வீர தீரச் சிறுவர்கள் : 10
தீயினுள் நுழைந்த தீரன் ஹன்பொக்லாங்
ஐம்பூதங்களில் ஒன்றான நெருப்பு, ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் அனுபவத்தைத் தரும். ஏதோ மினுமினுவென்று கண்ணைக் கவருகிறதே, அதன் பெயர் நெருப்பு என்றும் அது சுடும் என்பதும் குழந்தைகளுக்குத் தெரியாது; தொட்டுப் பார்த்தால் என்ன என்று தான் அவர்களுக்குத் தோன்றும். யாரும் இல்லாத போது தொட்டும் பார்த்துவிட்டால், அதன் பிறகு சூடு கண்ட பூனை கதைதான். நெருப்பைக் கண்டாலே ஓடிவிடுவார்கள். மனிதனுக்கு நெருப்புடன் மிகுந்த நெருக்கமான தொடர்பு உண்டு. ஆதிகாலத்தில் சிக்கிமுக்கிக் கற்களை உரசி, முதன்முதலாக நெருப்பை உண்டாக்கினான்.
வரலாற்று நோக்கில் அது, ஒரு முக்கிய கண்டுபிடிப்பு. நெருப்பு, குளிரிலிருந்து அவனைக் காத்ததோடு, கொடிய விலங்குகளிலிருந்து தப்பிக்க, ஒரு நல்ல ஆயுதமாகவும் பயன்பட்டது. நெருப்பு, கையடக்கமாக - நம் கட்டுப்பாட்டில் இருக்கும்வரை அது நமது ஆயுதம். உணவு சமைத்தல் முதல் இரும்பை வளைத்தல் வரை ஏராளமானவற்றுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். அதுவே, நம் கட்டுப்பாட்டை மீறிவிட்டால் பேராபத்து. காட்டுத் தீ எனக் கேள்விப்பட்டிருக்கிறோம் இல்லையா? சிறிய பொறியாகக் கிளம்பும் நெருப்பு, பல்லாயிரம் ஏக்கர் பரப்புள்ள ஒரு பெரிய காட்டையே அழித்துவிடும். அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் -அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;வெந்து தணிந்தது காடு; - தழல் வீரத்தில் குஞ்சென்று மூப்பென்றும் உண்டா? தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்என்ற பாரதியின் பாடலும் இதைத் தானே சொல்கிறது.
காடு மட்டுமில்லை. நெருப்பினால் நாடு, நகர், பட்டணம், பட்டிக்காடு, வீடு விளக்குமாறு என வரலாறு நெடுகிலும் ஏராளமாக எரிந்துபோனதை வரலாறு காட்டுகிறது. உலகில் நடந்த எல்லாத் தீ நிகழ்வுகளையும் இரு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று, ஒரு விபத்தாக நடந்த தீ நிகழ்வு. மற்றொன்று, மனிதன் வேண்டுமென்று திட்டமிட்டு நிகழ்த்திய தீச்செயல்கள். முன்னதைக் காட்டிலும் பின்னதே அதிக எண்ணிக்கையில் நடந்து அதிக உயிர்களை அழித்திருக்கும் என்பது என் கருத்து. அனுமன், இலங்கையை எரித்தது, கண்ணகி மதுரையை எரித்தது, ரோம் எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தது, எனத் தொடங்கி.....ஏராளமான எடுத்துக்காட்டுகளைக் கொடுக்கலாம். போரில் வென்ற நாடு, தோற்ற நாட்டைக் கொள்ளையடித்ததோடு தீக்கிரையாக்கவும் செய்தது. இன்றும் வரதட்சணைக் கொடுமையால் எவ்வளவோ பெண்கள் தீக்கிரையாவதோடு, தொண்டர்களும் தீக்குளிக்கிறார்கள்.
திட்டமிட்டு வேண்டுமென்றே நடத்தும் நிகழ்வுகளை, அவரவர் தனித்தனியே திருந்தினால்தான் தடுக்க முடியும். ஆனால், எதிர்பாராமல் நடக்கும் தீவிபத்துகளை நம்மால் தவிர்க்க முடியும். அப்படியே ஒன்று நடந்தாலும் நாம் எச்சரிக்கையோடு இருந்தால் அவற்றை எளிதில் அடக்கலாம். குறைந்தபட்சம் உயிரிழப்புகளையாவது தடுக்கலாம். அண்மையில் கும்பகோணத்தில் நடந்த கோர விபத்தில் 93 குழந்தைகள் பலியானதை நாமறிவோம். இவ்வளவு பெரிய உயிரிழப்பு ஏற்படுவதற்கு நம்மிடம் விழிப்புணர்ச்சியும் முறையான கல்வியும் இன்மையே காரணங்கள். இவற்றைப் பெறுவதற்கு முதலில் தீவிபத்து நடக்காமல் இருக்க என்ன செய்வது? நடக்கும்போது என்ன செய்வது ? நடந்த பிறகு என்ன செய்வது? என்பவற்றை நாம் கற்றுணரவேண்டும்.
தீவளையத்துக்குள் புகுந்து வெளியே வருவதை, சர்க்கஸ்காரர்களிடம் பார்க்கலாம். திரைப்படத் துறையில் சண்டைக் காட்சி நிபுணர்கள் சிலர் அறிந்து வைத்திருப்பார்கள். இவர்கள் எல்லோரும் நன்கு பயிற்சி பெற்றவர்கள். ஆனால், பயிற்சியே பெறாமல் , நம் அன்றாட வாழ்வில் சிலர் இத்தகைய செயல்களைச் செய்து நம்மை வியப்பில் ஆழ்த்திவிடுவார்கள். அப்படித்தான் மேகாலயாவில் ஒருவர், நெருப்பு நாக்குகளுக்குள் புகுந்து வெளிவந்தார். அவர் வயது, 13.இப்போது உங்கள் புருவங்கள் மேலேறுவது தெரிகிறது. ஆம், 13 வயதே ஆன ஹன்பொக்லாங் நங்சீஜ் என்ற மாணவன்தான், இந்தப் பெரிய செயலைச் செய்தான்.
மேகாலயாவில் , மேற்குக் காசி மலைகள் மாவட்டத்தில் பொன்குங் என்ற கிராமம், இவனுடையது. இந்தக் கிராமத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்புப் படிக்கிறான், ஹன்பொக்லாங். ஏழு வயதாய் இருக்கும்போது தன் தாய்-தந்தை இருவரையும் இழந்தான், ஹன்பொக்லாங். அதன் பிறகு, தன் தாய்வழிப் பாட்டியுடனும் அத்தையுடனும் தங்கிப் படிக்கிறான்.
தீயில் நுழைந்து ஒரு குழந்தையின் உயிரைக் காத்த நாள்: ஜனவரி 5, 2000. அன்று என்ன நடந்தது? அதை அவன் வாய்வழியாகவே கேட்போமா?
"வீட்டு வாசலில் நான் எப்போதும் போல் விளையாடிக்கொண்டிருந்தேன். என் தாய்மாமா வீடு, பக்கத்தில் இருந்தது. திடீரென்று ஏதோ கருகும் நெடி அடித்தது. திரும்பிப் பார்த்தால் என் மாமா வீடு, தீப்பிடித்துவிட்டது. அப்போது மதிய நேரம். என் மாமா, வெளியே போயிருந்தார். அத்தையும் அடுத்திருந்த வயலில் வேலை செய்துகொண்டிருந்தார்கள். அவர்களுடைய ஒன்பது மாதக் குழந்தை, வீட்டினுள்ளே தூங்கிக்கொண்டிருந்தது. வீடு எரிவதைப் பார்த்த அத்தை, அலறியபடி ஓடிவந்தாள். அவள் கூச்சலைக் கேட்டு, நிறைய பேர் கூடிவிட்டார்கள். காப்பாத்துங்க என் பிள்ளையைக் காப்பாத்துங்க என என் அத்தை கத்திக் கதறினாள். ஆனால், தீ இப்போது, கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. தீ நாக்குகள், மேலும் மேலும் உயரத்திலும் அகலத்திலும் வளர்ந்தன. யாரும் நெருங்கத் துணியவில்லை.
அந்தக் குட்டிப் பையனை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் இப்போது போய் அந்தக் குழந்தையைக் காப்பாற்றாவிட்டால் அவன் எரிந்துவிடுவான் எனத் தோன்றியது. நான் தீ நாக்குகளுக்கு மத்தியில் அந்த வீட்டிற்குள் ஓடினேன். அங்கு எனக்குச் செல்லமான என் மாமா மகன், பெரிதாக அழுதுகொண்டிருந்தான். அவனை என் கைகளில் தூக்கிக்கொண்டு, ஒரு துண்டை எடுத்து அவனைப் போர்த்தினேன். தீநாக்கு ஒன்று என் தலைமுடியைக் கருக்கியது. அதன் சூட்டினை என் முகத்தில் உணர முடிந்தது. ஆனால், நான் அக்குழந்தையுடன் வெகு வேகமாக வெளியே பத்திரமாக ஓடிவந்தேன்.
என் அத்தை, என்னைக் கட்டிப் பிடித்து முத்தமாரி பொழிந்தாள். செய்தித்தாள்களில் என்னைப் பற்றி எழுதினார்கள். எல்லோரும் என்னைப் பாராட்டினார்கள். நவம்பர் 14 அன்று, எனக்கு ஒரு பெரிய விருது அளித்தார்கள். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" ஹன்பொக்லாங் நங்சீஜூக்கு பாபு கயதானி விருது அளிக்கப்பட்டுள்ளது. தீரம் மிகுந்த சிறுவர்களுக்காக நாட்டில் வழங்கப்படும் மூன்றாவது மிகப் பெரிய விருது, இது. யானை மேல் அமர்ந்து சென்று, பிரதமரிடம் இவ்விருதைப் பெற்றுள்ளான், ஹன்பொக்லாங் நங்சீஜ்.
நீ எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறாய் என்று கேட்டதற்கு, ஒரு பொறியாளர் ஆவதே சிறந்தது எனப் பதில் அளித்துள்ளான், இவன்.
தீரமும் துணிச்சலும் சமயோசிதமும் விவேகமும் இருந்தால் எதையும் சாதிக்கலாம், எந்தச் சவாலையும் எதிர்கொள்ளலாம் என்பதை, ஹன்பொக்லாங் நங்சீஜிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்.
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Saturday, December 11, 2004
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 2:53 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment