!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> தனிமை – நிமிர வைத்த ஒரு நாடகம் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, July 25, 2010

தனிமை – நிமிர வைத்த ஒரு நாடகம்

Thanimai - A play
ஓர் இரண்டு மணி நேர நாடகம், பார்வையாளரை நிமிர்ந்து உட்கார வைக்கலாம். நாடகம் முடிந்த பின்னும் நிமிர்ந்து நடக்க வைக்க முடியுமா? முடியும் என்று காட்டியது, ‘தனிமை’ என்ற நாடகம். ஆனந்த் ராகவ் கதையை எழுத, தீபா ராமானுஜம் இயக்க, அமெரிக்கத் தமிழர்கள் நடிக்க, இந்த ரசவாதம், அரங்கில் நிகழ்ந்தது.

சென்னையில் 24.07.2010 அன்று மாலை. வார இறுதி என்றபோதும் தி.நகர் வாணி மகாலில் நிறைவான கூட்டம். 7 மணிக்குச் சரியாக நாடகம் தொடங்கியது.

அமெரிக்காவுக்குச் செல்லும் மகனும் மகளும் அப்பாவிடம் விடைபெறுகிறார்கள். அவர்கள் சென்றதும் அப்பா மணி, தனிமையில் விடப்படுகிறார். 70 வயதில் அவருக்கு உடல் உபாதைகளுடன் தனிமையும் சேர்ந்துகொள்ள மிகவும் வருந்துகிறார். பழங்கால நினைவுகளில் மூழ்குகிறார்.

அந்தக் காலக் கூட்டுக் குடும்ப வாழ்வில் வீடு முழுக்க மனிதர்கள். புதிதாகத் திருமணம் ஆன மணிக்கு மனைவியிடம் தனிமையில் பேசக்கூட இயலவில்லை. இந்தச் சூழலில் சென்னையில் மணிக்கு வேலை கிடைக்கிறது. இதுதான் சாக்கென்று குடும்ப உறவுகளை விட்டுப் பிரிகிறான். எல்லோருக்கும் ஒரே உணவு; ஒரே உடை; எல்லோரையும் ஒரே மாதிரியாக நடத்துவது ஆகியவற்றை விமர்சிக்கிறான். எதிர்ப்புகளைத் தாண்டி, மனைவியுடன் சென்னையில் தனிக் குடித்தனம் வைக்கிறான். படிப்படியாக அவனது குடு்ம்பம் கலைகிறது. அப்போது மணியின் அம்மா, ‘மணி, இப்போ வேண்டாம்னு நினைக்கிற மனிதர்கள், நீ கழி ஊன்றி நடக்கிற போது, வேண்டியிருப்பார்கள்’ எனச்  சொல்கிறாள். அதை மணி இந்த 70 வயதுத் தனிமையில் நினைத்து வருந்துகிறார். முதுமையின் அனைத்து அவதிகளையும் அனுபவிக்கிறார்.

அப்போது தான் அவருக்குப் புதிய நண்பர் கிடைக்கிறார். அவர், மும்பையில் பேராசிரியராகப் பணி புரிந்தவர். சமூக சேவைகளில் ஈடுபடுபதோடு, நாடகங்களும் போடுகிறார். அவர் மணியை மாற்றுகிறார்.

முதலில் இந்தக் கழியைத் தூக்கிப் போடுங்கள், நிமி்ர்ந்து உட்காருங்கள் என்கிற அவர், மணியை யோசிப்பதற்குக்கூட நேரமி்ல்லாதபடி வேலைகளில் ஐக்கியமாகச் சொல்கிறார். அவர் ஆலோசனைப்படி, 20 ஆண்டுகள் வங்கியில் பணிபுரிந்து, 5 ஆண்டுகள் பங்குச் சந்தையிலும் அனுபவம் பெற்ற மணி, பங்குச் சந்தையின் புதிய தரகர் ஆகிறார். அவரின் வாடிக்கையாளர்கள் வட்டம் வேகமாக விரிகிறது. வெளியே பெரிய பெயர்ப் பலகை; வேலைக்கு இரண்டு ஆட்கள்; தினந்தோறும் பலரின் வருகை என வீடு களை கட்டுகிறது.
இப்போது, மணி நிமி்ர்ந்து நடக்கிறார். அவரது உடல்நிலையும் சீராக இருக்கிறது. ‘யார் வூட்ல பார்ட்டி, நம்ம வூட்ல பார்ட்டி’ என்ற பாடலுக்கு பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நடனம் ஆடுகிறார். வெளிநாட்டிலிருந்து பேசும் மகனிடம், இப்போது பிஸி. பிறகு பேசுகிறேன் என்கிறார்.

மணியின் மனப்பாங்கு மாறியதும் இவ்வளவு மாற்றங்களும் நிகழ்ந்துவிடுகின்றன. இவ்வாறு மணியைத் தூண்டிவிட்ட பேராசிரியர், மீண்டும் மும்பை செல்கிறார். இப்போது மணி மீண்டும் தனிமையைச் சந்திக்கிறார். ஆனால், சோர்வாக இல்லை; தன்னம்பிக்கையுடன். நாடகம் முடிந்ததும் பார்வையாளர்களிடம் ஏக உற்சாகம். அதிலிருந்த நிகழ்கால முதியோரும் எதிர்கால முதியோருக்கும் பிரமாதமான செய்தி. புத்துணர்ச்சியும் தன்னம்பிக்கையும் பொங்குகிறது.

ஒரே மேடையை இரண்டாகப் பிரித்து, மணியின் முதுமைக் கால நிகழ்வுகள் ஒரு புறமும் இளமைக் கால நினைவுகள் இன்னொரு புறமும் நிகழும் விதமாக அமைத்திருந்தார்கள். ஒலி-ஒளி அமைப்புகள், சரியாக இருந்தன. நடிகர்கள் அனைவரும் அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள். மிகச் செம்மையாக, பாத்திரத்துடன் ஒன்றி, இயல்பாக நடித்திருந்தார்கள். காட்சி மாறும் போது, பாத்திரங்கள் அப்படி அப்படியே உறையும் விதம், மிக அருமை.

Deepa Ramanujam

Anand Raghavஇளமைக் கால நிகழ்வுகளில் வரும் மணியின் மனைவி, ‘காற்றினிலே வரும் கீதம்’ பாடலை இனிமையாகப் பாடினார். சித்தப்பாவின் சிகரெட் நகைச்சுவை நன்று. அம்மாவாக நடித்த தீபா ராமானுஜம், மிகச் சிறப்பாக நடித்திருந்தார். சிறப்பாக இயக்கியும் இருந்தார்.

ஆனந்த் ராகவின் வசனங்கள், கூர்மையாக இருந்தன. ஐஸ்வர்யா ராய் 60 வயதில் எப்படி இருப்பாள் என்று பார்ப்பதற்காகவாவது நான் இன்னும் 30 வருடங்கள் இருக்க வேண்டும் என மணி கூறுவது வெறும் நகைச்சுவை இல்லை. வாழ்க்கை போதும் என இருந்தவர், வாழ வேண்டும் என மாறியதற்கான சான்று.

பெற்றோரை விட்டுவிட்டு, பிள்ளைகள் வெளிநாட்டுக்குச் செல்வதை மணி குறிப்பிட்டு, இனி என்னை யார் பார்த்துக்கொள்வார்? எனக் கேட்கிற போது, அவர்கள் பார்த்துக்கொள்வார் என நினைத்தா பெற்றுக்கொண்டீர்கள்? எனப் பேராசிரியர் கேட்கிறார். உங்களை நீங்களே பார்த்துக்கொள்ள வேண்டியதுதான் என்றும் வலியுறுத்துகிறார். இன்றைக்கு எங்கு நல்ல வாய்ப்பு கிடைக்கிறதோ, அங்கு வாழ வேண்டிய சூழல் நம் பிள்ளைகளுக்கு இருக்கிறது. நமக்காக அவர்கள், அதனை இழக்க வேண்டுமா? அப்படிக் கேட்பது, நல்ல பெற்றோருக்கு அழகா? எனப் பேராசிரியர் கேட்பது, இக்காலப் பிள்ளைகளைக் குற்ற உணர்விலிருந்து விடுவிக்கக்கூடிய வசனம்.

அமுதசுரபி தீபாவளி மலரில் (2004) ‘விழிப்பாவை‘ (http://annakannan-kavithaigal.blogspot.com/2005/08/blog-post_11.html) என்ற நீண்ட கவிதையை எழுதியிருந்தேன். அதில் ஒரு பாடல் இது:

தோலில் சுருக்கம்; செவிகொஞ்சம் மந்தம்;
தொடுந்தொலைவோ தோன்றும் நெடுந்தொலைவாய்; ஊன்று
கோலில் நடக்கும்; குழறும் மொழியெழும்;
கோலயிளங் காலத்தில் மூழ்கும்; கரத்தினில்
காலில் நடுக்கம்; கடிகாரம் தாழும்;
கடல்சூழ் உலகம் அறையாய்க் குறுகும்; மென்
மேலும் தனிமை விரியும் முதுமையின்
மேன்மையை மென்மையாய் மீட்டு விழிப்பாவாய்!

தனிமை விரியும் முதுமையின் மேன்மையை இந்தத் தனிமை என்ற நாடகம், மென்மையாய் மீட்டியது.

இந்த நாடகம் நிகழ இருப்பதைச் சொன்னதும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஒளவை நடராசன், உடனே வருவதற்கு ஒப்புக்கொண்டார். தம் மனைவியுடன் வந்து சிறப்பித்தார். இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர், முன்னிலை வகித்தார். நடிகர் நகுல், கூத்தபிரான், பாத்திமா பாபு… உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நிகழ்வினை அலங்கரித்தார்கள்.

கிரியா கிரியேஷன்ஸ் (http://www.kreacreations.com), இந்த நாடகத்தை அமெரிக்காவில் மூன்று முறைகள் நடத்திய பிறகு, சென்னையில் ஏழு முறைகள் நடத்தியது. நாடகத்தில் நடித்த அனைவரும்  தங்கள் சொந்தச் செலவில் அமெரிக்காவிலிருந்து வந்து நடித்துள்ளார்கள். இதே குழுவினர், இதற்கு முன்பு ‘சுருதி பேதம்’ என்ற நாடகத்தினையும் நிகழ்த்தினார்கள். இத்தகைய தன்னார்வலர்களின் முயற்சியினால்தான் தமிழ் நாடகக் கலை, இன்னும் பிழைத்திருக்கிறது. தக்க ஊக்கமும் உதவிகளும் அளித்தால், இவர்களால் தமிழ் நாடக உலகம் தழைக்கும்.

http://www.vallamai.com/?p=312

1 comment:

ராசராசசோழன் said...

நல்ல தகவல்...மிக அருமையாக தொகுத்துள்ளீர்கள்...