எட்டு போடுமாறு அழைத்த மாலன் அவர்களுக்கு நன்றி. தாமதத்திற்கு மன்னியுங்கள். ஒருவர் தன்னைப் பற்றிய எட்டு விஷயங்கள் / சாதனைகள் / சந்தோஷங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற குறிப்பினைக் கொண்டு மேற்செல்கிறேன்.
சாதனைகள் என்று குறிப்பிடும் அளவு இன்னும் பெரிதாக எதுவும் செய்துவிடவில்லை. பல வளைவுகளும் ஏற்ற இறக்கங்களும் கொண்ட ஒரு நீண்ட ஓட்டப் பந்தயத்தில் சில முனைகளைக் கடந்திருக்கிறேன். வளரிளம் பருவத்தில் சில சில்லறை மகிழ்ச்சிகள் அடைந்தது உண்டு. ஆயினும் இப்போதைய மனநிலையில் கிளர்ச்சி அடைவது, மிதமிஞ்சிய உற்சாகம், கூப்பாடு... என எதுவும் இல்லை. எதிரிலோ, தொலைக்காட்சியிலோ, வானொலியிலோ யாரேனும் சிரிக்கும் போதுதான் இவ்வளவு நேரம் நான் சிரிக்கவில்லை என்பதே எனக்கு உறைக்கிறது; நானும் சிரிக்கவேண்டும் என்று தோன்றுகிறது.
வாழ்வில் அநேக துன்பங்களையும் அவமானங்களையும் ஏமாற்றங்களையும் நான் சந்தித்திருக்கிறேன்; வெளுத்ததெல்லாம் பால் என எண்ணி, மிகவும் வெளிப்படையாக இருந்து அடிகள் பட்டிருக்கிறேன். சில தவறான முடிவுகளால் பெரும் இழப்புகள் நேர்ந்ததுண்டு. ஆயினும் இவ்வளவுக்கும் பிறகும் சில வெற்றிகளையும் மகிழ்ச்சிகளையும் பெற்றுள்ளேன். சில நல்ல குணங்களைக் கொண்டிருக்கிறேன். நான் மகிழும் அளவுக்கு என் வாழ்க்கையில் என்னென்ன உண்டு என்று சற்றே திரும்பிப் பார்த்தேன். கிட்டிய சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
1.
என் தொடர்ந்து போராடும் குணத்திற்காக மகிழ்கிறேன்.
நான் சுமார் 30 வேலைகள் பார்த்திருக்கிறேன். பப்பாளிப் பழம் விற்பவர், சில்லறை விலையில் பெட்ரோல் விற்பவர், கிராம நிர்வாக அலுவலரிடம் கணக்கு எழுதுபவர், நாளிதழ் விநியோகிப்பாளர், வீட்டு வேலைக்காரர், கொரியர் அஞ்சல்காரர், ஊதுபத்தி விற்பவர், காஃபி மேக்கர் விற்பவர், ஃபினாயில்-சோப் ஆயில் விற்பவர், கல்யாண வீட்டில் சாப்பாடு பரிமாறுபவர், கவிஞர், எழுத்தாளர், எழுத்தாளருக்கு உதவியாளர், வசனகர்த்தா,
தொலைக்காட்சித் தொடர் உதவி இயக்குநர், வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர், பிழை திருத்துபவர், செய்தியாளர், புகைப்படக்காரர், பேட்டி எடுப்பவர், உதவி ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், அச்சிதழ் ஆசிரியர், சொந்தமாக நூல் வெளியிட்ட பதிப்பாளர், பதிப்பாசிரியர், இணைய இதழாசிரியர், பட்டிமன்றப் பேச்சாளர்.... எனப் பல வேலைகளில் நான் ஈடுபட்டுள்ளேன். படைப்பு சார்ந்தவற்றையும் நான் பணியாகக் குறிப்பிட்டதன்
காரணம், அவற்றின் மூலம் வருவாய் வந்ததால்தான். சில வேலைகளை ஒரே நாள் மட்டும் செய்துள்ளேன்; சிலவற்றை ஆண்டுக்கணக்கில் செய்துள்ளேன்; தொடர்ந்தும் செய்து வருகிறேன்.
குடும்பச் சூழ்நிலை காரணமாக 12ஆம் வகுப்பு முடித்தவுடன் இனி கல்லூரிக்குச் சென்று படிக்கவேண்டாம்; அஞ்சல் வழியில் படித்துக்கொண்டே வேலைக்குச் சென்று பொருளீட்டலாம் என முடிவுசெய்தேன். ஆனால், நான் எதிர்பார்த்தபடி பெரிய ஊதியம் கிட்டவில்லை. ஆயினும் கிடைத்த பணிகளை ஏற்று உழைத்தேன். ஒரே நேரத்தில் பல வேலைகளில் ஈடுபட்டதும் உண்டு. உச்சி வெயிலில் நீண்ட தூரம் மிதிவண்டி மிதித்துச் சென்றது, மிதிவண்டியின் பின்புறம் பெரும் சுமைகளை எடுத்துக்கொண்டு அலைந்தது, பல அவமதிப்புகளைச் சந்தித்தது.... போன்ற பலவும் என்னைப் புடம் போட்டன. சிலவற்றில் ஈடுபடும் போது உடல் அளவிலும் மனத்தளவிலும் பெரும் உளைச்சல் ஏற்பட்டாலும் என் மன உறுதிக்கு இந்தச் சம்பவங்கள் காரணம் ஆயின. தொடர்ந்து போராடும் குணத்தை என்னுள் வளர்த்தன. இதனால் பெரும்பாலான முதலாளிகளிடமும் நிர்வாகிகளிடமும் நன்மதிப்பைப் பெற்றேன்.
2.
என் எளிமைக்காக நான் மகிழ்கிறேன்.
சில ஆண்டுகள் முன்புவரை பழைய துண்டினைக் கிழித்தே என் கைக்குட்டைகள் உருவாயின. இருப்பவற்றிலேயே விலை குறைந்த வாழைப் பழத்தை வாங்குவேன். அதிலும் ஒரு சீப்பாக வாழைப் பழம் வாங்குவதை விட, உதிரியாக உள்ள வா.பழங்களை வாங்கினால் இன்னும் விலை குறையும் என்பதால் அத்தகைய பழங்களை வாங்குவேன். எந்த வகையான ஆடம்பரமும் இல்லாத வாழ்க்கை. மிகவும் தேவை என்றால் மட்டுமே செலவு செய்வது என்ற கொள்கை. பெரும்பாலும் அஞ்சல் அட்டைகளையே அனுப்பினேன். என் பள்ளிக் காலத்தில் வாழ்த்து அட்டைகளுக்குப் பதில், அஞ்சல் அட்டையிலேயே ஏதேனும் வரைந்து, வாழ்த்து அட்டையாக அனுப்பி இருக்கிறேன். சாப்பாட்டிலும் தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு, எந்தப் பொருளையும் வீணடிக்காமல் உண்ணும் வழக்கம் உண்டு. இப்படியாக என் வாழ்வியல், முற்றிலும் எளிமையானதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இதற்குக் காரணம், இடைக் காலத்தில் என் குடும்பத்தில் நிலவிய நிதிச் சிக்கல்கள். அந்தச் சிக்கலான காலக்கட்டத்தை நான் தாண்டி வந்துவிட்ட போதும், இப்போது அநேக வாய்ப்பு - வசதிகள் எனக்குக் கிட்டியுள்ள போதும், அந்த எளிமையை இன்னும் விட்டுவிடவில்லை. இன்னும் நான் குறைந்த விலையிலான ஆடைகளையே உடுத்துகிறேன். அதே வகை காலணிகளையே அணிகிறேன். முகத்திற்கு மாவுப் பூச்சு கிடையாது; எண்ணெய், ஷாம்பூ, நறுமணம்... இத்யாதிகள் கிடையாது. கழுத்தில் சங்கிலி அணிவதில்லை; செல்பேசியிலேயே மணி பார்த்துக்கொள்ள முடிவதால் கையில் கடிகாரம் கிடையாது.
காந்தியின் எளிய வாழ்வியல் என்னை மிகவும் கவர்ந்தது. ஆனால் அதற்கு முன்பாகவே என் அம்மா சவுந்திரவல்லி, மிகவும் சிக்கனமானவராக எனக்குத் தோன்றினார். காகிதத்தின் பின்பக்கத்தில் எழுதுவது, கிழிந்த ஆடைகளை மீண்டும் மீண்டும் தைத்து அணிவது, எந்தப்
பொருளையும் வீணடிக்காமல் இருப்பது, பேருந்து கிடைக்காத நேரத்தில் ஆட்டோவில் செல்லாமல் நடந்தே செல்வது, தன் குடும்பத்துப் பிள்ளைகளுக்குத் தானே முடிவெட்டி விடுவது..... எனப் பலவற்றை என் கண்முன்னே அவர் நிகழ்த்திக் காட்டினார். அதன் தொடர்ச்சியே நான்.
3.
பல்வேறு போட்டிகளில் நான் பரிசுகள் வென்றுள்ளேன். அந்தத் தருணங்கள் மிகவும் மகிழ்ச்சிகரமானவை.
திருவாரூர் வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நான் எட்டாம் வகுப்புப் படிக்கும் போது ஒரு கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்டேன். அதன் நடுவர் தமிழாசிரியர் உத்தமபுத்திரன். அவர், ஓலை வேய்ந்த என் வகுப்பறை வாசலில் வந்து நின்று, 'இங்கு அண்ணாகண்ணன் யார்?' என்று விசாரித்தார். அங்கிருந்த மாணவர்கள் என்னைக் காட்டினார்கள். அவர் என்னை அழைத்து, 'கட்டுரைப் போட்டியில் உனக்குத்தான் முதல் பரிசு' என்று அறிவித்தார். அன்று மிகவும் மகிழ்ந்தேன். அந்த ஊக்கத்தில் எல்லாப் போட்டிகளிலும் கலந்துகொள்ளத் தொடங்கினேன். அதன் பிறகு அந்தப் பள்ளியில் படித்த 5 ஆண்டுகளும் கட்டுரைப் போட்டியில் நானே முதல் பரிசு வென்றேன். பேச்சு, ஆங்கிலம் ஒப்பித்தல் போட்டிகளிலும் பரிசு
பெற்றேன். விளையாட்டுப் போட்டி, ஓவியப் போட்டிகளையும் நான் விட்டுவைக்கவில்லை. பரிசு இரண்டாம் பட்சமாகி, போட்டியில் கலந்துகொள்வதே முதல் நோக்கமானது.
பள்ளிக்குள் நடந்த போட்டிகளில் மட்டுமின்றி அனைத்துப் பள்ளி மாணவர்கள் இடையே நடந்த போட்டிகளிலும் கலந்துகொண்டு மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் பரிசுகள் வென்றேன். முன்கூட்டியே தலைப்புகள் தந்து நடத்திய போட்டிகள் மட்டுமின்றி, போட்டி நடக்கும் இடத்திற்குச் சென்ற பிறகு தலைப்பு அளிக்கும் போட்டிகளிலும் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றேன். இது, அஞ்சல் வழியில் படிக்கும்போதும் தொடர்ந்தது. பாரதியார் சங்கம் நடத்திய அனைத்துக் கல்லூரி மாணவர் கவிதைப் போட்டியில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் முதல் பரிசு பெற்றேன். அது, உடனுக்குடன் தலைப்பு அளித்து அதற்குக் கவிதை எழுதும் போட்டி. மேலும், கவியரங்குகள் பலவற்றிலும் பங்கேற்றுக் கவிதை பாடிப் பரிசுகள் பெற்றேன்.
இப்படியாகப் போட்டிகளில் நான் வெற்றி பெற்றதை அறிவிக்கும்போதெல்லாம் எனக்குப் பெரும் மகிழ்ச்சி உண்டானது.
குறிப்பிட்ட காலத்திற்குப் பின், சில போட்டிகளுக்கு நடுவராகப் பணியாற்ற என்னை அழைத்தனர். அதன் பிறகு போட்டிகளில் பங்கேற்பதிலிருந்து விலகிக்கொண்டேன். ஆயினும் தொலைக்காட்சிகளில் இன்றும் ஏதேனும் பாட்டுப் போட்டி, நடனப் போட்டி, வினாடி வினா எனக் காணும்போது உற்சாகம் உண்டாகிறது.
4.
புதிய முயற்சிகளில் இறங்கியமைக்காக மகிழ்கிறேன்.
என் குறுகிய வாழ்நாளில் பல பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டதுண்டு. கவிதையில் வடிவ ரீதியாக அநேக முயற்சிகளில் இறங்கியிருக்கிறேன். கொடி அசைவதற்கு ஏற்ற சந்தம், ரெயில் ஓடும் சந்தம் ஆகியவற்றில் பாடல் புனைய முயன்றதுண்டு. சித்திரக் கவியில் மாலை மாற்று, கோமூத்திரி, நாக பந்தம், சுழிகுளம், உதடுகள் ஒட்டாத நீரோட்டகம், உதடு ஒட்டியும் குவிந்தும் வரும் ஒட்டியம்.... எனப் பல வடிவங்களில் எழுதிப் பார்த்ததுண்டு.
வல்லினப் பாட்டு, மெல்லினப் பாட்டு, இடையினப் பாட்டு எழுதினேன். ஏழே எழுத்துகளில் பாடல் எழுதினேன். சிற்றிலக்கிய வடிவங்களில் எழுத
முயன்றேன். எழுத்தில் கவிதையோடு நின்று விடாமல் கட்டுரை, சிறுகதை, நாடகம், குறுநாவல் ஆகியவை எழுத முயன்றேன்.
அமுதசுரபியில் பொறுப்பாசிரியராக இருந்த போது, பெரும்பாலும் கிறுக்கி எழுதும் மருத்துவர்களிடையே நல்ல கையெழுத்தை ஊக்குவிக்கும்
பொருட்டு கையெழுத்துப் போட்டி நடத்தினேன். வாசகர் கடிதம் எழுதும் அனைவருக்கும் ஓர் அஞ்சல் அட்டையை இலவசமாக அனுப்பினேன்.
எந்தத் துறையில் பணியாற்றிய போதும் என் முத்திரையைப் பதித்து வருகிறேன்.
'தகதோம்', 'தித்தித்தோம்' என்ற இரண்டு கவிதைகளை உலக மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்க்க வேண்டும் என்று எண்ணினேன். அதற்குத்
தகுதியான மொழிபெயர்ப்பாளர்களைக் கண்டுபிடித்து இதுவரை 32 மொழிகளில் அவற்றை மொழிபெயர்க்கச் செய்துள்ளேன். ஆங்கிலம், சீனம்
(மாண்டரின்), சமஸ்கிருதம், அரபி, பெர்சியன், உருது, இரஷ்யன், ஜப்பானியன், ஹீப்ரூ, ஸ்பானிஷ், சிங்களம், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,
துளு, கொங்கணி, இந்தி, குஜராத்தி, மராத்தி, அவதி, பிரஜ்பாஷா, வங்காளம், லடாகி, இராஜஸ்தானி, பீஹாரி, பஞ்சாபி, மைதிலி, ஒரியா, காசி
(Khasi), செளராஷ்டிரா... உள்ளிட்ட மொழிகளில் அவை மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவை அனைத்தையும் சேர்த்து ஒரே தொகுப்பாகக்
கொண்டுவர வேண்டும் என்பது என் விருப்பம். இது, மொழியியலில் ஒரு புது முயற்சியாக இருக்கும்.
5.
என்னிடம் சிறந்த வைராக்கியம் இருக்கிறது. அதற்காக மகிழ்கிறேன்.
எனக்குச் சுமாராக 10 வயது இருக்கும். அப்போது நான் சீர்காழியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள புதுத்துறை மண்டபம் என்ற ஊருக்கு
விடுமுறைக்காகச் சென்றிருந்தேன். அது என் தாத்தாவின் ஊர். என் அம்மா, சித்தி உள்ளிட்ட உறவினர்கள், ஒரு மதிய நேரத்தில் என்னை
அழைத்துச் செல்லாமல் சீர்காழியில் ஓடும் ஒரு திரைப்படத்திற்குச் சென்றுவிட்டார்கள். மிக முக்கியமாக, என்னிடம் வேறு காரணம் சொல்லி
என்னை ஏமாற்றிவிட்டு அவர்கள் திரைப்படம் பார்க்கச் சென்றார்கள். எனக்குள் கடும் வெப்பம் கிளர்ந்தது. என் தாத்தாவும் இன்னும் பிறரும்
தடுத்தபோதும் நடந்தே சீர்காழிக்குக் கிளம்பினேன். 6 கி.மீ. தூரத்தை 2 மணி நேரத்தில் கடந்து மிகச் சரியாக அவர்கள் திரையரங்கிற்குள்
நுழைவதற்குள் அவர்களைப் பிடித்துவிட்டேன். அவர்கள் எனக்கும் சேர்த்தே நுழைவுச் சீட்டு எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இது மிகச் சாதாரண நிகழ்வாகத் தெரியலாம். ஆனால், மனத்தில் ஒன்றை நினைத்துவிட்டால் அதை எப்பாடு பட்டாவது அடைந்துவிடுவது என்ற
முனைப்பு எனக்குள் வேரூன்றியது. அது, பிற்காலத்தில் பல வடிவங்களில் எனக்குத் துணையிருந்தது; இப்போதும் இருக்கிறது.
6.
நான் வசைச் சொற்களைப் பயன்படுத்துவதில்லை. அதற்காக மகிழ்கிறேன்.
நான் சற்றே யோசித்துப் பார்க்கிறேன். என் பள்ளிப் பருவத்தில் என்னை அடித்துவிட்டு ஓடிய ஒரு சிறுவனை எந்தச் சொல்கொண்டு திட்டுவது என்று
யோசித்து, தடுமாறி, 'குண்டா குண்டா' என்று கத்தியது நினைவிருக்கிறது. அதற்குப் பின்னர் ஒரு சில முறைகள் சில வசைச் சொற்களைப்
பயன்படுத்தியதோடு சரி. என் நினைவுக்குத் தெரிந்து, கடந்த 10 ஆண்டுகளாக எந்த வசைச் சொல்லையுமே நான் எவர் மீதும் பயன்படுத்தவில்லை.
அப்படியான சொற்களை உச்சரிப்பதையே கூச்சமாகக் கருதினேன். கருதுகிறேன்.
7.
நல்ல நண்பர்களைப் பெற்றமைக்காக மகிழ்கிறேன்.
என் உடன் படித்தவர்கள், உடன் பணியாற்றிவர்கள், உடன் பழகியவர்கள்...... என்ற வகைகளில் நண்பர்கள் நிறைய உண்டு. இலக்கிய உலகம்,
பத்திரிகை உலகம், இணைய உலகம், இவை அல்லாத உலகம்..... என என் நட்பு வட்டம் விரிந்துள்ளது. ஒருவரைக் குறிப்பிடுவதன் மூலம் பலரைக்
குறிப்பிடாமல் விடுகிறோமே! இந்த இடரைக் களைய, ஒருவரையுமே குறிப்பிடாமல் விடுகிறேன். ஆயினும் உறவினர்களைக் காட்டிலும் நண்பர்களே
மேல் என்ற எண்ணம், எனக்குள் மேலும் மேலும் உறுதி பெறுகிறது.
8.
ஒவ்வொரு புதிய படைப்பின் போதும் மிகுந்த மகிழ்ச்சியும் மன நிறைவும் உண்டாகிறது.
அநேக சிந்தனைகள் என்னுள் எழுந்துள்ளன; தொடர்ந்து
எழுகின்றன. சிலவற்றை மட்டுமே குறித்து வைக்கிறேன். உலகப் பேரறிஞர்கள், தலைவர்கள், தத்துவ ஞானிகள், படைப்பாளிகளின் சில நூல்களை,
மேற்கோள்களைப் படிக்கும்போது அதில் வரும் வரியோ, கற்பனையோ, சிந்தனையோ வியப்பு உண்டாக்குகின்றன. இதே மாதிரி நாம் ஏற்கெனவே
சிந்தித்திருக்கிறோமே என்ற எண்ணம் எழுகிறது. 'இதிலிருந்து என்ன தெரிகிறது? நாம் இவர்களுக்கு எந்த வகையிலுமே குறைவானவர் கிடையாது என்பதுதானே!' என நான் எண்ணுவதுண்டு. ஆனால், அவர்கள் என்னை விட முன்பே சிந்தித்திருக்கிறார்கள்; அந்தக் காலத்தையும் கணக்கில் எடு என்ற வாதமும் எனக்குள் எழுவதுண்டு.
அசையும் ஊஞ்சலின் இரு முனைகளாக என் எண்ணங்கள் அமைகின்றன. ஒரு முனையில் பெரும் கற்பனா இன்பத்தில் மிதக்கிறேன்.
கோடிக்கணக்கான மக்களின் அன்புக்கு உரிய மாபெரும் தலைவராக, பெரும் கண்டுபிடிப்பாளராக, உச்ச செல்வாக்கு படைத்தவராக, பெரும் திட்டங்களை நிறைவேற்றுபவராக என்னைக் கற்பனை செய்துகொள்வதில் இன்பம் காண்கிறேன்.
இன்னொரு முனையில் 'எதற்கும் உணர்ச்சிவசப்படாதே; பற்றுகளிலிருந்து மெல்ல மெல்ல விடுதலை அடை' என்ற சிந்தனைக்கு மனத்தினைப்
பழக்கி வருகிறேன். நம்மால் முடிந்த வரை பிறருக்கு உதவுவோம்; வழிகாட்டுவோம்; ஒரு சமூக சேவகனாய், எளிய தொண்டனாய், ஆதரவற்றோருக்கு
உதவிகள் செய்வோம் என்று எண்ணுகிறேன்.
இந்த இரண்டு முனைகளில் எது வாய்த்தாலும் அதற்குத் தயாராக இருக்கவேண்டும் என எண்ணுகிறேன். மொத்தத்தில் என் வாழ்க்கை பயனுள்ளதாக
இருக்கவேண்டும். அது ஒரு சிலருக்கா, சில நூறு பேர்களுக்கா, கோடிக்கணக்கான மக்களுக்கா என்பதே கேள்வி. இதற்கான சுவையான பதிலை எதிர்காலத்தின் கையில் ஒப்படைக்கிறேன்.
****************
இந்த 8 போடும் விளையாட்டுக்கு நான் அழைக்கும் 8 பேர்கள் இங்கே:
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
சுகதேவ்
பி.கே.சிவகுமார்
ரவி பாலா
யுகபாரதி
ஷைலஜா
திலகபாமா
என். சுரேஷ்
விளையாட்டின் விதிகள்:
1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டு பேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டு பேரை அழைக்க வேண்டும்.
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Monday, July 16, 2007
இதோ என் 8
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
நன்றி அண்ணாகண்ணன். ஞாயிறு மதியத்தில் நற்சிந்தனைகளை ஊட்டும் பதிவாக அமைந்தது உங்களது இப்பதிவு.
# 5 கணினித்திரையைப் பார்த்து புன்னகைக்கவும் செய்ய வைத்தது - புதுத்துறையிலிருந்து உப்பனாற்றை கடந்து குறுக்கே வந்திருக்கலாமே, நேர்வழியில் 6 கி.மீ நடக்காமல் என்பதை நினைத்த போது.
# 8 நான் இதை பல தடவைகள் முயன்று பார்த்துள்ளேன். ஒரு சில படிகள் ஏறியதும், பல படிகள் சறுக்கி விடுகிறது. கீதை நூலிலிருந்து எடுக்கப்பட்ட ஆங்கில கூற்றான, " Attraction and repulsion are rooted in all sensory objects; men should stay away from their sway since they are the stumbling blocks in their way" என்பதை நினைவில் கொண்டு திரும்பவும் முயற்சியில் இறங்குவேன்.
வலைப்பதிவுகள் தமிழில் இருக்க வேண்டியமைக்கு இது போன்ற பதிவுகள் சிறந்த எடுத்துக்காட்டு.
அழகான எளிமையை (கையில் கடிகாரம் முதல்,பழைய துணி கைக்குட்டை...) நயமாக சொல்லியுள்ளீர்கள்.
இப்போதும் அந்த மாதிரி வாழைப்பழம் வாங்காதீர்கள்! சுகாதாரத்துக்கு ஏற்றதல்ல என்பதை நான் சொல்லவேண்டியதில்லை.:-))
பலர் சிரித்தவுடன் தான் நான் இன்னும் சிரிக்கவில்லை என்ற ஞாபகம் வந்தது என்பதை படித்தவுடனே நினைத்தேன்..சரியான அடி வாங்கி தான் மேலே வந்திருக்கிறீர்கள் என்று.அப்படித்தான் நடந்திருக்கிறது.
ஒரு சில என்னுடன் ஒத்துப்போகிறது.
கொஞ்சம் நேரம் ஆனாலும், எட்டையும் படித்துவிட்டேன்.
சிக்கனம் பற்றிச் சொல்லி இருப்பது மனசை ரொம்பத் தொட்டுவிட்டது.
அருமையான எட்டை அளித்தமைக்கு நன்றி. இதைப் படித்தபிறகு,
உங்களையல்ல, உங்களைப் பெற்ற தாயைத்தான் புகழவேண்டுமென்று
மனதில் தோன்றுகிறது.
'தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்'
மனம்போல வாழ்வு அமைய வாழ்த்து(க்)கள்.
அனபுள்ள அண்ணா கண்ணன்,
என் அழைப்பை ஏற்றுப் பதிவிட்டமைக்கு நன்றி.
நீங்கள் பன்முகத் திறமை கொண்ட இளைஞர், நிறைய வாழ்வனுபவம் வாய்த்தவர் என்பதை நான் அறிவேன். அதை மேலும் சிலர் அறிந்து கொள்ளட்டுமே என்ற எண்ணத்தில்தான் அழைத்தேன். என் நம்பிக்கை வீண்போகவில்லை என்பது மகிழ்ச்சி தருகிறது.
அன்புடன்
மாலன்
அடக்கத்தின் உருவமே! சாதனைத்திலகமே! உங்களின் எளிமை திறமை எல்லாம் நான் ஏற்கனவே அறிந்ததுதான்! இங்கே அனைவரும் அறியத் தந்தமைக்கும் என்னை 8போட அழைத்தமைக்கும் நன்றி!
எட்டுப் போடச் சொல்லிக்கொடுத்து எவரும் எட்டமுடியாப் புகழின் உச்சிக்கே சென்றுவிட்டீர். காந்தியை நாங்கள் கண்டதில்லை. அவர் எளிமையைப் படித்திருக்கிறோம். அவை என் தலைமுறையில் நடக்கவில்லையே என்ற ஏக்கம் என்னைப்போன்றவர்களுக்கு இருப்பினும், இந்த நவீனக் காந்தியைப்பெற்ற சந்தோசத்தில் திளைத்துப்போகிறேன்.
தனது எளிமையையும், ஏழ்மையையும் வெட்ட வெளிச்சமாக வெளியிடுவதற்கு முதலில் தைரியம் வேண்டும். போலிகள் நிறைந்துவிட்ட இந்தப் பூமியில் தான் கடந்து வந்த பாதையை கலைக்கண்ணோடு திரும்பிப்பார்க்கும் நீங்கள் மகான் என்று சொல்வதைக்காட்டிலும், மனித நேயம் மிக்க ஒரு "மாமனிதன்" என்பது மிகப்பொருத்தமாக இருக்கும். அந்த வகையில் ஒரு எழுத்தாளன், எதார்த்தவாதி, கவிஞன் என்பதைத் தாங்கள் நிரூபித்துக்காட்டிவிட்டீர். என்னைப்போன்ற இளம் எழுத்தாளனுக்கு 'இன்ஸ்பிரேஷன்' நீங்கள். வாழ்த்துக்கள்! அன்புடன் -
சென்னை-நவின், கலிபோர்னியா (அமெரிக்கா)
Post a Comment