!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2010/07 - 2010/08 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, July 25, 2010

தனிமை – நிமிர வைத்த ஒரு நாடகம்

Thanimai - A play
ஓர் இரண்டு மணி நேர நாடகம், பார்வையாளரை நிமிர்ந்து உட்கார வைக்கலாம். நாடகம் முடிந்த பின்னும் நிமிர்ந்து நடக்க வைக்க முடியுமா? முடியும் என்று காட்டியது, ‘தனிமை’ என்ற நாடகம். ஆனந்த் ராகவ் கதையை எழுத, தீபா ராமானுஜம் இயக்க, அமெரிக்கத் தமிழர்கள் நடிக்க, இந்த ரசவாதம், அரங்கில் நிகழ்ந்தது.

சென்னையில் 24.07.2010 அன்று மாலை. வார இறுதி என்றபோதும் தி.நகர் வாணி மகாலில் நிறைவான கூட்டம். 7 மணிக்குச் சரியாக நாடகம் தொடங்கியது.

அமெரிக்காவுக்குச் செல்லும் மகனும் மகளும் அப்பாவிடம் விடைபெறுகிறார்கள். அவர்கள் சென்றதும் அப்பா மணி, தனிமையில் விடப்படுகிறார். 70 வயதில் அவருக்கு உடல் உபாதைகளுடன் தனிமையும் சேர்ந்துகொள்ள மிகவும் வருந்துகிறார். பழங்கால நினைவுகளில் மூழ்குகிறார்.

அந்தக் காலக் கூட்டுக் குடும்ப வாழ்வில் வீடு முழுக்க மனிதர்கள். புதிதாகத் திருமணம் ஆன மணிக்கு மனைவியிடம் தனிமையில் பேசக்கூட இயலவில்லை. இந்தச் சூழலில் சென்னையில் மணிக்கு வேலை கிடைக்கிறது. இதுதான் சாக்கென்று குடும்ப உறவுகளை விட்டுப் பிரிகிறான். எல்லோருக்கும் ஒரே உணவு; ஒரே உடை; எல்லோரையும் ஒரே மாதிரியாக நடத்துவது ஆகியவற்றை விமர்சிக்கிறான். எதிர்ப்புகளைத் தாண்டி, மனைவியுடன் சென்னையில் தனிக் குடித்தனம் வைக்கிறான். படிப்படியாக அவனது குடு்ம்பம் கலைகிறது. அப்போது மணியின் அம்மா, ‘மணி, இப்போ வேண்டாம்னு நினைக்கிற மனிதர்கள், நீ கழி ஊன்றி நடக்கிற போது, வேண்டியிருப்பார்கள்’ எனச்  சொல்கிறாள். அதை மணி இந்த 70 வயதுத் தனிமையில் நினைத்து வருந்துகிறார். முதுமையின் அனைத்து அவதிகளையும் அனுபவிக்கிறார்.

அப்போது தான் அவருக்குப் புதிய நண்பர் கிடைக்கிறார். அவர், மும்பையில் பேராசிரியராகப் பணி புரிந்தவர். சமூக சேவைகளில் ஈடுபடுபதோடு, நாடகங்களும் போடுகிறார். அவர் மணியை மாற்றுகிறார்.

முதலில் இந்தக் கழியைத் தூக்கிப் போடுங்கள், நிமி்ர்ந்து உட்காருங்கள் என்கிற அவர், மணியை யோசிப்பதற்குக்கூட நேரமி்ல்லாதபடி வேலைகளில் ஐக்கியமாகச் சொல்கிறார். அவர் ஆலோசனைப்படி, 20 ஆண்டுகள் வங்கியில் பணிபுரிந்து, 5 ஆண்டுகள் பங்குச் சந்தையிலும் அனுபவம் பெற்ற மணி, பங்குச் சந்தையின் புதிய தரகர் ஆகிறார். அவரின் வாடிக்கையாளர்கள் வட்டம் வேகமாக விரிகிறது. வெளியே பெரிய பெயர்ப் பலகை; வேலைக்கு இரண்டு ஆட்கள்; தினந்தோறும் பலரின் வருகை என வீடு களை கட்டுகிறது.
இப்போது, மணி நிமி்ர்ந்து நடக்கிறார். அவரது உடல்நிலையும் சீராக இருக்கிறது. ‘யார் வூட்ல பார்ட்டி, நம்ம வூட்ல பார்ட்டி’ என்ற பாடலுக்கு பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நடனம் ஆடுகிறார். வெளிநாட்டிலிருந்து பேசும் மகனிடம், இப்போது பிஸி. பிறகு பேசுகிறேன் என்கிறார்.

மணியின் மனப்பாங்கு மாறியதும் இவ்வளவு மாற்றங்களும் நிகழ்ந்துவிடுகின்றன. இவ்வாறு மணியைத் தூண்டிவிட்ட பேராசிரியர், மீண்டும் மும்பை செல்கிறார். இப்போது மணி மீண்டும் தனிமையைச் சந்திக்கிறார். ஆனால், சோர்வாக இல்லை; தன்னம்பிக்கையுடன். நாடகம் முடிந்ததும் பார்வையாளர்களிடம் ஏக உற்சாகம். அதிலிருந்த நிகழ்கால முதியோரும் எதிர்கால முதியோருக்கும் பிரமாதமான செய்தி. புத்துணர்ச்சியும் தன்னம்பிக்கையும் பொங்குகிறது.

ஒரே மேடையை இரண்டாகப் பிரித்து, மணியின் முதுமைக் கால நிகழ்வுகள் ஒரு புறமும் இளமைக் கால நினைவுகள் இன்னொரு புறமும் நிகழும் விதமாக அமைத்திருந்தார்கள். ஒலி-ஒளி அமைப்புகள், சரியாக இருந்தன. நடிகர்கள் அனைவரும் அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள். மிகச் செம்மையாக, பாத்திரத்துடன் ஒன்றி, இயல்பாக நடித்திருந்தார்கள். காட்சி மாறும் போது, பாத்திரங்கள் அப்படி அப்படியே உறையும் விதம், மிக அருமை.

Deepa Ramanujam

Anand Raghavஇளமைக் கால நிகழ்வுகளில் வரும் மணியின் மனைவி, ‘காற்றினிலே வரும் கீதம்’ பாடலை இனிமையாகப் பாடினார். சித்தப்பாவின் சிகரெட் நகைச்சுவை நன்று. அம்மாவாக நடித்த தீபா ராமானுஜம், மிகச் சிறப்பாக நடித்திருந்தார். சிறப்பாக இயக்கியும் இருந்தார்.

ஆனந்த் ராகவின் வசனங்கள், கூர்மையாக இருந்தன. ஐஸ்வர்யா ராய் 60 வயதில் எப்படி இருப்பாள் என்று பார்ப்பதற்காகவாவது நான் இன்னும் 30 வருடங்கள் இருக்க வேண்டும் என மணி கூறுவது வெறும் நகைச்சுவை இல்லை. வாழ்க்கை போதும் என இருந்தவர், வாழ வேண்டும் என மாறியதற்கான சான்று.

பெற்றோரை விட்டுவிட்டு, பிள்ளைகள் வெளிநாட்டுக்குச் செல்வதை மணி குறிப்பிட்டு, இனி என்னை யார் பார்த்துக்கொள்வார்? எனக் கேட்கிற போது, அவர்கள் பார்த்துக்கொள்வார் என நினைத்தா பெற்றுக்கொண்டீர்கள்? எனப் பேராசிரியர் கேட்கிறார். உங்களை நீங்களே பார்த்துக்கொள்ள வேண்டியதுதான் என்றும் வலியுறுத்துகிறார். இன்றைக்கு எங்கு நல்ல வாய்ப்பு கிடைக்கிறதோ, அங்கு வாழ வேண்டிய சூழல் நம் பிள்ளைகளுக்கு இருக்கிறது. நமக்காக அவர்கள், அதனை இழக்க வேண்டுமா? அப்படிக் கேட்பது, நல்ல பெற்றோருக்கு அழகா? எனப் பேராசிரியர் கேட்பது, இக்காலப் பிள்ளைகளைக் குற்ற உணர்விலிருந்து விடுவிக்கக்கூடிய வசனம்.

அமுதசுரபி தீபாவளி மலரில் (2004) ‘விழிப்பாவை‘ (http://annakannan-kavithaigal.blogspot.com/2005/08/blog-post_11.html) என்ற நீண்ட கவிதையை எழுதியிருந்தேன். அதில் ஒரு பாடல் இது:

தோலில் சுருக்கம்; செவிகொஞ்சம் மந்தம்;
தொடுந்தொலைவோ தோன்றும் நெடுந்தொலைவாய்; ஊன்று
கோலில் நடக்கும்; குழறும் மொழியெழும்;
கோலயிளங் காலத்தில் மூழ்கும்; கரத்தினில்
காலில் நடுக்கம்; கடிகாரம் தாழும்;
கடல்சூழ் உலகம் அறையாய்க் குறுகும்; மென்
மேலும் தனிமை விரியும் முதுமையின்
மேன்மையை மென்மையாய் மீட்டு விழிப்பாவாய்!

தனிமை விரியும் முதுமையின் மேன்மையை இந்தத் தனிமை என்ற நாடகம், மென்மையாய் மீட்டியது.

இந்த நாடகம் நிகழ இருப்பதைச் சொன்னதும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஒளவை நடராசன், உடனே வருவதற்கு ஒப்புக்கொண்டார். தம் மனைவியுடன் வந்து சிறப்பித்தார். இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர், முன்னிலை வகித்தார். நடிகர் நகுல், கூத்தபிரான், பாத்திமா பாபு… உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நிகழ்வினை அலங்கரித்தார்கள்.

கிரியா கிரியேஷன்ஸ் (http://www.kreacreations.com), இந்த நாடகத்தை அமெரிக்காவில் மூன்று முறைகள் நடத்திய பிறகு, சென்னையில் ஏழு முறைகள் நடத்தியது. நாடகத்தில் நடித்த அனைவரும்  தங்கள் சொந்தச் செலவில் அமெரிக்காவிலிருந்து வந்து நடித்துள்ளார்கள். இதே குழுவினர், இதற்கு முன்பு ‘சுருதி பேதம்’ என்ற நாடகத்தினையும் நிகழ்த்தினார்கள். இத்தகைய தன்னார்வலர்களின் முயற்சியினால்தான் தமிழ் நாடகக் கலை, இன்னும் பிழைத்திருக்கிறது. தக்க ஊக்கமும் உதவிகளும் அளித்தால், இவர்களால் தமிழ் நாடக உலகம் தழைக்கும்.

http://www.vallamai.com/?p=312

செம்மொழி மாநாட்டின் உதவித் தட எண்: 7373000000

செம்மொழி மாநாட்டின் அவசர உதவிக்காகப் பின்வரும் உதவித் தட எண்கள் அறிவிக்கப்பெற்றன:

7373111111
7373666666
7373222222
7373444444
7373001001
7373000002
7373000000

இவை ஏர்செல் நிறுவன எண்கள். இவற்றுள் 7373000000 என்ற எண், 'தமிழ் வளர்க்க வந்தோருக்கு வழிகாட்டி' என்ற அறிவிப்புடன் பல இடங்களில் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. பேருந்துகளின் பின்புறங்கள், தட்டிகள், அறிவி்ப்புப் பலகைகள், பத்திரிகைகள், இணையத்தளங்கள், அரசின் செய்திக் குறிப்புகள் எனப் பல இடங்களிலும் இந்த எண்களைக் காண முடிந்தது.

இந்த எண்கள், மிக உதவிகரமாக இருந்தன. நான் 7373000000 என்ற எண்ணை அழைத்து, என் தேவையைச் சொன்னபோது, அதற்குத் தக்க தீர்வு உடனே கிட்டவில்லை என்ற போதும், இன்னொரு எண்ணைத் தந்து பேசச் சொன்னார்கள். நம் பிரச்சினைக்குத் தீ்ர்வு கிடைக்கிறதோ, இல்லையோ, நாம் கேட்பதற்கு ஓர் இடமாவது இருக்கிறது என்ற நிறைவு, பலருக்குக் கிட்டியிருக்கும்.

என் கேள்வியெல்லாம், இதுதான். மாநாடு முடிந்த பின், ஏன் இந்த எண்ணைக் கைவி்ட்டீர்கள்? உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, குறிப்பிட்ட கால இடைவெளியில்  நடக்க உள்ளது; இதற்கென மதுரையில் தொல்காப்பியச் செம்மொழிச் சங்கம் அமைய உள்ளது. மரபணுப் பூங்கா, புத்தக வெளியீடு, ஆவணக் காப்பகம், அறிவியல் தமிழ் மேம்பாடு, தமிழ் மொழிபெயர்ப்புகள்,....... என ஏராளமான அறிவிப்புகளை முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ளார்.

அப்படி இருக்க, இவை பற்றிய செய்திகளை மக்கள் தொடர்ந்து அறியும் வண்ணம், இந்த உதவித்தட எண்களை அப்படியே வைத்திருக்கலாமே. குறைந்தபட்சம் 7373000000 என்ற எண்ணையாவது, செம்மொழித் தமிழுக்கான நிலையான உதவித் தட எண்ணாக வைத்திருக்கலாம். இப்போதும் காலம் கடந்துவிடவி்ல்லை. அந்த எண்ணை மீட்டு, செம்மொழிக்கு ஒதுக்க ஆவன செய்யலாம்.

பொருளாதார நோக்கில், அந்த எண்ணைப் பிரபலப்படுத்த ஆன செலவு, எடுத்துக்காட்டுக்கு ரூ.10 இலட்சம் எனில், ஒரு மாதம் மட்டுமே அந்த எண் பயனில் இருக்குமானால், ஒரு மாதத்திற்குப் பிறகு, ரூ.10 இலட்சத்தின் பயன் முடிந்ததாகப் பொருள். இதே எண்ணைச் செம்மொழித் தகவல்களுக்கு என நிரந்தரமாக ஒதுக்கினால், ரூ.10 இலட்சத்தின் பயன் நீடிக்கிறது என்று பொருள்.

கி்ட்டிப்புள் ஆட்டத்திலிருந்து ஓர் எடுத்துக்காட்டு. கில்லித் தண்டினைக் கொண்டு, புள்ளினைத் தட்டி, அந்தரத்தில் எழுப்பி, ஒரு முறை தட்டினால் ஒரு கில்லியாகும். அந்தப் புள்ளினைக் கீழே விழ விடாமல் மீண்டும் மீண்டும் தட்டினால், பல கில்லிகளை அடிக்கலாம். இங்கு நான் வேண்டுவதும் அதுவே.

செம்மொழி மாநாட்டுக்கு என ஒதுக்கிய எண்ணை விட்டுவிடாமல், மீண்டும் மீண்டும் அதே கருவில் பயன்பாட்டில் வைத்தால் ஆதாயம் கூடும். மக்களின் வரிப் பணத்திலிருந்து செலவிடப்படும் ஒவ்வொரு சிறு தொகையும் பல பயன்களை ஈட்ட வேண்டும். அதாவது, ஒரே கிளப்பலி்ல் பல கில்லிகள்.

Saturday, July 24, 2010

அபிமன்யுவின் சக்கர வியூகமும் செம்மொழி மாநாடும்



பாரத போர் நடந்த போது 13ஆம் நாள் போரில் பாண்டவர்களுள் ஒருவனான அருச்சுனனின் மகன் அபிமன்யு, கௌரவர்களின் சக்கர வியூகத்தினுள் நுழைந்துவிட்டான். ஆனால் உள்ளே சென்ற பிறகு வெளியே வருவதற்கு அவன் கற்கவி்ல்லை. எனவே, அவன் மாண்டான்.

செம்மொழி மாநாட்டிலும் இத்தகைய ஒரு சூழலைக் கண்டேன். மாநாட்டின் முதல் நாள் (ஜூன் 23), தொடக்க விழா. அதைத் தொடர்ந்து, இனியவை நாற்பது என்ற பெயரில் வரிசையாக நாற்பது அலங்கார ஊர்திகள் சாலைகளில் பவனி வந்தன. தொடக்க விழாவைக் காணவும் அணிவகுப்பினைக் காணவும் இலட்சக்கணக்கானோர் கூடினர். காலையிலிருந்து முற்பகல் வரை பேருந்துகள் அனுமதிக்கப்பட்டன. ஆனால், அலங்கார ஊர்தி அணிவகுப்பு முடிந்த பிறகு, வெளியே செல்வதற்குப் பொது வாகனம் ஏதுமில்லை. பேருந்து, தானி (ஆட்டோ), மிதி ரிக்சா, மாட்டு வண்டி என எதுவும் கிடையாது. கூடுதல் கட்டணம் செலுத்த மக்கள் தயார் என்ற போதும், எந்த வாகனமும் கிட்டவி்ல்லை. இலட்சக்கணக்கான மக்கள், சுமார் 10 கி.மீ. நடந்து சென்றால் தான் வேறு பொது வாகனத்தைப் பிடிக்க முடியும் என்ற நிலை. குழந்தைகள், முதியவர்கள், பெண்கள், நோயாளிகள்... என எந்தப் பேதமும் இல்லாமல், எல்லோரும் நடந்தாக வேண்டிய நிலை.

இரவு வீட்டிற்கு அல்லது விடுதிக்குச் சென்று சாப்பிடுவோம் எனக் கிளம்பியவர்கள் பலரும் பசியுடன் 10 கி.மீ. நடக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இனிமேல் என்னால் நடக்க முடியாது எனப் பலரும் ஆங்காங்கே உட்கார்ந்தனர். எவ்வளவு நேரம்தான் உட்காருவது என எழுந்து சிறிது தூரம் நடந்தனர். இவ்வாறு நடக்க முடியாதவர்கள், பேருந்து நிறுத்தங்களில் பல மணி நேரங்கள் காத்திருந்தனர். இத்தனைக்கும் காரணம், அணிவகுப்பு முடிந்ததும் பேருந்துகள் உள்ளிட்ட பொது வாகனங்கள் அனுமதிக்கப்படாமையே.

நாங்கள் மாநாட்டுக்குக் கட்டுரை படிக்க வந்த பேராளர்களும் அவர்களின் குடும்பத்தினருமாக 7 பேர்கள், முதல் நாள் நிகழ்வின்போது, உள்ளேயே
காத்திருக்க நேரிட்டது. சிலருக்கு அடையாள அட்டை வந்து சேரவில்லை. அந்த அட்டை இருந்தால்தான் அடுத்த நாள் நிகழ்வில் பங்கேற்க முடியும் என்ற நிலை. எனவே, அவற்றைப் பெற்ற பிறகு, நாங்கள் இரவு சுமார் 9 மணி அளவில் மாநாட்டு வளாகத்தை விட்டு வெளியே வந்தோம். அப்போது, அலங்கார ஊர்தி அணிவகுப்பு முடிந்திருந்தது. விடுதியிலிருந்து எங்களை அழைத்து வந்த பேருந்து, போய்விட்டிருந்தது. நாங்கள் வெளிச்செல்ல வேறு வாகனங்களுக்காகக் காத்திருந்தோம். எந்தப் பொது வாகனமும் இல்லை.

ஓரிருவர் மட்டும் அமர்ந்திருந்த நிலையில் பல பேருந்துகள், நிற்காமல் சென்றன. அவை, எங்களைப் போன்ற தனிக் குழுவினருக்கானவையாக இருக்கலாம். சிறிது தொலைவு சென்றால் பேருந்துகள் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் நடக்கத் தொடங்கினோம். எங்கள் 7 பேரில் என்  நான், 64 வயதுடைய என் அம்மா, முனைவர் துரையரசன், அவரின் மனைவி - இரண்டு குழந்தைகள், முனைவர் பட்ட ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் இருந்தோம். நாங்கள் சுமார் 3 கி.மீ. தொலைவு நடந்தும் எங்களுக்கு எந்த வாகனமும் கிடைக்கவில்லை. நாங்கள் மிகவும் களைத்துப் போனோம். அடுத்த நாள் காலை, முதல் அமர்வில் முதல் பேச்சு, என்னுடையது. இப்போது போய் ஓய்வெடுத்தால் தான் அந்த அமர்வில் என்னால் கலந்துகொள்ள முடியும் என்ற நிலை. என் அம்மாவுக்கு நீரிழிவு, மூட்டு வலி உள்ளிட்ட சில சிக்கல்கள் உண்டு. அவர் தன்னால் இனி நடக்க முடியாது என உட்கார்ந்துவிட்டார். குழந்தைகளின் நிலையும் அதுவே.

பிறகு நான், நண்பர் உமாபதிக்குச் சொ்ல்லி, அவர் ரெத்தினகிரிக்குச் சொல்லி, ரெத்தினகிரி ஒரு மகிழுந்தில் வந்து சேர்ந்தார். அந்தச் சிறு வாகனத்தில் நாங்கள் 7 பேரும் சமாளித்து அமர்ந்தோம். அப்போது நேரம் இரவு சுமார் 11. மாநாட்டு அரங்கிலிருந்து 13 கி.மீ. தொலைவில் இருந்த எங்கள் விடுதிக்கு 11.30 மணி அளவில் வந்து விழுந்தோம். எங்களைக் கொண்டு சேர்க்க ரெத்தினகிரி கிடைத்தார். ஆனால், இலட்சக்கணக்கான மக்கள் வாகனம் இன்றி, நடந்து வந்ததைக் கண்டு மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

மாநாட்டின் உள்ளே நுழைவோருக்குப் பேருந்து வசதி உண்டு; வெளியே செல்வோருக்குப் பேருந்து வசதி  இல்லை என்ற நிலை, அபிமன்யு, சக்கர வியூகத்திற்குள் அகப்பட்டது போன்றதே. இத்தகைய அவதி, பெருங்கூட்டங்கள் கூடும் பல மாநாடுகளிலும் அடிக்கடி நிகழ்கிறது. ஆனால், எத்தனை முறைகள் அவதிப்பட்டாலும் அரசு அல்லது மாநாடு கூட்டுவோர், இதில் தேவையான அக்கறையோடு செயல்படுவதில்லை. ஆர்வ மிகுதியால் மக்களும் மீண்டும் மீண்டும் துயரத்திற்கு ஆளாகின்றனர்.

இறுதி நாளான ஜூன் 27 அன்று நிறைவுரை ஆற்றிய தமிழக முதல்வர் கருணாநிதி, மாநாட்டுக்கு வந்தோர் நலமுடன் வீடு திரும்பினார்கள் என்ற செய்தி கேட்ட பிறகே நான் நிம்மதி அடைவேன் என உருக்கமாகக் குறிப்பிட்டார். மிகவும் பொறுப்பான பேச்சு. ஆனால், முதல் நாள் அன்று இருந்து நிலைமை வேறு. கூட்டத்தைக் கூட்டுவதோடு ஏற்பாட்டாளர்களின் கடமை முடியவில்லை. வந்தவர்கள், மீண்டும் சென்று சேருவது வரை அவர்களுக்குப் பொறுப்பு உண்டு.

இத்தகைய தருணங்களில் மக்கள் என்ன செய்ய முடியும்?

எனக்குத் தோன்றும் உடனடி உபாயம், இதுவே. ஒரு சிறு கருவி தேவை. தசாவதாரம் படத்தில் வைரஸ் ஆய்வு நிகழும் ஆய்வகத்தினுள் செல்வதற்கு விஞ்ஞானிகள், கைப்பிடியுடன் கூடிய ஒரு சிறு உருளையைப் பயன்டுத்தியதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அதே போன்ற பயன்பாட்டினைத் தரும் மிக மலிவான கருவி ஒன்று தேவை. இது, மிகவும் எடை குறைவாக இருக்க வேண்டும். மடித்து, பையில் வைக்கும் வண்ணம் இருக்க வேண்டும். இதனைச் சேமக் கலன் கொண்டும் இயக்கலாம். அல்லது சூரிய ஒளி மூலமாகவும் இயக்கலாம் என்ற வகையில் தயாரிக்க வேண்டும்.

இதே கருவியின் இன்னொரு மாதிரியில் மிதிவண்டி போல மிதித்தும் இயக்கும்படி வடிவமைக்கலாம். இது, சாலைகளில் மட்டுமின்றி, மாநாட்டு அரங்கில் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு ஒரு கி.மீ. தள்ளிப் போக வேண்டும் எனில் அங்கும் பயன்படு்த்தலாம். இவ்வாறான ஒரு கருவி, மக்களுக்கு உடனடித் தேவை. பேருந்துக்கும் தானிக்கும் செலவிடும் தொகையை இதற்கு மக்கள் செலவிடலாம். நின்றுகொண்டே செல்வதற்குப் பதில் உட்கார்ந்தும் செல்ல வழி வகை காணலாம். இதன் மூலம் வேகமாகச் செல்ல முடியாவிடினும், குறைந்தபட்சம் நடக்கும் வேலையை மிச்சப்படுத்தலாம். அதன் மூலம், வேகமாகக் களைப்படைவதைத் தவிர்க்கலாம். இந்தக் கருவியை உருவாக்க, பொறியாளர்கள் முயல வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

Wednesday, July 07, 2010

செம்மொழி மாநாட்டுச் சிந்தனைகள்

06.07.2010 அன்று மாலை ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்ற நிகழ்விற்குச் சென்றேன். 'செம்மொழி மாநாட்டுச் சிந்தனைகள்' என்ற தலைப்பில் மலேசியா சீனி நைனார் முகமது, பிரான்ஸ் பெஞ்சமின் லெபோ, சிங்கப்பூர் அமலதாசன், மலேசியா இளவழகு ஆகியோர் உரையாற்றினார்கள். மறைமலை இலக்குவனார் தலைமை தாங்கினார்.

சிங்கப்பூர் அமலதாசன் முதலில் பேசினார். சிங்கப்பூர்த் தமிழர்களை ஒன்று திரட்டி, அவர்களின் உரிமைகளைப் பெற்றுத் தந்த தமிழவேள் கோ.சாரங்கபாணியைச் செம்மொழி மாநாட்டில் நினைவுகூரவி்ல்லை என வருந்தினார். தன் ஆய்வுக் கட்டுரையும் அவரைப் பற்றியதே எனக் கூறிய அவர், தமிழவேள் நினைவாக அஞ்சல் தலை, நாணயம் ஆகியவற்றை வெளியிட வேண்டும். பல்கலைக்கழகங்களில் இருக்கைகள் அமைய வேண்டும் எனச் சில கோரிக்கைகளைப் பல்லாண்டுகளாக வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

அடுத்துப் பேசிய மலேசியா இளவழகு, தாம் எப்போதும் தம் அண்ணன் கவிஞர் ஐ.உலகநாதன் அவர்களின் பெயரால் நினைவுகூரப்பெறுவதை மறுத்தார். தாம் 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கவிதை, புதினம் உள்ளிட்டவற்றைப் படைத்து வரும்போதும் தம் படைப்பு முகத்தை முன்னிறுத்தாது தம் தவறே என்றும் குறிப்பிட்டார்.

மலேசியா சீனி நைனார் முகமது, தொல்காப்பிய எடுத்துக்காட்டுகளுடன் பேசினார். அவன் வந்தான் என்பதை ஆங்கிலத்தில் He came என்பர்; மலாயில் வேறு மாதிரி கூறுவர். இதில் அவன் என்பதை எடுத்துவிட்டால், வந்தான் எனத் தமிழில் எஞ்சும்; ஆங்கிலத்தில் came என்பது எஞ்சும். தமிழில் உள்ள சொல்லில் உயர்திணை, இறந்த காலம், ஆண்பால், திணை ஆகியவை வெளிப்படுகின்றன. ஆங்கிலத்தில் இறந்த காலம் என்ற ஒன்று மட்டுமே வெளிப்படுகிறது.

தமிழில் வெட்டு என்பது வினைச் சொல்; அந்தச் செயலைச் செய்யும் கருவிக்கு வெட்டி (மண் வெட்டி) என்று பெயர்; இது போல் ஆங்கிலத்தில் cut என்ற வினையைச் செய்யும் கருவிக்கு cutter என்று பெயர்; அதே நேரம் heat என்ற என்ற வினையை ஆற்றும் கருவிக்கு heater என்று பெயர். Cut உடன் er சேரும்போது, T இரட்டிக்கிறது; ஆனால், heat உடன் er சேரும்போது இரட்டிக்கவில்லை. இது ஏன் எனப் பலரையும் கேட்டேன். விளக்கம் கிட்டவில்லை. ஆங்கிலத்தில் இதற்கான இலக்கணம் இன்னும் வரையறுக்கப்படவில்லை. ஆனால், தொல்காப்பியத்தில் இதற்கு விளக்கம் இருக்கிறது.

முதற்சொல் குறிலாக இருக்கையில், வரும் சொல் உயிரானால், முதற்சொல்லின் ஈற்றெழுத்து இரட்டிக்கிறது. ஆனால் நெடிலாக இருந்தால் இரட்டிப்பதில்லை. கல் என்ற சொல்லுடன் அடி என்ற சொல் இணைந்தால், கல்லடி என்ற சொல்லில் ல் என்ற எழுத்து இரட்டிக்கிறது. ஆனால், கால் என்பதுடன் அடி இணைந்தால், காலடி என ஆகிறது. இங்கு இரட்டிப்பதில்லை. இதற்கான இலக்கணத்தைத் தெளிவாக வரையறுத்துள்ளது, தமிழின் செம்மையைக் காட்டுகிறது என எடுத்துரைத்தார்.

செம்மொழி மாநாடு வெற்றிகரமாக நடந்தாலும் இங்கே அறிவுபூர்வமாகத் தமிழை வளர்க்க வேண்டும் என வலியுறுத்தினார். 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என ஒருவர் பாடினால், அதை என்ன செலவானாலும் திருத்திவிட்டுத்தான் மறுவேலை என்ற துடிப்பு எவரிடமும் எழவில்லையே. அப்புறம் என்ன செம்மொழி? எனக் கண்டித்தார். 'அசத்தப் போவது யாரு?' என்ற தலைப்பினை விமர்சித்த அவர், 'அசத்தப் போவது நாயா, பன்னியா? மனிதன் தானே? அசத்தப் போகிறவர் யார்? என எழுத வேண்டியது தானே' எனக் கேட்டார்.

தமிழகப் பத்திரிகைகளையும் வானொலிகளையும் தொலைக்காட்சிகளையும் பார்த்து, மலேசிய ஊடகங்களும் இப்போது கெட்டுவிட்டன. தமிழகத்திலிருந்து வரும் இவற்றை மலேசியாவில் தடை செய்தால் நன்றாய் இருக்கும் எனக் கூறினார்.

அடுத்துப் பேசிய பெஞ்சமின் லெபோ, செம்மொழி மாநாட்டின் நிகழ்வுகளை வந்தனைகள், நிந்தனைகள் என இரு பிரிவுகளாகப் பிரித்துப் பேசினார்.

எல்லோரையும் ஒன்று திரட்டியது, கட்சிக் கொடி இல்லாதது, அனைவருக்கும் மகிழ்ச்சி, புத்துணர்ச்சி ஊட்டியது, வணிகர்கள் மகிழ்ந்தது, தமிழ்ப் புலவர்களின் பெயர்களில் அரங்குகளை அமைத்தது, அதில் கம்பன் பெயரையும் சேர்த்துக்கொண்டது, ஆய்வரங்குகளின் பெயர்களுடன் கூடிய ஓவியங்களைத் தமிழ் ஓவியர்கள் வரைந்தது உள்ளிட்டவற்றை வந்தனைகள் என்று பாராட்டினார். எழுத்துச் சீர்திருத்தத்திற்கு எதிர்ப்புக் குரலை அழுத்தமாகப் பதித்திட இந்த நிகழ்வு, வாய்ப்பாக அமைந்தது என்றும் கூறினார்.

தமிழர் மரபுப்படி கடவுள் வாழ்த்துப் பாடாதது (மதம் சாராமலும் அப்படி பாடலாம்; திருக்குறளும் சிலப்பதிகாரமுமே உதாரணங்கள்), தொடக்க விழாவில் தமிழறிஞர்கள் இருக்க வேண்டிய முன் வரிசைகளில் முதல்வரின் உறவினர்கள் அமர்ந்திருந்தது, ஆய்வரங்குகளில் ஒரே நேரத்தில் பல அமர்வுகளை அமைத்தது, பார்வையாளர் இருவர் – ஐவர் என்ற எண்ணிக்கையில் இருந்தமை உள்ளிட்டவற்றை நிந்தனைகள் என வரிசைப்படுத்தினார். இனி மேல் இப்படி ஒரு மாநாடு நடக்கவே முடியாது என உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதையும் கண்டித்தார். இதை விடச் சிறப்பாக அடுத்தது எனச் செல்வதே வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்றார்.

தலைமை தாங்கிய மறைமலை, செம்மொழி மாநாடு கிளச்சியையும் எழுச்சியையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தியது உண்மை; அதே நேரம் இன்னும் செய்ய வேண்டியவையும் நிறைய உள்ளன என்று கூறினார்.

அறிஞர்கள், கவிஞர்கள், தமிழ்த் தொண்டர்கள், ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். கெ.பக்தவத்சலம் வரவேற்புரையும் பு.ச.கிருஷ்ணமூர்த்தி நன்றியுரையும் நிகழ்த்தினர். அரங்கு நிறைந்தது மட்டுமின்றி, பலரும் நின்றபடி செவி மடுத்தனர்.

Saturday, July 03, 2010

தமிழில் செல்லிட ஆளுகை: அண்ணாகண்ணன் உரை - விழியப் பதிவு

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக 9ஆவது தமிழ் இணைய மாநாடு, கோவையில் 2010 ஜூன் 23 முதல் 27 வரை நடைபெற்றது. அதில் நா.கோவிந்தசாமி அரங்கில் 25.06.2010 அன்று, 'கையடக்கப் பேசியில் தமிழ்' என்ற தலைப்பிலான அமர்வு நடைபெற்றது. இந்த அமர்வுக்கு மலேசியாவைச் சேர்ந்த முத்து நெடுமாறன் தலைமை வகித்தார். இதில், 'தமிழில் செல்லிட ஆளுகை' என்ற தலைப்பில் என் கட்டுரையைத் திரை உரை முறையில் வழங்கினேன். இந்த அமர்வில் என்னுடன் ஜி.புவன் பாபு, எம். சிவலிங்கம், சுவர்ணலதா ஆகியோரும் உரையாற்றினார்கள்.

என் உரையினை 4 பகுதிகளாக இணையத்தில் ஏற்றியுள்ளனர். அவற்றை இங்கே காணலாம்.

அ.க. உரை - பகுதி 1:

http://www.youtube.com/watch?v=bj1zUg3f8VI



அ.க. உரை - பகுதி 2:

http://www.youtube.com/watch?v=9XyzVnTj2To




அ.க. உரை - பகுதி 3:

http://www.youtube.com/watch?v=E97NXHyXWMc




அ.க. உரை - பகுதி 4:

http://www.youtube.com/watch?v=kSDbMtJ6lKA




தமிழக அரசுக்கும் உத்தமம் அமைப்பிற்கும் நன்றி.