!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> மறவன்புலவு க.சச்சிதானந்தன் பிறந்த நாள் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, December 03, 2009

மறவன்புலவு க.சச்சிதானந்தன் பிறந்த நாள்



தமிழுக்கும் தமிழருக்கும் நாளும் பொழுதும் வலிவும் பொலிவும் சேர்க்கும் மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்கள், கார்த்திகை 17ஆம் நாள், மிருகசீரிட நடத்திரத்து அன்று (டிசம்பர் 3ஆம் தேதி) பிறந்த நாள் காண்கிறார். ஆங்கில நாட்காட்டியின்படி இவர் பிறந்த நாள், டிசம்பர் 5ஆம் நாள் என்றாலும் தமிழ் நாட்காட்டியின்படி இவர் பிறந்த நாள், டிசம்பர் 3ஆம் தேதியே.

நுண்மாண் நுழைபுலம் மிக்க ஈழத் தமிழறிஞர்; ஐ.நா. உணவு - வேளாண் கழக முன்னாள் ஆலோசகர்; காந்தளகம் பதிப்பகத் தலைவர்; தனித்துவம் மிக்க தமிழ்நூல்.காம் (http://www.tamilnool.com), தேவாரம்.ஆர்க் (http://thevaaram.org) தளங்களின் நிறுவனர் - வழிகாட்டி - காப்பாளர்; அண்மையில் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்குத் தமிழக அரசு ரூ.100 கோடி ஒதுக்கிட முக்கிய காரணர்களுள் ஒருவர்....... எனப் பற்பல பெருமைகளுக்கு உரியவர், நம் சச்சிதானந்தன்.

ஆஸ்திரேலியாவில் பொங்கல் திருநாள் அன்று சச்சியை உரையாற்ற அழைத்தார்கள். புலம்பெயர் இளையோர் நிறைந்த அந்த அவையில் இவர் ஆற்றிய உரையின் தலைப்பு:
The Photosynthesis Day என்பதாகும். இத்தகைய அறிவியல் கண்ணோட்டம் கொண்டவர், இவர்.

தமிழில் காசோலைகளை எழுதி, அதை ஏற்காத வங்கிகளுடன் சட்டபூர்வ - தனி நபர் போராட்டங்களை நடத்தி வருகிறார்.

ஒளி அச்சுக் கோப்பு, நிலவரை என்ற கலைச் சொற்களைப் புதிய பொருளுடன் அறிமுகப்படுத்தியவர்; 60 நாடுகளுக்கும் மேல் பயணித்துள்ளவர்; இலங்கை அரசியல் நிகழ்வுகளின் நோக்கர்; சேது சமுத்திரத் திட்டம் என்கிற தமிழன் கால்வாய்த் திட்டத்தைப் பல முனைகளுக்கும் எடுத்துச் சென்ற கடலியல் வல்லுநர்; தமிழால் அனைத்தும் முடியும் என்பதை நிலைநாட்டும் வண்ணம் செயலாற்றி வருகிறார். தமிழையும் சைவத்தையும் தம் இரு கண்களாகக் கொண்டவர்.

எதையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகுவதில் இவர், சிறந்த முன்மாதிரி. புதிய சிந்தனைகள், ஆக்கபூர்வ செயல்திட்டங்கள், பொருள் செறிந்த நுணுக்கமான மொழி நடை..... ஆகியவற்றுடன் மகத்தான ஆளுமையாக நம் முன் நிற்கிறார்.

மனிதன், மரணத்தை வெல்லும் நாள் நெருங்கி வருவதால், ஒரு நூற்றாண்டு வாழ்க என்பதே கூட சுருக்கமாக வாழ்த்தாகலாம். எனவே சச்சிதானந்தன், காலத்தை வென்று வாழ்க என வாழ்த்துகிறேன்.

(சச்சியைப் பற்றி மேலும் அறிய:
http://sachithananthan.blogspot.com/2005/09/kanapathipillai-sachithananthan.html)

3 comments:

தங்க முகுந்தன் said...

Thanks for the infomation! If you can send his contact No. to me pls!

சுப.நற்குணன்,மலேசியா. said...

போற்றத்தக்க தமிழ்ப் பெரியார் ஒருவரை அறியச் செய்தமைக்கு நன்றி.

அன்னார் புகழ் ஓங்குக.

kalai said...

தமிழ்மொழியின் முன்னகர்வில் தனக்கென ஓரிடத்தை உரிமையாக்கிக் கொண்டு தொடர்ந்து செயலாற்றும் மறவன்புலவு ஐயா அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்...
-
எழுச்சியுடன்,
கலை.செழியன்