!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> மாணவர்களை அடிக்கத் தடை ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, January 16, 2007

மாணவர்களை அடிக்கத் தடை

பொட்டலம் கட்டலாம்! (சிறுவர் பாடல்)

மூக்கை நறுக்கி மிளகிடுவேன்!
முதுகுத் தோலை உரித்திடுவேன்!
காக்காய்க்கு எறிவேன் உன்காதை!
கரண்டிக் காம்பு பழுத்துவிடும்!
வீக்கம் பிறக்கும்! விரலொடியும்!
விசிறிக் காம்பு முறிந்துவிடும்!
ஜாக்கிரதை எனும் பெரியவரே!
அறிந்தேன் தங்கள் அன்புடைமை!

முட்டிக்கு முட்டி தட்டிடுவேன்!
மூங்கில் பிரம்பால் இசையமைப்பேன்!
குட்டினால் பள்ளம் தோன்றிவிடும்!
குருதிஎன் கிள்ளலில் ஊற்றுவிடும்!
கட்டி வைப்பேன் தலைகீழாய்! - எனக்
கருணை பொழியும் பெரியவரே!
கட்டி மேய்ப்பது உம்கடமை!
கண்ணீர் எனது பிறப்புரிமை!

அடித்து வளர்ப்பது முறையென்றும்
அரும்பயன் தருவது 'அறை'யென்றும்
ஒடித்துத் தந்தீர் ஒருகிளையை
ஓங்கி வளருது போதிமரம்!
படிக்கும் இந்தப் பாடத்தில்
புத்தர் ஏசு காந்தியெனக்
கிடக்குது வெற்றுக் காகிதமே
கிழித்துக் கட்டலாம் பொட்டலமே!

- இந்தச் சிறுவர் பாடல், 2005இல் அமுதசுரபி மாத இதழில் வெளிவந்தது. பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், எவ்வளவு வன்முறைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதைச் சிறிதளவு இந்தப் பாடல் எடுத்துரைக்கிறது. அவதியுறும் இத்தகைய மாணவர்களுக்காக அரசு புதிய உத்தரவு ஒன்றை
இப்போது பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடங்களில் மாணவர்களை உடல் ரீதியாக தண்டிக்க வகை செய்யும் கல்வி விதியின் 51ஆவது பிரிவை நீக்குவதாக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

பொய் கூறுவது, ஆபாசமான வார்த்தைகளால் பேசுவது உள்ளிட்ட தவறுகளை செய்யும் மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனையை வழங்க கல்வி விதியின் 51ஆவது பிரிவு அனுமதிக்கிறது. ஆனால் தற்போது பள்ளிக் கூடங்களில் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவதாக பெற்றோர்களும் பொதுமக்களும் தொண்டு நிறுவனங்களும் ஏராளமான அளவில் புகார்கள் கொடுத்துள்ளனர்.

இந்தக் கடுமையான தண்டனைகள் காரணமாக உணர்ச்சிவசப்படும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குச் சென்று விடுகிறார்கள். எனவே முத்துக்கிருஷ்ணன் குழு வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில், 51ஆவது பிரிவை நீக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் முலம் உடல் ரீதியான தண்டனை வழங்க வகை செய்யும் பிரிவை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது, நல்ல முடிவு. ஆசிரியர்களிடமிருந்து மாணவர்களுக்கு இருந்து வந்த பெரும் அச்சுறுத்தல் இதனால் ஒழியும். மாணவர்களின் தன்மானம் காக்கப்படும்.

இது மட்டும் போதாது; அடிச்சு வளர்த்தால்தான் பிள்ளைகள் ஒழுங்காக வளருவார்கள் என்ற பெற்றோர்களின் மனப்பாங்கும் மாறவேண்டும்.

நன்றி: தமிழ்சிஃபி

1 comment:

மாதங்கி said...

ஏதோ இப்பவாவது விழித்துக்கொண்டார்களே

கடந்த சில ஆண்டுகளில் ஜு வியில் சில பள்ளிக்குழந்தைகள் ஆசிரியர்களின் தண்டனையால் நிரந்தர ஊனம் அடைந்தார்கள் .

குழந்தைகளை ஏன் அடிக்கப்படுகிறார்கள். அவர்கள் திருப்பி அடிக்க முடியாது என்ற ஒரே காரணத்தினால்தானே

சில வீடுகளிலும் குழந்தைகளின் மேல் வன்முறை திணிக்கப்படுகிறது. அதையும்.
எங்கு செல்லுபடியாகிறதோ அங்கே தானே எல்லோரும் தங்கள் ஆத்திரத்தைக் காட்டுகிறார்கள்.