வைகோவுக்கு வக்கீல் நோட்டீஸ்
தன் மீது வைகோ அவதூறுகளைப் பரப்பி வருவதாகவும் அதற்காக உடனே மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றும் இல்லாவிட்டால் ஒரு கோடி ரூபாய் கேட்டு மான நட்ட வழக்குத் தொடுக்கப்படும் என்றும் தயாநிதிமாறன் எச்சரித்துக் கெடு விதித்துள்ளார். இது தொடர்பாக, வைகோவுக்குத் தயாநிதி வக்கீல் நோட்டீஸ் விட்டுள்ளார்.
மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன், வைகோவுக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
"சன் டிவிக்கு பி.எஸ்.என்.எல். விளம்பரங்களைத் தருவது தொடர்பாக அபாண்டமாக என் மீது புகார் கூறியுள்ளார் வைகோ. ஆனால் இதுதொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்றம் அபராதம் விதித்ததை நினைவூட்ட விரும்புகிறேன்.
ஜெயா டிவிக்கு டெபோர்ட் வசதியைத் தர எனது அமைச்சகம் தாமதம் செய்து வருவதாக இன்னொரு புகார் கூறியுள்ளார். டெபோர்ட் வசதிக்கான அனுமதியைத் தர உயர்நீதிமன்றம் கால அவகாசம் விதித்து உத்தரவிட்டுள்ளதை அவர் மறந்து பேசியுள்ளார். ராஜ் டிவி விவகாரத்தைப் பொறுத்தவரை, அது உரிமம் இல்லாமல் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியது குற்றம் என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. அப்படி இருக்கையில் எனது தலையீட்டின் பேரில் ராஜ் டிவியின் நிகழ்ச்சிகள் முடக்கப்பட்டதாக வைகோ கூறுவது அபாண்டமான, அப்பட்டமான பொய்.
இப்படி என்னைப் பற்றி தொடர்ந்து அவதூறாகப் பேசி வரும் வைகோ, ஏப்ரல் 3ஆம் தேதி(திங்கள்கிழமை)க்குள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால், வைகோ, தினமலர், ஜெயா டிவி ஆகியோர் தலா ரூ. 1 கோடி மான நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கேட்டு நீதிமன்றம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்."
இவ்வாறு தயாநிதி மாறன் எச்சரித்துள்ளார்.
மேலும் வைகோவின் பேட்டியை ஒளிபரப்பிய தினமலர் நாளிதழுக்கும் ஜெயா டிவிக்கும் தயாநிதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதோ, மூன்றாம் தேதி முடிந்துவிட்டது. உயிர் போனாலும் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்று வைகோ கூறிவிட்டார். 'நீ ஆண்மகன் என்றால் வழக்குப் போட்டுப் பார்' என்றும் சவால் விட்டுள்ளார். 'போடுவதற்கு முன் உன் தாத்தாவிடம் கொஞ்சம் யோசனை கேட்டுக்கொள்' என்றும் ஆலோசனை கூறியுள்ளார்.
தயாநிதியின் தன்மானத்தை வைகோ தூண்டிவிட்டுள்ளதால் தயாநிதிக்கு வழக்குப் போடுவதை விட வேறு வழியில்லை. இது, வைகோவுக்கு மறைமுகமாகப் பெரும் ஊடக கவனத்தை ஏற்படுத்தும். பேசுகிற கூட்டங்களில் எல்லாம் தான் வைகோ இதைக் குறிப்பிட்டு வீராவேசமாகப் பேசுவார். மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு, 'பழைய பகைக்காகப் பழிவாங்குகிறார்' என்று தயாநிதியை விட்டுவிட்டுக் கருணாநிதியை வைகோ கட்டம் கட்டுவார். அந்தப் பேச்சினால் மக்களின் அனுதாபத்தைப் பெறுவதில் அவர் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. அது, தேர்தல் வாக்குகளாக மாறிவிடும்.
எனவே, தயாநிதியின் வழக்கைச் சாதாரண மான நட்ட வழக்கு என்று கருத இயலாது. எனவே தான் 'வழக்குப் போடுவதற்கு முன் உன் தாத்தாவிடம் ஆலோசனை கேள்' என்று வைகோ குறிப்பிட்டுள்ளார்.
தயாநிதி இடத்தில் கருணாநிதி இருந்தால் இப்போது வழக்குத் தொடுக்காமல் தேர்தல் முடியும் வரை காத்திருப்பார். ஆனால், தயாநிதி இடத்தில் தயாநிதிதானே இருக்கிறார். இளரத்தம் சூடாகத்தானே இருக்கும்?
நன்றி: தமிழ்சிஃபி இணைய இதழ்
2.4.06 அன்றைய வைகோவின் பேச்சுகள்:
1. தயாநிதிக்கு மேலும் கேள்வி
2. சட்டசபையில் பேசினீர்களா?
3. கனரா வங்கியில் கடன் வாங்கினேன்
4. சன் டிவிக்கு வைகோ கேள்வி
5. தயாநிதிக்கு வைகோ சவால்
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Tuesday, April 04, 2006
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 12:08 AM 0 comments
Subscribe to:
Posts (Atom)