!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, May 24, 2005

தமிழ் தமிழர் தமிழ்நாடு!!???

அண்ணாகண்ணன்

உண்மையில் நாம் மிகவும் இக்கட்டான நிலையில்தான் இருக்கிறோம். கடந்த ஞாயிறு அன்று தமிழன் தொலைக்காட்சியில் இயக்குநர் சீமான், மக்கள் எழுதி அனுப்பிய கேள்விகளுக்கு விடையளித்துக்கொண்டிருந்தார். பேச்சின் இடையே அவர் சொன்னது: அண்மையில் ஒருநாள் அவரும் அறிவுமதியும் திரையரங்கு ஒன்றிற்குச் சென்றார்களாம். அங்கு நின்றிருந்த இளைஞர்கள் அவ்வளவு பேரும் மேற்கத்திய கலாசாரம் உடையில் தெரிய, கலப்புத் தமிழில் பேசிக்கொண்டிருந்தார்களாம். அப்போது அறிவுமதி சொன்னது: 'நாம் போராட்டத்தை மிகவும் தாமதமாகத் தொடங்கியிருக்கிறோம். நாம் இப்போது மிகவும் பின்தங்கி இருக்கிறோம். எல்லாம் நம் கையை மீறிச் சென்றுவிட்டன'.

இந்தக் கூற்றில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் சிந்திப்பது நல்லது.

மிகவும் அச்சம் தரும் உண்மை என்னவெனில், பெரும்பான்மைத் தமிழர்களுக்குத் தமிழ்ப் பற்று குறைந்துவிட்டது. அது மட்டுமின்றி, அவர்களிடம் தமிழை வலியுறுத்துவதை அவர்கள் தவறு என்றும் கருதத் தொடங்கிவிட்டார்கள். தவறு என்ற மனப்பான்மை வளருவதால் நல்ல தமிழைப் பேசும் தவற்றைப் பலரும் செய்வதில்லை. இயல்பான பேச்சு என்ற பெயரில் எவ்வளவுக்கு எவ்வளவு வேற்றுமொழிச் சொற்களைக் கலக்க முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு கலக்கிறார்கள். மிகவும் கவனிக்க வேண்டியது, இப்படிக் கலப்பது குறித்து அவர்களுக்கு எந்தக் குற்ற உணர்வும் இல்லை. இதுவே சரி என்றும் கருதுகிறார்கள்.

இந்த மனப்பான்மையின் அடிப்படையிலேயே அவர்களின் பல செயல்களும் அமைகின்றன.

1. குழந்தைகளுக்கு வடசொற்கலப்புடன் பெயர் வைப்பது, 'மம்மி', 'டாடி' என்று அழைக்கவைப்பது, தம் குழந்தைகளை ஆங்கிலப் பாட வழியில் சேர்ப்பது, ஆங்கிலத்தில் பேசுபவரைப் பெரிய அறிவாளியாகக் கருதுவது...... போன்றவை இன்று எங்கும் காணத் தகுந்த காட்சிகள்.

2. தம் முதலெழுத்துகளை ஆங்கிலத்திலேயே வைத்துக்கொள்வோர் பெருகி வருகின்றனர். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் அதன் பிறகு அவர்கள், தமிழை வலியுறுத்திப் பேசும் தகுதியையும் இழந்துவிடுகிறார்கள்.

3. கடைகள், வணிக நிறுவனங்கள், விளம்பரங்கள்.. என வணிகம் சார்ந்த அனைத்திலும் ஆங்கிலமே கோலோச்சுகிறது. இன்னும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளவரின் முகவரி அட்டை முதற்கொண்டு, கடிதக் கட்டு, தம்மைப் பற்றிய அறிமுகம், விலைச் சீட்டு, வணிக ஒப்பந்தம்... என அனைத்தும் ஆங்கிலத்தில் இருப்பது எழுதப்படாத விதியாகிவிட்டது.

4. துறைதோறும் துறைதோறும் புழங்குகிற வேற்றுச் சொற்களைக் கணக்கெடுக்கத் தொடங்கினால் தமிழ் அகராதி தோற்றுவிடும் ஆபத்து உள்ளது.

5. எழுத்தாளர்களும் வெட்கம் இல்லாமல் இந்தப் போக்குக்குத் துணை போகின்றனர். தமிழ்ப் படைப்புகள் பலவும் வேற்று மொழிச் சொற்களைத் தம் உடலோடு ஒட்டிக்கொண்டுள்ளன. புகழ் பெற்ற, மூத்த எழுத்தாளர்களே இது குறித்து அக்கறை ஏதும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். எங்கே அதை ஆதரித்தால் தாம் நாளை கலப்புத் தமிழில் படைக்கத் தடை உண்டாகிவிடுமோ என்ற அச்சத்தில் 'படைப்பிலக்கியத்தில் தூய தமிழைப் பேண முடியாது' என்று மறுக்கின்றனர். அவர்களுக்கு அதற்குத் தகுதியும் திறமையும் இல்லை என்று ஒப்புக்கொள்ள அவர்கள் எவரும் முன்வருவதில்லை. மாறாக, தம் குறையைத் தமிழின் குறையாக ஏற்றிக் கூறுவதில் எழுத்தாளர்கள் முனைப்புடன் உள்ளனர்.

6. தமிழாசிரியர்களும் தமிழ்ப் பேராசிரியர்களும்கூட தம் எல்லையான வகுப்பறை அளவிலும் கூட நல்ல தமிழில் பேசுவதில்லை; மாணவர்களையும் பேசத் தூண்டுவது இல்லை. 'கூலிக்கு மாரடிப்பது' என்பதுபோல் வகுப்பறைக்குள் நுழைந்து, நேர நிரப்பிகளாக நிற்கிறார்கள். தமிழை வைத்து வயிறு வளர்க்கும் இவர்கள், தன் பக்க இலக்கிலேயே கால்பந்தை அடிக்கிறார்கள்(same side goal). மாறும் உலகில் தமிழால் எதுவும் முடியாது என்ற எண்ணத்தை வளர்ப்பவர்களாகவே இருக்கிறார்கள்.

7. தமிழ்நாட்டு ஊடகங்கள், தமிழுக்குப் பெரும் கேட்டினைச் செய்து வருகின்றன. தலைப்புகளைத் தமிழில் வைக்காமல், தமிழைச் சரியாக உச்சரிக்கத் தெரியாமல் நிலைமையை மோசமாக்கி வருகிறார்கள். இவர்களும் நல்ல தமிழுக்கு எதிர்நிலையையே எடுக்கிறார்கள். தம்மைச் சார்ந்த எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் நேயர்களுக்கும் தவறான வழிகாட்டி வருகிறார்கள்.

8. அரசு நிர்வாகம், நீதிமன்றம், ஆலயம், கல்வி, தொழில்நுட்பங்கள்.. எனப் பல துறைகளிலும் தமிழ், இரண்டாம் தர நிலையிலேயே உள்ளது.

இந்தச் சூழ்நிலையில் தமிழை எல்லாத் துறைகளிலும் வலியுறுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளோம். தமிழைப் பேசுவோர், அதுகுறித்துத் தாழ்வு மனப்பான்மை கொள்ளாமல் பெருமிதம் கொள்ளச் செய்வது, பெரிய சவாலாக உள்ளது.

நல்லவேளையாக, தமிழ் அரசியல் கட்சிகள் சிலவற்றுக்குத் தமிழைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது. முதல் நோக்கில் இது, பாராட்டப்பட வேண்டியது. இவர்கள் வெறும் அறிக்கை மட்டும் விட்டுக்கொண்டிருக்காமல் களத்தில் இறங்கிப் போராட முன்வந்துள்ளனர். இதில் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. காரணம், தமிழர்கள் தமிழை விட்டு விலகி நிற்கிறார்கள். இன்றைய சூழலில் தமிழர்களிடம் தமிழைச் சொல்லி வாக்குக் கேட்க முடியும் என்பதை நான் நம்பவில்லை.

இப்படி வெகு சிலர், போராட்டக் களத்தில் நிற்கும்போது களத்தில் இறங்கிப் போராட முடியாதவர்கள் சும்மாவாவது இருக்கலாம். வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைப்பது போல், எதிர்க்கருத்தைக் கூறி, மட்டையடி அடிக்காமல் இருக்கலாம். இந்தப் போராட்டத்தால் தமிழ் மக்கள், தமிழுணர்வு பெற்றுவிடுவார்கள் என்ற நப்பாசையில் இருக்கும் சிலர், அதனால் தொடக்கத்திலேயே சோர்ந்துபோய்விடலாம்.

இந்தப் போராட்டம், முனை மழுங்கிப் போவது, நம்மிடம் இருக்கும் மொக்கைக் கத்தியையும் நாம் இழந்துவிடுவதற்குச் சமானம். தமிழ்ப் பாதுகாப்புப் போராட்டத்தைப் பலவீனப்படுத்துவது, நம் தலையில் நாமே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வது போலாகும்.

ஏறத்தாழ, பத்து ஆண்டுகளுக்கு முன் இத்தகைய ஒரு போராட்டத்தில் நானும் கலந்துகொண்டேன். 'செந்தமிழ் விரும்பிகள் மாமன்றம்' என்ற அமைப்பின் சார்பில், பெயர்ப் பலகைகளைத் தமிழில் வைக்கக் கோரி, சென்னையில் சில சாலைகளின் வழியே பேரணி நடத்தினோம்; காவல் துறையின் அனுமதியுடன்தான். வழியில் உள்ள கடைகளில் எல்லாம் துண்டறிக்கையை விநியோகித்து வந்தோம். இறுதியில் ஒரு கூட்டம் போட்டு, சில தீர்மானங்களை நிறைவேற்றினோம். அன்று எங்களால் செய்ய முடிந்தது அவ்வளவே.

இன்றைய நிலையில் இந்தக் கோரிக்கைக்காகப் போராடுவதற்கு ஆட்கள் கிடைப்பதே அரிது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள், தம் வேலையை விட்டுவிட்டு, அக்கினி நட்சத்திர வெய்யிலில் தொண்டை கிழியக் கத்தி, ஆர்ப்பாட்டம் செய்து, வாகனங்களை மறித்து, வேற்று மொழி விளம்பர/ பெயர்ப் பலகைகளைக் கரிநெய் பூசி அழித்து, கைதாகி, சிறை செல்லுவது எதற்காக?

அரசின், வணிக நிறுவனங்களின், பொதுமக்களின் கவனத்தைத் தமிழின்பால் ஈர்ப்பதற்கே. அவர்கள் முயற்சிக்கு நாம் ஆதரவளிக்கா விட்டாலும் எதிர்க்காமலாவது இருக்கலாம். உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கிறதா? ஐயப்பாடு இருக்கிறதா? வேறு ஆலோசனை இருக்கிறதா? போராடும் தோழர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். அவர்கள், அணுக முடியாத தொலைவில் இல்லை.

போராட்டம் எப்படி அமையலாம் என்பதை ஆலோசனையாகக் கூறலாமே அன்றி, போராட்டமே தவறு என்று அவர்களைத் தூற்றக் கூடாது. நம் பொறுப்பு உணர்ந்து செயல்பட வேண்டும். நாம் சொல்வதைக் கேட்கவும் ஆமோதிக்கவும் ஒவ்வொருவருக்கும் நாலு பேர் இருக்கத்தான் செய்வார்கள். ஆகவே வலைப்பதிவாளர்கள், தமிழைக் குறித்து விவாதிக்கும் போது மிகுந்த விழிப்போடு இருக்குமாறு வேண்டுகிறேன். சமூகத்திற்கு நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் நன்மை செய்யும் ஒரு முயற்சிக்கு நாம் நம் வேற்றுமைகளை மறந்து ஆதரவு தெரிவிக்கவேண்டும்.

1 comment:

Anonymous said...

Only solution is independent Tamil Nadu.