'நான் பெண் பார்த்துட்டுப் போன பெண்களுக்கு எல்லாம் உடனே கல்யாணம் ஆகிடும். அப்படி ஒரு ராசி எனக்கு' என இந்தப் படத்தின் நாயகன் வேணு (சேரன்) ஒரு காட்சியில் சொல்கிறார். அதில் படத்தின் மொத்தக் கதையும் புரிந்துவிடும்.
வலுவான கதை; விறுவிறுப்பான - படத்துடன் நம்மை ஒன்ற வைக்கக்கூடிய திரைக் கதை; இயல்பான கதை மாந்தர்கள்... ஆம், உறுதியாக இது ஒரு நல்ல திரைப்படம்; தமிழில் மேலும் ஒரு எதார்த்த சித்திரம். தன் மூன்றாவது திரைப்படமாக ராமன் தேடிய சீதையை மிகச் சிறந்த ஆளுமையுடன் வழங்கியுள்ளார் இளம் இயக்குநர் ஜெகன்நாத். (முதல் இரண்டு படங்கள்: புதிய கீதை, கோடம்பாக்கம்).
திருமண அழைப்பிதழ் தயாரித்து விற்கும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்துபவர் வேணு (சேரன்); கார், வீடு எனச் சென்னையில் வசதியாக இருக்கிறார்; ஆனால், மாணவப் பருவத்தில் சிறிது காலம் மன அழுத்தம் காரணமாக, மனநல சிகிச்சை பெற்றவர்; மிகவும் உணர்ச்சிவசப்படும் தருணத்தில் திக்கித் திக்கிப் பேசுபவர். நற்குணங்கள் நிரம்பிய இவருக்குப் பெண் தேடுகிறார்கள்.
முதலில் அவர் பார்க்கும் பெண்: ரஞ்சிதா (விமலா ராமன்). வேணு தான் மனநல சிகிச்சை பெற்றதைச் சற்றே திக்கித் திக்கிச் சொல்லவும் ரஞ்சிதா 'உங்களை எனக்குக் கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணலை' என்று கூறிவிடுகிறார்.
அடுத்து, வித்யா (ரம்யா நம்பீசன்) என்ற பெண்ணைப் பார்க்கிறார்கள். அந்தப் பெண் திருமணத்திற்கு முதல் நாள் வேறு ஒருவருடன் ஓடி விடுகிறார்.
தன் மகள் ஓடிப் போனதால் பெண்ணின் அப்பா மாணிக்கவேல் (மணிவண்ணன்) வேணுவுக்கு வேறொரு நல்ல பெண் பார்த்து மணம் முடிப்பது தன் கடமை என வாக்களிக்கிறார். கடைசியாக அவர் நாகர்கோயிலில் காயத்ரி (கார்த்திகா) என்ற பெண்ணைக் கண்டுபிடிக்கிறார். மாணிக்கவேலும் வேணுவும் அங்கு செல்கிறார்கள். அங்கு சென்ற பிறகு தான் காயத்ரியைக் குள்ள சேகர் (நிதின் சத்யா) என்ற முன்னாள் திருடன் தீவிரமாகக் காதலிப்பது தெரிகிறது. நாயகன் வேணு 'அவரே உங்களுக்குப் பொருத்தம்' என வாழ்த்திவிட்டு வந்துவிடுகிறார்.
காவல் துறையில் பணியாற்றும் செந்தாமரை (நவ்யா நாயர்) என்பவரைப் பார்க்கச் செல்கிறார். செந்தாமரைக்குத் தெரியாமல் அவரைப் பார்த்தால்தான் அவரது உண்மையான தன்மை தெரியும் என்ற நினைப்பில் வேணு, அரசியல் கட்சித் தலைவர் வரும் கூட்டம் ஒன்றில் கூட்டத்தோடு கூட்டமாக நிற்கிறார். ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலை அவருக்குப் பாதகமாக அமைந்துவிட, எந்தப் பெண்ணைப் பார்க்க வந்தாரோ அந்தப் பெண்ணின் கையாலேயே பலத்த அடி வாங்குகிறார் வேணு.
இப்படியாக அடி மேல் அடி வாங்கும் வேணு, கடைசியில் யாரை மணம் முடித்தார் என்பதே இறுதிக் காட்சி.
வேணுவின் கதை ஒரு புறமும் அவர் பார்க்கும் பெண் ஒவ்வொருவரின் கிளைக் கதைகள் மறுபுறமும் பின்னிப் பிணைந்து ஓர் அருமையான திரைக் கதையாக விரிந்துள்ளது. சேரனின் நடிப்பு, இயல்பாகவும் பரிதாபத்தைத் தூண்டும்படியும் அமைந்துள்ளது. எல்லா நல்ல குணங்களும் கொண்டவராக அவரின் பாத்திரம் உருவெடுத்துள்ளது.
பசுபதி, நிதின் சத்யா ஆகியோரின் கிளைக் கதைகள், கதைக்கு நல்ல வலுவும் சுவையும் சேர்த்துள்ளன.
பார்வையிழந்த நிலையிலும் பண்பலை வானொலியில் நிகழ்ச்சி வழங்குநராக (ரேடியோ ஜாக்கி) வரும் நெடுமாறன் (பசுபதி), தமிழிசை (கஜாலா) இருவரின் காதல், ஓர் இனிய கவிதை. திருமண முயற்சிகள் தோல்வியில் முடிவதால் மனம் உடைந்த வேணுவை நெடுமாறன் தேற்றுகிறார். இந்தப் பார்வையிழந்த பாத்திரத்தில் பசுபதி மிகச் சிறப்பாக நடித்துள்ளார். முக பாவங்கள், கூர்ந்த கவனிப்பு ஆகியவற்றை நன்கு வெளிப்படுத்தியுள்ளார்.
திருடனாக வந்து, திருடப் போன இடத்தில் கார்த்திகாவைப் பார்த்து, அந்த இடத்திலேயே அவரைக் காதலிக்கத் தொடங்கும் நிதின் சத்யா, மனத்தில் நிற்கிறார். தன் காதலை வெளிப்படுத்த ரிப்பனிலிருந்து மராத்தான் வரை அவர் இறங்குவது, ருசிகரம். அவருக்கு இணையாகக் கார்த்திகாவும் நடித்துள்ளார்.
விமலா ராமன், கஜாலா, ரம்யா நம்பீசன், கார்த்திகா, நவ்யா நாயர் ஆகிய 5 இளம் பெண்களும் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். வித்யாசாகரின் இன்னிசையில் 'இப்பவே இப்பவே', 'என்ன புள்ள செஞ்ச நீ'... உள்ளிட்ட பாடல்கள் உணர்வுபூர்வமாய் அமைந்துள்ளன. நாகர்கோயிலின் இயற்கை எழிலை, ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவில் கண்டு களிக்கலாம்.
வசதியான, ஓரளவு அழகான வேணு (சேரன்) போன்ற மாப்பிள்ளைக்கே திருமணச் சந்தையில் இவ்வளவு கஷ்டம் என்றால், அன்றாடங்காய்ச்சிகளின் நிலை என்னாவது? நினைக்கவே திகிலாய் இருக்கிறதே. ஆனால், பலரும் அனுபவித்த இந்தத் துயரத்தை நேர்த்தியாகத் திரையில் வழங்கியுள்ளார் இயக்குநர். இந்தப் படத்தின் ஓரிரண்டு காட்சிகளாவது, ஒவ்வொருவரின் வாழ்விலும் நடந்திருக்க வாய்ப்புண்டு. அந்த வகையில் இந்தப் படம், மக்களோடு நெருங்கியுள்ளது.
நன்றி: தமிழ் சிஃபி
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Wednesday, October 08, 2008
ராமன் தேடிய சீதை - திரை விமர்சனம்
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 9:21 AM
Labels: தமிழ்சிஃபி, திரை விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
தீபாவளி வாழ்த்துக்கள் !
Post a Comment