பொட்டலம் கட்டலாம்!
(சிறுவர் பாடல்)
மூக்கை நறுக்கி மிளகிடுவேன்!
முதுகுத் தோலை உரித்திடுவேன்!
காக்காய்க்கு எறிவேன் உன்காதை!
கரண்டிக் காம்பு பழுத்துவிடும்!
வீக்கம் பிறக்கும்! விரலொடியும்!
விசிறிக் காம்பு முறிந்துவிடும்!
ஜாக்கிரதை எனும் பெரியவரே!
அறிந்தேன் தங்கள் அன்புடைமை!
முட்டிக்கு முட்டி தட்டிடுவேன்!
மூங்கில் பிரம்பால் பின்னிடுவேன்!
குட்டினால் பள்ளம் தோன்றிவிடும்!
குருதிஎன் கிள்ளலில் ஊற்றுவிடும்!
கட்டி வைப்பேன் தலைகீழாய்! - எனக்
கருணை பொழியும் பெரியவரே!
கட்டி மேய்ப்பது உம்கடமை!
கண்ணீர் எனது பிறப்புரிமை!
அடித்து வளர்ப்பது முறையென்றும்
அரும்பயன் தருவது 'அறை'யென்றும்
ஒடித்துத் தந்தீர் ஒருகிளையை
ஓங்கி வளருது போதிமரம்!
படிக்கும் இந்தப் பாடத்தில்
புத்தர் ஏசு காந்தியெனக்
கிடக்குது வெற்றுக் காகிதமே
கிழித்துக் கட்டலாம் பொட்டலமே!
அண்ணாகண்ணன்
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Monday, February 28, 2005
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 7:17 PM 0 comments
Monday, February 14, 2005
காதல் என்பது 'அனுமதியின்றி உள்ளே வராதீர்' என்ற பலகையைப் பொருட்படுத்தாது. காதல் என்பது கடிதத்தை அனுப்புவதற்கு முன்பாகவே பதிலை எதிர்பார்க்கும். காதல் என்பது யாரோ ஒருவர் உள்ளே வரப்போகிறார் என்று காத்திருப்பது.
'எப்போது மலரைப் பார்த்தாலும் நான் உன்னை நினைந்துக் கொள்வேன்.'
'முத்தத்தை எப்படித் திருடுவது?'
இந்நேரம் உங்களுக்குப் புரிந்திருக்குமே. இவையெல்லாம் பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள வாழ்த்து அட்டை வாக்கியங்கள். தீப்பெட்டி அளவு முதல் சுவரொட்டி அளவு வரை விதவிதமான வடிவங்களில், வண்ணங்களில், சித்திரங்களில், புகைப்படங்களில் வாழ்த்து அட்டைகள் குவிந்துள்ளன. பிரித்தால் 'ஐ லவ் யூ' எனப் பாடும் வாழ்த்து அட்டைகளும் உண்டு.
காதலர்களுக்காக உள்ளூர் நிறுவனங்கள் முதல் பன்னாட்டு நிறுவனங்கள் வரை விழுந்து விழுந்து சிந்திக்கின்றன. 'நேராகப் போ...' 'கரடுமுரடான சாலை அருகிலுள்ளது' 'சாலை திரும்புகிறது' 'இவ்வழியில் போகலாம்' 'இவ்வழியில் போகக்கூடாது' 'இங்கே வாகனங்கள் நிறுத்தக்கூடாது' என்பன போல் ஏராளமான போக்குவரத்துக் குறியீடுகளை நாம் அறிவோம், நாம் அவற்றுக்குக் கொள்ளும் அர்த்தங்கள் ஒரு பக்கம் இருக்க, ஒவ்வொரு குறியீட்டுக்கும் காதல் சார்ந்த அர்த்தங்களை வாழ்த்து அட்டைகளில் உருவாக்கிவிட்டனர்.
'தி லவ் டைம்ஸ்' என்ற வாழ்த்து அட்டை முழுக்க முழுக்கப் பத்திரிகை போலவே தயாரிக்கப்பட்டுள்ளது. 'விலை' என்ற இடத்தில் 'விலையற்றது' என்றும் 'நாள்' என்ற இடத்தில் "எக்காலமும்' என்றும் குறிப்பிட்டுள்ள இதில், காதல் ஏவுகணை, இதய மாற்று அறுவைச் சிகிச்சை, காதல் அறிவியல், காதல் வேலை வாய்ப்பு என எங்கும் காதல் மயம்தான்.
வாழ்த்து அட்டைகள் மட்டுமன்றிக் காதலர் தினத்துக்கெனச் சிறப்புப் பரிசுப் பொருள்களும் ஏராளமாய் உள்ளன. சாக்லேட் பெட்டிகள், புகைப்படச் சட்டங்கள், எழுதுபொருள் பெட்டி, நகைப்பெட்டி, இசைக் கோப்புகள், புசுபுசு பொம்மைகள், இசைப்பேழைகள், குறுந்தகடுகள், பூச்செண்டுகள், சின்னச் சின்ன பொம்மைகள், சாவிக் கொத்துகள் எனக் கணக்கில்லாத பரிசுப் பொருள்கள் காணக் கிடைக்கின்றன. பரிசுப் பொருள்கள் எவ்வகையாக இருந்தாலும் அதில் ஓர் இடத்திலாவது ஐ.எஸ்.ஐ. முத்திரை போலக் காதல் முத்திரையான இதயம் இடம் பெற்றுள்ளது. இதை வேறொரு மாதிரிச் சொல்வதானால் இதயத்தின் வடிவம் பொறிக்கப்பட்ட எந்தப் பொருளும் காதலுக்குரிய பரிசுப் பொருளாகிவிடுகிறது.
இந்தக் காதலர் தினத்துக்காக "Be my Valentine'' என்ற ஆங்கிலப் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. காதல் கவிதைகள், பாடல்கள் ஆகியவற்றோடு 46 மொழிகளில் "நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்ற வாக்கியத்தின் ஆங்கில வரிவடிவமும் இந்நூலில் உள்ளது. வாழ்த்து அட்டைகளைப் பொறுத்தவரை 5 ரூபாயில் தொடங்கி 200 ரூபாய் வரையும். பரிசுப் பொருள்களைப் பொறுந்த அளவில் ரூ.30-லிருந்து ரூ.2000 வரையும் விலையுள்ளது. 'முக்கால்வாசிப் பரிசுப் பொருள்களும் வாழ்த்து அட்டைகளும் இறக்குமதியானவை. கால்வாசி மட்டுமே உள்ளூர்த் தயாரிப்புகள்' எனப் பிரபல புத்தகக் கடை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 'இணையத்தில் நிறைய வாழ்த்து அட்டைகள் உருவாக்கிச் சேமிக்கப்பட்டுள்ளன. அவற்றை மின்னஞ்சல் மூலம் பலரும் அனுப்பியிருக்கிறார்கள் இதனால் கடைகளில் வாழ்த்து அட்டை விற்பனை பாதிக்கவில்லையா?' என்று ஒரு விற்பனையாளரைக் கேட்டோம். 'இந்த வாழ்த்து அட்டைகளைக் காதலர்கள் எப்போதும் வைத்திருக்கலாம். இணையத்திலிருந்து தாளில் பதிவு செய்தாலும் அட்டை போல வராது. அதுவுமின்றி அதற்குச் செலவும் அதிகம். எனவே அட்டை வாங்குவோர் எப்போதும் குறைவதில்லை' என்றார் அவர். 'நிறைய வார்த்தைகளும் வாக்கியங்களும் உள்ள அட்டைகளை நாங்கள் விரும்பவில்லை' எனக் கல்லூரி மாணவியர் சிலர் தெரிவித்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக இந்தச் சீசனில் விற்பனை அதிகரித்திருப்பதாகவும் காதலர் தினத்துக்கு முந்தைய மூன்று நாள்களில்தான் அதிக விற்பனை இருக்கும் என்றும் விற்பனையாளர் பலர் கூறினர். சென்னையில் உள்ள ஒரு பிரபல புத்தகக் கடையில் காதலர் தினத்துக்கெனச் சிறப்புக் காட்சியறை உருவாக்கப்பட்டுள்ளது
காதலுக்கு மொழியில்லை என்றாலும் எல்லா வாழ்த்து அட்டைகளும் ஆங்கிலத்திலேயே இருப்பதைப் பார்க்கும்போது ஏதோ காதல், ஆங்கிலேயர்களுக்கு மட்டுமே உரித்தானதோ என்ற கேள்வியை எழுப்பியது.
தினமணி கதிர், 11-2-2001 - காதலர் தின ஸ்பெஷல்
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 8:51 PM 0 comments
Thursday, February 10, 2005
படித்துக் 'கிழிக்கும்' வாசகர்கள்
ஏப்ரல் 23 - உலக புத்தக தினம்
ஒரு புத்தகத்துள் அதை எழுதியவர் உயிர் வாழ்கிறார். ஒர் நூலகத்திலோ ஓர் உலகமே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் தேசிய நூலகங்களுள் ஒன்றான கன்னிமாரா, நூற்றாண்டு கண்ட நூலகம். ஐ.நா.சபை, யுனெஸ்கோ நிறுவனம், ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றின் தகவல் மையமாகவும் இது உள்ளது. கன்னிமாரா பொது நூலகத்துக்குள் நாம் நுழைந்தபோது ஓர் உன்னத உலகத்துக்குள் நுழையும் உணர்வு ஏற்பட்டது.
1890-ஆம் ஆண்டு இதற்கு அடிக்கல் நாட்டியவர், சென்னையின் அன்றைய ஆளுநர் கன்னிமாரா பிரபு. ஆகவே அவர் பெயரிலேயே இந்த நூலகம் அழைக்கப்படுகிறது. முன்னதாக 1860-ல் சென்னை அருங்காட்சியகத்தின் பகுதி நேரக் கண்காணிப்பாளரான கேப்டன் ஜெஸ்ஸி மிட்செல் அரசை அணுகி, அருங்காட்சியக நூலகம் ஒன்றை அமைக்க வேண்டினார். அந்நூலகம் 1862 முதல் செயலாற்றத் தொடங்கிற்று. பின்னர் அதில் நூல்கள் பெருகப் பெருக அதற்கு ஒரு புதிய கட்டடம் தேவையாயிற்று. அக்கட்டடத்திற்குத்தான் கன்னிமாரா பிரபு அடிக்கல் நாட்டினார். எனவே, கன்னிமாரா நூலகத்தின் நிறுவனர் ளன்ற பெருமை காப்டன் ஜெஸ்ஸி மிட்செலுக்குத்தான். பதினாறாம் நூற்றாண்டு நூல்கள் முதல் இன்றைக்கு வெளிவந்த நூல்கள் வரை சேமிக்கப்பெறும் இந்த நூலகத்தில் ஏறத்தாழ 5 லட்சத்து 7 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன.
குறிப்புதவி நூல்களாக ஒரு லட்சம் நூல்கள் உள்ளன. இந்த நூல்கம் நூல்களை இரவல் தருவதோடு மாதம் 100 ரூபாய் கட்டினால் குறைந்தபட்சம் 2 நூல்களை வீட்டுக்கே கொண்டு வந்தும் தருகிறது. பெரும்பாலான நூல்கள் பாடவாரியாக, ஆசிரியர்வாரியாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இரண்டு தொலைக்காட்சிகளும் 60 கல்வி ஒளிநாடாக்களும் உள்ளன. கணிப்பொறி மயமாகி வரும் இந்நூலகத்துள் ஒரு லட்சம் நூல்களின் விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. கல்வி தொடர்பான குறுந்தகடுகள் 140 உள்ளன. நகலெடுக்கும் வசதி உள்ளது.
பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோருக்கான பிரெய்லி மற்றும் பேசும் புத்தகச் சேவையும் உள்ளது. தேசியத் தகவல் மையப் பொதுத் தகவல் முறையகம் மூலம் ஏராளமான தகவல்கள் இங்கே கிடைக்கின்றன. இந்தியச் சுற்றுலா வழிகாட்டி, இந்தியப் பல்கலைக்கழகக் கல்விமுறை வழிகாட்டி, ஊரகத் தொழில் நுட்பங்கள், இந்தியப் பாரம்பரிய அறிவியல், இந்திய மாவட்டங்கள்-மாநிலங்களின் விவரங்கள், இந்தியப் பொருளாதார வங்கியியல் விவரங்கள், இந்தியத் தொழிற்சாலைகளின் அகராதி, வேளாண் புள்ளியியல் விவரங்கள் போன்றவை இந்தப் பிரிவில் கிடைக்கின்றன. அரசுத் தேர்வு முடிவுகளை இதில் காணலாம்.
இன்டர்நெட் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஒரு மணிக்கு ரு. 35ம் அரை மணிக்கு ரூ.20ம் கட்டணம். விரைவில் மைக்ரோ ·பிலிமில் முக்கிய நூல்களை ஏற்றிப் பாதுகாக்க உள்ளனர். அயல்நாடுகளில் இருந்து அதற்கான இயந்திரங்கள் விரைவில் வர உள்ளன.
தேசிய விடுமுறை நாள்கள் மூன்றையும் மாநில அரசின் ஆறு விடுமுறை நாள்களையும் தவிர மற்ற அனைத்து நாள்களிலும் காலை 9 முதல் இரவு 7.30 மணி வரை இந்த நூலகம் இயங்குகிறது. ஒரு நாளைக்குச் சராசரியாய் ஆயிரத்து இருநூறு பேர் வருகின்றனர். சனி, ஞாயிறுகளில் இந்த எண்ணிக்கை, 2000 வரை போகிறது.
பயன்பாட்டினைப் பொறுத்து நூல்கள், ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ - மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ தூசு தட்டிச் சுத்தம் செய்யப்படுகின்றன. மிகப் பழைய நூல்களின் பக்கங்கள் ஒவ்வொன்றும் ஷிபான்சில்க் என்ற துணி ஒட்டப்பட்டுப் பாதுகாக்கப்படுகிறது.
பொது நூலகத் துறையிலிருந்து நூல்களைப் பெறுவதோடு தனக்கென்று நூல் தேர்வுக் குழு ஒன்றையும் இந்த நூலகம் கொண்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுதோறும் பாட நூல்கள், வெளிநாட்டு நூல்கள் போன்றவை வாங்கப்படுகின்றன. கடந்த ஆண்டு மட்டும் இந்த வகையில் 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நூல்கள் வாங்கப்பட்டன.
கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் என்ற ஒன்று இருக்கிறது. இதற்குத் தலைவர் உள்ளார். செயற்குழு உள்ளது. ஆனால் இதுவரை கூட்டங்கள் ஏதும் கூட்டப்பெறவில்லை. இந்த நூலகத்திற்கு 68 ஆயிரம் ஆயுள் உறுப்பினர்கள் உள்ளனர். 36 ஆண்டுகளாய் இந்த நூலகத்தில் பணியாற்றி வரும் நூலகர் ந.கி. நடராஜனைச் சந்தித்து வாசகர்கனளப் பற்றிக் கேட்டோம்.
''பொதுவாக வாசகர்கள் நல்ல செயல்வேகத்தோடு இருக்கிறார்கள். இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிப்பொறியியல் போன்ற அறிவியல் நூல்களை அதிகம் பேர் வாசிக்கின்றனர். இதற்கடுத்து இலக்கியம் வருகின்றது. அதன் பின் வரலாறு, சமயம் போன்றவை வருகின்றன.
ஆனால், பல விநோத வாசகர்களையும் நான் சந்தித்திருக்கிறேன். சிலர் தாள்களைக் கிழித்து எடுத்துச் சென்றுவிடுகின்றனர். சிலர் திருடி எடுத்துச் சென்றுள்ளனர். ஆறு மாதங்கள் நாங்கள் தேடினோம். கிடைக்கவில்லை. பிறகு அவர்களே ஒரு நாள் கொண்டு வந்து எடுத்த இடத்திலேயே வைத்துள்ளனர். கலைந்திருக்கும் புத்தகங்களை அடுக்க உதவுபவர்கள் உண்டு. உபத்திரவம் செய்வோரும் உண்டு. சில வாசகர்கள் தூங்குவதும் உண்டு. நாம் எழுப்பினால், 'சிந்தனை செய்கிறேன் தொந்தரவு செய்யாதீர்கள்' என்பார்கள். சிலர் அழகான புத்தகங்களைப் பேனாக் கத்தியினால் கன்னாபின்னாவென்று கிழித்து வைப்பார்கள். (அப்படி ஒரு புத்தகத்தை எடுத்துக் காட்டுகிறார்.) அப்படிப்பட்ட மன நோயாளிகளும் உள்ளனர். கணிப்பொறியில் ஒரு லட்சம் புத்தகங்கள் பற்றிய விவரங்களைத் தொகுத்து வைத்தோம். கணினி விஷயம் தெரிந்தவர்கள் வந்து அவற்றை அழித்துவிட்டு ஏதாவது பேர், ஊர், கதைகளையெல்லாம் எழுதி வைத்திருந்தனர். நல்லவேளையாக, பிரதானக் கணிப்பொறியில் அந்தத் தகவல்கள் இருந்ததால் தப்பித்தோம். இல்லையேல் பெரும் உழைப்பு வீணாகியிருக்கும்.
ஜ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வெழுதுவோரில் சிலர் ஒரு புத்தகத்தை மட்டும் எடுத்துப் படிப்பதில்லை. பத்துப் பன்னிரண்டு நூல்களை எடுத்து வைத்துக்கொள்வார்கள். அதில் அவர்கள் தேர்ந்தெடுத்த பாடத்துக்குப் புறம்பான நூல்களும் இருக்கும். கேட்டால், 'நண்பர் வரப்போகிறார். அவருக்காக எடுத்துவைத்திருக்கிறேன்' என்பார்கள்.
சிலர் தனக்குத் தேவையான நல்ல புத்தகத்தைக் கண்டால் அதை யாரும் எடுக்காமல் இருக்க வேறு நூல் வரிசைகளில் செருகிவைத்துவிட்டுச் செல்வர், பின்னர் நாங்கள் தூய்மைப் பணி செய்யும் போதுதான் இந்த விஷயம் எங்களுக்குத் தெரியும். 'எனக்கு இந்தப் புத்தகம் தேவை. எடுத்து வையுங்கள்' என்றால், நாங்களே எடுத்து வைப்போம். சிலர் புத்தகங்களைப் பற்றிய விமர்சனங்களை அந்தப் புத்தகத்திலேயே கிறுக்கி வைப்பார்கள்.'
சிலர் 'எம்ப்ளாய்மெண்ட் நியூஸ்' போன்றவற்றில் வெளிவரும் விளம்பரங்களையும் அறிவிப்புகளையும் கிழித்து எடுத்துச் சென்றுவிடுவர். இதனால் எல்லோருக்கும் இந்தப் பத்திரிகை பத்திரமாகக் கிடைக்க அவற்றைப் பூட்டி வைக்க வேண்டியிருக்கிறது. இது தெரியாத சிலர், 'இதைப் போய்ப் பூட்டிவைத்திருக்கிறீர்களே' என்று வருத்தப்படுவார்கள்.
திருப்பித் தரும் தேதியை இரவல் நூல்களில் பொறிப்போம். ஒருவர் குறிப்பிட்ட தேதிக்குள் திருப்பித் தராமல் ஓராண்டு கழித்து வந்து அவரே ஒரு தேதியைப் புத்தகத்தில் பொறித்துக் கொண்டுவந்து தந்தார். அந்தத் தேதியில் தேடினால் அவரது நூலக அட்டை கிடைக்கவில்லை. பிறகுதான் அவரது வேலை அது என்று தெரிந்தது.
எங்களிடம் ஊழியர்கள் குறைவு. தரைத் தளத்தோடு சேர்த்து நான்கு தளங்களிலும் நூல்கள் உண்டு. எல்லாப் பிரிவையும் எப்போதும் கண்காணிக்க இயலாது. ஆகவே வாசகர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயலாற்றினால் எங்களுக்கு மிக உதவியாய் இருக்கும்'' என்கிறார் நடராஜன்.
இவ்வளவு பெரிய நூலகத்துக்கு ஒரே ஒரு தொலைபேசிதான் உள்ளது. அதன் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். சுமார் 1200 வாசகர்கள் தினம்தோறும் வரும் இந்த நூலகத்தில் வாசகர்கள் பலர் நீண்ட நேரம் அமர்ந்து படிப்பதைப் பார்க்க முடிந்தது. களைப்படையும் வாசகர்கள், தேநீர் அருந்தக் கூட வளாகத்தை விட்டு வெளியே செல்ல வேண்டியுள்ளது. அவர்களுக்கு ஓர் உணவகம் இங்கு அமைத்தால் உதவியாக இருக்கும் என்று தோன்றியது. மூளை சற்றே களைப்படையும்போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படவேண்டுமல்லவா?
தினமணி கதிர், 23.4.2000
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 8:34 PM 0 comments
Saturday, February 05, 2005
எட்டு
( சிறுவர் பாடல் )
எட்டை எட்டால் பெருக்கினால்
எதிரே வந்திடும் ஆயகலை
எட்டை எட்டால் பெருக்கியே
ஒன்றைக் கழித்தால் நாயன்மார்.
எட்டை எட்டால் பெருக்கியே
நான்கைக் கழித்தால் தமிழாண்டு.
எட்டை எட்டுடன் கூட்டினால்
வாழ்த்துடன் தோன்றும் பேறுகளே!
எட்டை நாலால் பெருக்கினால்
இளநகை புரியும் வெண்பற்கள்.
எட்டை நாலால் பெருக்கியே
ஒன்றைக் கூட்ட, ஒதுக்கீடு.
எட்டை நாலுடன் கூட்டினால்
இனிதாய்க் காண்போம் மாதங்கள்.
எட்டில் மூன்றைக் கழித்துவிட்டால்
எதிரே பஞ்ச பூதங்கள்.
எட்டில் இரண்டைக் கழித்துவிடில்
இருந்து காண்போம் அருஞ்சுவைகள்.
எட்டில் ஒன்றைக் கழித்தாலோ
இனிக்கும் பெண்களின் வண்ணவகை
எட்டை எட்டாய் நிறுத்திவிடில்
இசைந்து காண்போம் திசையெல்லாம்.
எட்டா திருக்கும் யாவினையும்
ஒற்றை எட்டில் எட்டிடுவோம்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 1:07 PM 0 comments
Thursday, February 03, 2005
உமா மகேஸ்வரி
நம் எல்லோரிடமும் சல்லடைகள் இருக்கின்றன. பெரிய ஓட்டைகளோடு உள்ளவை, பல. மொழியெனும் பேராற்றை அள்ள முயல்கிறோம். ஓட்டையின் அளவுக்கு ஏற்ப, தடித்த சொற்களே கிடைக்கின்றன. அவற்றைத் தூக்க முடியாமல் தூக்கி, சுமக்க முடியாமல் சுமந்து, வாழ்வின் அழுத்தத்தைப் பழிக்கிறோம். 'இருப்பது உண்மையானால் கடவுளே நீ ஒழிக!' எனச் சபிக்கிறோம். வழிந்தோடிய அணுவினும் மெல்லிய சொற்கள், நமைக் கண்டு நகைக்கின்றன. நுண்ணிய துளைகள் எங்கே? கூரிய சொற்களைப் பிடிப்பது எவ்விதம்? அவற்றை உளத்திலேந்திக் காற்றில் மிதப்பது எப்பொழுது?
உவகையூட்டும் இப்பேரனுபவத்தை உணர விருப்பமா? நல்ல கவிதைகளை நாடுங்கள். மொழியின் அழகும் ஆழமும் திருநடம் புரிவது, இங்குதான். பெருங்கூட்டத்தின் இடையே இருப்பினும் ஒரு நொடியில் ஏகாந்த வெளிக்குக் கடத்திச் செல்லும் ஊடகம், இது. இதில் யாருக்கேனும் ஐயம் இருக்கிறதா? உமா மகேஸ்வரியின் கவிதைகளைப் படியுங்கள்.
விடுமுறைக்குப் பின்னான வீடு
விரிகிறது தனது
அலாதியான சிக்கல்களோடு
ஒரு மாபெரும் சிலந்தி வலையாக.
......
ஸ்கூல் பஸ் நகர்கிறது
சிரிப்பொலிகளோடும்,
அழுகைத் துளிகளோடும், ஆடும் கைகளோடும்.
முடிக்கப்படாத குழந்தை ஓவியத்தின்
வர்ணங்கள் வாசற்படியில்
வடிந்திருக்கின்றன.
பாதாளத்துக்குள் இறங்கிவிட்ட
வீட்டின் தலையைப் பிளந்து
என் தனிமையோடு
உள்நுழைகிறேன்
என்னைப் பிய்த்துத் தின்னத்
தயாராகக் காத்திருக்கிறது
அசையாத குரங்கு பொம்மையின்
ஒற்றைக் கை
- கண்ணெதிரே தோன்றும் இந்தக் காட்சிகளின் பின்னே வலிமையான உணர்வு, ஆதிக்கம் செலுத்துகிறது.
மென்மையான சொற்களைக் கொண்டு மிகத் தீவிரமான உணர்வைத் தட்டியெழுப்பும் இவரின் வரிகள், எளிய வாசகருக்கும் புரியக்கூடியவை. இவ்வகையில், குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயலும் நவீன கவிஞர்களுள் சிலர், இவரின் வரிகளை உற்று நோக்குவது நல்லது.
ஆண்டாண்டு காலமாக அளவு மாறாதது
தோசைகளின் விட்டம்.
விளிம்பு தாண்டாதது அவற்றின் வட்டம்
உலோகக் கடின அடித்தளத்தில்
ஊற்றப்பட்டாலும் அவை
ஒருபோதும் இழப்பதில்லை மென்மையை.
.....உள்ளே வெந்தாலும்
வெளிக்காட்டாத புன்முறுவல் மேலே.
....அம்மாவின் பாட்டியின்
பாட்டியின் அம்மாவின்
இன்னும் என்னுடைய தோசைகள்.
ஆண்டாண்டு காலமாய் அப்படியே
-தோசையை இத்தகைய கோணத்தில் பார்த்த முதல் ஆள், இவரே. தனித்துவமும் புதிய பார்வையும் கொண் டவர் என்பதற்கு, இவரின் கவிதைகள் நெடுகிலும் நிறைய சான்றுகள் உள்ளன.
எருக்கஞ் செடியிலிருந்தது
பார்த்தேயிராத ஒரு பறவை.
விசிறி மடிப்புப் பாவாடை நலுங்காது
கொசுவியமர்ந்த சிறுமியின்
தோற்ற ஒழுங்கிலிருக்கும் சிறகுகள்
-என்பதில் மிக நேர்த்தி யான உவமையும் அழகியலின் முழுமையும் பொருந்தியுள்ளன.
மரங்களின் விசும்பல்;
விம்மும் காற்று.
உரத்து அழ முடிகிறது
பக்கத்து வீட்டுக் குழந்தையால்.
....இளைப்பாறும் பறவைகள் போல்
இறக்கை கவிழ்ந்த புத்தகங்கள்.
இரவுக்குள்ளிருந்து
தன் குரலால்,
எதையோ உருவும்
ஒரு பறவை.
-எனவும்
.....நீ போகும் பொழுது
திரும்பாத உன் முகத்தைத்
தெருமுனையில் தழுவுகிறேன்
இன்றும் இந்த வழியனுப்புதல்
வண்டியைச் சாய்க்கும் பாரமாக
விழுகிறது என் கொழுத்த பகல் மீது
-எனவும்
உரசியெறிந்த உன் ஒற்றைச் சொல்லில்
பற்றியெரியும் பகல்களுக்குள் வசிக்கிறேன்
-எனவும்
இன்றேனும் உதிர்ந்த பூக்களைக்
குப்பையென்றொதுக்க வேண்டாம்
-எனவும்
நீ உதைத்துத் திறந்த அறைக்கதவு
கதறுகிறது கல்லெறிபட்ட நாயாய்
-எனவும்
கொதித்தடங்கிய பாலேடாக
சுருக்கமோடியிருக்கின்றன என் உணர்வுகள்
-எனவும்
கடிகாரக் குருவி நிமிடம் கொத்துகிறது.
அடுப்பின் தணல் ஆடுகிறது ஓயாமல்.
என் இளமையென சோகையுறுகிறது
மாசி மாத வெயில்
-எனவும்
ஒப்பனைகள் அற்று
உன்னருகே என்னைத் திறக்கிறேன்.
தொலைவிலிருந்து ஒரு
பசுமஞ்சள் மரம் பாடுகிறது.
...உலர்ந்த துக்கமேட்டில்
அசைகிறதொரு புன்னகை.
நான் உன் மீதுறைகிறேன்.
தீரும் தீரும் எனத் தேடிய பாதை
குழம்புகிறது தவறிய கண்ணாடிப் பொருளாக
-எனவும்
காலையின் இசையைத்
தனியே மீட்டும்
தவறிய கைக்குட்டையெனக்
காற்றில் சுழலும் வெண்பறவை
-எனவும்
காமத்தின் அந்தர ஏணியில்
கால் வைக்கிறேன்
நடுநடுங்கி.
பாசி படர்ந்த குளப் படிகளில்
விரிகிறது
மோகத்தின் ஊதா நிறம்.
மணல் மேடுகள்
குமுறித் திறக்க,
பனிப் புயலில்
அமிழ்கிறது சொல்லியவொரு காதல்.
நீவிய படுக்கை விரிப்பு
நீட்டி வரைந்து காட்டுகிறது
அவன் உடலின்
வெளிக்கோடுகளை
-எனவும்
வளரும் இவரின் கவிஆளுமை, செங்குத்தாக உயர்ந்து சிகரங் களை வென்று, பேருருக் கொள்கின்றது. மொழியாளு மையும் சிந்தனா வன்மையும் கவித்துவமும் ஒன்றிணைந்து, இவரிடம் சுடர்விடுகின்றன. அடக்கி வைத்த உணர்வுகள், கட்டற்றுப் பெருக்கெடுக் கின்றன; தடைகளை உடைத் தெறிகின்றன. ஆவேசமான கடுஞ் சொற்களை விட மென்மையான சொற்கள், அதிக வீரியமுள்ளவை என் பதற்கு இவரின் வரிகளே சான்று.
உமா மகேஸ்வரி, போடிநாயக்கனூரில் உள்ள திருமலாபுரத்தில் 1971-இல் பிறந்தவர். 1985 முதல் கவிதை எழுதி வரும் இவர், ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தற்பொழுது, கணவர்-குழந்தைகளுடன் ஆண்டிப்பட்டியில் வசிக்கிறார். நட்சத்திரங்களின் நடுவே, வெறும் பொழுது, கற்பாவை ஆகிய கவிதைத் தொகுப்புகளைப் படைத்தவர்.
மஹி என்ற பெயரில் சிறு கதைகளும் எழுதுகிறார். கவிதையின் வீச்சினை, உரை நடையில் தக்கவைக்கும் பெருவலிமை, இவரிடம் உள்ளது. மரப்பாச்சி, தொலைகடல் ஆகிய சிறுகதைத் தொகுதிகளும் யாரும் யாருடனும் இல்லை என்ற நாவலும் நூலுருவம் பெற்றுள்ளன. ஏழாம்கல் காலம் என்ற நாவலை, இப்பொழுது எழுதி வருகிறார்.
கணையாழி குறுநாவல் போட்டியில் முதல் பரிசு; 2001-இல் சிறுகதைக்காக, கதா தேசிய விருது ஆகியன பெற்றவர்.
இவரின் தொடக்கக் காலப் படைப்பு களை விட, அண்மைக் காலக் கவிதைகளே அதிகப் புலன் வெளிச்சம் கொண்டவை. ஆங்காங்கே எழுத்து/சொற் பிழைகள் சில உள்ளன (பதட்டம் / பதற்றம், முகச் சுளிப்பு / சுழிப்பு, அருகாமை / அருகில், முகப்புக்கள் / முகப்புகள், கோர்வை / கோவை, பீறிடல் / பீரிடல்...). ஆயினும் இவற்றை இவர், எளிதில் திருத்திக்கொள்ள முடியும்.
அன்று அந்த மழையில்
நனையாதிருந்த நாம்
நீந்தினோம்
ஒருவரும் அறியாதவொரு
ஒற்றை ஓடையில்.
-என்கிறார் ஒரு கவிதையில். "ஒரு ஒற்றை ஓடை' என்பதில் "ஒரு' என்பது தேவையற்றது.
இவை, சிறிய பிழைகள்; இவரின் மகத்தான கவிதைச் சிறப்பிற்கு முன்னால் மன்னிக்கத் தகுந்தவை. கலீல் ஜிப்ரானின் தடத்தில் பாதம் பதிக்கும் உமா, தமிழுக்கு நல்வரவு.
குத்துவிளக்கின் முத்துச்சுடரென
முதல் வெள்ளி முகிழ்க்கும்
இந்தக் குளிர்இரவை
எனக்கென்றே
இருத்தி வைத்திருக்கிறேன்
-என்கிறார், உமா மகேஸ்வரி.
நட்சத்திரங்களின் நட்பு, எப்பொழுதும் இரவோடுதானே.
அமுதசுரபி, பிப்ரவரி 2005
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 1:02 PM 0 comments