!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ஒருங்குறி: இந்திய அரசின் அதிகாரப்பூர்வ குறிமுறையாக அறிவிப்பு ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, March 10, 2010

ஒருங்குறி: இந்திய அரசின் அதிகாரப்பூர்வ குறிமுறையாக அறிவிப்பு

இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை, ஒருங்குறி 5.1.0 (யுனிகோடு 5.1.0) என்ற குறியீட்டு முறையையும் அதன் எதிர்கால வெளியீடுகளையும் தன் அனைத்து மின் ஆளுகைப் பயன்பாடுகளின் அதிகாரப்பூர்வ குறிமுறையாக அறிவித்துள்ளது. இத்துறையின் இணை இயக்குநர் எஸ்.எஸ்.ராவத், 27.11.2009 அன்று இதனை அறிவித்துள்ளார். இந்த வெளியீட்டுத் தேதியிலிருந்து இது உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அந்த அறிவிப்பு தெரிவிக்கிறது. இது, இந்திய அரசின் அரசிதழிலும் (கெஜட்) வெளியாக உள்ளது.


மின் ஆளுகைப் பயன்பாட்டு நிரல்களை வட்டாரமயமாக்கி, இந்திய அரசமைப்புச் சட்டம் அங்கீகரித்த அனைத்து இந்திய மொழிகளிலும் எளிதில் வழங்க ஒருங்குறி உதவும். பன்மொழி உரைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால், இந்த ஒருங்குறி, உலகம் முழுதும் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கென அமைக்கப்பெற்ற தர நிலை ஆய்வுக் குழு, ஒருங்குறி 5.1.0 என்ற குறிமுறைக்கு ஒப்புதல் அளித்துள்ளது எனவும் அந்தச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

தர நிலை ஆய்வுக் குழுவின் அறிக்கை:

இந்த அறிவிப்பின் படியினை இந்திய அரசின் அனைத்துச் செயலர்களுக்கும் அனைத்து மாநிலத் தலைமைச் செயலர்களுக்கும் தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலர்களுக்கும் அவர் அனுப்பியுள்ளார்.

இதனால் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநில அரசுகளும் ஒருங்குறியில் இயங்குவதற்குச் சட்டப்பூர்வ அனுமதியும் ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. இனியாவது தமிழக அரசு உடனடியாகச் செயல்பட்டு, இந்த முடிவை வேகமாகவும் திடமாகவும் நிறைவேற்ற வேண்டும்.

இந்திய அரசு ஏற்றுள்ள ஒருங்குறி பற்றிய விவரங்கள்:


http://egovstandards.gov.in என்ற தளத்தினை மார்ச் 9 அன்று தற்செயலாகக் கண்டபோது, இந்த அறிவிப்பினைக் கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தேன்.

இந்தச் செய்தி, ஊடகங்களில் வெளிப்படவில்லையே என்ற எண்ணம் எழுந்தது. 2010 பிப்ரவரி 24-26 தேதிகளில் நடைபெற்ற கணினித் தமிழ் பன்னாட்டுக் கருத்தரங்கிலும் ஒருங்குறி குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றன. என் உரையிலும் தமிழக அரசின் அனைத்துத் தளங்களும் ஒருங்குறியில் அமைய வேண்டும் எனப் பரிந்துரைத்தேன். இறுதியில் மாநாட்டுத் தீர்மானத்திலும் இந்தக் கோரிக்கை ஏக மனதாக நிறைவேறியது. ஆனால், ஒருவரும் மத்திய அரசின் இந்த அறிவிப்புக் குறித்துத் தெரிவிக்கவில்லை. இந்த முக்கிய செய்தி எப்படியோ ஊடகங்களிலும் முதன்மை இடம் பெறத் தவறிவிட்டது.

இந்திய அரசின் இந்த முடிவு, இந்திய மொழிகளின் பயன்பாடுகளில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும்; தமிழும் இனி 16 கால் (16 பிட்) பாய்ச்சலில் வளரும் என நம்புவோம்.

1 comment:

தமிழ்மணவாளன் said...

mikka nanri. mealum niraiya therunjukanum.