வீர தீரச் சிறுவர்கள் - 7
மாமனிதரே ரியாஸ்(9)!
அண்ணா கண்ணன்
தகவல் தொடர்பின் பிரமாண்டமான வளர்ச்சியால் உலகம் ஒரு சிற்றூராகச் சுருங்கிவிட்டது . உலகம் மட்டுமன்று ; மனித மனங்களும் மிகவும் சுருங்கிவிட்டன. அடுத்தவர்களுக்கு உதவுவது, அதுவும் பிரதிபலன் பார்க்காமல் உதவுவது, மிக அரிதாகிவிட்டது. நம்மிடம் இருக்கும் மிகச் சாதாரண பொருட்களைத் தருவதற்கே நாம் எவ்வளவு யோசிக்கிறோம்! நம்மிடம் உதவி நாடி வந்தவரிடம், விளக்கு வைத்த பிறகு கொடுக்கக்கூடாது, செவ்வாய் - வெள்ளிக் கிழமைகளில் தரக்கூடாது , ராகு காலம் - எமகண்டத்தில் முடியாது ......எனப் பெரியவர்கள் சொல்லியிருப்பதாக மரபு மூட்டையை அவிழ்த்துக் கடை விரிக்கிறோம். நமது சாலையோரம் நீளும் எண்ணற்ற கரங்களை நெற்றிக்கண் திறந்து சிடுசிடுப்போடு புறந்தள்ளுகிறோம். தெரு முனையில் வரும் ' அம்மா தாயே ' என்ற அழைப்பு, நம் வீட்டை எட்டும் முன் நம் கதவுகளையும் ஜன்னல்களையும் அவசரமாக மூடுகிறோம். பாதையெங்கிலும் அடிக்கடி நடக்கும் விபத்துகளை சுவாரஸ்யமாக வேடிக்கை பார்க்கலாமே தவிர, அதில் மூக்கை நுழைத்து , ஆபத்தை விலைக்கு வாங்கலாமோ!
நமது சமூகத்தின் சிந்தனை இப்படியாய் இருக்க, வலியப் போய் உதவும் மனிதர்களை, அழிந்துவரும் உயிரினங்களுள் சேர்க்கவேண்டிய கட்டாயம் இன்று ஏற்பட்டுள்ளது. இவர்களுள் தமக்குப் பொருளிழப்பு ஏற்பட்டாலும் உதவுவோர், இன்னும் ஒரு படி மேல். இவர்களுள்ளும் தம் உயிருக்கே ஆபத்து என்ற நிலையில் உதவுவோர், நமது வணக்கத்திற்கு உரியவர்கள். அவர்களால்தான் இன்னும் இந்தப் பூமியில் மழை பெய்கிறது. அந்த மிக அரிய மனிதர்களுள் ஒருவர், ரியாஸ் அகமது.
ஒன்பது வயதே நிறைந்த ரியாசை நாம் ' அவர் ' என அழைப்பதே பொருந்தும். ஏன்? அந்த வீர நிகழ்வைக் கொஞ்சம் சிந்திப்போம்.
2003 ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் நாள். உத்திரபிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவைச் சேர்ந்த ரிக்ஷா தொழிலாளி ஒருவரின் மகன் ரியாஸ், தம் நண்பர்களுடன் ரெயில் தண்டவாளங்களின் மீது நடந்துவந்துகொண்டிருந்தார். நிம்பூ பூங்காவிலிருந்து அவர்கள் திரும்பிக்கொண்டிருந்தார்கள். வீடு திரும்புவதற்கு அதுதான் அவர்களின் வழக்கமான சுருக்கு வழி. தாலிபாக் பாலத்திற்கு அருகில் வந்தபோது அவர்கள் எதிரே இருவர் வருவதைப் பார்த்தனர். ஒருவர் , நன்கு வளர்ந்த மனிதர்; மற்றொருத்தி, ஒரு குட்டிப் பெண். அவர்களும் வேறொரு தண்டவாளத்தின் மீது நடந்து வந்துகொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பின்னே கொச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் , விரைந்து வந்தது. அதன் பிறகு நடந்ததை ரியாசே விளக்குகிறார்.
" அவர்கள் அபாயத்தில் இருப்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். ரெயில் வருவதைப் பார்த்ததும் நாங்கள் அவர்களை எச்சரிக்கும் விதமாகக் கூச்சல் போட்டோம். ஆனால், அவர்கள் எங்களைக் கவனிக்கவில்லை. அந்தப் பெண் , என்னைவிடச் சிறியவளாய் இருந்தாள். அவள் இறந்துவிடக் கூடாது என நினைத்தேன். நான், அவர்களை நோக்கி வெகு வேகமாக ஓடினேன். அப்போது ரெயில், அவர்களுக்கு மிக அருகில் வந்துவிட்டது. நான் அவர்களை நெருங்கி, அந்தச் சிறுமியை என் பக்கமாக இழுத்தேன். ஆனால், என் கால்கள், தண்டவாளங்களுக்கிடையே சிக்கிக்கொண்டன. ரெயில், எங்கள் மீது பயங்கரமாக மோதியது. நாங்கள் கீழே விழுந்தோம். ரெயில், எங்கள் மீது ஏறி, அரைத்துக்கொண்டு ஓடியது. நாங்கள் மூவரும் தண்டவாளத்தில் வெவ்வேறு இடங்களில் வீசி எறியப்பட்டோம். என்னால் அந்தச் சிறுமியைப் பார்க்க முடியவில்லை. அந்த மனிதர், சற்று தொலைவில் விழுந்து கிடந்தார். அவர் கால்களிலிருந்து ரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது. என் உடலிலிருந்தும் மிக அதிகமாக ரத்தம் வெளியேறிக்கொண்டிருந்தது. சிறிது தொலைவு சென்ற பிறகு, ரெயில் நின்றது. மிகப் பெரிய கூட்டம், எங்களைச் சூழ்ந்து நின்றது. ஆனால், யாரும் உதவ முன்வரவில்லை. அவர்கள் சும்மா பார்த்துக்கொண்டிருந்தார்கள். பிறகு ஒருவர் என்னைத் தூக்கினார். ஒரு போலிஸ்காரரும் உதவிக்கு வந்தார். நாங்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டோம். "
அங்கு ரியாசின் இரண்டு கைகளும் ஒரு காலும் நீக்கப்பட்டன. ரெயிலில் அடிபட்ட அந்தப் பெரியவர், சபீர் அலி, தன் இரண்டு கால்களையும் இழந்தார். அவருடைய மகள் , ஷாசியா, ஆறு வயது சித்திரச் சிறுமி, மரணமடைந்தாள். இன்று ரியாஸ் , எல்லோரும் பரிதாபப்படும் ஒரு நிலையில் இருக்கிறார். தம் ஒவ்வோர் அசைவிற்கும் அடுத்தவரின் உதவியை நாடும் துயர் மிகுந்த கட்டத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். ஆனாலும் அவர் முகத்தில் ஒரு புன்னகை மிளிர்கிறது. ரியாஸ், சிறப்பாக உருது பேசக்கூடியவர். எதைப் பற்றியும் உற்சாகமாக உரையாட அவர் தயாராயிருக்கிறார், அவருடைய உடல் ஊனத்தைத் தவிர. ரியாசிற்குச் சகோதர சகோதரிகள், எட்டுப் பேர் இருக்கிறார்கள். ரியாஸ், பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டவர். ஏனெனில், உருது பேசத் தெரிந்தாலும் அவருக்கு எழுதத் தெரியாது. தனிப்பட்ட ஆசிரியர்களைக் கொண்டு கல்வி கற்று, எதிர்காலத்தில் ஒரு மருத்துவர் ஆவேன் என்கிறார், ரியாஸ். தன் நிலைக்காக, ஒருபோதும் வருந்தவில்லை என்கிற ரியாசுக்கு உத்தரபிரதேச அரசு, விருது வழங்கிப் பாராட்டியது. மத்திய அரசு, ரியாசுக்கு சஞ்சய் சோப்ரா விருது வழங்கிக் கௌரவித்தது.
ஆனால், ரியாஸ் என்ன சொல்கிறார் தெரியுமா?
" அந்தச் சிறுமியை என்னால் காப்பாற்ற முடியவில்லை. அவள் மட்டும் இப்பொழுது உயிருடன் இருந்திருந்தால் நான் மிக மிக மகிழ்ந்திருப்பேன். "
ஆஹா ரியாஸ், மாமனிதரே, உமக்கு எமது தலைவணக்கம். உலக மானுடர்களே, இதோ இந்த ஒன்பது வயது வீரப் பிறவியைத் திரும்பிப் பாருங்கள். தம் இரு கைகளையும் ஒரு காலையும் இழந்தும் தன்னம்பிக்கை இழக்காத இந்த அக்கினிக் குஞ்சுக்கு உம் வீர வணக்கத்தைச் செலுத்துங்கள்.
இந்தத் தருணத்தில் நாம் சிலவற்றைச் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
சுருக்கு வழி, சோம்பல், அலட்சியம், அவசரம்....எனப் பற்பல காரணங்களைக் கூறி, நாம் தண்டவாளங்களில் நடப்பது, மரணத்திற்கு வரவேற்புப் பத்திரம் வாசிப்பது போன்றது. முழு மரணம் நிகழாமல், உடல் ஊனம் மட்டும் நிகழ்ந்துவிட்டால் அது இன்னும் மோசமானது. தண்டவாளத்தில் நடப்பது மட்டுமில்லை; மூடப்பட்ட ரெயில்வே கேட்டுகளின் இடுக்குகள் வழியாக நுழைந்து செல்வது, நின்றுகொண்டிருக்கும் ரெயில்களின் சக்கரங்களுக்கிடையே புகுந்து செல்வது, ஓடும் ரெயிலில் ஏறுவது, இறங்குவது, படிக்கட்டில் தொங்கியபடி பயணிப்பது, ரெயில் கூரைகளில் பயணிப்பது, ஓடும் ரெயிலிலிருந்து கைகளையும் தலையையும் வெளியே நீட்டுவது....என எண்ணற்ற முறைகேடுகள் நாளும் நடைபெற்று வருகின்றன. இவை அனைத்தையும் நிறுத்தி, முறையான வழிகளைக் கடைபிடிக்க வேண்டியது, இன்றியமையாதது.
ரியாஸ் கூட, ரெயில் பாதை வழியாக வந்திருக்கக் கூடாது. ஆனால், அவர் வந்திருக்காவிட்டால் சபீர் அலியைக்கூட காப்பாற்றியிருக்க முடியாது. இந்த நிகழ்வு, ஓர் எதிர்மறை எடுத்துக்காட்டாக நம் எண்ணங்களில் நிற்கவேண்டும். ஒரு நொடியில் உயிரையும் உறுப்புகளையும் சிதைத்த அந்த நிகழ்வு, இனி நிகழாதிருக்க உறுதி பூணுவோம். ரெயில், ஒரு யோகியைப் போல, தனக்கான நேர்ப்பாதையில் தீர்க்கமாகப் பயணிக்கிறது. அதன் பாதையில் நாம் குறுக்கிடலாமா? அதன் தவத்தைக் கலைக்கலாமா? மனிதன் தடம் மாறலாமா? தண்டவாளத்திலிருந்து சற்றே அன்று; நிறையவே விலகியிரும் பிள்ளாய்!
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Monday, August 09, 2004
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 6:57 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment