினார். அவரது சிங்கள உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு வாசிக்கப்பெற்றது.

சிவகுருநாதன் குழுவினரின் நாகஸ்வர இசை, கணீரென்று ஒலித்தது. தமிழ்ப் பாடல்களுடன் ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் வரும் மேல்நாட்டு இசை ஒன்றையும் நாகஸ்வரத்தில் வாசித்தனர்.

நிர்மலா ஜான் நடத்தும் நிர்மலாஞ்சலி நடனப் பள்ளியின் மாணவிகள் அருமையாக நடனம் ஆடினர். ராதை குமாரதாஸ் நடத்தும் வீணா வித்யாலயாவின் மாணவியர், மேடையில் எட்டு வீணைகளைக் கொண்டு அருமையான இசையை வழங்கினர். மேலும் பல குழுக்களின் நடன நிகழ்ச்சிகள், கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன. ‘முகுந்தா முகுந்தா’ என்ற பாடலுக்கான நடனமும் நன்று.

கழுத்துறை பொலிஸ் பயிற்சி நிலையத்தில் பயிலும் தமிழ்ப் பெண் காவலர்கள் ஆறு பேர், ‘சலங்கை ஒலி’ படத்தில் வரும் ‘ஓம் நமசிவாயா’ என்ற பாடலுக்கு நடனம் ஆடினர். மற்றவர்களைக் காட்டிலும் இவர்கள் சற்றே அடக்கமாக ஆடினர். இந்தப் பாடலுக்கு இன்னும் துடிப்புடன் ஆடியிருக்கலாம். இறுதியில் இடம்பெற்ற நடனம் ஒன்று, நல்ல துடிப்புடன் அமைந்திருந்தது.

நடன மணிகளின் ஒப்பனை, பாவங்கள், ஒருங்கிணைவு, இசைக்கு இயைந்த அசைவுகள் யாவும் சிறப்பாக இருந்தன. நடனங்களை வடிவமைத்த ஆசிரியர்கள், கலைத் திறனை வெளிப்படுத்தும் வண்ணம் அமைத்திருந்தனர். இறுதியில் பஜனை நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது.

தமிழ்நாட்டில் விழாவுக்கு வருபவர்களைச் சந்தனக் கிண்ணத்துடன் வரவேற்பார்கள். இந்த நிகழ்ச்சியிலோ வரவேற்பாளர்கள், தங்கள் கைகளால் சந்தனத்தைத் தொட்டு, வருகையாளரின் நெற்றியில் இட்டு வரவேற்றது, சிறப்பு. மேலும் வந்திருந்த அனைவருக்கும் பலகாரப் பெட்டியும் மைலோ என்ற பானமும் வழங்கி உபசரித்தனர். காவல் துறையினரில் உள்ள சிங்களப் பெண்கள், அவர்களின் பாரம்பரிய சேலையிலும் ஆண்கள் பட்டுச் சட்டை – வேட்டியிலும் ஆங்காங்கே தென்பட்டனர். விழாவின் தொகுப்புரைகளைத் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வழங்கினர். இந்த நிகழ்ச்சியின் அழைப்பிதழும் மூன்று மொழிகளிலும் அச்சடிக்கப்பெற்றிருந்தது.

பவுத்தர்கள் பெரும்பான்மையாக உள்ள நாட்டில், இந்துக்கள் கொண்டாடும் பண்டிகையை அவர்களின் முறைப்படியே அரசு விழாவாக எடுத்தது, நல்ல முயற்சி. இது, சமுதாய நல்லிணக்கத்தை நோக்கிய, நம்பிக்கையூட்டும் நகர்வு.

===============================================
படங்களுக்கு நன்றி – http://www.police.lk | http://www.news.lk

முதல் பதிவு - வல்லமை.காம்