!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, July 13, 2004

எழுதுகோலின் கண்ணீர்



தமிழ்ச் சூழலில் எழுத்தாளர்களின் நிலைமை இன்று மிகவும் இரங்கத்தக்கதாய் உள்ளது. அவர்களின் பொருளீட்டும் திறன் இறங்கு முகமாய் உள்ளது. இதனால் எழுத்தை முழுநேரத் தொழிலாய் எடுத்துக்கொண்டவர்கள், சத்தில்லாத கசப்பு மருந்தை விழுங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

அரசு ஊழியர், ஆசிரியர், பெரிய-நடுத்தர நிறுவனங்களில் பணியாற்றுவோர், வங்கி ஊழியர்... போன்று வெகு சில துறையினர் மட்டும் ஓரளவு பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார்கள். இவர்கள் அல்லாமல் பலர் பகுதிநேர வேலைக்கும் நாள் கூலிக்கும் உதவியாளர் என்ற பெயரில் எடுபிடி வேலைக்கும் செல்ல, எழுத்தாளர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அப்படியே ஒரு வேலை கிடைத்தாலும் ரூ.1000 முதல் ரூ.3000 வரைதான் சராசரி ஊதியம் கிடைக்கிறது. இந்த ஊதியத்திற்கு அவர்கள் நாளுக்கு 12 மணிநேரமும் அதற்கு மேலும் பணியாற்றவேண்டியிருக்கிறது. கூடுதல் பணிச்சுமை குறித்து மூச்சு விட்டால்கூட உடனே வேலைக்கு ஆபத்தாகி விடுமோ என்று கவலைப்பட்டு "கடனே' என்று உழைக்கிறார்கள்.

இன்றிருக்கும் விலைவாசியில் இந்தத் தொகை போதுமா? அவர்களின் வாழ்க்கைத் தரம் குறித்து இந்தச் சமுதாயத்துக்கு ஏன் அக்கறை இல்லை? எழுத்தாளர்களின் உண்மையான திறமைக்கும் உழைப்புக்கும் இப்போது பெறுவதைப் போலப் பத்து மடங்கு கொடுக்கவேண்டும். இன்னும் எவ்வளவு காலத்திற்குப் பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது?

இவையெல்லாவற்றையும் விடக் கொடுமை, வேலையில் சேர்ந்த பிறகு ஏதும் எழுதக்கூடாது என்ற முன் நிபந்தனையில் வேலையில் சேர்ப்பது. எழுத்தாளர்கள், தம் சாரத்தையெல்லாம் மூட்டைகட்டி வைத்து விட்டு, தன்னைவிடத் தன் குடும்பத்திற்காகத் தன் எழுத்தையே தியாகம் செய்கிறார்.

அப்படியே அவரை எழுத அனுமதித்தாலும் சர்ச்சையில்லாத - சிக்கலில்லா தவற்றையே எழுதலாம் என்றும் நிர்வாகத்தினர் பலர் கட்டுப்பாடு விதிக்கிறார்கள்.

"இதற்கெல்லாம் நான் கட்டுப்பட முடியாது. நீயுமாச்சு உன் வேலையுமாச்சு' என எழுத்தாளர் வெளியே வந்தால், அவருடைய மனைவியும் பிள்ளைகளும் "எங்களுக்கு என்ன வழி?' எனக் கேட்கிறார்கள். கிடைத்த வேலையைச் செய்து பொருளீட்டும் அவலம் நிகழ்கிறது.

வானொலி, தொலைக்காட்சி, பருவ இதழ்கள், திரைத்துறை ஆகிய அனைத்து ஊடகங்களிலுமே வாய்ப்புக் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது. அப்படியே கிடைத்தாலும் தொடர்ந்து கிடைப்பதில்லை. கிடைக்கிற வாய்ப்பிலும் எழுத்தாளர் தாம் விரும்புவதை வெளிப்படுத்த இயலுவதில்லை.

இந்த வாய்ப்புகளுக்காகத் தவமிருக்கும் எழுத்தாளர்களின் தன்மானம் இழிவுபடுத்தப்படுகிறது. இந்த இழிவுகளைப் பொறுத்துக்கொள்ளாவிடில் வாய்ப்பை வேறொருவருக்கு வழங்கிவிடுவேன் என்ற மறைமுக மிரட்டல் வேறு இருக்கிறது. எழுதியதற்கு ஊதியம் கேட்டாலே "வாய்ப்பிழப்பு மிரட்டல்' வருகிற அளவுக்கு இது முற்றிப்போய்விட்டது.

பெரிய கதாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர் ஆகிவிடுவது என்ற கனவுகளோடு திரைத்துறையில் உழன்று வருவோர், வாய்ப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், தம்படைப்புகள் இன்னொருவர் பெயரில் வெளிவர உடன்படுகின்றனர். அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

இதைவிடப் பெருங்கொடுமை, வெளிப்படையாகவே, ஒருவர் எழுத இன்னொருவர் பெயரில் வருவதே. மோசடியும் வரலாற்று ஏய்ப்புமான இச்செயலுக்கு எழுத்தாளர்கள் உடந்தையாய் இருப்பது, பெரும் வருத்தத்திற்கும் கன்டனத்திற்கும் உரியது.

இத்தகைய சிந்தனைச் சுரண்டலுக்கும் உழைப்புக் கொள்ளைக்கும் யார் காரணம்?

""உன்னையறிந்தோ தமிழை ஓதினேன் என்னை
விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ? - உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு?''
என்று பாடும் துணிச்சலை, இன்றைய எழுத்தாளர்கள் இழந்துவிட்டதேன்?

மன்னர்களுக்கு அறிவுரை - ஆலோசனை கூறி, உத்தரவு பிறப்பித்த படைப்பாளர்கள், இன்று "எழுத்துத் தொழிலாளி'களாகச் சிறுமைப்பட்டது ஏன்?

"இணைந்தே இருப்பது வறுமையும் புலமையும்' என்ற வசனம், இவ்வளவு குரூரமாகவா நிரூபிக்கப்படவேண்டும்?

தவறு யார் பேரில் இருக்கிறது?

கல்வியறிவும் எழுத்தறிவும் மிகக் குறைவானவர்களிடம் இருந்த அக்காலத்தில் அத்தகையோர் மீது மதிப்பு இருந்தது. சிறந்த கல்விமான்களின் - புலவர்களின் சொல், உயிர்பெற்று அப்படியே நடக்கும் என்று நம்பினார்கள். இதனால்தான் "அறம்' பாடும் இலக்கியமே பிறந்தது.

ஊர் ஊராகச் செல்லும் புலவர், தம் ஊருக்கு வந்தால் அவர் எங்கள் வீட்டில்தான் தங்கவேண்டும் என மக்கள் போட்டியிட்டார்கள். அவரிடம் "நற்சொல்' பெறத் தம் பிள்ளைகளை அழைத்து வந்தார்கள். அன்று கலாரசிகர்கள் அதிகம். ஒரு பாடலுக்கு ஊரையே - நாட்டையே பரிசளிக்க அரசர்கள் முன்வந்தனர். அதில் தற்புகழ்ச்சி என்ற உள்நோக்கம் இருந்தாலும் பொதுவான காவியங்களுக்கும் அரசர்கள் ஆதரவளித்தார்கள். ‘என் ஆட்சிக் காலத்தில் இக்காவியம் படைக்கப்பட்டது’ எனத் தற்பெருமை கொள்ளும் உள்நோக்கம் இதிலும் உண்டு. எனினும் படைப்பாளிகளுக்குப் பாதுகாப்பு இருந்தது.

இன்று 75% பேர் எழுத்தறிவு பெற்றிருந் தாலும் இன்று கலா ரசிகர்களின் எண்ணிக்கை, மிகக் குறைவு. மனிதர்களின் மனங்கள் சுருங்கிவிட்டன. அள்ளிக் கொடுக்க முடிந்தவர்களும் கிள்ளியே கொடுக்கிறார்கள். "என் வேலையை ஒத்தி வைத்துவிட்டு, படைப்பைப் படித்ததே எழுத்தாளருக்குத் தந்த வெகுமதி' என வாசகர்கள் நினைக்கத் தொடங்கிவிட்டார்கள். புத்தகங்களையும் இதழ்களையும் பலர் இலவசமாகப் படிக்கவே விரும்புகின்றனர்.

நிலம் முழுதும் வறண்டுவிடுமானால் எழுத்தாளர் தம் விதையை எங்கே போய் விதைப்பார்? எழுதுகோலைப் பிடித்தவர் ஏழ்மையில் வாடினால் அது, இந்த மண்ணுக்கன்றோ மானக் கேடு?

மிஞ்சி மிஞ்சிப் போனால், எழுத்தாளருக்குப் பெரிய வருவாய், அவருக்குக் கிட்டும் புகழ்தான். படிப்போர் சொல்லும் "நல்லா இருக்கு' என்ற ஒரு பாராட்டுதான். இந்த வாய்ச் சொல்லை மட்டும் கொண்டு எழுத்தாளர்களும் அவர்களின் குடும்பத்தாரும் வாழ்ந்துவிட முடியுமா?

இதழ்கள் தரும் சன்மானம், கழுதை தேய்ந்து கட்டெறும்பாகவில்லை. தொடக்கத்திலிருந்தே கட்பெறும்பாகத்தான் இருக்கிறது. அதிக விற்பனையுள்ள ஒரு சில இதழ்களைத் தவிர பெரும்பாலான இதழ்களை நட்டமில்லாமல் நடத்துவதே பெரும் சிக்கலாய் இருப்பதால், இதழ் முதலாளிகளைக் குற்றம் சொல்ல முடியாது.

ஆனால், நல்ல வருமானம் ஈட்டும் தொலைக்காட்சி அலைவரிசைகளும் பண்பலை ஒலிபரப்புகளும் திரைத்துறையும் எழுத்தாளர்களை அதிகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஓரளவு நல்ல சன்மானமாவது அளிக்கவேண்டும்.

எழுத்தாளருக்கு உரிய குறைந்த பட்ச மதிப்பையும் ஊதியத்தையும் நாம் வரையறுத்து வழங்கியாகவேண்டும். அவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கித் தரவேண்டும்.

நூலகங்களில் எழுத்தாளர்களைப் பணியில் அமர்த்தலாம். பள்ளிக்கூடங்களில் படைப்பிலக்கியச் சிறப்பாசிரியர்களை நியமிக்கலாம். பிரச்சாரத்திற்கும் விளம்பரத்துக்கும் அரசு ஒதுக்கும் தொகையை எழுத்தாளர் வழியாகச் செலவிடலாம். அவர்கள் வழியாகப் பிரச்சாரம் செய்யலாம்.

எழுத்தாளருக்குக் குறைந்த வாடகையில் வீடு, போக்குவரத்து, மருத்துவ வசதி, அவர்களின் பிள்ளைகளுக்குக் கல்வி... என வாய்ப்புள்ள வசதிகளை ஏற்படுத்தி, மிகுதியாக்கி, எழுத்தாளரின் சமூக மதிப்பை உயர்த்தவேண்டும்.

அரசு மட்டுமின்றி நாட்டிலிருக்கும் அனைவரும் இதுகுறித்துச் சிந்திக்கவேண்டும்.

"கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு',
"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான் புகழ் கொண்ட தமிழ்நாடு'
என்ற பாரதியின் வாக்குகளை உச்சரித்துப் பெருமை கொள்கிறோம். அவற்றை நம் பிள்ளைகளின் பாடப் புத்தகங்களில் இடம்பெறச் செய்துள்ளோம்.

கவிஞர்களும் எழுத்தாளர்களும் நம் நாட்டின் செல்வங்கள் என்று நாம் பெருமை பேசுகிறோம். சங்க இலக்கியத்திற்காகவும் ஏனைய இலக்கியங்களுக்காகவும் இங்கும் வெளி மாநிலங்களிலும் - நாடுகளிலும் நாம் மார்தட்டிக்கொள்கிறோம்.

தற்கால இலக்கியவாதிகளின் நலன்களில் நாம் அக்கறைகொள்ள வேண்டாமா? புதிய பெருமைகளை நோக்கிப் பயணிக்க அவர்களை ஊக்குவிக்க வேண்டாமா?

எழுதுகோலின் கண்ணீரைத் துடைக்க, நம் அனைவரின் கரங்களும் நீளட்டும்.

No comments: