!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, January 07, 2006

ஆறு - திரை விமர்சனம்

உள்ளுக்குள் நல்லவனாக இருக்கும் அடியாள் ஒருவனின் கதை.

அநாதையான சூர்யாவுக்கு ஆறுமுகம் என்று பெயர். ஆறு என்று சுருக்கமாகக் கூப்பிடுகிறார்கள். அதனால்தான் படத்திற்கு, ஆறு என்று பெயர். இந்த ஆறு, ஆறு வயதாக இருக்கும்போது அடியாள் தலைவன் ஒருவனிடம் எடுபிடியாகச் சேருகிறான். படிப்படியாக இவனும் அடியாளாக மாறுகிறான். மிரட்டல், கூட்டத்துக்கு ஆள் சேர்த்தல், கூட்டத்தில் கல்/ சோடா பாட்டில்/ தக்காளி இத்யாதிகளை எறிந்து கலைத்தல், கடத்தல், கை / கால்களை எடுத்தல், பிரச்சினைகளைத் தீர்த்துவைத்தல்... உள்ளிட்ட வேலைகளைச் செய்யும் முரட்டுக் கதாபாத்திரம் சூர்யாவுக்கு.

சிவகாசியில் விஜய்யை அடுத்து, ஆறு சூர்யாவும் பெண்கள் இடுப்பு தெரிகிற மாதிரி ஏன் உடை அணிகிறார்கள் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அப்படி திரிஷா இடுப்புத் தெரிய உடுத்திய சமயத்தில் அவரையும் அவர் தோழிகளையும் சகட்டு மேனிக்குத் திட்டுகிறார். அங்கு மோதலில் தோன்றினாலும், திரிஷாவின் குடும்பத்துப் பிரச்சினையைச் சூர்யா தீர்த்துவைத்த போது, அவர் மீது நன்மதிப்பு ஏற்படுகிறது. பெண்களைத் 'தூக்கும்' ஒரு ரவுடிக் கூட்டத்திடம் திரிஷா சிக்குகிறார். 'இவ என் பொண்டாட்டி மாதிரி' என்று சொல்லி, அவர்களிடமிருந்து திரிஷாவை மீட்கிறார் சூர்யா. அங்கிருந்து காதல் காய்ச்சல் எகிறிவிடுகிறது.

சூர்யாவைச் சிறு வயதிலிருந்து வளர்க்கும் அடியாள் தலைவனாக ஆசிஷ் வித்யார்த்தி. வன்மம் மிக்க முரட்டு வில்லன் பாத்திரம் இவருக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது.

பதவி நீக்கப்பட்ட அமைச்சர் ஒருவர், தன் பதவியை மீண்டும் பெற, பல இடங்களில் வன்முறையும் கடையடைப்பும் நடக்கவேண்டும்; ஐந்து பேரைத் தீக்குளிக்க வைக்கவேண்டும் என்கிறார். அந்த 'வேலை', சூர்யாவிடம் ஒப்படைக்கப்படுகிறது. தீக்குளிக்க வைப்பதைச் சூர்யா ஏற்கவில்லை. எனவே, சூர்யாவை ஏமாற்ற, 'வெறுமனே மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்கப் போவதாக நடித்தால் போதும். அதற்குள் போலீஸ் வந்து கைது செய்துவிடும்' என்று சமாதானம் சொல்கிறான் அடியாள் தலைவன். ஆனால், மறைமுகமாக, அந்த ஐவரையும் உயிரோடு கொளுத்த ஆள் அனுப்பிவிடுகிறான்.

ஒன்றும் தெரியாத அப்பாவிகள் ஐந்து பேரை உயிரோடு எரித்ததைப் பொறுக்க முடியாமல் சூர்யா துடிக்கிறார். உண்மை தெரிந்தால் சிக்கலாகிவிடும் என அடியாள் தலைவன், சூர்யாவைத் 'தூக்க'ச் சொல்லிவிடுகிறான். தான் அண்ணன் என்று அடிவயிற்றிலிருந்து அழைத்தவன், தன்னைக் கொல்ல முயன்றதைச் சூர்யாவால் தாங்க முடியவில்லை. தலைவனையும் அவன் தம்பிகளையும் மிகச் சாதுரியமாகப் பழிவாங்குகிறார்.

இதுதான் கதை.

படம் படுவேகமாக ஓடுகிறது. காட்சிகளில் நல்ல விறுவிறுப்பு. சூர்யா அடியாளாக இருந்தாலும் அவன் நல்லவன் என்பதை அழகாகக் காட்டியிருக்கிறார்கள். பெண்களிடம் மிகவும் கண்ணியமாக நடக்கிறார்; அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கிறார். அவர்களுக்குத் தீங்கு செய்வோரைக் கண்டால் வெடிக்கிறார். ஆசிஷ் வித்யார்தியின் தங்கையாக வரும் 'அண்ணி' மாளவிகா மீது மிகுந்த பாசம் வைத்துள்ளார்.

பாசம், காதல், வீரம், வேகம், துணிச்சல், ஒவ்வொரு வேலையையும் திட்டமிடும் புத்திசாலித்தனம், பழிவாங்கும் வைராக்கியம் எனப் பல குணங்களின் கலவையாகச் சூர்யா விளங்குகிறார். ஒவ்வோர் உணர்வையும் அவர் சிறப்பாகவே வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய உடல்மொழி, அவருக்கு மிகவும் உதவுகிறது.

குப்பத்து அடியாளாக இருந்தாலும் அவர் கெட்ட வார்த்தைகள் பேசி, கீழ்த்தரமாக நடக்கவில்லை. அடிக்கும்போதுகூட எதிராளியின் உயிர் போய்விடாமல் காயம் மட்டும் படுமாறு கவனமாக அடிக்கிறார். உயிரின் மதிப்பை உணர்ந்த அடியாளாகப் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் சூர்யா.

திரிஷாவின் பாத்திரம் வலிமையாக இல்லை. சூர்யா அவளைக் காதலிக்க மாட்டானா என்று ஏங்கியவர், அவருக்குப் பத்துப் பேர் முன்பு முத்தம் கொடுத்தவர், சூர்யா காதலிக்கிறேன் என்று சொல்லும்போது பரிதாபத்தினால் வரும் காதல் எனக்கு வேண்டாம் என்கிறார். அந்த அளவுக்கு மன முதிர்ச்சி உள்ள பாத்திரமாக அவர் உருவாக்கப்படவில்லை. பாடல் காட்சிகளில் அழகுப் பதுமையாக வந்து செல்கிறார்.

அரசியல், ரவுடியிசம், காவல் துறை ஆகியவை ஒன்றுக்கொன்று துணையாக நின்று, பல தீமைகளைச் செய்து வருகின்றன என்பதற்கு இந்தப் படம் ஒரு மறைமுக ஆவணமாக விளங்குகிறது. போராட்டங்களில் பங்குகொள்ளும் பேச்சாளர்கள், கூடும் மக்கள், கூட்டத்தைக் கலைக்கும் மக்கள் அனைவருமே 'ஏற்பாடு' செய்யப்பட்டு வருபவர்கள் என்கிற உண்மையை அழகாகக் காட்டியிருக்கிறார்கள். இது, போராட்டங்களின் உண்மை முகத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது.

குப்பத்துப் பெண்ணாக வரும் ஐஸ்வர்யா, சிறப்பாக நடிக்க முயன்றுள்ளார். மேடைப் பேச்சாகட்டும், தண்ணீர் பிடிப்பதாகட்டும் காவல் நிலையத்திலும் துணிச்சலாகப் பேசுவதாகட்டும்... அனைத்துக் காட்சியிலும் முரட்டு நடிப்பில் நிற்கிறார். வடிவேலுவின் நகைச்சுவை, பரவாயில்லை.

படத்திற்கு இசையமைத்துள்ளவர், தேவிஸ்ரீ பிரசாத். மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ஒலி மாசைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. பின்னணி இசையிலும் இவ்வளவு இரைச்சல் இருக்கலாமா என்பதை அவர்கள்தான் சொல்லவேண்டும். 'ஃபிரியா வுடு', 'பாக்காத' ஆகிய பாடல்கள், பிரபலமாகக் கூடியவை. ராக்கி ராஜேஷின் சண்டைப் பயிற்சி, படத்தின் அடிப்படை அம்சம். 'போட்டுத் தள்ளும்' காட்சிகள் எல்லாம் ரகளைதான்.

இயக்குநர் ஹரி, படத்தை வேகமாக விறுவிறுப்பாகவும் நகர்த்துவதில் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் ஒரு கேள்வி. ஐந்து பேர் தீக்குளிக்க நிற்கையில் ஒருவன் கொளுத்தி விடுகிறான். ஐவரும் எரிகிறார்கள். உடலில் தீப்பிடித்தவர்கள், ஒரே இடத்தில் நின்றபடியேவா எரிவார்கள்? அங்கும் இங்கும் ஓட மாட்டார்களா?
இறுதியில் ஆசிஷ் வித்யார்தியைச் சூர்யா பழிவாங்குகிறார். அதன் பிறகு அவர், சூர்யாவைச் சும்மாவா விட்டார்? இவை போன்ற சில காட்சிகள், லாஜிக் இல்லாமல் இருக்கின்றன. இருந்தாலும் இயக்குநரின் முயற்சி, பாராட்டுதலுக்கு உரியது.

படத்திற்குப் பத்திற்கு ஆறு மதிப்பெண் கொடுக்க முடியாது; ஆனால், இருபதுக்கு ஆறு மதிப்பெண் கொடுக்கலாம்.


நன்றி: தமிழ்சிஃபி

No comments: