!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2010/02 - 2010/03 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, February 27, 2010

கணினித் தமிழ் - பன்னாட்டுக் கருத்தரங்கில் நான்

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்மொழித் துறையின் மொழியியல் ஆய்வுப் பிரிவு கணினித் தமிழ் தொடர்பான பன்னாட்டுக் கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வு, சென்னைப் பல்கலையின் மெரினா வளாகத்தில் 2010 பிப்.24, 25, 26 ஆகிய நாட்களில் நடைபெற்றது.

மொழித்தொழில் நுட்பமும் தமிழும் என்ற தலைப்பிலான அமர்வில் மாலன் தலைமையில் முனைவர் நீலாதிரி தாஸ், பேராசிரியர்கள் ந.கணேசன்(அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), ந.தெய்வசுந்தரம், அருள்மொழி, உமாராசு, டேவிட் பிரபாகர் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

யுனிகோடும் தமிழும் என்ற தலைப்பிலான அமர்வில் உத்தமம் அமைப்பின் தலைவர் வெங்கட்ரங்கன் தலைமையில் இராமன், அ.இளங்கோவன், இராம.கி., நாகராசன் (என்.எச்.எம்.எழுதி) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பேச்சுத் தொழில்நுட்பமும் தமிழும் என்ற தலைப்பிலான அமர்வில் பேரா.சி.சண்முகம் தலைமையில் பேராசிரியர்கள் பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தின் ஏ.ஜி.இராமகிருஷ்ணன், அமிர்தா பல்கலைக்கழகத்தின் சந்தோஷ்குமார், முருகையன், நடன சபாபதி, இரவிசங்கர் (புதுவை), ராஜன் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.

கணினிவழித் தமிழ்க் கல்வியும் பிற கணினிப் பயன்பாடுகளும் என்ற தலைப்பிலான அமர்வில் பேராசிரியர் நடராசப்பிள்ளை தலைமையில் முனைவர் விஜயராணி, ஆ.இரா.சிவகுமாரன், பேரா.தியாகராசன், மு.இளங்கோவன், மு.பழனியப்பன் உள்ளிட்டோருடன் நானும் பங்கேற்றேன். 'தமிழக அரசின் தமிழ் இணையத்தளங்கள்' என்ற தலைப்பில் என் கட்டுரை அமைந்திருந்தது.

பெரும்பாலான உரைகள், திரைவிரி உரை (பவர் பாய்ன்ட்) முறையில் அமைந்திருந்தன. பத்ரி சேஷாத்ரி, மறவன்புலவு க.சச்சிதானந்தன் உள்ளிட்ட பலரும் விவாதங்களில் பங்கெடுத்து, ஆக்கப்பூர்வமான கருத்துகளைத் தெரிவித்தனர். தொடக்க விழாவிலும் நிறைவு விழாவிலும் வல்லுநர்கள் பலரும் பங்கேற்றனர். முனைவர் தெய்வசுந்தரம், தொலைநோக்குடன் இந்தக் கருத்தரங்கினை வடிவமைத்து நடத்தினார். கருத்தரங்கின் இறுதியில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்வு தொடர்பான சுட்டிகள்:

கணினித்தமிழ்-பன்னாட்டுக்கருதரங்கம் இனிதே தொடங்கியது

தமிழ்க்கணினி பன்னாட்டுக்கருத்தரங்கு முதல் அமர்வு

தமிழ்க்கணினி பன்னாட்டுக் கருத்தரங்கம் - படங்கள்

தமிழ்க்கணினி பன்னாட்டுக் கருதரங்கம் மூன்றாம் நாள் நிகழ்வுகள்

=============================================
படத்திற்கு நன்றி: முனைவர் மு.இளங்கோவன்

Sunday, February 21, 2010

தொல்காப்பியம் புதுமையும் மரபும் - 10 நாள் பயிலரங்கு

'தொல்காப்பியம் புதுமையும் மரபும்' என்ற தலைப்பிலான 10 நாள் பயிலரங்கு, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்த் துறையும் இணைந்து இதை நடத்துகின்றன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அமர்வுகள் நிகழ்கின்றன.

2010 பிப்ரவரி 15 அன்று தொடங்கிய இந்தப் பயிலரங்கு, 24 வரை நடைபெறுகிறது. இதில் முனைவர்கள் இலட்சுமி நாராயணன், சூ.இன்னாசி, சுதந்திரமுத்து, மைக்கேல் பாரடே, இரகுராமன், சோ.ந.கந்தசாமி, க.முருகையன், முருகரத்தினம், செ.வை.சண்முகம், மருதநாயகம், சந்திரா, ஆறு.அழகப்பன், வீ.அரசு, க.அழகேசன், இரா.இராஜேந்திரன், கி.அரங்கன், ஜே.ஆர்.லட்சுமி, இரா.குமரவேலன், வ.ஜெயதேவன், பொ.நா.கமலா, இரா.மாயாண்டி, பரமசிவம், சா.வளவன், இராஜாராம், இராம குருநாதன், ந.தெய்வசுந்தரம், இரா.கோதண்டராமன், ச.குருசாமி, ய.மணிகண்டன், ஆரோக்கியநாதன் ஆகியோர் தொல்காப்பியம் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் விரிவுரை ஆற்றுகிறார்கள்.

இந்தப் பயிலரங்கின் ஒருங்கிணைப்பாளராகப் பச்சையப்பன் கல்லூரியின் தமிழ் இணைப் பேராசிரியர் முனைவர் வா.மு.சே.ஆண்டவர் பணியாற்றுகிறார். தமிழக அமைச்சர்களும் அறிஞர்களும் பயிலரங்கின் தொடக்க விழாவிலும் பங்கேற்றனர்; நிறைவு விழாவிலும் பங்கேற்க உள்ளனர்.

20.2.2010 அன்று மாலை நான் இந்தப் பயிலரங்கில் பங்கேற்றேன். ஜே.ஆர்.இலட்சுமியின் 'பவர் பாய்ன்ட்' வடிவிலான உரையினைக் கேட்டேன். தொல்காப்பிய நூற்பாக்களை மேற்கோள் காட்டி, இக்கால வழக்கில் உள்ள பிழைகளைச் சுட்டிக் காட்டினார். இறுதியி்ல் மாணவர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார். அதில், 'நடத்தினான் என்பதே சரி; நடாத்தினான் என்பது தவறு' என்ற அவரின் கூற்று குறித்து மாணவி ஒருவர் கேள்வி எழுப்பினார். இது தம் கருத்து மட்டுமில்லை; அறிஞர்கள் பலரின் கருத்தினை ஒட்டியே தாம் இவ்வாறு கூறியதாக அவர் தெரிவித்தார். 'நடாத்தி' என்ற சொல்லைக் கூகுளில் தேடினேன். 78 ஆயிரம் முடிவுகள் கிட்டின. இவ்வாறு கூறிட, தமிழ் இலக்கணம் அனுமதிக்கிறதா என்பது ஆய்வுக்கு உரியது.

பல்வேறு கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களிலிருந்து முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் பலரும் அரங்கு முழுதும் நிறைந்திருந்தனர். அன்றைய நாள் முடிவில் குமுதம் அலுவலகத்திலிருந்து வந்திருந்த ஒருவர், தீராநதி இதழின் சில பிரதிகளை, மாணவர்கள் அனைவருக்கும் வழங்கினார்.

Wednesday, February 10, 2010

அண்ணாகண்ணனுக்குப் பாரதிதாசன் விருது

மனிதநேயச் செம்மல் மலேசியா எஸ்.பழனிவேல் நினைவு அறக்கட்டளை சார்பில், 30.1.2010 அன்று, என் இலக்கியப் பணிகளுக்காக எனக்குப் பாரதிதாசன் விருது அளித்தனர்.

சென்னை அம்பத்தூர் அண்ணா அநாதை இல்லத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையின் துணை கண்காணிப்பாளர் உலகநாதன், விருதினை வழங்கினார். என்னுடன் சேர்த்து, கவிசுரபி சுப.சந்திரசேகரன் (பாரதிதாசன் விருது), ஷியாம்சுந்தர் (அன்னை தெரேசா விருது), சார்லஸ் தினகரன் டானியேல் (டாக்டர் அப்துல் கலாம் விருது), ஜெயா  பாஸ்கர் (வள்ளுவர் வாசுகி விருது) ஆகியோரும் விருது பெற்றனர்.

தமிழ்நாடு சிறப்புக் காவல் படை இரண்டாம் அணியின் பிரிவுக் கண்காணிப்பாளர் செந்தமிழ்ச்செல்வன், உதவும் உள்ளங்கள் மாத இதழின் ஆசிரியர் ஆடானை சுகுமார், அறக்கட்டளையின் தலைவர் மாரிமுத்து, முத்தமிழ் மன்றத்தின் செயலாளர் எழில் சோம.பொன்னுசாமி, கவிதாயினி தேன்மொழி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

இல்லக் குழந்தைகளின் நடனம், நாடகம், யுவராஜின் மாயாஜால (மேஜிக்) நிகழ்ச்சி, கவிதாயினி சமாரியாவின் பாடல் ஆகியவை நிகழ்ச்சிக்குச் சுவை சேர்த்தன.



மறவன்புலவு க.சச்சிதானந்தன் அரங்கிற்கு நேரில் வந்து வாழ்த்தினார்.


அம்பத்தூர் அரிமா சங்க நிர்வாகி சீனிவாசன், அம்பத்தூர் நகர கவுன்சிலர் எம்.டி. மைக்கேல்ராஜ் ஆகியோர் நேரில் வந்து வாழ்த்தினர்.



நண்பர் கவிஞர் புதுகை மா.உதயகுமார், இந்த நிகழ்ச்சியை முன்னின்று நடத்தினார்.



அண்ணா அநாதை இல்லத்தின் பொறுப்பாளர் மங்களலட்சுமியை என் அம்மா
சௌந்திரவல்லி, அறக்கட்டளை சார்பில் சிறப்பித்தார்.