!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, June 01, 2005

கவிதாயினி பூரணி

பாட்டுக்கும் கவிதைக்கும் வேறுபாடு உண்டா? இல்லையா?

உறுதியாக உண்டு. ஒழுங்கமைவு உள்ள ஓசையே இசை. அந்த இசை பயின்று வருவதே பாடல். சாதாரண பேச்சுவழக்குச் சொற்களைக்கூட விருப்பம்போல வளைத்துப் பாடலாக்கிவிடலாம். இதனால்தான் 'இழுக்குடைய பாட்டுக்கு இசை நன்று' என்றார்கள். இவை, காதுகளுக்கானவை.

பாடலுக்குள் இடம்பெறும் எதுகை, மோனை, இயைபு, சந்தம் அல்லது இசை, பாடுபவரின் குரல், பக்க வாத்தியங்கள், பின்னணி இசை ஆகியவை, கேட்பவரை ஏமாற்றக் கூடியவை; கவிதை போன்ற ஒரு மயக்கத்தைத் தரவல்லவை. பாடலின் கருத்தையோ, கவிநயத்தையோ(அப்படி ஒன்று இருந்தால்) அணுக விடாமல் கேட்பவரின் கவனத்தைத் திசைதிருப்பக் கூடியவை.

இப்படி எதிர்மறையாக இல்லாமல் சில தருணங்களில் இவை, கவித்துவத்திற்கு உதவும் கூறுகளாகவும் திகழும். அனைத்தும் சேர்ந்து கவிதையை மிக ஆழமாக நம் மனத்தில் பதியவும் வைக்கும். அது, அரிதாகத்தான் நிகழும்.

பாடல், கவிதை என்ற வடிவங்களின் மேல் தவறில்லை. அவற்றைக் கையாளுவோரின் திறனுக்கு ஏற்ப, பாடலுக்குள் கவிதையும் கவிதைக்குள் பாடலும் இடம்பெற வாய்ப்பு உண்டு. அத்தகைய இணைவு, அரிதாகத்தான் நிகழும். திரைப்படப் பாடல்கள் கவிதை ஆகுமா என்ற கேள்விக்கும் இந்தப் பதில் பொருந்தும்.

தமிழ் யாப்பு வடிவங்களுக்குப் பா என்றே பெயர். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பவை, நான்கு வகைப் பாக்கள். இந்தப் பா என்பது, பாட்டைக் குறிக்கிறதா? இல்லை. பாடப்படுபவையே பாடல்கள்; பாடப்படாத நிலையில் இவை செய்யுள்களே. செய்யப்பட்டவை என்பதால் இப்பெயர்.

இந்தச் செய்யுள், பாடல் ஆகியவற்றிலிருந்து கவிதையை எப்படிப் பிரித்து அறிவது? ஓர் எளிய வழி உண்டு. இசையையும் அலங்காரங்களையும் படைப்பிலிருந்து உருவி எடுத்த பின்னும் ஓவியம், புகைப்படம் ஆகியவற்றிலிருந்து விலக்கி வைத்தபின்னும் படைப்பு, உயிர்த் துடிப்புடன் உள்ளதா? நம் உள்மனத்தைக் கவருகிறதா? அத்தகைய படைப்பிற்குள் கவிதை வாழ்கிறது. இன்றைய சூழலில் அதைக் காண்பது கொஞ்சம் கடினம்தான். இந்தச் சிக்கலைப் பிறகு அவிழ்த்துக்கொள்ளலாம். இப்போது பூரணியின் படைப்புகளுக்குள் நுழைவோம். 'படைப்பு' எனச் சொல்லக் காரணம் உண்டு. அது, பாடலா, செய்யுளா, கவிதையா எனக் காணும் வேலையை நான் உங்களிடமே அளிக்கிறேன்.

இன்று 92 வயதுள்ள பூரணி, 1913இல் பிறந்தவர். பாரதி மறைந்த 1921ஆம் ஆண்டு பூரணிக்கு 8 வயது. அடுத்த ஏழு ஆண்டுகளில், தன் 15ஆவது வயதிலிருந்து பூரணியும் படைப்பு முயற்சியில் இறங்குகிறார். அந்தக் காலத்தில் எத்தகையவற்றைப் படைத்தனர் எனப் பூரணியின் ஆக்கங்களிலிருந்து நாம் காணலாம். இவற்றைப் படிக்கும்போது பாரதியை மகாகவி என அழைப்பதன் பொருத்தத்தை உணரலாம்!

புராண, இதிகாசக் கதைமாந்தர்களை வைத்து பாடலுக்குள் கதைசொல்லும் முயற்சியில் பூரணியும் ஈடுபட்டுள்ளார். தமயந்தி ஸ்வயம்வரக் கும்மி என்பதை 1929ஆம் ஆண்டு படைத்துள்ளார். 15 பாடல்களில் தமயந்தியின் கதையைச் சொன்ன பூரணி, இதில் ஒரு புதுமை செய்துள்ளார். 15 பாடல்களையும் அக்காலத்தின் பிரபல பாடல் மெட்டுகளில் வழங்கியுள்ளார்.

நொண்டிச் சிந்தை அடுத்து, "பொன்னுலவு சென்னிகுள", "பத்தொன்பதாம் நூற்றுக்குமேல்", "வாழ்க திலகர் நாமம்", "தந்தனமடி", "ரத்ன ஊஞ்சல் ஆடினார்", "அன்னையே என்", "மாதவர் போற்றிடும்", "கானகம் தாண்டி", "நந்தவனத்தில்", "ஐயா, பழனி மலை", "மருவே சரித்த", "அம்மா வயிற்றைப் பசிக்குது", "வேட்டையாடினான்", "மங்களம் மாதவற்கு" ஆகிய பாடல்களின் மெட்டுகளில் தமயந்தி கதையைக் கூறியுள்ளார். ஒரு கதையை இவ்வளவு பாடல்களின் மேல் ஏற்றிச் சொன்ன பூரணியின் இசையார்வத்தைப் பாராட்டலாம். மூலப் பாடலுடன் ஒப்புநோக்கினால் மட்டுமே இவை எவ்வாறு அந்த இசையில் பொருந்தியுள்ளன எனப் பார்க்க முடியும். ஆனால், இங்கே பாடலின் கருத்தைவிட வடிவத்திற்கே முக்கியத்துவம் தந்துள்ளது தெளிவாகிறது.


1930 முதல் 1945 வரை ஆக்கியவற்றில் அக்கால வழக்கங்களை நன்கு பதிந்துள்ளார். முக்கியமாக முடுகுச் சந்தத்தில்,

சுட்டி பட்டம் ஜடை
சிங்காரம் போச்சு
இஷ்டமுடன் தலையிலே
சிலைடு ரிப்பன் ஆச்சு...

- எனத் தொடங்கும் பாடலின் மூலம் அந்தக் காலத்தில் நிகழ்ந்த பல்வேறு மாற்றங்களை அறிய முடிகிறது. அந்த வகையில் இதற்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு. இதே காலத்தில் நலங்குப் பாடல்களும் இயற்றியுள்ளார். அவற்றில் மீண்டும் பிரபல மெட்டுகளைக் கையாண்டுள்ளார். "மாயப் பிரபஞ்சத்தில்", "நந்தகே லாலா", "பஜனை செய்வோம்", "உள்ளம்தான்" மெட்டுகளில் இந்த நலங்குப் பாடல்கள் அமைந்துள்ளன.

எல்லா உணவுப் பண்டங்களையும் சேர்த்து, 'போஜனப் பாட்டு' என்ற ஒன்றை மெல்லிய நகைச்சுவையுடன் இயற்றியுள்ளார். அக்காலத்தில் என்னென்ன உணவுகள் இருந்தன என்பதை இதன் வழியே அறியலாம். இதையும் "சதா போரே" மெட்டில் பாடியுள்ளார்.

பல பாடல்களில் இவர் என்ன கருவில் பாட்டு எழுதியுள்ளார் என்பதைவிட என்ன மெட்டில் பாட்டு எழுதியுள்ளார் என்பதே முக்கியமாய் இருக்கிறது. ஏனெனில் அக்காலத்தில் இன்னின்ன பாடல்கள் பிரபலமாக இருந்தன என்பதற்கான வரலாற்றுச் சான்றாக இந்த முயற்சி இருக்கிறது. "யாவரும் சுதந்திரமாக", "ஸ்ரீ கண்டேசனை", "பார்க்கப் பார்க்க" ஆகிய மெட்டுகளிலும் இவரிடம் பாடல்கள் உண்டு.

பாரதி பாடல்களின் மெட்டிலும் இவர் பாடல் புனைந்துள்ளார். "விடுதலை விடுதலை", "விட்டு விடுதலையாகி", "ஒளி படைத்த கண்ணினாய்", "ஆடுவோமே பள்ளு பாடுவோமே", "என்று தணியும்" ஆகிய பாடல்களின் மெட்டிலும் இசை நகல் எடுத்துள்ளார். இந்தப் பாடல்கள், மிகச் சாதாரணமானவை; ஆழமற்றவை; ஏதோ விளையாட்டுப் போல் எழுதியுள்ளார்.

திரைப்படப் பாடல்களை அடியொற்றியும் எழுத முயன்றுள்ளார். "சிட்டுக் குருவி", "தங்கத்திலே", "கண்ணும் கண்ணும்", "சொல்லத்தான் நினைக்கிறேன்", "காதலிக்க நேரமில்லை", "நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம்"...போன்ற திரையிசைப் பாடல் மெட்டுகளிலும் பாடல் இயற்றிப் பார்த்துள்ளார்.

பூரணியம்மாளின் தொடக்கக் கால எழுத்து முயற்சிகள், ஏதேனும் ஒன்றைப் பார்த்துப் போலச் செய்தல் முயற்சியிலேயே உள்ளன. தொடக்க நிலைக்கு அது சரி. ஓவியம் கற்க விழைவோர், ஒரு படத்தை மாதிரியாக வைத்தே வரைவது வழக்கம். ஆனால், சில ஆண்டுகளிலேயே அவர், சிறந்த கவிதையை நோக்கி நகர்ந்திருக்கவேண்டும். ஆயினும் பூரணியின் படைப்புகளை வைத்துப் பார்க்கும்போது, அவர் எழுதத் தொடங்கி 40 ஆண்டுகள் வரையும் இப்படி இசை நகல் எடுத்துள்ளார். இது, மிக அதிகமான காலம்.

தன் சொந்த வலுவின் மேல் நம்பிக்கை இல்லாத படைப்புத்தான், இன்னொன்றின் செல்வாக்கை வேண்டி நிற்கும். பிரபலமான ஒன்றைப் பிரதி எடுப்பது, பிரச்சாரத்திற்கு வேண்டுமானால் உதவலாம். அதற்கு இலக்கியம் என்று பெயரில்லை.

படைப்பாளியை ஊக்குவிக்கும் எண்ணமுள்ள நம் நாட்டுப் பெரிய மனிதர்கள் பேரிலும் குற்றமுண்டு. பூரணி என்ன எழுதினாலும் பாராட்டியுள்ளார்கள். ஏனெனில் அதற்கு மேல் சிறப்பாக எழுதுவோர் இல்லை போலும். இது, உண்மையாகவும் இருக்கலாம். ஏனெனில், பெண்கள் படிப்பதே கூடாது என்று இருந்த காலத்தில் பிறந்த பூரணி, ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். அதன்பிறகு தன் சொந்த முயற்சியின் பேரில் இந்த அளவு எழுதியதே அவருக்குப் பெரியதாகத்தான் இருந்திருக்கும்.

ஆனால், அவரை மேலும் மேலும் எழுதத் தூண்டியவர்கள், அவரின் இசையாற்றலைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர். தலைவரை வரவேற்க, ஆண்டுவிழாவில் பாட, நாடகத்துக்கு இடையே பாட.. என்று பாடலாசிரியரைச் சிறிய வட்டத்திற்கு உள்ளேயே சுற்றி வரச் செய்திருக்கிறார்கள்.

பாரதி, காந்தி, நேரு போன்ற தேசத் தலைவர்களைப் போற்றும் துதிகள் எழுதிய பிறகு பூரணி, அடுத்த கட்டத்தை எட்டியுள்ளார். அது, இன்றும் கூட பலரும் பின்பற்றும் உத்திதான். அதாவது, ஒரு கருப்பொருளைப் பல்வேறு விதமாக உவமிப்பது, அந்த உவமைகளை அடுக்குவது. இதன்படி, வாசலில் இட்ட கோலம் எப்படியெல்லாம் இருக்கிறது?, மின்னல் எப்படியெல்லாம் தெரிகிறது?, அலை, கரையை நோக்கி ஏன் ஓடிவருகிறது?, மலை எப்படி தோன்றுகிறது?, வாழ்க்கை எப்படியெல்லாம் நம்முன் நிற்கிறது? எனக் காட்டுகிறார். இங்குதான் கொஞ்சம் உருப்படியான யாப்பமைவு இருக்கிறது.

இதன் பிறகு காட்சி விவரணைகளுக்கு வருகிறார். என்ன பார்த்தார், கேட்டார், உணர்ந்தார் என்பதை அப்படியே அழகாகச் சொல்லத் தெரிந்துவிட்டது. இங்கு பூரணி, தன் பெயர் சொல்லும் அளவுக்குச் சில படைப்புகளை வழங்கியுள்ளார்.

கட்டிவிட்ட கருந்திரையாய்
கங்குல் தன் இருட்பரப்பில்
வெட்டவெளி வானிடையே
மெளனத்தின் சொற்பொழிவாய்
கண்சிமிட்டும் தாரகைகள்
காலக்கதை உரைக்க
மண்சுமக்கும் மானுடங்கள்
மயங்கித் துயின்றுவிட

உறங்கும் உலகத்தில்
உறங்கா ஒரு ஜீவன்
கிறங்கக் குழலெடுத்து
கீதம் இசைக்கிறது.
வெள்ளை மணற்பரப்பில்
வேய்ங்குழலின் மோகனத்தில்
உள்ளம் லயித்திருக்க
ஒரு மனிதன் இசைத்தவமாய்
பரவச நிலை அடைந்து
பாட்டாய் மாறிவிட்டான்

-'நாதம்' என்ற தலைப்பிலான இந்தப் பாடல், இவருடைய முந்தைய படைப்புகளிலிருந்து வேறான ஒரு படைப்பு. 'மெளனத்தின் சொற்பொழிவு' என்ற சொற்சேர்க்கை, பூரணியிடமிருந்து வெளிப்பட்டுள்ளது, அவருடைய மாற்றத்திற்கான சான்று.

அவைகள் மனிதர்கள்
அல்ல, அதனால்
இணையைப் பிரித்து
இஞ்சக்ஷன் செய்து
இனத்தைப் பெருக்கி
இலாபமடை;

நீயோ மனிதன் ஆகையால்,
கருத்தடை மூலம்
குழந்தைகள் ஒழித்து
கட்டற்றுக்
கலவியில் திளை

-'கலி நீதி' என்ற இந்தப் படைப்பில் மனிதனின் முரணை நறுக்கெனக் கூறுகிறார். இதன் மூலம் தன்னால் சுருக்கமாகவும் வலுவாகவும் ஆழமாகவும் ஒரு கருத்தை முன்வைக்க முடியும் எனக் காட்டியுள்ளார்.

அண்மைக் காலமாக இவர் எழுதியுள்ள பாடல்களில் நல்ல பல கேள்விகள் உள்ளன. அவர், சமூகத்தைக் கூர்ந்து கவனிப்பதோடு அதை விமர்சிக்கிறார். அதற்கு எதிர்வினையும் ஆற்றுகிறார்.

போக்குவரத்துப்
பாதைகளும்
நாக்கு வறளாமல்
நல்ல குடிநீரும்
நாட்டு மக்களுக்கு நல்குவது
அரசாங்கத்தின் கடமை.
இதைப்போய் ஏன்
விளம்பரப்படுத்துகிறார்கள் டி.வி.யில்?
கிராமங்கள் அந்நிய நாடா?
தர்மம் செய்கிறார்களா அதற்கு?

- என்ற கேள்வியை அரசியல்வாதிகளின் முன் உரக்க வைக்கிறார்.

ஒற்றைச் சிலம்பால் குற்றவாளி கோவலன்
மற்றதால் நிரபராதி

- என்று சிலப்பதிகாரக் காதையை இரண்டே வரிகளில் கூறுகிறார்.

தாம்பத்யம், போலிகள், கொழுப்பு, எண்ணமும் செயலும், சலிப்பு, பண்பாடு, ஆண் குணம், பெண்களின் நிலை, முதுமை, பெண்ணியம்...இவையெல்லாம் இவரின் படைப்புகளுக்கான தலைப்புகள். தலைப்பு வைப்பதில் பூரணி இன்னும் கவனம் செலுத்தவேண்டும். இவருடைய தலைப்புகளில் கவித்துவத்தை மத்திய புலனாய்வுப் பிரிவேனும் கண்டுபிடிக்குமோ, என்னவோ!

மிக அரிதான ஒன்றைக் குறிப்பிடவேண்டும். பாரதியின் சமகாலத்தில் வாழ்ந்த ஒருவர், இன்றும் நம்மிடையே இருக்கிறார்; அதுவும் அவ்வப்போது ஏதாவது எழுதியபடி. கவிஞர்கள், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, கவிதையின் மீது சலிப்படைவது இயல்பு. பூரணி அவ்விதம் இல்லாமல் தொடர்ந்து இயங்குவதே பாராட்டத்தக்கது. இக்காலச் சூழலுக்கு ஏற்ப, புதுக்கவிதையிலும் எழுத முயலுகின்றார்.

பூரணியின் இயற்பெயர், சம்பூர்ணம். பிறந்த ஊர், பழனி. புகுந்த ஊர், தாராபுரம். இப்போது சென்னையில் வசிக்கிறார். தமிழாசிரியரின் மகளாகப் பிறந்தார். மிக இளம் வயதிலிருந்தே எழுதி வந்தாலும் 2001ஆம் ஆண்டில்தான் இவரின் முதல் நூல் வெளிவந்துள்ளது. அதன் தலைப்பு, பூரணி கவிதைகள். இவர், கபீர் கவிதைகளை தமிழாக்கியுள்ளார். இவருடைய மகளே கிருஷாங்கினி. நூற்றாண்டை நோக்கி வீறு நடைபோடும் பூரணி, நல்ல உடல்நலத்தோடும் மனநலத்தோடும் படைப்பாற்றலோடும் விளங்க வாழ்த்துகிறோம்.

கடமைகள் ஓய்ந்தாலும்
முதுமைநிலை வந்தாலும்
செயலற்ற நினைவோட்டம்
சலியாது தொடர்கிறது
- என்கிறார் பூரணி.

முதியவர்கள், குழந்தைகளுக்குச் சமானம்; குழந்தைகள், தெய்வங்களுக்குச் சமானம்.

No comments: