தன் உதவியாளரை இயக்குநராக உயர்த்தி, இந்தக் கதையைப் படமாக்கப் பண முதலீடு செய்ய முன்வந்த தயாரிப்பாளர் (இயக்குநர்) ஷங்கருக்கு முதல் பாராட்டு. சதையை நம்பாமல் கதையை நம்பி, தன் இரண்டாவது (முதல்)
படமே முத்திரைப் படமாகும் அளவுக்கு உழைத்துள்ள இயக்குநர் வசந்தபாலனுக்கு அடுத்த பாராட்டு. முருகேசன் என்ற பாத்திரத்தை நம் கண்முன் எழச்செய்து, மனத்திற்குள் இடம் பிடிக்க வைத்த நடிகர் பசுபதிக்கு அழுத்தமான பாராட்டு. தரமான படம் என்று ஆணித் தரமாகச் சொல்ல வைத்திருக்கிறார்கள். படக் குழுவினர் அனைவரையும் பாராட்ட வேண்டும்.
வெக்கை மிகுந்த விருதுநகரின் புழுதி பறக்கும் நிலப் பரப்பு; வறுமையும் துன்பங்களும் நிறைந்த மக்கள்; கிராமிய மணம் கமழும் ஊர். அங்கு கசாப்புக் கடைக்காரர் ஜி.எம். குமாருக்கு மகன்கள் இருவர்; மகள்கள் இருவர். மூத்தவன், முருகேசனாகப் பசுபதி. இளையவன் கதிராகப் பரத். பள்ளிக்கூட நேரத்தில் திரையரங்கிற்குள் அமர்ந்து புகை பிடித்தபடி படம் பார்க்கும் மூத்த மகனை இழுத்து வருகிறார் அப்பா. அவனை அடித்து உதைத்து, நிர்வாணமாக்கி, கால்களைக் கட்டிப் போட்டு, நாள் முழுதும் வெயிலில் கிடக்க வேண்டும் என்று தண்டிக்கிறார் அப்பா. அவமானம் பிடுங்கித் தின்ன, அன்று இரவே முருகேசன், வீட்டிலிருந்து பணம், நகைகளைத் திருடிக்கொண்டு ஊரை விட்டு ஓடிவிடுகிறான்.
பல துன்பங்களை அனுபவித்த அவன், ஒரு திரையரங்கில் தஞ்சம் அடைகிறான். படிப்படியாக அங்கேயே வளர்ந்து, படம் ஓட்டும் வேலையைச் செய்கிறான். அந்தத் திரையரங்கிற்கு எதிரே இருக்கும் சிற்றுண்டிச் சாலையில் தங்கம் என்ற அழகிய பெண் இருக்கிறாள். அவளுக்கும் பசுபதிக்கும் காதல். ஆனால், துரதிருஷ்டம் துரத்துகிறது. அவன் காதலி, அவன் கண் எதிரேயே கழுத்தை அறுத்துக்கொண்டு மரிக்கிறாள்.
பிறகு ஊர் திரும்பும் அவனை அவன் அப்பா, திருடன் என்று கூறி விரட்டுகிறார். பிறகு தம்பியின் வற்புறுத்தலுக்காக வீடு திரும்புகிறான். வீட்டில் யாரும் அவனுடன் ஒட்டவில்லை. அவன் இளவயது சிநேகிதி பாண்டி (ஷ்ரேயா ரெட்டி) மட்டும் அவனைப் புரிந்துகொண்டு ஆதரிக்கிறாள். இதற்குள் வீட்டிலிருந்த நகைகளைத் திருடியதாக அடுத்த திருட்டுப் பட்டம், அவனுக்குக் கிடைக்கிறது.
இன்னொரு புறம், விளம்பர நிறுவனம் தொடங்கிய தம்பி பரத், சக்கைப் போடு போடுகிறான். வெற்றி மேல் வெற்றி. அவனுக்கும் மீனாட்சி (பாவனா) என்ற பெண்ணுக்கும் காதல் அரும்புகிறது. தொழில் போட்டி காரணமாகப் பகையும் வளர்கிறது. இறுதியில் தம்பியைக் கொல்ல வந்த படையைத் தனி ஆளாக அழித்து, ஒரு தியாகியாக நிமிர்ந்து நிற்கிறான் அண்ணன் பசுபதி.
தொடர்ந்து அடுக்கடுக்காகத் துன்பங்களையே அனுபவித்து வரும் பசுபதியின் முடிவு, மனத்தைப் பாரமாக்கக் கூடியது. அவனைத் தன் மகனே இல்லை என்று கூறிய அவன் அப்பா, இறுதியில் 'என் குடும்பத்தைக் காத்த குல தெய்வம்' என்று அவன் பாதத்தைப் பிடித்து அழுகிறார். இருக்கும் போது ஏறெடுத்தும் பார்க்காத உலகம், செத்த பிறகு சீராட்டுகிறது.
இந்தப் படத்தில் பசுபதி ஒவ்வொரு காட்சியிலும் வாழ்ந்திருக்கிறார். மென்மையான காதல் உணர்வானாலும் துயரத்தில் நீந்தி மூழ்குவதானாலும் அவமானத்தில் கூனிக் குறுகுவதானாலும் கோபத்தில் பொங்குவதானாலும் இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். 20 ஆண்டுகள் கழித்து ஊர் திரும்பும் அவர், கசங்கிய அழுக்குச் சட்டையுடன், தேய்ந்த ரப்பர் செருப்புடன் நகரப் பேருந்தின் படிக்கட்டிலிருந்து கீழே இறங்கும் அந்த ஒரு காட்சியே அவரின் வாழ்க்கையைச் சொல்லிவிடுகிறது. குணச்சித்திர நடிப்புக்குப் பசுபதி எனப் பெயர் எடுத்துவிட்டார். இந்தப் படத்தின் கதாநாயகன் அவர்தான்.
பரத்தின் வாழ்க்கை, கதையில் இணைகோடாக வருகிறது. விளம்பரத் தொழில் என்ற புதிய களத்தில் அவர் அடையும் வளர்ச்சி, சுவையாகக் காட்டப்பட்டுள்ளது. சிறிதளவே எனினும் பாவனாவின் முகமும் நடிப்பும் பளீரென உள்ளது. தங்கம் என்ற பாத்திரத்தில் நடித்துள்ள மலையாள இறக்குமதி பிரியங்கா, தன் பெரிய கண்களின் மூலம் மனத்தைக் கொள்ளை கொள்கிறார்.
ஏ.ஆர்.ரகுமானின் உறவினரான ஜி.வி.பிரகாஷ் குமார் என்ற இளம் இசையமைப்பாளர், வெயில் மூலம் அறிமுகம் ஆகியிருக்கிறார். 'உருகுதே மருகுதே' என்ற பாடல், உண்மையிலேயே உருக வைக்கிறது. 'வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி' என்ற பாடல், சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நா.முத்துக்குமாரின் பாடல்களில் மண் மணம் கமழ்கிறது.
மதியின் ஒளிப்பதிவு, வீரசமரின் கலை, சூப்பர் சுப்பராயனின் சண்டைக் காட்சிகள் ஆகியவை படத்திற்குப் பெரிதும் துணை நிற்கின்றன.
பசுபதியின் கோணத்தில் படத்தின் கதை சொல்லப்படுகிறது. சிறு வயதில் ஓடிப் போன பசுபதி, வளர்ந்து 20 ஆண்டுகள் கழிந்த பிறகே ஊருக்குத் திரும்புகிறான். அது வரை ஊரில் நடந்த எதுவும் அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆனால், தன் கதை மட்டுமல்லாமல் தன் தம்பி வளர்ந்த கதையையும் பசுபதி சொல்வது எப்படி? இந்த இடத்தில் லாஜிக் இடித்தாலும் பெரும்பாலும் படம், இயல்பான கதையோட்டத்துடனேயே உள்ளது.
இந்தப் படம், ஓர் உண்மைக் கதையின் திரை வடிவம். "என் வாழ்க்கையைத்தான் 'வெயில்' கதையாக்கினேன். நான் கண்ணீரில் கரைந்ததை, காட்சிகளாக்கியிருக்கிறேன். நான் பிறந்து வெயிலில் விளையாடி, புரண்டு வளர்ந்த விருதுநகரில் படமாக்கியிருக்கிறேன். பசுபதியின் மீசை என் பிரமு சித்தப்பாவின் மீசை. தீப்பெட்டி ஒட்டும் ஷ்ரேயா, என் தேவிகா அத்தை. பரத்தின் விளம்பரக் கம்பெனி என் நண்பன் வரதராஜனுடையது. 'செத்தவடம் செத்துப் போனேன்' நான்தான்... இப்படி நிஜங்கள் வெயிலில் உலவுகின்றன" என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார் இயக்குநர் ஜி. வசந்தபாலன்.
ஓர் உண்மைக் கதையை இவ்வளவு நேர்த்தியாகப் படமாக்க முடிந்திருப்பது, வசந்தபாலனின் திரை ஆளுமையைக் காட்டுகிறது. இந்த உண்மையை நேரடியாக அனுபவித்துத் தாங்கியது, அவரின் மன ஆளுமையைக் காட்டுகிறது. விருதுகள் நிச்சயம்.
இந்தப் படத்தை அனைவரும் பார்க்க வேண்டும்; குறிப்பாகக் குழந்தைகளை அடிப்பவர்கள்.
நன்றி: தமிழ்சிஃபி
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Sunday, December 31, 2006
வெயில் - திரை விமர்சனம்
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 8:42 AM 4 comments
Monday, December 25, 2006
தமிழ் சிஃபி கிறிஸ்துமஸ் சிறப்பிதழ்
தமிழ்சிஃபி கிறிஸ்துமஸ் சிறப்பிதழ் - 2006
இதில் தேவாலயச் சேர்ந்திசைப் பாடல்களைக் கேட்கலாம். கிறிஸ்தவ மத போதகர்களின் உரைகளின் ஒளி(வீடியோ)ப் பதிவுகளைக் காணலாம். குழந்தை ஏசு, கிறிஸ்து ஆகியோரின் புகைப்படத் தொகுப்பும் சில படைப்புகளும் உண்டு.
நாகேஸ்வரி அண்ணாமலையின் கிறிஸ்துமஸ் சிறப்புக் கட்டுரை >>>
படித்து, பார்த்து, கேட்டு மகிழுங்கள். கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 11:01 AM 0 comments
Saturday, December 09, 2006
முரசொலி மாறனுக்குச் சிலை!!!??
திமுக தலைவர் கருணாநிதியின் மனம் கவர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் முழு உருவச் சிலை, பாராளுமன்ற வளாகத்தில் திறக்கப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதி முன்னிலையில் பிரதமர் மன்மோகன்சிங் விழாவில் கலந்துகொண்டு சிலையைத் திறந்து வைத்தார். மாறன் சிலை, பாராளுமன்றத்தில் மேலவை செல்லும் வாயிலில் அமைக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 8 அன்று காலை நடந்த விழாவில் துணைக் குடியரசுத் தலைவர் பைரோன்சிங் செகாவத், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாராளுமன்ற எதிர்க் கட்சி தலைவர் அத்வானி, சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, மத்திய மந்திரிகள் சரத்பவார், மணிசங்கர் அய்யர், ப.சிதம்பரம், டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன், ராஜா, ஜெயபால் ரெட்டி, ஜி.கே.வாசன், ரகுபதி, வெங்கடபதி, பழனிமாணிக்கம், சுப்புலட்சுமி ஜெகதீசன், வேலு, காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா. அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி,
இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் குருதாஸ் குப்தா, தெலுங்கு தேசம் பாராளுமன்றத் தலைவர் எர்ரன்நாயுடு, முன்னாள் தமிழக ஆளுநர் பி.சி.அலெக்சாண்டர், கரண்சிங், தொழில் அதிபர் ராகுல் பஜாஜ், எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், ஏ.கே.மூர்த்தி, பெல்லார்மின், மோகன், அப்பாதுரை,
முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், முரசொலி மாறனின் மனைவி மல்லிகா மாறன், முரசொலி செல்வம், அவருடைய மனைவி செல்வி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இறை உருவங்களின் சிலைகளை ஒரு பக்கம் தள்ளி வைப்போம். மனிதர்களின் சிலைகளை இப்போது கணக்கில் எடுப்போம். சிலையாக ஒருவரை வடிப்பதே முதலில் விமர்சனத்திற்கு உரியது. அவருடைய கருத்துகளை விட அவரது உருவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். சரி, ஒருவரின் உருவம் என்பது அவரது கொள்கைகளுக்குக் குறியீடு என்று வைத்துக்கொண்டால் அதனை நாம் ஒரு கட்டம் வரைக்கும் அனுமதிக்கலாம்.
மேலும் ஒருவரின் சாதனைகளுக்கு அளிக்கப்படும் அங்கீகாரம் என்றும் அதைக் கருதினால், சாதனையாளர்கள் அனைவருக்கும் சிலை வைக்கிறோமா? என்ற கேள்வி எழும். அப்படியே சாதனையாளர்களுக்கு அங்கீகாரம் என்று எடுத்துக்கொண்டாலும் சாதனை என்பதன் அளவீடு என்ன? அதனுடைய படிநிலைகள் என்ன? எந்த அளவு செயல்கள், சாதனைகள் புரிந்தவருக்குச் சிலை வைக்கலாம் என்ற எந்த அளவீடும் நம்மிடம் இல்லை.
இப்போதைய நடைமுறை என்னவென்றால், ஆட்சி அதிகாரத்தைப் பெற்றிருக்கும் கட்சிகள் முடிவு செய்வதே இறுதி நிலை என்றாகிறது. இது மக்களின் ஏகோபித்த விருப்பம் என்றும் கருத இயலாது. மக்களிடம் இன்னாருக்குச் சிலை வைக்கலாமா என்று வாக்கெடுப்பு ஏதும் நாம் நடத்துவதில்லை. அரசியல் கட்சித் தலைவர் சொன்னதுதான் சட்டம் என்றால், அவர் கை காட்டும் யாருக்கும் சிலை வைத்துவிடலாமா? சிலைக் கோரிக்கைகளைப் பரிசீலிக்கும் குழு, பொம்மைக் குழுதானா?
அடுத்ததாகச் சிலை வைக்கும் இடங்களைப் பார்ப்போம். சாலை நடுவிலும் முக்கிய பகுதிகளிலும் இன்னும் மனிதர்களின் விருப்பப்படி எங்கும் சிலைகள் வைக்கப்படுகின்றன. ஒரு பகுதியில் சிலை வைப்பதற்கு என்ன அளவுகோல் இருக்கிறது? பாராளுமன்ற வளாகத்தில் சிலை வைப்பது, ஒரு கெளரவம் என்றால் அதற்கான நெறிமுறைகளை அரசு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். சிலைக் கோரிக்கைகளைப் பரிசீலிக்கும் குழு பரந்து பட்டதாக இருக்கவேண்டும். அது, அரசியலுக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கவேண்டும்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சிலை திறப்புக்கு வராத பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் மாறன் சிலையைத் திறந்து வைக்கத் தவறவில்லை. இந்தத் தருணத்தில் எம்ஜிஆரையும் முரசொலி மாறனையும் எவருமே ஒப்பிடத்தான் செய்வார்கள். தமிழகத்தில் மூன்று முறைகள் தொடர்ந்து முதல்வராகப் பதவி வகித்த எம்ஜிஆர், நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் மக்களை ஈர்த்த தலைமைத்துவத்திலும் மேலும் சிலவற்றிலும் சிறந்து விளங்கினார். ஆனால், மாறனுடைய பங்களிப்பு, தேசிய அரசியல் என்ற அளவிலும்கூட பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அவரின் பெருமைகளாகக் கூறப்படுபவை, மிகையான புகழுரைகள்.
தமிழ்நாட்டிலிருந்து பாராளுமன்ற வளாகத்தில் சிலை வைக்க வேறு சிறந்த நபர்கள் யாரும் கிடைக்கவில்லையா? மீதம் உள்ள அனைவரையும் விட மாறனின் பங்களிப்பு சிறந்ததா? மத்திய அரசுக்கு ஆதரவளிக்கும் ஒரே காரணத்தால் திமுகவின் கோரிக்கைகள் அனைத்தையும் மத்திய அரசு கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ளலாமா? இப்படி சுய ஆதாயம் தேடும் அரசியல் நோக்குள்ள கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதன் மூலம் மத்திய அரசின் தரம் தாழ்ந்துவிட்டது.
இப்படி விமர்சிப்பது, மாறன் ஒன்றுமே செய்யவில்லை என்ற அர்த்தத்தில் இல்லை; அவரையும் விடச் சாதித்த பெரிய மனிதர்கள் கவனிக்கப்படாமல் இருக்க, இப்படி கருணாநிதியின் ஒற்றை விருப்பத்தினால் மாறன், சிலைப் பந்தயத்தில் முந்துவது ஏற்புடையதா என்பது பற்றியே.
நன்றி: தமிழ்சிஃபி
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 9:12 AM 27 comments