!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, August 09, 2004

வீர தீரச் சிறுவர்கள் - 8

மூழ்கியவனைக் காப்பாற்றிய சத்தியம்

அண்ணாகண்ணன்

பூமி முக்கால் பாகம் தண்ணீரால் சூழப்பட்டிருந்தாலும் மனிதனுக்குத் தண்ணீரைக் கண்டால் ஓர் அச்சம் இருக்கத்தான் செய்கிறது. தண்ணீரில் கண்டம் எனச் சோதிடர் சிலர் அச்சுறுத்தி விடுவதால் பலர், கிணறு, குளம், குட்டை, ஏரி, கடல் என எந்தத் தண்ணீரிலும் கால் வைப்பதில்லை. கொஞ்சம் தொட்டு, தலையில் தெளித்துக்கொள்வதோடு சரி.

நான் திருவாரூரில் பள்ளிக்கூட மாணவனாக இருந்தபோது எங்கள் பள்ளிக்கு எதிரே கமலாலயம் என்ற பெரிய குளம் இருக்கும். ஆண்டுதோறும் தெப்பத் திருவிழா, வெகு கோலாகலமாக நடக்கும். குளத்தின் நடுவில் ஒரு கோயிலும் உண்டு. கரையிலிருந்து அந்தக் கோயிலுக்கு ஒரு கம்பி கட்டி, அதைப் பிடித்தபடி போகும் பரிசல் பயணமும் உண்டு. நான் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவனாகையால், முடிந்தபோது வந்து என் அம்மா, என்னைப் பார்த்துவிட்டுப் போவார். ஒருமுறை அவர் வந்தபோது, ஒரு செய்தியைக் கேள்விப்பட்டு அதிர்ந்தார். அவர் வந்த நாளுக்கு முதல் நாள்தான் அந்தத் தெப்பக் குளத்தில் குளித்த இரண்டு மாணவர்கள், ஆழத்திற்குப் போய் மூச்சுத் திணறி இறந்துபோயிருந்தார்கள். உடனே அவர் என்னிடம் ஓர் உறுதிமொழி கேட்டார். இனிமேல் விடுதியின் குளியலறையில்தான் குளிக்க வேண்டுமேயொழிய கமலாலயத்திற்குப் போய்க் குளிக்கக் கூடாது என்றார். ஏனென்றால் எனக்கு நீச்சல் தெரியாது. நானும் ஒப்புக்கொண்டேன். நீச்சல், ஒவ்வொருவரும் கற்கவேண்டிய இன்றியமையாத கலை என்பதை அன்றே உணர்ந்தேன்.

ஒருமுறை , என் 15ஆம் வயதில், விடுமுறையின் போது என் சித்தப்பாவின் வீட்டிற்குச் சென்றேன். அது, ஆடுதுறைக்கு அருகில் திருமங்கலக்குடி என்ற சிற்றூர். அங்கிருந்து 2 கி. மீ. தொலைவில் காவிரியின் கிளை ஆறு ஓடிக்கொண்டிருந்தது. சித்தப்பா வீட்டில் எருமை மாடுகள் வளர்த்தார். அவற்றைப் பெரும்பாலும் வீட்டிலேயே குளிப்பாட்டி விடுவோம். சில நேரங்களில் ஆற்றுக்கு ஓட்டிச் சென்று குளிப்பாட்டுவதும் உண்டு. அப்படி ஒரு நாள் ஆற்றுக்குக் குளிக்கக் கிளம்பினோம். மாடுகளை வேறொரு பணியாளர் ஓட்டிக்கொண்டு வர, நானும் தம்பி பாலாஜி(சித்தி பையன்)யும் காவிரிக்குப் போனோம். அவன் என்னை விட இரண்டு வயது சிறியவன். கொண்டுபோன மாற்றுத் துணி, சோப்பு டப்பா, துண்டு எல்லாவற்றையும் படித்துறையில் வைத்தோம். எங்கள் ஆடைகளைக் களைந்து அதனருகில் போட்டுவிட்டு ஜட்டியோடு தண்ணீரில் இறங்கினோம்.

அப்போது(ம்) ஆற்றில் தண்ணீர் ஓட்டமில்லை. நான் இறங்கி, பல அடிகள் நடந்து பார்த்தேன். கழுத்து மட்டும்தான் தண்ணீர் இருந்தது. எனவே அச்சமின்றி , அங்குமிங்கும் நகர்ந்தேன். நீச்சல் அடிக்கிறேன் பேர்வழி என்று கை, கால்களை அடித்து , உதைத்து, உந்தித் தள்ளினாலும் உடம்பு என்னவோ தண்ணீருக்குள் இறங்கிக்கொண்டே இருக்கும். (என் அப்பா, தண்ணீரில் ஒரு கட்டையைப் போல் மிதப்பதைப் பார்த்திருக்கிறேன்.) இது சரிவராது என்று கரைக்கருகிலேயே தொளையம் அடித்துக்கொண்டிருந்தேன். சோப்பு போட்டுக்கொண்டு மீண்டும் தண்ணீரில் இறங்கினோம். கரையிலிருந்து அப்படியே பாய்வதெல்லாம் முடியாது. ஏனெனில் படித்துறை, கன்னா பின்னாவென்று சிதிலமடைந்து செங்கல்லும் கருங்கல்லும் பதம் பார்க்கக் காத்திருக்கும்.

தம்பி, குளித்து முடித்து விட்டு கரையேறித் துவட்டிக்கொண்டிருந்தான். நான் கரையோரம் மெல்ல நகர்ந்தேன். சமதளமாய்த்தான் இருந்தது. திடீரென ஒரு பெரிய பள்ளம். உள்ளே போய்விட்டேன். தரையை உந்தித் தள்ளி , மேலே வந்து கையைப் பெரிதாக ஆட்டிவிட்டு மீண்டும் உள்ளே போனேன். நான் இரண்டாம் முறை மேலே வந்தபோது தம்பி என்னைப் பார்த்துவிட்டான். சட்டென்று தண்ணீரில் இறங்கி, மேலே வந்த கையைப் பிடித்துத் தன் பக்கம் இழுத்தான். நல்ல வேளையாக நான் மேட்டுக்கு வந்துவிட்டேன். அதற்குள் கொஞ்சம் தண்ணீரைக் குடித்திருந்தேன். கண்கள் சிவந்து போயின. ஆனால், ஒரே நிமிடத்தில் பாலாஜி பார்த்துவிட்டதால் பெரிய ஆபத்து ஒன்றும் இல்லை. இதை வீட்டில் சொன்னால் அடுத்த முறை காவிரிக்கு அனுப்பமாட்டார்கள் என்பதால் வீட்டில் மறைத்துவிட்டோம். ஆனால் அந்தப் பாலாஜியின் உதவியை மறக்க முடியாது. தண்ணீர் வறண்டபோது ஆற்றிலும் மற்ற காலங்களில் கரையிலும் மணற்கொள்ளை அடிப்போர், அதனால் ஏற்படும் பள்ளங்களில் தண்ணீர் ஓடும் காலத்தில் அப்பாவிகள் பலர் சிக்கிக்கொள்வதை உணர்ந்தாவது திருந்தவேண்டும்.

இது , பழைய கதை. இப்போது 2003ஆம் ஆண்டு சூன் 21 அன்று நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பற்றித் தெரியுமா? ஏழு வயதுச் சிறுவன், ஐந்து வயதுச் சிறுவனைக் காப்பாற்றியது எப்படி?

மும்பை அய்ரோலி பகுதியில் இராதிகாபாய் மெகே சூனியர் வித்தியாலயாவில் இரண்டாம் வகுப்புப் படிப்பவன், சத்தியம் மகேந்திர காண்டேகர். சத்தியத்தின் அப்பா மகேந்திரா, அய்ரோலியில் உள்ள ஸ்ரீராம் பாலிடெக்னிக்கில் முதுநிலை விரிவுரையாளர். அம்மா, டாக்டர் சுஜாதா காண்டேகர். அப்பகுதியில் உள்ள இராஜேஷ் ஹெல்த் கிளப்பில் ஒரு நீச்சல் குளமும் இருந்தது. சத்தியம், தம் தந்தையுடன் தினமும் அங்கு சென்று நீச்சல் பழகுவது வழக்கம். தன் பயிற்சி முடிந்த பிறகு சத்தியம், கரையோரம் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தான். அப்போது ஒரு சிறுவன் , மூழ்குவதைச் சத்தியம் கண்டான். உடனே நீச்சல் குளத்தினுள் தாவினான். அதன் பிறகு என்ன நடந்தது? சத்தியமே சொல்கிறான்.

" நான் அந்தச் சிறுவனை நெருங்கிய போது, அந்தச் சிறுவன் விறைப்பாகி விட்டிருந்தான். தனியொருவனாக அவனைக் கரைக்கு இழுத்து வருவது கடினம் என்பதை உணர்ந்தேன். எனவே உதவிக்காகக் கூக்குரலிட்டேன். அப்போது என் அப்பா, எங்களைப் பார்த்துவிட்டார். அவர் உடனே எங்களைக் கரையை நோக்கி இழுத்தார். நாங்கள் ஒரு வழியாக மேலேறினோம். "

ஆனால், அந்த 5 வயதுச் சிறுவன் விஜய் சுவாமி, ஆபத்தான நிலையில் இருந்தான். அதிகத் தண்ணீரைக் குடித்திருந்தான். மகேந்திரா, அச்சிறுவனை அங்கிருந்த ஒரு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார். ஆனால் , அவர்கள் ' இது , காவல் துறையின் வழக்கு. நாங்கள் பார்க்க முடியாது' என்றனர். அடுத்து அவர், சிறுவனை, தானேயில் உள்ள கல்வா நகராட்சி மருத்துவமனையில் சேர்த்தார். நல்லவேளையாகச் சிறுவன் பிழைத்துவிட்டான்.

நீச்சல் குளத்திற்குப் பொறுப்பான ஆசிரியர் ஒருவர் உண்டு. விஜய் தன் பயிற்சி நேரம் முடிந்த பிறகு குளத்திற்குள் இறங்கியதால் உடனே யாரும் கவனிக்கவில்லை என நீச்சல் குளத்தினர் கூறியுள்ளனர். பிறகு அவர்களே சத்தியத்தைப் பாராட்டவும் செய்தனர். நவு மும்பை மேயர், மாநில அமைச்சர்கள், காவல் துறை ஆணையாளர் ஆகியோர் , சத்தியத்தைப் பாராட்டி விருது வழங்கியுள்ளனர். கடந்த ஆகஸ்டு 15 ஆம் தேதி, புது தில்லியில் சத்தியத்திற்குத் தேசிய தீரச் செயல் விருது வழங்கிக் கெளவித்தனர்.

சத்தியத்தைப் போன்று இளம் வயதிலேயே நீச்சல் பயில வேண்டும். சமயோசிதமும் விவேகமும் சிக்கலை உடனே எதிர்கொள்ளும் ஆற்றலும் வளர வேண்டும் . நீச்சல் பயிலுவது, வாழ்வில் எதிர் நீச்சல் போடப் பெரிதும் உதவும்.




No comments: