ஓய்வெடுக்கிறார் வலம்புரி ஜான்
'நீங்கள் எப்போது ஓய்வாக இருப்பீர்கள்? நான் அப்போது வந்து உங்களைச் சந்திக்கிறேன்' என ஒருவர் வலம்புரி ஜானிடம் கேட்டார். அதற்கு அவர், 'ஓய்வு என்பது மரணத்திற்குப் பின் வருவது' என்று பதில் அளித்தார். அதன்படி கடந்த ஞாயிறு 8-5-05 அன்று ஜான் நிரந்தர ஓய்வு கொண்டுவிட்டார். இராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு ஞாயிறு அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டது. காலை 3.30 மணிக்கு அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 59 வயது, என்பது சராசரி ஆயுட்காலத்தை விடக் குறைவானதே. ஆனால், இந்தக் குறுகிய ஆண்டுகளுக்குள் அவர் சாதித்தவை ஏராளம்.
மாங்காட்டுக்கு அருகில் குமணன்சாவடியில் உள்ள அவரின் இல்லத்தில் அவரின் உடல் வைக்கப்பட்டிருந்தது. அதே ஞாயிறு அன்று மாலை இறுதி மரியாதை செலுத்தச் சென்றேன். குமணன்சாவடியில் அவர் வீட்டைக் கண்டுபிடிக்கவே பாடுபடவேண்டியிருந்தது. அங்கிருந்த பலர், வலம்புரி ஜானையும் அவர் உயிர் நீத்ததையும் அறியவில்லை. வழி விசாரித்தபோது, தெரியாது என்று சொல்லக் கூசிய சிலர், தவறான வழிகளைக் காட்டினர். பிறகு, கடைசியாக அவர் வீட்டைக் கண்டுபிடித்தேன்.
மெளனத்தின் ஆட்சியில் இருந்த அந்த இடத்தில் நுழைந்தேன். கண்ணாடிப் பெட்டிக்குள் அவரின் உடல். வாயிலும் மூக்கிலும் பஞ்சு அடைக்கப்பட்டிருந்தது. எங்கள் கடமை தீர்ந்தது என்பது போல், ஏற்கெனவே கிடத்தப்பெற்ற மாலைகள், கதவின் மேல் தொங்கிக்கொண்டிருந்தன. நான் கொண்டு சென்ற மாலையை அணிவித்தேன். கை கூப்பி வணங்கினேன்.
அவர் தலைமாட்டில் சிலுவையில் அறையப்பெற்ற கர்த்தரின் உருவச் சிலை. அதன் அருகில் மெழுகுவத்திகள் சுடர்விட்டு எரிந்துகொண்டிருந்தன. அந்த அறையில் அவரின் பெரிய அளவிலான புகைப்படங்கள் சில இருந்தன. ஒரு புகைப்படத்தில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து சிரித்துக்கொண்டிருந்தார். அதன் கீழ் 'தமிழ் புயலே வருக' என்று எழுதியிருந்தது.
அவர், ஒரு புயலாகத்தான் பவனி வந்தார்.
இலக்கியம், இதழியல், அரசியல்... என எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் அதில் அவரின் வீச்சு, கவனிக்கத்தக்கது. அடிப்படையில் தமிழ் அறிவும் புலமையும் கவித்துவமும் இருந்ததால் அவர் எந்தத் துறையைத் தொட்டாலும் முத்திரை பதித்தார். 'நான் கழுதையான போது..' என்ற அவரின் தன்வரலாற்று நூல் அவரைப் பற்றி ஓரளவு எடுத்துக் காட்டும்.
எம்.ஜி.ஆர். தொடங்கிய 'தாய்' வார இதழின் ஆசிரியராகப் பணியாற்றி, பலரை அடையாளம் காட்டியவர். வளரத் துடிக்கும் இளைஞர்களை ஊக்குவிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டியவர். ஆயிரக்கணக்கான நூல்களுக்கு அணிந்துரை வழங்கியவர்.
பல்வேறு இதழ்களிலும் தொடர்கதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்று எழுதிக் குவித்தவர். தமிழ்நாட்டு அரசியலை நன்கு அறிந்தவர். தலைவர்கள் பலரோடும் நெருங்கிய நட்புக் கொண்டவர். பாராளுமன்ற உறுப்பினராகவும் சிறந்த முறையில் பணியாற்றியவர்.
மேடைவாசி என்று கூறத்தக்க அளவுக்குப் பெரும் பேச்சாளராக விளங்கினார். அவரின் சொற்பொழிவைக் கேட்டுப் பூரித்தவர்கள் பலர். 'வார்த்தைச் சித்தர்', 'ஞானபாரதி', 'கவிஞானி' என்றெல்லாம் நிறைய பட்டங்கள், அவரை அலங்கரித்தன. ஆங்கிலத்திலும் பேச வல்லவர்.
சர்வ சமய ஒருமைப்பாட்டிற்கு உழைத்தவர். இந்து, இஸ்லாம், கிறித்தவம்.. என எந்த மதமானாலும் அதைப் பாராட்டி, அதன் சிறப்புகளை எடுத்துரைத்தார். காழ்ப்புணர்வு கொள்ளாதவர். 'எல்லா ஆறுகளும் கடலில் கலக்கின்றன; எல்லா மதங்களும் அன்பையே போதிக்கின்றன' எனச் சென்ற இடமெங்கும் முழங்கியவர்.
'நீ ஒரு புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருக்கும்போதே அது உன்னைப் புரட்டிப் போடுகிறதா? அதுதான் சிறந்த புத்தகம்'
என்பது போன்று பல பொன்மொழிகள், அவரிடமிருந்து வெளிவந்துள்ளன.
'அவருடைய படைப்புகள் பல, இன்னும் நூல் வடிவம் பெறவில்லை' என்று கடந்த மாதம் சந்தித்தபோது கூறினார். அதைக் குறித்து அவரின் மருமகனிடம் கூறினேன். "பாதுகாத்து வையுங்கள்; நூல்களாக வெளியிட முயலுங்கள்" என்றேன். "சரி" என்றார். வெளியே வந்தபோது, அவரின் வாசகர் ஒருவர், அவரைப் பற்றி நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தார்.
'மக்கள் குரல்' மாலை நாளிதழில் அவரின் மரணச் செய்தி வந்திருந்தது, 59 வயதில் இறந்தவரை 70 வயதில் இறந்தார் என்று. அடுத்த நாள்தான் அடக்கம் நடைபெற இருந்தது. ஆனால், அன்றே அடக்கம் ஆகிவிட்டதாகவும் எழுதியிருந்தது. அது குறித்து உறவினர்கள் சிலர், வருந்தினார்கள்.
நேற்றிருந்தவர் இன்றில்லை என்பதே உலகின் பெருமை எனத் திருக்குறள் கூறுகிறது.
'நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு'
அப்படிக் கூறிய திருக்குறள், நேற்றும் இருந்தது; இன்றும் இருக்கிறது. உயிர் என்றாவது ஒருநாள் போகத்தான் செய்யும். அது, நமக்கும் தெரியும். என்றாலும் ஒரு நப்பாசை. மரணத்தை வெல்லவேண்டும் என்று. ஆனாலும் மரணத்தின் கத்தி, ஒவ்வொரு நாளும் நம் கழுத்தை நோக்கிக் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிக்கொண்டேதான் இருக்கிறது. இதையும் திருக்குறள்தான் சொல்கிறது.
'நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாள்அது உணர்வார்ப் பெறின்'
ஆயினும் 'நல்லவன் வாழ்வான்' என நம் மரபு சொல்கிறது. அதன்படி வலம்புரி ஜான் வாழ்வார்.
No comments:
Post a Comment