கவிக்கோ ஞானச்செல்வனின் அகவை 70 நிறைவு விழாவும் அவரின் இரு நூல்கள் வெளியீட்டு விழாவும் 28.11.2009 அன்று சென்னை, தேவநேயப் பாவாணர் அரங்கத்தில் நடைபெற்றன. உலகத் தமிழ் ஒப்புரவாளர் பேரவை, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
பேச்சாளரும் எழுத்தாளருமான கவிக்கோ ஞானச்செல்வன், 'தமிழ் பேசு தங்கக் காசு' நிகழ்ச்சிக்கு நடுவராக வீற்றிருக்கிறார். மேலும் மக்கள் தொலைக்காட்சியில் தவறின்றித் தமிழ் பேசுவது, எழுதுவது தொடர்பான நிகழ்ச்சிகளில் முக்கிய பங்காற்றி வருகிறார்.
கலைமாமணி டி.கே.எஸ்.கலைவாணன் தமிழ் வாழ்த்துப் பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. மலர்மாமணி புலவர் இளஞ்செழியன் வரவேற்புரை ஆற்றினார்.
விழாவுக்கு முன்னாள் அமைச்சர் அருளாளர் இராம.வீரப்பன் தலைமை தாங்கினார். 'ஞானச்செல்வன் கவிதைகள்', 'அர்த்தமுள்ள அரங்குகள்' ஆகிய நூல்களைக் கவிஞர் வைரமுத்து வெளியிட்டார். மூத்த வழக்கறிஞர் இரா.காந்தி, தொழிலதிபர்கள் மாம்பலம் சந்திரசேகர், கிருத்திவாசன், அழ,ஆறுமுகம், கவிஞர் புரட்சிதாசன் ஆகியோர் நூல்களைப் பெற்றுக்கொண்டனர்.
பேராசிரியர் முனைவர் தி.இராசகோபாலன், அமுதசுரபி ஆசிரியர் முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் ஆகியோர் நூல் திறனாய்வுரை நிகழ்த்தினர். கவிஞர் முத்துலிங்கம் வாழ்த்திப் பேசினார். கவிஞர் மானா பாஸ்கரன் நன்றியுரை நிகழ்த்தினார். கவிஞர் எஸ்.இராஜகுமாரன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
திருவாரூர் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பல ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்த ஞானச்செல்வனின் மாணவர்கள், நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அந்த மாணவர்களுள் நானும் ஒருவன்; 1992-93 ஆண்டுகளில் ஞானச்செல்வன் எனக்கு வகுப்பாசிரியராகவும் தமிழாசிரியராகவும் அமைந்தார். இலக்கிய மன்றத் தொடக்க விழாவில் கவிப் பட்டிமன்றம் ஒன்றை உருவாக்கி, அதற்கு என்னை நடுவராக அமர்த்தினார். சில போட்டிகளில் கலந்துகொள்ளவும் என்னை ஊக்குவித்தார். அந்தப் போட்டிகளில் பெற்ற வெற்றிகள் எனக்கு ஊக்கத்தை அளித்தன. அந்த வகையில் என் வளர்ச்சியில் ஞானச்செல்வனுக்குப் பங்குண்டு. அவருக்கு என் நன்றிகள். அவர் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.