!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, March 01, 2005

கவிதாயினி லீனா மணிமேகலை

கரப்பான் பூச்சிகளைப் பார்த்துச் சிலர் 'மிகவும்' அஞ்சுவதைப் பார்த்திருப்போம். பல்லியைப் பார்த்துச் சிலர்; எட்டுக்கால் பூச்சியைப் பார்த்துச் சிலர்.. என அஞ்சுவது அன்றாடக் காட்சி. இரத்தத்தைப் பார்த்தால் சிலருக்கு மயக்கமே வந்துவிடும். ஆடு, கோழி, பன்றி, ஒட்டகம்....எனப் பாவப்பட்ட பிறவிகளைப் பலி கொடுக்கும் இடத்திலிருந்து தலைதெறிக்கச் சிலர் ஓடுவதுண்டு. தாய் மார்கள் தம் பிள்ளைகள் இந்தக் காட்சிகளைப் பார்த்துவிடாமல் சேலைத் தலைப்பால் பிள்ளை முகத்தை மூடுவதுண்டு.

ஆனால், இந்த குணம், பெரிய அளவில் மாறி வருகிறது. இப்பொழுதெல்லாம் தொலைக்காட்சியில் அடிதடி, குத்துவெட்டு, கொடூரம், குரூரம், படுபயங்கரம்...என்ற அடைமொழிகளுக்கு உரிய காட்சிகள் அடிக்கடி வருகின்றன. அப்பொழுதெல்லாம் ஏதேனும் சிற்றுணவைக் கொறித்தபடி வேடிக்கை பார்ப்போர் அதிகரித்து வருகின் றனர். காரணம், இவை, சாதாரண காட்சி களாகிவிட்டன. பலர் வீட்டுக் குழந்தைகளே கூட "டிஷ்யூம் டிஷ்யூம்' எனச் சிறப்பு ஒலி யெழுப்பி, "சடசடசடசட'வெனத் துப்பாக்கி யால் சுடுவது, பெற்றோருக்குப் பெருமையாய் இருக்கிறது.

வாழ்வின் மீது வன் முறையின் தாக்கம் இவ்வாறு இருக்க, படைப்பில் அதன் வீச்சு இருக்கத்தானே செய்யும்!

வீசிய சொல்லில்
அறுந்து தொங்கியது
தலை
- என்கிற லீனா மணிமேகலையின் படைப்புகளுள் வன்முறையின் பல கோணங் களைக் காண முடிகிறது.

பயணத்தின்
ஒவ்வொரு கட்டத்திலும்
உதிர்த்துவிட நேர்கிறது
உறவுகளை
ரத்தம் சொட்ட சொட்ட

தலைகளை மிதித்துக் கொண்டே
எடுத்து வைக்கிறேன்
அடுத்த அடிகளை...
- என்றும்

தனிமை என்னை
மூர்க்கமாகத் தாக்கியது...
- என்றும்

உணர்வுகள் ஏறி மிதித்து
மனசு முழுக்க ரணம்

மூளையெங்கும் விதைத்த
தீயின் நாற்றுகள்

கண்களில் கசியும்
கனவுகளின் குருதி...
- என்றும்

மௌனங்கள்
எப்பொழுதும்
செயலற்றவையாகவே
தோன்றினாலும்
கூர் கத்தியின் பதத்தை
தடவிப் பார்க்கும்
நடுக்கத்தை
ஏற்படுத்தவே செய்கின்றன
- என்றும்

பழைய நண்பன்
என்ற சொல்
கறுப்பு ரத்தத்தால் எழுதப் பட்டது
- என்றும் லீனாவின் வரிகள் தொடர்கின்றன.

இங்கு எடுத்துக் காட்டிய வரிகளைக் கூர்ந்து பாருங்கள். அழுத்தம், அடர்த்தி, தீவிரம் ஆகியவற்றோடு ஒரு புதிய வெளிப்பாட்டு முறையைக் காணலாம். அதே நேரம் வன்முறையின் தீநாக்குகள் கடுநடம் ஆடுவதையும் கவனிக் கலாம். வெட்டிக்கொண்டு வா என்றால் கட்டிக்கொண்டு வருகிற பணியாளரைப் போல், சொற்கள் இவருக்குக் கீழ்ப் படிந்துள்ளன; இவரின் உணர்வுகளை-எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளன. எதிர்மறையான சொற்களை உரத்த குரலில் நாடகத் தன்மை யுடன் சொல்லி, சினத்தை வெளிப்படுத்துவோர் பலர். ஆனால் லீனா, இத்தகைய உணர்வுகளைக் கவித்துவத் துடன் வெளிப்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளார்.

கவிஞர்கள் பலர், பொதுவாக ஒரே முறையில், கருவில் - தொழிற்சாலை உற்பத்திப் பொருட்களைப் போல் - படைத்துத் தள்ளுவது கிடையாது. வெவ்வேறு உணர்வுகளை ஒவ்வொரு கவிதையிலும் வெளிப்படுத்து வதில்தான் ஒருவரின் தனித் துவம் புலனாகும். லீனாவின் கவிதைகளில் வன்முறையின் தாக்கம் மட்டும் இருப்பதாகப் பொருள்கொள்ளக் கூடாது. பாலியல் உணர்வுகளையும் இவர், மிகவும் நளினமாகச் சித்திரிக்கிறார்.

தனிமை வேடிக்கை
பார்த்துக்கொண்டிருந்த
தருணத்தில்
நீயும் நானும்

நான் ஏதேதோ பேசிக்கொண்டிருக்க
நீ உறுத்துப் பார்த்திருந்த
அவயவங்களின் சலனங்களை
என் உதட்டில் அழுந்தியபடி

நேர்ந்துவிடப்போகும்
தொடுதலை
அறிவித்துக்கொண்டிருந்தன
அவிழ்ந்து நழுவும்
உணர்வுகள்

அறையில்
நீயும் நானும்
இல்லாத ஏதோ ஒன்று
நம்மை இயக்குவித்தபடி
எப்படி நிகழ்ந்தது
என்று தெரியாமலே
நிகழ்ந்துவிட்டிருந்தது

அந்த முதல் முத்தம்
- என்ற இவரின் விவரணை, ஒரு படம் போல் நம் மனங் களில் ஓடுவதைக் காணலாம்.

விடைபெற்றுச்
சென்ற பின்னும்
நீ
அமர்ந்திருந்த தடமும்
தொட்டிருந்த தோளும்
தந்திராத முத்தங்களும்
உன்னை நிகழ்த்திக்கொண்டேயிருந்தன
பிழையில்லாமல்
- என்கிறார்.

சிக்கிக்கொண்ட இசைப்பேழையின் இழை, ஒரே வரியை மீண்டும் மீண்டும் ஒலிப்பதுபோல் சில நிகழ்வுகள், நம் மனங்களில் ரீங்கரிக்கும். அந்த உணர்வை இந்தக் கவிதையின் வழியே மிக அழகாக நமக்குள் மீண்டும் நிகழ்த்துகிறார், லீனா.

...என் ஆறாவது புலனாய்
அறியப்பட்டிருந்த உன்னிலிருந்து
கொஞ்சம் கொஞ்சமாய்
விண்டு விட்டிருந்தது
என் பூமிப் பந்து

திசை மாறும் ரேகைகள்
வளர்ந்துவிட்ட திசைகள்
ஏதோ ஒரு காரணம்
நம்மைச் சுரந்துகொண்டிருந்த
மெல்லிய உணர்வு பிளந்து
முத்தமிட்ட இடங்கள்
சுட்ட புண்களாய்
குழிந்துவிட்டிருந்தது
பிடுங்கி எறியப்பட்ட
புதிய நிலத்தின்
நீரும் வெளிச்சமும்
பழகிவிடும் என்றாலும்
முதல் சந்திப்பின்
கபடமற்ற
அறிமுகச் சிரிப்பை
அன்று கண்ட
கனவுகளின் பிரதேசத்தில்
பாதுகாப்பாய் வைத்திருக்கிறேன்

என்றாவது
உன்னைப் பார்க்க நேர்கையில்
சலனமற்றுச் சிரிக்க
- என்ற கவிதைக்குள் ஒரு பெரிய கதையே புதைந் திருக்கிறது.

ஒற்றையிலையென என்ற கவிதைத் தொகுப்புக்குச் சொந்தக்காரரான லீனா, விருதுநகர் மாவட்டம்- மகராஜபுரம், புதுப்பட்டி என்ற ஊரில் பிறந்தவர். திரைத் துறையில் பணியாற்றுகிறார். மாத்தம்மா, பறை, தீர்ந்து போயிருந்தது காதல், Break the shackles, Connecting Lines ஆகிய குறும்படங்களை இயக்கியுள்ளார். செல்லம்மா, வெள்ளைப் பூனை ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கனவுப்பட்டறை என்ற ஊடகவியல் நிறுவனத்தை நிறுவியிருக்கிறார். பொறியியல் பட்டதாரியான லீனா, கவிதைகள் "கட்டி' வருகிறார்.

நான்
விரும்பும் என்னை
எப்பொழுதும்
விரும்புவதில்லை
இந்த உலகம்

யார் விரும்பும் என்னையும்
ஒருபொழுதும்
விரும்புவதில்லைநான்
-என்கிறார் லீனா மணிமேகலை.

நாணயத்தின் பூம்பக்கத்தில் லீனா; தலைப்பக்கத்தில் உலகம். இதோ, சுண்டுகிறேன். சரசரவெனச் சுழன்று, என் உள்ளங்கைகளுக்குள் நாணயம் ஒளிந்துகொள்கிறது. வாசகர்களே நீங்கள் சொல்லுங்கள். என் கைக்குள் இருப்பது, பூவா? தலையா?



அமுதசுரபி, மார்ச் 2005

No comments: