!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, June 10, 2005

புத்தகங்களும் நானும்அண்ணாகண்ணன்

வலைப்பதிவு உலகில் நூல்களின் சங்கிலி வரிசையாகச் சிலர் எழுதி வருகின்றனர். அவ்வரிசையில் இணையுமாறு ஜெயந்தி சங்கர் அழைத்தார். அவர் அழைத்திராவிட்டால் இப்பொழுது இதை நான் எழுதியிருக்க மாட்டேன். அதற்காக அவருக்கு என் நன்றி. சற்றே வேறான ஒரு கோணத்தில் என் நூலுறவுகளைக் குறிப்பிடுகிறேன்.

சுமார் ஐந்து வயதிலிருந்தே எனக்குப் புத்தகங்களுடனான உறவு தொடங்கிவிட்டது. ராணி காமிக்ஸ், லயன் காமிக்ஸ்..., அம்புலிமாமா, கோகுலம்... எனச் சில கிடைத்தன. கிடைக்கும் எல்லாவற்றையும் ஆர்வத்துடன் வாசித்துக்கொண்டிருந்தேன். காமிக்ஸ் புத்தகங்களை அடுத்து, கல்கி, சாண்டில்யன் போன்றோரின் வரலாற்றுப் புதினங்கள், பாலகுமாரன், சுஜாதா போன்றோரின் சமூகப் புதினங்கள் என ஏராளமாக வாசித்திருக்கிறேன்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள வேப்பத்தூரில் என் உறவினர் ஒருவர் நூலகராய் இருந்தார். எனவே விடுமுறைக்கு ஊருக்குச் செல்லும்போதெல்லாம் விரும்பும் நூல்களையெல்லாம் எடுத்து வாசிக்க முடிந்தது.

திருவாரூரில் நான் ஒரு விடுதியில் தங்கிப் படித்தேன். அப்போது அந்தப் பள்ளியின் தாளாளர் ஜானகி அம்மாள் அவர்கள், நூலகத்திலிருந்து நூல்கள் எடுத்து வாசிக்க ஊக்குவித்தார். அதுமட்டுமின்றி, படித்த நூல்களில் உங்களுக்குப் பிடித்த/ பிடிக்காத அம்சங்கள் என்னென்ன என்று ஒரு குறிப்பேட்டில் எழுதிவரச் சொன்னார். அப்படிச் சில புத்தகங்களைக் குறித்து, ஓர் ஏட்டில் எழுதி வந்தேன். அப்போது எனக்கு 15 வயது. புத்தகத்தின் பெயர், ஆசிரியர், பதிப்பகம், பக்கம், விலை எனச் சில விவரங்களையும் எழுதினேன். பின்னர் நாட்குறிப்பு எழுதத் தொடங்கியபோதும் இந்தப் பழக்கம் தொடர்ந்தது. அன்றன்று படித்த புத்தகத்தைப் பற்றி ஒரு சிறிய குறிப்பு / விமர்சனம் எழுதி வைத்தது உண்டு.

பதின்ம வயதில் மாலைமதி வாசித்தேன். அப்போது அதில் பாலியல் சார்ந்த காட்சிகள் இல்லாமல் கதையே இருக்காது. 'மாலைமதி படிக்காதே. கெட்டுப் போய்விடுவாய்' எனப் பெரியவர் ஒருவர் எச்சரித்தார்.

அதே பருவத்தில் அகிலனின் 'சித்திரப் பாவை'யையும் வாசித்த நினைவு உண்டு. பூவண்ணனின் 'புதையல் வீடு' கூட படித்துள்ளேன். சிலவற்றை நூல்களாகவும் தொடராக வெளிவந்த பலவற்றைத் தைத்துக் கட்டிய (பைண்டு செய்த) தொகுதிகளாகவும் வாசித்துள்ளேன்.

கதைகளுக்குப் பிறகு வாழ்க்கை வரலாறுகள், பயண இலக்கியங்கள், அறிவியல் புனைகதைகள் என என் கவனம் திரும்பியது. 'காரின் அழிவுக் கதிர்' என்ற இரஷ்ய மொழிபெயர்ப்பு நூல், என் கவனத்தைப் பெரிதும் கவர்ந்தது. அது குறித்து, நானும் நண்பர்கள் சிலரும் சேர்ந்து நடத்திய இலக்கியப் பாசறை என்ற சிற்றிதழில் ஒரு விமர்சனம் எழுதினேன்.

நான் மிகவும் விரும்பிப் படித்த நூல்கள் சில உண்டு. 'ஜே.ஜே. சில குறிப்புகள்' நூலை வாசிக்க எடுத்திருந்தேன். அந்நேரம் எனக்கு வேறு வேலைகளும் இருந்தன. என்ன செய்வது? உடற்பயிற்சி செய்யும் போது, பலவித ஆசனங்களைச் செய்துகொண்டே அந்நூலை வாசித்தேன். குனிந்து செய்யும் உடற்பயிற்சியின்போது நூலைத் தரையில் வைத்தேன். அண்ணாந்து பார்த்துச் செய்பவற்றில் நூலை ஆகாயத்தில் தூக்கிப் பிடித்துக்கொண்டேன். பக்கவாட்டில் சாய்ந்து செய்யும் ஆசனங்களில் நூலையும் பக்கவாட்டுக்குக் கொண்டு சென்றேன். நான் எந்தக் கோணத்தில் சென்றாலும் என் கண்களுக்கு எதிரே அந்த நூலைக் கொண்டு சென்றேன்.

ஆனால், இப்படித் தீவிரமாகப் படித்த நூல்களின் கருத்துகளை எல்லாம் நான் ஏற்றுக்கொண்டு விட்டேனா என்றால் இல்லை. கண்ணுக்குத் தெரியாத ஒரு தீச்சுவர் நம் மனத்தில் உள்ளது. அது, நம் மனம் விரும்பாதவற்றை உள்ளே அனுமதிக்காது.

பலவிதமான தருணங்களில் எனக்குப் பலவிதமான நூல்கள் பரிசாகவும் அன்பளிப்புகளாகவும் வந்துள்ளன. போட்டிகள் பலவற்றில் வெல்பவருக்கு நூல்கள் அளிப்பது வழக்கம். கவியரங்கம், கருத்தரங்கம் ஆகியவற்றில் கலந்துகொள்ளும்போதும் இந்த வழக்கம் உண்டு.

பழைய புத்தகக் கடைகளில் பலவிதமான நூல்களை மிகவும் குறைவான விலையில் வாங்கிப் படித்தது உண்டு. நண்பர்களிடம் இரவல் வாங்கிப் படித்ததும் உண்டு. நானும் பலருக்கு நூல் இரவல் அளித்துள்ளேன். இரவல் நூல்கள் பலவும் போனவரிடம் தங்கி விடுவது உண்மை. அதனால் அடுத்த வேறு யாரேனும் நூல் கேட்டாலும், முன் எச்சரிக்கையோடு 'இல்லை' என்று கூறியிருக்கிறேன். ஆயினும் மனம் கேட்காமல் கொடுத்த நூல்கள், நண்பர்களிடம் இன்னும் பத்திரமாக இருக்கின்றன!

நூல்களைப் பாதுகாக்கும் பணி, இன்னும் சிரமமானது. அடிக்கடி தூசி அடையும் அவற்றைத் தூய்மை செய்வது, கடினம். தூசி ஒவ்வாமை உள்ள எனக்கு, இன்னும் மிகக் கடினம். வேறு யாரையேனும் இதைச் செய்யப் பணித்தால், துறை வாரியாக நான் பிரித்து வைத்த நூல்கள் கலைந்து, மூலைக்கு ஒன்றாக, அட்டை மாறிப்போய், ஓரங்கள் கிழிந்துபோய்க் கிடக்கும்.

வாசகராக மட்டுமின்றி, வேறு வகைகளிலும் புத்தகங்களுடன் எனக்கு உறவு உண்டு.
நான் படைப்பாளியாக உருவெடுத்த பின், இன்று வரை 8 நூல்கள், நூல்வடிவம் பெற்றுள்ளன. அவை:
1. பூபாளம் (கவிதைகள் - 1996)(சொந்த வெளியீடு)
Image hosted by Photobucket.com
2. உச்சம் அடம் ஞானம் உயிர்ப்பு (கவிதைகள் - 1997)(சொந்த வெளியீடு)
Image hosted by Photobucket.com
3. காந்தளகம்-20 ஆண்டுகள் (வணிக வரலாறு -2000)(காந்தளகம் வெளியீடு)
Image hosted by Photobucket.com
4. தகத்தகாய தங்கம்மா (வாழ்க்கை வரலாறு - 2001)(காந்தளகம் வெளியீடு)
Image hosted by Photobucket.com
5. சிங்களவர் வரலாற்று நூல்களின் நம்பகத்தன்மை (மறவன்புலவு க. சச்சிதானந்தனுடன் இணைந்து மொழிபெயர்ப்பு / 2002)(காந்தளகம் வெளியீடு)
Image hosted by Photobucket.com
6. கலாம் ஆகலாம் (சிறுவர் பாடல் / 2002)(கங்காராணி பதிப்பகம்)
Image hosted by Photobucket.com
7. நூற்றுக்கு நூறு (சிறுவர் கதை / 2003)(கங்காராணி பதிப்பகம்)
Image hosted by Photobucket.com
8. தமிழில் இணைய இதழ்கள் (ஆய்வு / 2004)(அமுதசுரபி வெளியீடு)
Image hosted by Photobucket.com

இவை தவிர, சில நூல்களை எழுதி அளித்துள்ளேன். இன்னும் அச்சாகவில்லை. அத்தகையவை:
1. அரசுக்கு எதிராக இரண்டு வழக்குகள் (தஞ்சையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டிற்கு வந்திருந்த ஈழத் தமிழர்கள் சிலரைத் தமிழக அரசு திருப்பி அனுப்பியது. அதை எதிர்த்து மறவன்புலவு க. சச்சிதானந்தனும் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமனும் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் தொடர்பான நூல்)

2. ஈழத்திற்கு மருந்துகள் கடத்தச் சதி செய்ததாக மறவன்புலவு க. சச்சிதானந்தன் உள்பட சிலரைத் தமிழக அரசு கைது செய்தது. பின்னர், தகுந்த ஆதாரம் இல்லை என்று இவர்களை நீதிமன்றம் விடுவித்தது. இது தொடர்பான விவரங்களைத் திரட்டி, ஒரு நூல் எழுதி அளித்துள்ளேன்.

வெளிவராத என் நூல்கள்:
1. சோதனை முயற்சியாக என் இரண்டு கவிதைகளை 33 மொழிகளுக்கு மொழிபெயர்க்கச் செய்துள்ளேன். அவை: தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு, இந்தி, சிந்தி, குஜராத்தி, கொங்கணி, மராத்தி, ஒரியா, சமஸ்கிருதம், மைதிலி, போஜ்புரி, பஞ்சாபி, லடாகி, இராஜஸ்தானி, செளராஷ்டிரா, அவதி, பெங்காலி, உருது, பெர்சியன், அரபி, மகஹி, பிரிஜ்பாஷா, ஆங்கிலம், சிங்களம், இரஷ்யன், ஜப்பானீஸ், ஸ்பானிஷ், ஹீப்ரூ, காசி(Khasi)..... இவற்றை, கவிதைகள் குறித்த மொழிபெயர்ப்பாளர் கருத்துகளோடு ஒரே நூலாக வெளியிடத் திட்டம். தகுந்த வெளியீட்டாளர் அமையாததால் தாமதமாகிறது.

2. அ.க. 47 / AK 47:
என்னுடைய 47 கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணி நடந்து வருகிறது. இது முடிந்தால் இடது பக்கம் தமிழும் வலது பக்கம் ஆங்கிலமுமாக, இருமொழி நூலாக வெளியிட எண்ணம். இவை இரண்டுக்கும் நல்ல பதிப்பாளரை எதிர்நோக்கியுள்ளேன்.

3. நான் எடுத்த நேர்காணல்கள், எழுதிய கட்டுரைகள், வானொலி உரைச்சித்திரங்கள், கவிதைகள், சிறுவர் பாடல்கள்... எனச் சுமார் 10 நூல்கள், இன்னும் நூல் வடிவம் பெறவேண்டி உள்ளது.


இவை தவிர, நான் பதிப்பாசிரியராகவும் சில நூல்களுக்குப் பணியாற்றியுள்ளேன். அவை:
1. விவாதங்கள்... சர்ச்சைகள்... - வெங்கட் சாமிநாதன் (அமுதசுரபி வெளியீடு)
2. மலர்மன்னன் கதைகள் - மலர்மன்னன்(அமுதசுரபி வெளியீடு)
3. காப்டன் கல்யாணம் - வசுமதி ராமசாமி (அமுதசுரபி வெளியீடு)

நான் தயாரித்து அளித்த நூல்கள்:
1. பாரதியார் சரித்திரம் - செல்லம்மா பாரதி(அமுதசுரபி வெளியீடு)
2. தங்கம்மாள் பாரதி படைப்புகள் - தங்கம்மாள் பாரதி(அமுதசுரபி வெளியீடு)

இவை தவிர நூற்றுக்கணக்கான நூல்களுக்கு மெய்ப்பாளராக(proof reader)ப் பணியாற்றியுள்ளேன்.

எழுத்துத் திறம் குறைவான சிலருக்காக, அவர்களிடமிருந்து கருவைப் பெற்று நூலாக்கித் தந்துள்ளேன் (நூல், அவருடைய பெயரில் வரும்).

நூலாக்கத்தில் மட்டுமின்றி, இதழ்களிலும் அரங்குகளிலும் பல முறைகள் நூல் திறனாய்வு புரிந்ததும் உண்டு.

என் இல்லத்தில் புதிதும் பழையதுமாக 500க்கும் மேலான புத்தகங்கள் உள்ளன. என் அலுவலகத்தில் இரண்டு ஆயிரத்திற்கும் மேலான நூல்கள் உள்ளன. மாதந்தோறும் சுமார் 100 புத்தகங்கள், அமுதசுரபி நூல் விமர்சனத்திற்கு வருகின்றன. இவை அனைத்தையும் நான் படித்ததில்லை. அதற்கு நேரமும் இல்லை. தேவைக்கு ஏற்பவும் மனநிலைக்கு ஏற்பவும் சிலவற்றைப் படிக்கிறேன்.

மூன்று நூலகங்களில் நான் உறுப்பினராக உள்ளேன். இந்த நூலகங்களுக்கு நூல் எடுப்பதற்காகச் சென்று, ஆண்டுக் கணக்கில் ஆகின்றன. இணையத்தில் இலவச மின்னூல்களும் மதுரைத் திட்டம், சென்னை நெட்வொர்க் போன்ற தளங்களில் நல்ல தொகுப்புகளும் கூடிக்கொண்டே வருகின்றன. இன்று நம் வீட்டில் எவ்வளவு புத்தகங்கள் உள்ளன என்பது முக்கியமில்லை. படிப்பதற்கு நமக்கு எவ்வளவு நேரம் உள்ளது என்பதே முக்கியம்.

இன்னொரு முக்கிய நோக்கு: நான் இன்று வரை சில ஆயிரம் நூல்களைப் படித்திருப்பேன். அவை அனைத்தும் என் நினைவில் இல்லை. அப்படி இருப்பது சாத்தியமும் இல்லை. நான் படித்து மறந்து போய்விட்டேனே! அந்தப் புத்தகங்களை நான் எந்த வகையில் சேர்ப்பது? படித்த வகையிலா? படிக்காத வகையிலா?

என் வாசிப்பு, இந்த அழகில் இருக்கும்போது, நான் இன்று படிக்கும் நூல்கள் எதிர்காலத்தில் என் நினைவில் இருக்குமா? இருக்காது எனில் நான் இன்று படிப்பதன் பயன் என்ன? இன்பமோ, துன்பமோ, உடனடியாகக் கிடைக்கும் ஏதோ ஓர் உணர்வுதான் பயனா? எழுத்து, என் வாழ்வை மாற்றி அமைக்க நான் அதை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டாமோ?

வரி விடாமல் படித்த ஒரு தலையணைப் புத்தகம், ஒரு கனவுக் காட்சியைப் போல் தோன்றுகிறது. சில வேளைகளில் ஒரு நூலில் வாசித்த காட்சி, வேறொரு நூலுடையதாகத் தோன்றுகிறது. எங்கோ படித்திருக்கிறேன்... ஆனால், எங்கே என்று நினைவில்லை என்ற நிலையிலும் பல வாசகங்கள், சம்பவங்கள் நினைவில் ஆடுகின்றன.

யாருக்கேனும் இளவயதில் படித்த பாடப் புத்தகங்கள் முழுதும் நினைவில் உள்ளனவா? கட்டுரைப் போட்டிகளில் குறிப்புத் திரட்டி நான் எழுதிய ஆக்கங்கள், பேச்சுப் போட்டிகளில் நான் பேசிய பேச்சுகள், நண்பர்களுடன் உரையாடிய நாட்கள்... இவை யாவற்றையும் புகை நடுவேதான் காண முடிகிறது.

நான் எழுதுவதற்கான பல காரணங்களில் ஒன்று: எழுதாவிட்டால் நான் மறந்துவிடுவேன்.

இளவயதில் நான் நூல்களைக் கண்டு மலைத்ததில்லை. வாசிப்பதாயினும் படைப்பதாயினும் இன்றுவரை அது எனக்கு எளிதே. எழுத்தாளர் ஒருவர் (அலெக்சாண்டர் டூமாஸ் என்று நினைவு), உலகிலேயே அதிக அளவாக 1,400 நூல்கள் எழுதியதாக ஒரு செய்தி படித்தேன். 'இந்தச் சாதனையை நான் முறியடித்துக் காட்டுகிறேன்' என்று அப்போது நான் சொல்லிக்கொண்டேன்.

உலகிலேயே அதிகப் பக்கங்கள் உள்ள ஒரு நூல் என ஏதோ ஒன்றைப் பற்றிப் படித்தேன். அப்போதும் 'இதைத் தாண்ட என்னால் முடியாதா, என்ன?' என என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் என்ற செய்தியைக் கேள்விப்பட்டேன். 'ஆகா, இந்தப் பெருமையையும் நான் விட்டுத் தரமாட்டேன்' என எனக்குள்ளேயே கூறினேன்.

அளவு மட்டுமே சாதனை ஆகாது. உள்ளடக்கமே முக்கியம் என அறிவேன். சிறப்பான உள்ளடக்கத்துடனேயே பேரெண்ணிக்கையில் படைப்பது சாத்தியம் என எண்ணியிருந்தேன்.

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பானது, வெளியான நூல்களில், கிடைத்த சிலவற்றை ஆராயும் சிலரின் கருத்தே தவிர, அறிவிக்கப்படும் அவர் உலகிலேயே சிறந்த படைப்பாளி எனக் கருத முடியாது. என் சமகாலப் படைப்பாளி, என் எழுத்துக்குப் பதில் சொல்லிவிட்டு என்னைக் கடந்து போகட்டும். வெற்றியோ, தோல்வியோ அதைப் பற்றிக் கவலையில்லை. ஒரு கடும் போட்டி அவருக்குக் காத்திருக்கிறது என்றெல்லாம் சொல்லிக்கொண்ட காலம், அது.

மிதமிஞ்சிய தன்னெழுச்சியுடன் நான் நூல்களை அணுகினேன். புத்தகத்தை எடுக்கும்போது, அடிமைச் சிந்தனையுடன் கண்ணில் ஒற்றிக்கொள்ளுவோர், பலர். நானோ, அவற்றைச் செவ்வி கண்டேன். 'நீ இப்போது புதிதாக என்ன சொல்லப் போகிறாய்?' எனக் கேள்விக்குறியோடு பலவற்றை நான் அணுகியுள்ளேன்.

சில நிகழ்வுகள், இதை வலுப்படுத்தின. என் கருத்தினை யாரோ ஒரு வெளிநாட்டுச் சிந்தனையாளனின் பொன்மொழிகளில் வாசித்தபோதும், நான் எழுதியதுபோன்ற கவிதைகளைச் சில மொழிபெயர்ப்புகளில் கண்டபோதும், என் உணர்வுகளை வேற்றுநாட்டுப் படைப்பாளி பிரதிபலித்த போதும் என்னைப் போலவே இவர்களும் சிந்தித்திருக்கிறார்களே என எண்ணியது உண்டு. அவர்களுக்கு நான் எந்த வகையிலும் குறைந்தவன் இல்லை; அவர்களை விடவும் சிறந்த உயரங்களுக்கு என்னால் செல்ல முடியும் என்று கூறினேன்.

அ·து, ஒரு காலம். பிற்பாடு நான், மாறினேன். யாவற்றின் மீதும் பற்றற்ற மனநிலையை நோக்கி இப்போது பயணிக்கிறேன். பயணச் சீட்டு எடுத்துவிட்டேன்; போய்ச் சேர்ந்தேனா என்பதை உடனே சொல்ல இயலாது. இது மிகப் பெரிய பிம்பமாக இருந்தால், பற்றுக் குறைந்த நிலை என்று வைத்துக்கொள்ளுங்கள். நடப்புகளின் மீது, நான் ஆவேசம் கொள்ளுவது இல்லை. அப்படி நான் உணர்ச்சிவயப்படுவேன் ஆயின் அது என் பொருட்டு அன்று. மருத்துவர், கத்தியைக் கையில் எடுப்பது, உணர்ச்சிவயப்பட்டு அன்று. சிகிச்சையின் பொருட்டே.

'இங்கே ஒருவன் இருக்கிறேன், இருக்கிறேன் என்று இந்தச் சமூகத்திற்கு நான் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கவேண்டுமா, என்ன? தேவையானால் சமூகமே, உனக்கு என்ன வேண்டும் என்று கேள். தர முயல்கிறேன்' என்று இப்போது என் மனம் சொல்கிறது.

புத்தகங்கள், எப்போதும் எனக்கு எண்ணற்ற சிறகுகளை அளிக்கக் கூடியவை. பறந்துகொண்டே இருக்கிறேன். சிறகடிக்காமலும் சில நேரங்கள் என்னால் பறக்க முடிகிறது. அது, ஏற்கெனவே சிறகசைத்ததாலேயே இயல்கிறது. பரந்த வானில் ஒரு புள்ளியாகப் பறக்கிறேன்; பறந்துகொண்டே இருக்கிறேன்.

1 comment:

Anonymous said...

அண்ணாகண்ணன் அருமை!., படைப்புகள் தொடர, முடித்த படைப்புகள் வெளிவர வாழ்த்துக்கள்.

//மருத்துவர், கத்தியைக் கையில் எடுப்பது, உணர்ச்சிவயப்பட்டு அன்று. சிகிச்சையின் பொருட்டே.//

இந்தக் கத்தியை மட்டும் கீழே வைத்துவிடாதீர்கள்.

posted by: maram