பேராசிரியர் புனல் க.முருகையன் எழுதி, காந்தளகம் வெளியி்ட்ட 'பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு' என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டேன். சென்னைப் பல்கலைக்கழகப் பவழ விழா அரங்கில் 15.06.2010 என்று மாலை நடந்தது. சத்குருநாதன் குழுவினரின் திருமுறை இன்னிசையுடன் விழா தொடங்கியது.
தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் நூலை வெளியிட்டார். பெரியகருப்பன் இடையில் செல்ல வேண்டி இருந்ததால், வழக்கறிஞர் இரா.காந்தியிடம் நிகழ்வின் தலைமைப் பொறுப்பினை ஒப்படைத்துச் சென்றார்.
இந்நிகழ்வில் திருப்பனந்தாள், தருமபுரம், திருவாடுதுறை ஆகிய திருமடங்களைச் சார்ந்த தம்பிரான் சுவாமிகள், சிங்கப்பூர் தமிழ்ப் பேராசிரியர் சுப. திண்ணப்பன், ஆஸ்திரேலியா தமிழ்ப் பேராசிரியர் ஆ. கந்தையா பேராசிரியர் கந்தையா உள்ளிட்ட அறிஞர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் தொடக்கவுரை ஆற்ற, மறவன்புலவு க. சச்சிதானந்தன் அறிமுகவுரை ஆற்ற, பேராசிரியர் புனல் க.முருகையன் ஏற்புரை நிகழ்த்தினார். ஒலிபெயர்ப்புக் குறியீடுகளை இணையத்தில் (http://www.virtualvinodh.com/tamilipa/tamilipa.php) ஏற்றிய வினோத் ராஜன், கணித் திரையில், செயலாக்க முறைகளை விளக்கினார்.
சென்னைப் பல்கலைக்கழக மாணவி பார்கவி விழாவுக்கு ஒத்துழைத்தார். காந்தளகம் நித்தியா கணேசன், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.