கொழும்பின் ஒரு பகுதியாக உள்ள தெகிவிளை என்ற பகுதியில் தமிழறிஞர் உமாமகேசுவரன் வசிக்கிறார், இவரை 22.10.2010 அன்று, மறவன்புலவு க.சச்சிதானந்தனுடன் சென்று சந்தித்தேன்.
இவர் தமிழ், ஆங்கிலம், வடமொழி, பண்ணிசை ஆகியவற்றில் தலைசிறந்த புலமை வாய்ந்தவர் எனச் சச்சி அறிமுகப்படுத்தினார். தருமபுரம் ஆதீனம் வெளியிட்ட பன்னிரு திருமுறைகள் தொகுதிகளின் ஒன்று முதல் 10 வரையான திருமுறைகளுக்கு மெய்ப்பு நோக்கியவர் இவரே என்பது கூடுதல் தகவல். அந்தத் திருமுறைகளைத் தேவாரம் தளத்தில் வாசிக்கலாம்.
இவரின் இல்லத்திலிருந்த சிறிது நேரத்தில், இந்து சாதனம் என்ற இதழில் மறுபதிப்பு கண்ட, இவரின் 'அதிதீரன்' என்ற கட்டுரையை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. அதில் திருக்குறளின் ஒரு பாடலுக்குப் பரிமேலழகர் அளித்த உதாரணத்தை இவர் மறுத்துள்ளார்.
பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.
ஊராண்மை மற்றதன் எஃகு.
திரு.பரிமேலழகர் உரை
தறுகண் பேராண்மை என்ப - பகைவர்மேற் கண்ணோடாது செய்யும் மறத்தை நூலோர் மிக்க ஆண்தன்மையென்று சொல்லுவர்; ஒன்று உற்றக்கால் ஊராண்மை அதன் எஃகு - அவர்க்கு ஒரு தாழ்வு வந்ததாயின், கண்ணோடி அது தீத்துக்கோடற் பொருட்டு ஊராண்மை செய்தலை நூலோர் அதற்குக் கூர்மை என்று சொல்லுவர். ('என்ப' என்பது பின்னும் இயைந்தது. ஊராண்மை - உபகாரியாம்தன்மை, அஃதாவது, இலங்கையர் வேந்தன் போரிடைத் தன் தானை முழுதும்படத் தமினாய் அகப்பட்டானது நிலைமை நோக்கி அயோத்தியர் இறை மேற்செல்லாது, 'இன்று போய் நாளை நின்தானையோடு வா,' என விட்டாற்போல்வது. இவை இரண்டு பாட்டும் தழிஞ்சி (பு.வெ.மா.வஞ்சி 3)
இராமன் இவ்வாறு கூறியதால் இராவணனுக்குப் பெரும் அவப்பெயரே ஏற்பட்டது. எதிராளிக்கு இவ்வாறு இழப்பை ஏற்படுத்தியது பேராண்மை ஆகாது. அப்படியாயின் பேராண்மைக்குச் சான்று எங்கே என்று கேட்பவர்களுக்காக இவர், ஏனாதிநாதர், அதிதீரன் ஆகியோரை எடுத்துக் காட்டுகிறார். இவர்கள், சைவத் திருமுறைகளில் வாழும் சமயப் பெரியார்கள் ஆவர்.
மேலும் அவருடன் பேசுகையில், பெரியார் முன்னெடுத்து, எம்.ஜி.ஆர். நிறைவேற்றிய எழுத்துச் சீர்திருத்தம் தேவையற்றது என்றார். அந்தக் கால எழுத்துகளைக் கொண்டே கணினியில் தட்டச்சு செய்திட முடியும் என்று கூறி, அவ்வாறு தட்டச்சு செய்த படி ஒன்றினையும் காட்டினார்.
அதில் முத்தொள்ளாயிரப் பாடல் ஒன்றும் அதற்கான விளக்கமும் இருந்தது.
வீறுசால் மன்னர் விரிதாம வெண்கொடையைப்
பாற எறிந்த பரிசயத்தால்-தேறாது
செங்கண்மாக் கோதை சினவெங் களியானை
திங்கள்மேல் நீட்டுந்தன் கை!
இந்தப் பாடல், தற்கால ஈழ மக்களின் மன நிலையை எதிரொலிப்பதாகச் சச்சிதானந்தன் கூறினார். அவர், கடந்த இரண்டு மாதங்களாக யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பலரையும் சந்தித்தவர்.
இப்பாடலை மேற்கோள் காட்டிய உமாமகேசுவரன், தற்காலத்தில் பயன்பாட்டில் உள்ள ‘பரிச்சயம்‘ என்ற சொல்லமைப்பு தவறு என்றும் ‘பரிசயம்‘ என்ற சொல்லே சரியென்றும் குறிப்பிட்டார்.
எங்கள் உரையாடலின் இடையே தம் மனைவியாரை உமாமகேசுவரன் அழைத்தார். அவரின் பெயர் சொல்லி அழைக்காமல், ‘கேட்டீரா‘ என அழைத்தது, மிக நளினமாகவும் உயர்வாகவும் இருந்தது. இதைச் சுட்டிக் காட்டிய சச்சி, தம் தாயை தம் தந்தையார் ‘மெய்யே‘ என்று அழைத்ததை நினைவுகூர்ந்தார்.
காலத்தினாலும் அன்பினாலும் அறிவினாலும் பழுத்த இந்தப் பெரியவரை வணங்கி விடை பெற்றோம்.
=================
நன்றி - வல்லமை
No comments:
Post a Comment