!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, March 04, 2005

தமிழில் மெய்ப்பாளர் பயிற்சி - ஒரு புதிய முயற்சி

காந்தளகம் நடத்திவரும் பதிப்புத் தொழில் உலகம் மாத இதழின் மாசி 2036 (பிப்ரவரி 2005) இதழில் பட்டய மெய்ப்பாளர் பயிற்சி குறித்து மறவன்புலவு க. சச்சிதானந்தன் ஒரு திட்ட வரைவினை அளித்துள்ளார். புரூப் பார்ப்பது, பிழை திருத்தம் பார்ப்பது எனப் பரவலாக அறியப்படும் ஒன்றினைத் தமிழில் மெய்ப்பு என அழைக்கிறார்கள். மெய்ப்புப் பார்ப்போரை மெய்ப்பாளர் என்கிறார்கள்.

எப்படி ஒருவர் மெய்ப்பாளர் ஆவது? இதை முறைப்படிக் கற்றுக்கொள்ள முடியுமா? அப்படிக் கற்பதன் தேவை என்ன? எங்கே கற்பது? மாணவர் ஆவதற்கு என்ன தகுதி? அதற்கான பாடத் திட்டத்தில் இடம்பெறக் கூடியவை என்னென்ன? எவ்வளவு நாட்கள் பயிற்சி? எங்கெல்லாம் இந்தப் பயிற்சியை அளிக்க முடியும்? இதற்கு அடிப்படைத் தேவைகள் என்னென்ன?.... எனப் பலவற்றை மிக நுணுக்கமாகச் சிந்தித்து ஒரு திட்ட வரைவாக அளித்துள்ளார் சச்சிதானந்தன். அவர் அளித்துள்ள வரைவில் பாடத்திட்டம் பற்றிய பகுதியை மட்டும் இங்கு அளிக்கிறேன்.

2.1 பாடத் திட்டம்:

2.1.1 அச்சுத் தொழில்- வரலாறு, ஈய அச்சு, எந்திரம், கணினி அச்சு, மறுதோன்றி எந்திரம், பிற எந்திர வகைகள், வண்ண அச்சு, எண்ணச்சு, தாள் அளவுகள், கட்டாளர் முறைகள். (கணினியகம், அச்சகம், கட்டாளரகம் யாவிலும் களப் பயிற்சி)

2.1.2 நூலாக்க முறைகள்- பக்க அளவுகள், பக்க வகைகள், பக்க ஒழுங்குகள், பக்க எண், பக்கத் தலைப்பு வகைகள், அச்சு எழுத்துரு வகைகள், புள்ளி அளவுகள், நிமிர்வு-சாய்வு-விரிவு வகைகள், பனுவல் தொகுப்பு - இட வல நடு ஈரக அடைவுகள், நூல் தலைப்பு, பகுதித் தலைப்பு, பந்தி, பா, படம், அடிக்குறிப்பு, சொல்லடைவு, சுட்டி, உசாத்துணை அமைப்பு, மேற்கோள் பட்டியலமைப்பு, வடஒலி, பிறமொழி ஒலிகள், பிற மொழிச் சொற்கள் - தொடர்கள், மேற்கோள், நிறுத்தக் குறிகள், கோர்வைக் கட்டுக்காக, நடுக்கட்டுக்காக, அட்டை அமைப்பு, பின் அட்டையில் குறிப்பு, உலகத் தர நூல் எண், அரங்கநாதன் தர எண், பத்தாக்க எண்முறை, விலை, அச்சகப் பதிப்பகப் பெயர் தொடர்பான சட்டங்கள், பிற.

2.1.3 செய்தி - விளம்பர முறைகள்: இதழ்களின் அமைப்பு, செய்தி அமைப்பு, கட்டுரை அமைப்பு, பட விளக்கம், அச்சு எழுத்துரு வகைகள், புள்ளி அளவுகள், நிமிர்வு -சாய்வு-விரிவு வகைகள், பனுவல் தொகுப்பு - இட வல நடு ஈரக அடைவுகள், வடஒலி, பிறமொழி ஒலிகள், பிற மொழிச் சொற்கள்-தொடர்கள், மேற்கோள், நிறுத்தக் குறிகள், விளம்பர வரிகள், விளம்பர வடிவமைப்பு, சுவரொட்டி வரிகள், துண்டு வெளியீட்டு வரிகள், ஒலி/ஒளி ஊடகங்களுக்கான செய்தி மற்றும் பனுவல் அமைப்பு, ஓடும் தலைப்புகள் அமைப்பு, பிற.

2.1.4 சொல்லியல்: பெயர்ச்சொல், வினைச்சொல், பேதச்சொல், கலைச்சொல், வடசொல், ஆங்கில மற்றும் பிறமொழிச் சொற்கள், பிற.

2.1.5 சொற்றொடர்: தொகைச் சொல், இணைமொழி, தொடர்ச் சொற்கள், புணர்ச்சி, உவமைத் தொடர், பழமொழிகள், பிற.

2.1.6 வாக்கிய அமைப்பு, வாக்கிய வகைகள், வாக்கிய மரபு வழாநிலை, வாக்கியச் சிறப்பியல்புகள், வழக்குப் பிழை-திருத்தம், பெருவழக்கு, நிறுத்தக் குறிகள், பிற.

2.1.7 பனுவல்: கட்டுரை, செய்தி, கவிதை, பா, துணுக்கு, நறுக்கு, கதை, நெடுங்கதை, அறிவியல் கட்டுரை, மொழிபெயர்ப்பு, பிற.

2.1.8 அச்சுப் பனுவல்: பகுப் பதம், பகாப் பதம், ஈரெழுத்து மூவெழுத்துச் சொற்கள், வரிமுதலில் மெய் வரா மரபு, பிறமொழிச் சொல் சாய்வுருவாக, தொடர் குறுக்கங்கள், பிறமொழிக் குறுக்கங்கள் தமிழில், பிற.

2.1.9 மெய்ப்புக் குறியீடுகள்.

-மிகவும் நேர்த்தியான முறையில் பாடத் திட்டத்தில் என்னென்ன கூறுகள் இடம்பெற வேண்டும் என்பதனை அவர் சிந்தித்துள்ளார். ஒரு கருவை முழுமையாக அணுகுவதற்கு இ·து ஒரு சிறந்த சான்று. இந்தத் திட்டவரைவில் சேர்க்கவேண்டிய/ நீக்கவேண்டிய பகுதிகளைக் குறிப்பிடுமாறும் அவர் வேண்டியுள்ளார்.

தமிழ்ப் பதிப்புலகும் இதழுலகும் இணைய உலகும் வளர்ந்து வரும் இந்நாளில் மெய்ப்பாளர் மிகவும் தேவை. இதன் இன்றியமையாமையை இது தொடர்புடைய துறையினர் உணராமல் இருப்பதால் மெய்ப்பின் தேவை, மிக மிக அதிகரித்துவிட்டது.
இவர்களுள் இரண்டு வகைகள் உண்டு. மூலப் படி எப்படி இருக்கிறதோ அப்படியே, தட்டச்சு ஆன பிறகு உள்ள படியில் உள்ளதா எனப் பார்ப்போர் ஒரு வகை. மூலப் படியிலேயே தவறு இருந்தால் அதைக் குறித்துக் கேள்வி எழுப்பி, மூலத்தை எழுதியவரிடம் விளக்கி, பிழை திருத்துவோர் இன்னொரு வகை. இரண்டாம் வகையினரைக் காண்பது மிக அரிது.

சிறப்பான மெய்ப்பாளர்கள் அருங்காட்சியகங்களில் வைக்கும் அளவுக்கு அருகிவிட்டார்கள். அதிலும் அவர்களுக்குள் கருத்து முரண்பாடுகள் இன்னும் அதிகம். காற்புள்ளி, அரைப்புள்ளி, முக்காற்புள்ளி ஆகியவற்றை எங்கெங்கே இடவேண்டும் என்பது குறித்து மெய்ப்பாளர் பலரும் கருத்து மாறுபடுகிறார்கள். இடைவெளி இடும் இடங்களில்கூட இந்த அல்லாட்டம் உண்டு. ஒற்றை / இரட்டை மேற்கோள் குறிகளை இடுவதிலும் பெரும் வேறுபாடுகள் உண்டு. எங்கு பந்தி பிரிப்பது என்பதும் இறுதியானதில்லை.

வேற்றுமொழிச் சொற்களை ஒலிபெயர்ப்பதிலும் இத்தகைய மாறுபாடு உண்டு. வடசொற்களைத் தமிழில் எழுதும் முறையிலும் ஒத்த கருத்து கிடையாது.
கருப்பு/ கறுப்பு, கோயில்/ கோவில், பவளம்/ பவழம் எனப் பல சொற்கள் தமிழில் புழங்குகின்றன. இவற்றில் எது சரி எனக் கேட்டால் இரண்டுமே சரிதான் என்போர் பலர். இப்படித்தான் எழுதவேண்டும் என ஒன்றை மட்டும் சொல்லுவோர் சிலர்.

பிழை, எப்பொழுதுமே நம்மை வீழ்த்துவதற்குக் காத்திருக்கும் ஒரு புலி போலத்தான். 700 பக்கங்கள் உள்ள ஒரு நூலினைக் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு மெய்ப்புப் பார்த்தாலும் கடைசியில் அச்சான பிறகு 70 பிழைகளாவது இருக்கும். இது, குறைந்தபட்சம். கணக்கு வழக்கில்லாமல் பிழைகள் இருப்பதே பொதுவழக்கு. பிழை திருத்தம் எனக் கடைசிப் பக்கத்தில் சிலர் இடுவதுண்டு. சில நேரங்களில் அந்தப் பிழை திருத்தத்திலேயே பிழை இருக்கும்.

பிழையை மாயமான் என்றும் சொல்லலாம். பிழை என நினைக்கும் இடத்தில் பிழை இருக்காது. பிழை இல்லை என எண்ணும் இடத்தில் பிழை வந்து நிற்கும்.

இதில் பெரிய கொடுமை என்னவென்றால், பலர் தாம் பிழை செய்கிறோம் என்பதையே அறியவில்லை. பிழையையே சரியென எண்ணிக்கொண்டு அதையே ஆணித்தரமாகச் செய்து வருகின்றனர். இப்படி இருப்பவர்கள், சரியான பாதைக்கு வருவது என்பது கடினம். ஆனால், தாம் எழுதுவது பிழையோ என்ற ஐயம் இருப்பவர்களும் பிழை எனச் சுட்டிக்காட்டும் போது திருத்திக்கொள்வோரும் பிழை வரக்கூடாது என்ற அடிப்படை எண்ணம் உள்ளவர்களும் எவ்வளவோ தேவலாம். இத்தகையவர்கள், தங்களைச் சிறப்பாக வளர்த்துக்கொள்ள முடியும்.

அவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு, இந்த மெய்ப்பாளர் பயிற்சி.

ஒரு பிரபல வார இதழில் நான் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய போது, முதல் நாள் ஒரு புதினம் அச்சுக்குப் போகத் தயாராய் இருந்தது. புதிதாய் வந்திருந்த என்னிடம் அதன் இறுதிப் படியைக் கொடுத்துச் சரிபார்க்கச் சொன்னார்கள். நான் அந்த நூறு பக்கப் படியைப் பார்த்து முடித்தபோது சராசரியாகப் பக்கத்திற்கு 20 பிழைகள் இருந்தன. அவற்றைப் பக்க ஓரங்களில் குறித்தேன். தட்டச்சு செய்தவரும் அங்கிருந்த மெய்ப்பாளரும் என்னைச் சினத்தோடு பார்த்தார்கள். 'நீங்க ரொம்ப க்,ச்,ப் போடுறீங்க' என்றும் 'பக்கத்தை என்ன இப்படிக் குதறி வச்சிருக்கீங்க?' என்றும் குற்றம் சாட்டும் தொனியில் கூறினார்கள். 'இப்படியெல்லாம் போட்டுக்கொண்டிருந்தால் இது இன்றைக்கு அச்சுக்குப் போகாது. சரியான நேரத்தில் அச்சுக்குப் போகாவிட்டால் அதற்குக் காரணம் நீங்கள்தான் என்று சொல்லிவிடுவோம்' என அச்சுறுத்தவும் செய்தார்கள்.

அதன் பிறகு நான் எப்படியெல்லாம் மெய்ப்புத் திருத்தலாம் என எனக்கு ஒரு கையேட்டினை நிருவாகம் அளித்தது. அதில் நிறைய வழிகாட்டுதல்கள். 'மனத்தை என எழுதினால் எழுத்துக் கூட்டிப் படிக்கும் பாமரர்கள் சிரமப்படுவார்கள்; எனவே மனதை என எழுதினால் போதும்' என்பது போன்ற பல விதிகள் அதில் இருந்தன.

வார இதழுக்கு மட்டுமின்றி, நாளிதழுக்கும் இதே நிலைதான். இன்னும் சொல்லப் போனால் அங்கு இந்த நிலை, மிகவும் மோசம். நான் ஒரு நாளிதழில் பணியாற்றியபோது, ஒரு செய்தி மெய்ப்புப் பிரிவுக்கு வந்தது. சொல், வாக்கிய அமைப்பு, பந்தி, முன்பின் நிரல் என எதுவுமே சரியில்லை. நான் அதை முற்றிலும் மாற்றி, முறையாக எழுதி, தட்டச்சுக்கு அனுப்பினேன். அடுத்த நாள், மதுரையில் இருந்த தலைமை அலுவலகத்திலிருந்து அழைப்பு மேல் அழைப்பாய் வந்துகொண்டிருந்தது. 'யார் புரூப் பார்த்தது?' எனத் தேடினார்கள். பிறகு கடைசியில் பார்த்தால் நான் மாற்றித் திருத்தி எழுதிய பிரதியைத் தூக்கி வைத்துவிட்டு, ஏற்கெனவே இருந்தபடியே தட்டச்சாளர் விட்டுவிட்டார். பிழை திருத்தத்தை அவர் மேற்கொள்ளவில்லை. அதனால் இதழின் பெயர் கெட்டதோடு, அவருக்கு அபராதமும் விதித்தார்கள். நான் திருத்திய படியைப் படித்த செய்தி ஆசிரியர், மிகவும் பாராட்டினார்.

ஒருமுறை, ஒரு படத்தின் அடிக்குறிப்பில் 'ம.தி.மு.க. தலைவர் வைகோ' என இருந்தது. அடுத்தநாள் விசாரணை வைத்தார்கள். 'ம.தி.மு.க.வுக்குத் தலைவர் கிடையாது; பொதுச் செயலாளர்தான் உண்டு. சட்டப்படி இது தவறு' என்பது செய்தி ஆசிரியரின் வாதம். அதன் பிறகு இது சிறிய பிழை என விடப்பட்டது.

இவற்றை ஏன் சொல்கிறேன் என்றால் மெய்ப்புப் பார்ப்பது, சாதாரண வேலையில்லை. மிகவும் பொறுப்பாகச் செய்யவேண்டிய வேலை. வார இதழில் ஒருமுறை 'அவன் வசதியோடு வாழ்ந்தான்' என வந்த இடத்தில், 'அவன் வசந்தியோடு வாழ்ந்தான்' என வந்துவிட்டது. பொருளே மாறிவிட்டது பார்த்தீர்களா? அதனால் மிகவும் கவனம் தேவை.

நாளிதழ்களில் லாட்டரிச் சீட்டு முடிவு வெளியிடும் பகுதியையும் பத்தாம் வகுப்பு/ 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடும் பகுதியையும் மெய்ப்புப் பார்ப்பது மிகவும் கடினம். முழுக்க முழுக்க எண்கள் மட்டுமே இருக்கும். ஓர் எண் தப்பானாலும் போச்சு. தேர்வான மாணவர் ஒருவரின் எண் விடுபட்டால் என்னாவது? தோல்வியடைந்தவரின் எண் வெற்றிபெற்றதாக வந்துவிட்டால் என்னாவது?

லாட்டரியிலும் இப்படித்தான். பரிசு விழாதவர்க்கு விழுந்ததாகவோ, விழுந்தவர்க்கு விழாததாகவோ அச்சானால் மெய்ப்புப் பார்த்தவர் தீர்ந்தார்.

மூலத்தை ஒருவர் வாசிக்க, இன்னொருவர் திருத்தம் பார்க்கவேண்டும் என்பது மெய்ப்பின் பொதுவிதி. ஆள் பற்றாக்குறை காரணமாக இது, பெரும்பாலும் நடக்காது. ஒருவரே பார்க்கவேண்டியிருக்கும். இருவர் இருந்தாலும் இருவரும் ஒரே நேரத்தில் கிடைப்பது கடினம். ஒருவர் உட்காரும்போது, இன்னொருவர், தேநீர் குடிக்கச் சென்றுவிடுவார். அவர் திரும்பி வரும்போது, முன்னவர், தொலைபேசியில் மும்முரமாய் இருப்பார். வேறு எதற்குப் பார்க்கிறார்களோ இல்லையோ, எண்கள் வெளிவரும் போது மட்டும் இருவர் பார்க்கும் வழக்கம் இன்னும் இருக்கிறது.

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்பது மூத்தோர் வாக்கு. ஆனால், எழுத்தை விட எண்தான் மிகவும் சிக்கலானது. இதழ்களின் மெய்ப்பாளர் முதலில் பார்க்கவேண்டியது, அந்த இதழின் தேதி, சரியானபடி இருக்கிறதா? சில தருணங்களில் அந்த தேதியே மாற்றாமல் பழைய தேதியிலேயே அச்சாகும் ஆபத்தும் உண்டு. அதன்பிறகு, 'க்,ச்,ப் எல்லாம் பார்க்கிறவர், தேதியில் பிழை விட்டுவிட்டாரே' எனக் குத்திக் குத்திக் காட்டுவார்கள்.

அடுத்து, இதழின் பக்கங்கள் முறையாக, எண் வரிசைப்படி இருக்கின்றனவா? எனப் பார்க்கவேண்டும். இதழ்கள், ·பாரம் எனப்படும் முறையில் அச்சுக்குப் போவதால் முதல் ·பாரம், இரண்டாம் ·பாரம் எனத் தயாராகும். ஏற்கெனவே போன ·பாரத்தின் எண்களில் மீண்டும் போய்விடக் கூடாது.

அதுபோன்றே பூச்சியங்கள்கூட நம்மைப் பெரிய சிக்கலில் ஆழ்த்திவிடும். பத்து இலட்சம் என்ற எண்ணைக் குறிக்கும்போது ஒரு பூச்சியம் குறைந்தாலும் அதிகமானாலும் சிக்கல்தான். தொகையே மாறிவிடும். இந்தச் சிக்கலைத் தவிர்க்க, 10 இலட்சம் எனப் பாதி எண்ணும் பாதி எழுத்துமாக எழுதிச் சமாளிப்பவர் உண்டு.

கிராமத்திலிருந்து வேலை தேடி இதழியல் அலுவலகத்திற்கு வரும் பலருக்கும் முதலில் கொடுக்கப்படுவது, (புரூப்)மெய்ப்புப் பார்க்கும் வேலைதான். அவர்கள் அதில் ஓரளவு தேரினால்தான் அடுத்து, செய்தியாளர்(நிருபர்) பணி. அதில் ஏதும் தவறு நடந்தால் அவர் வேலை காலி. தட்டச்சு செய்தவர், உதவி ஆசிரியர், ஆசிரியர் எனப் பலரைக் கடந்துதான் ஓர் இதழ் அச்சுக்குப் போகிறது. அதில் தவறு நடந்தால் ஆசிரியர், உதவி ஆசிரியரைப் பார்ப்பார். உதவி ஆசிரியர், மெய்ப்பாளரைப் பார்ப்பார். மெய்ப்பாளர், தட்டச்சாளரைப் பார்ப்பார். தட்டச்சாளர், 'தப்பைச் சரிபண்ணத்தானே நீங்க இருக்கீங்க?' என மெய்ப்பாளர் மேல் பழியைப் போட்டுவிடுவார். பெரிய தவறு இல்லாமல் என்றுகூட சொல்ல முடியாது; கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும்வரை மெய்ப்பாளர் பிழைத்தார்.

தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போல் இன்று பலரும் மெய்ப்பாளர் பணியாற்றுகிறார்கள். தெரியாதவற்றையெல்லாம் தெரிந்ததுபோல் காட்டும் பலரும் இருக்கிறார்கள். அண்மையில் பதிப்பாசிரியர் ஒருவரின் கட்டுரையில் 'காரி உமிழ்ந்தான்' என்ற வரி இருந்தது. அதைச் சுட்டிக் காட்டி, "சரியா?" என வினவினேன். "சரிதான்" என்றார். "'காறி உமிழ்ந்தான்' என்றுதானே வரவேண்டும்?" என்றதற்குக் கொஞ்சம் யோசித்துவிட்டு, "'காரி'தான் சரி; நான் அப்படித்தான் எழுதுவேன்" என்றார்.
அடுத்து, ஓரிடத்தில் 'அரைகுறை' என்ற சொல் வந்திருந்தது. ஒரு பழைய நூலில் அறைகுறை என இருந்தது நினைவுக்கு வந்தது. உடனே அகராதியை எடுத்துப் பார்த்தேன். அறைகுறை என்றால் அறுத்தலும் குறைத்தலும் எனப் பொருள் இட்டிருந்தது. அரைகுறைக்காரரிடம் அதை எடுத்துக் காட்டினேன். அந்த அகராதியே தவறு என்றார்.

வாழ்த்துக்கள் என எழுதுவோர் இன்னும் பலர். 'க்' வராது என்று சொன்னால், கேட்பதில்லை. 'பல ஆண்டுகளாக இப்படித்தான் எழுதி வருகிறோம். இப்பொழுது வந்து விதியை மாற்றாதீர்கள்' என எரிந்து விழுவார்கள்.

கண் செருகும்போது, பசிக்கும்போது, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே, வானொலி கேட்டுக்கொண்டே, பக்கத்தில் இருப்பவருடன் பேசிக்கொண்டே மெய்ப்புப் பார்ப்பதைத் தவிர்க்கவேண்டும்.
அதுபோல் அச்செழுத்து, கருப்பாய் இருந்தால் நீலம்/ சிவப்பு/ பச்சை என வேறு வண்ண எழுதுகோலால்தான் திருத்தத்தைக் குறிக்கவேண்டும்.
இவை போன்று நிறைய விதிமுறைகளைப் பின்பற்றினால்தான் ஓரளவுக்காவது மெய்ப்பு சிறக்கும். இவை குறித்து இந்தப் பயிற்சியில் கற்றுத் தருவர் என எதிர்பார்க்கலாம்.

இந்தத் துறை வளராததற்கு உரிய காரணங்களுள் ஒன்று: இதில் வருவாய் மிகக் குறைவு. பக்கத்திற்கு இரண்டு ரூபாய் கொடுத்தால் அதுவே அதிகம் என்ற நிலை. ஐந்து ரூபாய் கொடுத்தால் சிறிது முன்னேற்றம் உண்டு.

இன்றைய தமிழ்ச் சூழலில் எவ்விதம் மெய்ப்புப் பார்ப்பது என்பதில் இன்னும் பொதுக் கருத்து உருவாகவில்லை. முதலில் இதுவே பெரிய சவால்தான். தமிழில் இதுவரை மெய்ப்பை மட்டுமே மையப் பாடமாகக் கொண்டு ஒரு பட்டயப் படிப்பு என்ற சிந்தனையே புதுமையானது.

இதனை இணையதளத்தில் ஒரு செய்முறைப் பாடமாக அளித்தால் மிகவும் பயன்படும். எந்தச் சொல்/ வாக்கிய அமைப்பு சரி எனச் சொல்வதற்கும் இந்தத் தளம் பயன்படும். அது குறித்துக் கேள்வி எழுப்பவும் பதில் அளிக்கவும் நிபுணர் குழு இயங்கவேண்டும். ஆயினும் இவை அனைத்திற்கும் நிதி முதற்கொண்டு செயலாக்கம் வரையில் பலரின் உதவி தேவை. ஆர்வம் உள்ளவர்கள் உதவுமாறு அவர் வேண்டியுள்ளார். இந்த நல்ல முயற்சி வெற்றியடைய நம்மால் முடிந்தவரை உதவுவோம்.

இதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினால், அடுத்து இன்னும் பலவற்றுக்கும் பயிற்சி அளிக்கலாம்.
1, தமிழை உச்சரிப்பதற்கும் தெளிவாகப் பேசுவதற்குமான பயிற்சி
2, பதிப்பாசிரியர் பயிற்சி
3, திறனாய்வாளர் பயிற்சி
போன்ற பயிற்சிகளை முறையாக அளிக்கவேண்டிய தேவையும் நம் சமூகத்தில் உள்ளது. அவற்றைப் படிப்படியாகச் செயலாக்கலாம்.


மெய்ப்பாளர் பயிற்சி குறித்து மேலும் அறிய விரும்புவோர்,
பதிப்புத் தொழில் உலகம்,
2, மனோகரன் தெரு,
சென்னை- 600031
tamilnool@touchtelindia.net
என்ற முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

இந்தக் கடினமான, சிக்கலான கருவை எடுத்துக்கொண்டு கற்றுத்தருவதற்கும் கற்றுக்கொள்வதற்கும் முன்வரும் அனைவருக்கும் வாழ்த்துகள்!

No comments: