!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, February 03, 2005

உமா மகேஸ்வரி



நம் எல்லோரிடமும் சல்லடைகள் இருக்கின்றன. பெரிய ஓட்டைகளோடு உள்ளவை, பல. மொழியெனும் பேராற்றை அள்ள முயல்கிறோம். ஓட்டையின் அளவுக்கு ஏற்ப, தடித்த சொற்களே கிடைக்கின்றன. அவற்றைத் தூக்க முடியாமல் தூக்கி, சுமக்க முடியாமல் சுமந்து, வாழ்வின் அழுத்தத்தைப் பழிக்கிறோம். 'இருப்பது உண்மையானால் கடவுளே நீ ஒழிக!' எனச் சபிக்கிறோம். வழிந்தோடிய அணுவினும் மெல்லிய சொற்கள், நமைக் கண்டு நகைக்கின்றன. நுண்ணிய துளைகள் எங்கே? கூரிய சொற்களைப் பிடிப்பது எவ்விதம்? அவற்றை உளத்திலேந்திக் காற்றில் மிதப்பது எப்பொழுது?

உவகையூட்டும் இப்பேரனுபவத்தை உணர விருப்பமா? நல்ல கவிதைகளை நாடுங்கள். மொழியின் அழகும் ஆழமும் திருநடம் புரிவது, இங்குதான். பெருங்கூட்டத்தின் இடையே இருப்பினும் ஒரு நொடியில் ஏகாந்த வெளிக்குக் கடத்திச் செல்லும் ஊடகம், இது. இதில் யாருக்கேனும் ஐயம் இருக்கிறதா? உமா மகேஸ்வரியின் கவிதைகளைப் படியுங்கள்.

விடுமுறைக்குப் பின்னான வீடு
விரிகிறது தனது
அலாதியான சிக்கல்களோடு
ஒரு மாபெரும் சிலந்தி வலையாக.


......
ஸ்கூல் பஸ் நகர்கிறது
சிரிப்பொலிகளோடும்,
அழுகைத் துளிகளோடும், ஆடும் கைகளோடும்.

முடிக்கப்படாத குழந்தை ஓவியத்தின்
வர்ணங்கள் வாசற்படியில்
வடிந்திருக்கின்றன.

பாதாளத்துக்குள் இறங்கிவிட்ட
வீட்டின் தலையைப் பிளந்து
என் தனிமையோடு
உள்நுழைகிறேன்

என்னைப் பிய்த்துத் தின்னத்
தயாராகக் காத்திருக்கிறது
அசையாத குரங்கு பொம்மையின்
ஒற்றைக் கை
- கண்ணெதிரே தோன்றும் இந்தக் காட்சிகளின் பின்னே வலிமையான உணர்வு, ஆதிக்கம் செலுத்துகிறது.

மென்மையான சொற்களைக் கொண்டு மிகத் தீவிரமான உணர்வைத் தட்டியெழுப்பும் இவரின் வரிகள், எளிய வாசகருக்கும் புரியக்கூடியவை. இவ்வகையில், குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயலும் நவீன கவிஞர்களுள் சிலர், இவரின் வரிகளை உற்று நோக்குவது நல்லது.

ஆண்டாண்டு காலமாக அளவு மாறாதது
தோசைகளின் விட்டம்.
விளிம்பு தாண்டாதது அவற்றின் வட்டம்
உலோகக் கடின அடித்தளத்தில்
ஊற்றப்பட்டாலும் அவை
ஒருபோதும் இழப்பதில்லை மென்மையை.
.....உள்ளே வெந்தாலும்
வெளிக்காட்டாத புன்முறுவல் மேலே.
....அம்மாவின் பாட்டியின்
பாட்டியின் அம்மாவின்
இன்னும் என்னுடைய தோசைகள்.
ஆண்டாண்டு காலமாய் அப்படியே

-தோசையை இத்தகைய கோணத்தில் பார்த்த முதல் ஆள், இவரே. தனித்துவமும் புதிய பார்வையும் கொண் டவர் என்பதற்கு, இவரின் கவிதைகள் நெடுகிலும் நிறைய சான்றுகள் உள்ளன.

எருக்கஞ் செடியிலிருந்தது
பார்த்தேயிராத ஒரு பறவை.
விசிறி மடிப்புப் பாவாடை நலுங்காது
கொசுவியமர்ந்த சிறுமியின்
தோற்ற ஒழுங்கிலிருக்கும் சிறகுகள்
-என்பதில் மிக நேர்த்தி யான உவமையும் அழகியலின் முழுமையும் பொருந்தியுள்ளன.

மரங்களின் விசும்பல்;
விம்மும் காற்று.
உரத்து அழ முடிகிறது
பக்கத்து வீட்டுக் குழந்தையால்.
....இளைப்பாறும் பறவைகள் போல்
இறக்கை கவிழ்ந்த புத்தகங்கள்.
இரவுக்குள்ளிருந்து
தன் குரலால்,
எதையோ உருவும்
ஒரு பறவை.
-எனவும்

.....நீ போகும் பொழுது
திரும்பாத உன் முகத்தைத்
தெருமுனையில் தழுவுகிறேன்
இன்றும் இந்த வழியனுப்புதல்
வண்டியைச் சாய்க்கும் பாரமாக
விழுகிறது என் கொழுத்த பகல் மீது
-எனவும்

உரசியெறிந்த உன் ஒற்றைச் சொல்லில்
பற்றியெரியும் பகல்களுக்குள் வசிக்கிறேன்
-எனவும்

இன்றேனும் உதிர்ந்த பூக்களைக்
குப்பையென்றொதுக்க வேண்டாம்
-எனவும்

நீ உதைத்துத் திறந்த அறைக்கதவு
கதறுகிறது கல்லெறிபட்ட நாயாய்
-எனவும்

கொதித்தடங்கிய பாலேடாக
சுருக்கமோடியிருக்கின்றன என் உணர்வுகள்
-எனவும்

கடிகாரக் குருவி நிமிடம் கொத்துகிறது.
அடுப்பின் தணல் ஆடுகிறது ஓயாமல்.
என் இளமையென சோகையுறுகிறது
மாசி மாத வெயில்
-எனவும்

ஒப்பனைகள் அற்று
உன்னருகே என்னைத் திறக்கிறேன்.
தொலைவிலிருந்து ஒரு
பசுமஞ்சள் மரம் பாடுகிறது.
...உலர்ந்த துக்கமேட்டில்
அசைகிறதொரு புன்னகை.
நான் உன் மீதுறைகிறேன்.
தீரும் தீரும் எனத் தேடிய பாதை
குழம்புகிறது தவறிய கண்ணாடிப் பொருளாக
-எனவும்

காலையின் இசையைத்
தனியே மீட்டும்
தவறிய கைக்குட்டையெனக்
காற்றில் சுழலும் வெண்பறவை
-எனவும்

காமத்தின் அந்தர ஏணியில்
கால் வைக்கிறேன்
நடுநடுங்கி.
பாசி படர்ந்த குளப் படிகளில்
விரிகிறது
மோகத்தின் ஊதா நிறம்.
மணல் மேடுகள்
குமுறித் திறக்க,
பனிப் புயலில்
அமிழ்கிறது சொல்லியவொரு காதல்.
நீவிய படுக்கை விரிப்பு
நீட்டி வரைந்து காட்டுகிறது
அவன் உடலின்
வெளிக்கோடுகளை
-எனவும்

வளரும் இவரின் கவிஆளுமை, செங்குத்தாக உயர்ந்து சிகரங் களை வென்று, பேருருக் கொள்கின்றது. மொழியாளு மையும் சிந்தனா வன்மையும் கவித்துவமும் ஒன்றிணைந்து, இவரிடம் சுடர்விடுகின்றன. அடக்கி வைத்த உணர்வுகள், கட்டற்றுப் பெருக்கெடுக் கின்றன; தடைகளை உடைத் தெறிகின்றன. ஆவேசமான கடுஞ் சொற்களை விட மென்மையான சொற்கள், அதிக வீரியமுள்ளவை என் பதற்கு இவரின் வரிகளே சான்று.

உமா மகேஸ்வரி, போடிநாயக்கனூரில் உள்ள திருமலாபுரத்தில் 1971-இல் பிறந்தவர். 1985 முதல் கவிதை எழுதி வரும் இவர், ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தற்பொழுது, கணவர்-குழந்தைகளுடன் ஆண்டிப்பட்டியில் வசிக்கிறார். நட்சத்திரங்களின் நடுவே, வெறும் பொழுது, கற்பாவை ஆகிய கவிதைத் தொகுப்புகளைப் படைத்தவர்.

மஹி என்ற பெயரில் சிறு கதைகளும் எழுதுகிறார். கவிதையின் வீச்சினை, உரை நடையில் தக்கவைக்கும் பெருவலிமை, இவரிடம் உள்ளது. மரப்பாச்சி, தொலைகடல் ஆகிய சிறுகதைத் தொகுதிகளும் யாரும் யாருடனும் இல்லை என்ற நாவலும் நூலுருவம் பெற்றுள்ளன. ஏழாம்கல் காலம் என்ற நாவலை, இப்பொழுது எழுதி வருகிறார்.

கணையாழி குறுநாவல் போட்டியில் முதல் பரிசு; 2001-இல் சிறுகதைக்காக, கதா தேசிய விருது ஆகியன பெற்றவர்.

இவரின் தொடக்கக் காலப் படைப்பு களை விட, அண்மைக் காலக் கவிதைகளே அதிகப் புலன் வெளிச்சம் கொண்டவை. ஆங்காங்கே எழுத்து/சொற் பிழைகள் சில உள்ளன (பதட்டம் / பதற்றம், முகச் சுளிப்பு / சுழிப்பு, அருகாமை / அருகில், முகப்புக்கள் / முகப்புகள், கோர்வை / கோவை, பீறிடல் / பீரிடல்...). ஆயினும் இவற்றை இவர், எளிதில் திருத்திக்கொள்ள முடியும்.

அன்று அந்த மழையில்
நனையாதிருந்த நாம்
நீந்தினோம்
ஒருவரும் அறியாதவொரு
ஒற்றை ஓடையில்.

-என்கிறார் ஒரு கவிதையில். "ஒரு ஒற்றை ஓடை' என்பதில் "ஒரு' என்பது தேவையற்றது.

இவை, சிறிய பிழைகள்; இவரின் மகத்தான கவிதைச் சிறப்பிற்கு முன்னால் மன்னிக்கத் தகுந்தவை. கலீல் ஜிப்ரானின் தடத்தில் பாதம் பதிக்கும் உமா, தமிழுக்கு நல்வரவு.

குத்துவிளக்கின் முத்துச்சுடரென
முதல் வெள்ளி முகிழ்க்கும்
இந்தக் குளிர்இரவை
எனக்கென்றே
இருத்தி வைத்திருக்கிறேன்
-என்கிறார், உமா மகேஸ்வரி.

நட்சத்திரங்களின் நட்பு, எப்பொழுதும் இரவோடுதானே.


அமுதசுரபி, பிப்ரவரி 2005

No comments: