இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட நளினியை விடுவிக்க கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. பாடலாசிரியரும் கவிஞருமான தாமரை, இந்த இயக்கத்தின் அமைப்பாளராகச் செயல்படுகிறார். இந்தக் கையெழுத்து இயக்கம் தொடர்பாக தாமரை விடுத்துள்ள செய்திக்குறிப்பு, பிடிஎஃப் கோப்பாகக் கீழே உள்ளது.
உங்கள் கணினியில் அக்ரோபாட் ரீடர் இல்லாதவர்கள், அதை இங்கிருந்து தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
இது தொடர்பாகத் தாமரையிடம் பேசியபோது, "ஆயுள் தண்டனை என்பது, ஆயுள் முழுதும் சிறையில் இருப்பதே என்று நீதிமன்றம் ஏற்கெனவே கூறியுள்ளது. எனவே, மனிதநேய அடிப்படையில் நளினியை விடுதலை செய்ய வேண்டும் என்று கோருகிறோம். 16 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ள நளினி, அவரின் 14 வயது மகளுடன் இனியாவது சேர்ந்து வாழ வேண்டும்" என்று கூறினார்.
இந்தக் கையெழுத்து இயக்கத்தை இணையம் வழியாகவும் நடத்தவேண்டும் என்று விரும்பும் அவர், இதற்கெனத் தனிப் படிவத்தை விரைவில் வெளியிட உள்ளார்.
நன்றி: தமிழ்சிஃபி
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Saturday, January 20, 2007
நளினியை விடுவிக்க இயக்கம்
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 7:43 PM 5 comments
Tuesday, January 16, 2007
மாணவர்களை அடிக்கத் தடை
பொட்டலம் கட்டலாம்! (சிறுவர் பாடல்)
மூக்கை நறுக்கி மிளகிடுவேன்!
முதுகுத் தோலை உரித்திடுவேன்!
காக்காய்க்கு எறிவேன் உன்காதை!
கரண்டிக் காம்பு பழுத்துவிடும்!
வீக்கம் பிறக்கும்! விரலொடியும்!
விசிறிக் காம்பு முறிந்துவிடும்!
ஜாக்கிரதை எனும் பெரியவரே!
அறிந்தேன் தங்கள் அன்புடைமை!
முட்டிக்கு முட்டி தட்டிடுவேன்!
மூங்கில் பிரம்பால் இசையமைப்பேன்!
குட்டினால் பள்ளம் தோன்றிவிடும்!
குருதிஎன் கிள்ளலில் ஊற்றுவிடும்!
கட்டி வைப்பேன் தலைகீழாய்! - எனக்
கருணை பொழியும் பெரியவரே!
கட்டி மேய்ப்பது உம்கடமை!
கண்ணீர் எனது பிறப்புரிமை!
அடித்து வளர்ப்பது முறையென்றும்
அரும்பயன் தருவது 'அறை'யென்றும்
ஒடித்துத் தந்தீர் ஒருகிளையை
ஓங்கி வளருது போதிமரம்!
படிக்கும் இந்தப் பாடத்தில்
புத்தர் ஏசு காந்தியெனக்
கிடக்குது வெற்றுக் காகிதமே
கிழித்துக் கட்டலாம் பொட்டலமே!
- இந்தச் சிறுவர் பாடல், 2005இல் அமுதசுரபி மாத இதழில் வெளிவந்தது. பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், எவ்வளவு வன்முறைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதைச் சிறிதளவு இந்தப் பாடல் எடுத்துரைக்கிறது. அவதியுறும் இத்தகைய மாணவர்களுக்காக அரசு புதிய உத்தரவு ஒன்றை
இப்போது பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடங்களில் மாணவர்களை உடல் ரீதியாக தண்டிக்க வகை செய்யும் கல்வி விதியின் 51ஆவது பிரிவை நீக்குவதாக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
பொய் கூறுவது, ஆபாசமான வார்த்தைகளால் பேசுவது உள்ளிட்ட தவறுகளை செய்யும் மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனையை வழங்க கல்வி விதியின் 51ஆவது பிரிவு அனுமதிக்கிறது. ஆனால் தற்போது பள்ளிக் கூடங்களில் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவதாக பெற்றோர்களும் பொதுமக்களும் தொண்டு நிறுவனங்களும் ஏராளமான அளவில் புகார்கள் கொடுத்துள்ளனர்.
இந்தக் கடுமையான தண்டனைகள் காரணமாக உணர்ச்சிவசப்படும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குச் சென்று விடுகிறார்கள். எனவே முத்துக்கிருஷ்ணன் குழு வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில், 51ஆவது பிரிவை நீக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் முலம் உடல் ரீதியான தண்டனை வழங்க வகை செய்யும் பிரிவை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது, நல்ல முடிவு. ஆசிரியர்களிடமிருந்து மாணவர்களுக்கு இருந்து வந்த பெரும் அச்சுறுத்தல் இதனால் ஒழியும். மாணவர்களின் தன்மானம் காக்கப்படும்.
இது மட்டும் போதாது; அடிச்சு வளர்த்தால்தான் பிள்ளைகள் ஒழுங்காக வளருவார்கள் என்ற பெற்றோர்களின் மனப்பாங்கும் மாறவேண்டும்.
நன்றி: தமிழ்சிஃபி
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 4:14 PM 1 comments
Monday, January 15, 2007
தமிழ்சிஃபி பொங்கல் சிறப்பிதழ்
தமிழர்களின் தனிச் சிறப்பு மிக்க பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்சிஃபி, சிறப்பிதழ் ஒன்றைத் தயாரித்துள்ளது.
ஒலிப் பத்திகள், ஓளிப் பதிவு, புகைப்படங்கள், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள்... எனப் பலவும் இந்தச் சிறப்பிதழை அலங்கரிக்கின்றன.
வருகை தருக >>>
அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் நல்வாழ்த்துகள்.
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 9:57 AM 1 comments
Monday, January 01, 2007
2006 - 2007: இரு சிறப்பிதழ்கள்
கடந்த ஆண்டைத் திரும்பிப் பார்க்கவும் இந்த ஆண்டை வரவேற்கவும் தமிழ்சிஃபி இரு சிறப்பிதழ்களைத் தயாரித்துள்ளது.
படிக்கவும் கேட்கவும் பார்க்கவும் பல சுவையான, பயனுள்ள செய்திகள் இவற்றில் உள்ளன. வருகை தருக.
2006 முக்கிய நிகழ்வுகள்
வருக 2007 - புத்தாண்டுச் சிறப்பிதழ்
அனைவருக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 12:56 PM 2 comments