அம்பத்தூர் ரைட்சாய்ஸ் நகைச்சுவை சங்கம் சார்பில் 2010 மே 09 அன்று மாலை நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்கி ஆசிரியர் சீதா ரவி, சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மாதந்தோறும் நடைபெறும் இந்த நிகழ்ச்சியினைச் சிரிப்பானந்தா என அழைக்கப்பெறும் சு. சம்பத் நடத்தி வருகிறார்.
முதலில் நகைச்சுவை சங்கத்தின் உறுப்பினர்கள், தங்கள் சிரிப்பு முத்துகளை உதிர்த்தார்கள். பல குரலில் அசத்திய பாண்டித்துரை, சிறுமி ஸ்ரீதேவி (இவர், அசத்தப் போவது நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார். விரைவில் ஒளிபரப்பாக உள்ளது), பேசும் பொம்மையுடன் வந்து கலக்கியவர், துபாயி்ல் நகைச்சுவை சங்கம் நடத்துபவர் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சிக்குச் சுவை கூட்டினார்கள்.
19 வயதே ஆன விவேக் கிஷோர், 2010 மே 8 அன்று, சென்னை ஆவடி பகுதியில் ஒளிபரப்பாகி வரும் ஜாக் தொலைக்காட்சியில் (JAK TV) 24 மணி நேரம் தொடர்ந்து நேரடி நிகழ்ச்சித் தொகுப்புரை (Live Compering) நடத்தி, லிம்கா புக் ஆப் இந்தியன் ரெகார்ட்ஸில் இடம் பிடித்துள்ளார். நகைச்சுவை சங்க உறுப்பினரான அவரை இந்த நிகழ்ச்சியில் சிறப்பித்தனர். சீதா ரவி, அவருக்குச் சால்வை அணிவி்த்துப் பாராட்டினார். விவேகானந்தரின் நூல் ஒன்றினை விவேக் கிஷோருக்கு வழங்கும் வாய்ப்பினைச் சிரிப்பானந்தா எனக்கு வழங்கினார்.
அதைத் தொடர்ந்து, சீதா ரவி, சிரிப்பானந்தா, வினோத் கிஷோரின் குடும்பத்தினர் ஆகியோரோடு நானும் இணைந்திருக்க, நிழற்படம் எடுத்தனர்.
சீதா ரவி, அவர் குடும்பத்தில் நிகழ்ந்த நகைச்சுவை நிகழ்ச்சிகள் சிலவற்றைப் பகிர்ந்துகொண்டார். அவர் பேச்சிலிருந்து சில முத்துகள்:
கல்கியின் குடும்பத்தினர் ஒருவரின் மனைவி கருவுற்றார். அவர் ஆண் குழந்தை பெறவேண்டும் என்பதற்காக, ஒன்பது மாதமும் ராமாயணத்தில் சுந்தர காண்டம் படித்தார்கள். அப்படிப் படித்த பிறகு, ஆண் குழந்தையே பிறந்தது. அந்தக் குழந்தை வளர வளர, மிகவும் குறும்பு செய்தான். யார் சொன்னாலும் கேட்பதில்லை. அவனைக் கல்கி ஒரு நாள் கண்டு, 'இவன் பிறக்கும்போது சுந்தர காண்டம் படித்தார்களா? கிஷ்கிந்தா காண்டம் படித்தார்களா?' எனக் கேட்டாராம் (அந்தப் பிள்ளை இன்று மிகவும் நல்ல பையனாக, அமெரிக்காவில் பணிபுரிகிறான்).
கௌரி ராம்நாராயணின் கணவர் ராம்நாராயணுக்கு, ஒரு முறை அவசரமாக ரூ.2 ஆயிரம் தேவைப்பட்டது. அவர் வேகமாகக் கீழே இறங்கி வந்தார். அவரின் மாமனார் அங்கிருந்தார். அவரிடம், பணம் கேட்டுள்ளார். அதற்கு அந்த மாமனார், 'என்னிடம் பணம் இல்லை. ஆனால், பணம் இருக்கும் என்று நம்பி வந்து கேட்டாய் பார், அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது' என்றாராம்.
கல்கி அலுவலகத்தில் அந்தக் காலத்தில் விருந்தோம்புதல் மிகப் பிரசித்தம். அந்தச் சமையலில் சீதாப்பாட்டி என்பவர் முழு நேரமாக ஈடுபட்டிருந்தார். எந்நேரமும் சமைப்பதும் சாப்பாடு பரிமாறுவதும் இலை எடுப்பதுமாக மிகப் பரபரப்பாக இருப்பார். யார் வந்தார் போனார் என்றுகூட அவரால் கவனிக்க முடியாத நிலை. ஒரு நாள் அவரிடம் ஒருவர் அவசரமாக வந்து, 'பாட்டி, ஸ்குரு டிரைவரைப் பார்த்தீர்களா?' என்று கேட்டார். அதற்கு அவர், 'நான் பார்க்கவில்லை. ஆனால், எல்லா டிரைவரும் வந்து சாப்பிட்டுப் போயாகிவிட்டது' என்று கூறினாராம்.
சீதா ரவியின் கார் ஓட்டுநர், வயதான மனிதர். கார் ஓட்டாமல் நிறுத்தியிருக்கும்போது தூங்கிவிடுவது அவர் வழக்கம். ஒரு முறை வீட்டிலிருந்து சீதா ரவி வெளியில் வந்தார். அவர் வருவதைக் கண்ட ஓட்டுநர், விழித்துக்கொண்டார். ஆனால், எதையோ மறந்துவிட்ட சீதா ரவி, மீண்டும் வீட்டிற்குள் சென்று எடுத்து வந்துள்ளார். வெளியே வந்தார் காரினைக் காணோம். இவர் ஏறிவிட்டதாக நினைத்து, ஓட்டுநர் வண்டியை எடுத்துச் சென்றுவிட்டார். அடையாறிலிருந்து காந்தி மண்டபம் வரை வந்த பிறகுதான் வண்டியில் அவர் இல்லை எனத் தெரிந்து, அவர் மீண்டும் வந்துள்ளார்.
சீதா ரவி, கல்லூரி மாணவியாக இருந்தபோது நிகழ்ந்தது, இது. அன்று கல்லூரியில் ஒரு கூட்டம். யாரோ ஒரு பெரியவரை அழைத்துப் பேசச் சொல்லியிருக்கிறார்கள். அவர் பேசினார் பேசினார் பேசினார் பேசினார்.... விடாமல் பேசிக்கொண்டிருந்தார். மாணவர்கள் அந்தப் பேச்சில் பெரிதும் ஈடுபடவேயில்லை. சீதாவின் இரு பக்கங்களிலும் தோழியர் சுசிலாவும் சுமதியும் அமர்ந்திருந்தார்கள். 'ரம்பம் போடுறார் இல்லே' என சுசிலாவின் காதில் சீதா சொல்ல, அவர் பதில் பேசவில்லை. சுமதியிடம் 'ரொம்ப போர் அடிக்குதே' என்கிறார். மீண்டும் சுசிலாவிடம் 'எப்போ நிறுத்துவாரோ?' எனக் கூற, சுமதி, சீதாவின் இடுப்பில் கிள்ளினார். இப்படியாகச் சுமதி பல முறைகள், சீதாவைக் கிள்ளிவிட்டார். நிகழ்ச்சி முடிந்ததும் 'ஏன் இப்படி கிள்ளினாய்?' எனச் சீதா கேட்க, 'பேசியவர், சுசிலாவின் அப்பா' எனக் கூறியுள்ளார் சுமதி.
இப்படியாகப் பல்வேறு நகைச்சுவை நிகழ்வுகளைச் சீதா ரவி சுவையுற எடுத்துரைத்தார்.
நகைச்சுவை சங்க உறுப்பினர் நேமத்து ஞானம், அண்மையில் மறைந்தார். அவருக்கு நிகழ்வில் மலரஞ்சலி செலுத்தப்பெற்றது.
நிகழ்ச்சி, சரியான நேரத்தில் தொடங்கி, சரியான நேரத்தில் நிறைவடைந்தது. நிகழ்வின் இறுதியில் ஒரு நிமிடம் அரங்கில் இருந்த அனைவரும் இடைவிடாமல் சிரித்து மகிழ்ந்தனர்.
நிகழ்வின் படங்களை விரிவாகப் பார்க்க:
http://picasaweb.google.co.in/skambadi/AHC?feat=directlink#