நகை(ச்சுவை) பாதி; பகை பாதி என வந்திருக்கும் பேய்ப் படம் இது. 21ஆம் நூற்றாண்டில் இப்படியெல்லாம் படம் எடுக்க எப்படித்தான் துணிச்சல் வருகிறதோ!
சிறு வயதில் பேய்க்கதைகள் சொல்லிப் பயமுறுத்தியதால், பெரியவன் ஆன பிறகும் கணேஷ் (ராகவா லாரன்ஸ்) தொடைநடுங்கியாகவே இருக்கிறான்; மாலை 6 மணிக்கு மேல் வெளியே போகமாட்டான்; கொத்து தாயத்துகளை இடுப்பில் கட்டியிருக்கிறான்; இரவில் சிறுநீர் கழிக்கக்கூட தாயைத் துணைக்கு அழைக்கிறான். இத்தகைய பின்னணியில் அவன், வேடிக்கையான முறையில் ஒருத்தியை(வேதிகா)க் காதலித்து மணம் முடிக்கிறான். அவன், மனைவி, அம்மா, அப்பா ஆகியோருடன், ஒரு புது வீட்டுக்குக் குடிபெயர்கிறார்கள். அந்த வீட்டில் லாரன்ஸைப் பேய் (ராஜ்கிரண்) பிடித்துவி டுகிறது. அந்தப் பேயை விரட்டும்போது அந்தப் பேய் தன்னை எப்படிக் கொன்றார்கள் என்று தன் கதையைச் சொல்கிறது. அதைக் கேட்டு இரக்கப்படும் லாரன்ஸ், அந்தப் பேய்க்குத் தன் உடலைத் தரச் சம்மதிக்கிறார். தன்னைக் கொன்றவர்களைப் பேய் கொன்றதா என்பதே கதை.
இந்தக் கதைக்குள் ஒரு கிளைக் கதையாக முனி என்ற பேயின் சொந்தக் கதை விரிகிறது.
லாரன்ஸ் குடும்பத்தினர் குடியேறும் வீட்டுக்குச் சொந்தக்காரர், அந்தப் பகுதி சட்டமன்ற உறுப்பினர். (காதல் தண்டபாணி) அவர், தேர்தலில் வெல்வதற்காக நிறைய வாக்குறுதிகளைத் தருகிறார். தன் வார்த்தைகளை, அந்தப் பகுதிக் குப்பத்தின் செல்வாக்கு மிக்க நபராக இருக்கும் முனியை (ராஜ்கிரண்) நம்பவைக்கிறார். முனியும் தண்டபாணிக்கு வாக்களிக்கச் சொல்கிறார். ஆனால், தேர்தலில் வெற்றி பெறும் தண்டபாணி, வாக்கு மீறுவதோடு முனியையும் அவர் மகளையும் கொன்றுவிட்டு, பணத்தை எடுத்துக்கொண்டு ஊரை விட்டு ஓடிவிட்டதாகக் கூறுகிறார். இதற்குப் பழி வாங்குவதற்காகவும் அவன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வைப்பதற்காகவும் முனி பேயாக வந்து, லாரன்ஸ் உடம்பில் இறங்குகிறது.
முதலில் கதையில் உள்ள நல்ல தன்மைகளைப் பார்ப்போம். இன்று அரசியல் முகமூடி அணிந்த பலர், வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு அவற்றை அப்படியே மறந்துவிடுகிறார்கள். அப்பாவிகளையும் தன்னை நம்பியவர்களையும் மனச்சான்றே இல்லாமல் கொன்று குவிக்கிறார்கள். இவர்களுக்குள் எல்லாம் இந்தப் படம் அச்சத்தை ஏற்படுத்தும். யாருக்கும் தெரியாமல் கொன்றாலும் அவர்கள் பேயாக வந்து தங்களைப் பழி வாங்குவார்கள் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கும். உயிர் மீது உள்ள அச்சத்தால் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற வாய்ப்புண்டு.
ராகவா லாரன்ஸின் நடிப்பு, சிறப்பாக உள்ளது. பயந்து நடுங்கும்போதும் பேய் இறங்கியபோது நெஞ்சு நிமிர்த்தி நடக்கும்போதும் நல்ல வேறுபாட்டைக் காட்டியிருக்கிறார். முனியாகவும் பேயாகவும் நடித்துள்ள ராஜ்கிரண், நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறார். காதல் தண்டபாணியும் அவரின் உதவியாளராய் வந்து, வடிவேலுவை ஒத்தியெடுத்து நடித்துள்ள டேவிட்டும் குறிப்பிடும்படியாக நடித்துள்ளார்கள். படத்தின் தொடக்கத்தில் இடை இடையிலும் நகைச்சுவைக் கலவை எடுபடுகிறது. அதுதான் படத்தைத் தொடர்ந்து பார்க்கத் தூண்டுகிறது.
வசனம் பரவாயில்லை. லாரன்ஸ் கறுப்பாக இருப்பதால் அவர் காதலை ஏற்க முடியாது என வேதிகா சொல்கிறார். அதற்குப் பதில் அளிக்கும் லாரன்ஸ், 'உன் நிறம் என் காலுக்கு அடியில் (உள்ளங்காலில்) இருக்கு; என் நிறம், உன் தலைக்கு மேலே (கூந்தலில்) இருக்கு' என்கிறார். இது வித்தியாசமான ஒப்பீடு.
ஆனால், படத்தில் ஏராளமான ஓட்டைகள் உள்ளன.
லாரன்ஸ் உடலில் முனி வந்திறங்குவதும் வெளியேறுவதும் அவ்வளவு எளிதாக நடைபெறுவது வியப்பளிக்கிறது. வீடியோவில் பேயின் உருவம் தெரிவது, அடுத்த வியப்பு. பேயை வா என்று அழைத்ததும் வருகிறது; போ என்றதும் போகிறது! இதற்கெனக் குழந்தைத்தனமாக ஒப்பந்தம் வேறு போட்டுக்கொள்ளப்படுகிறது.
பேயை ஆன்மா என்று மந்திரவாதி கூறுவது ஒரு பெரும் அபத்தம். இந்திய ஆன்மீகமும் தத்துவமும் ஆன்மா என்பதைப் பற்றி எவ்வளவோ பேசுகின்றன. ஆனால், அதைப் பழிவாங்க வந்த ஒரு பேய்க்கு நிகராக விவரிப்பது தவறு.
அடுத்து, அத்தகைய பேய் உள்ளிருக்கும்போது லாரன்ஸ் சுய உணர்வுடன் இருக்கிறார்; பேய் என்னென்ன செய்கிறது என்பதை லாரன்ஸ் அறிந்தே இருக்கிறார். வழக்கமாக, வேற்று உணர்வுகள் உள்வரும்போது சொந்த உணர்வுகள் முற்றிலும் செயலிழக்கும் என்பதே இதுவரையான கற்பனை! இதில் அதுவும் பொய்க்கிறது.
இந்து மந்திரவாதி (நாசர்), ஏகப்பட்ட சமாச்சாரங்களுடன் பேய் ஓட்டுகிறார்; முஸ்லிம் மந்திரவாதியோ, ஒரு தண்ணீரைத் தெளித்ததும் பேய் கட்டுப்பட்டுவிடுகிறது. அது என்ன தண்ணீர் என்பதைக் கடைசி வரை இயக்குநர் காட்டவே இல்லை.
குப்பத்திற்குச் சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு உள்ளிட்டவற்றைச் செய்து தருவதாகத் தேர்தலில் போட்டியிடும் தண்டபாணி கூறுகிறார். ஆனால் வென்றதும், 'நீ கேட்ட பணத்தைக் கொடுக்கிறேன்; நீயே போட்டுக்கொள்' என்கிறார். 'நான் எப்போது பணம் கேட்டேன்? என் கையில் எதற்காகக் கொடுக்க வேண்டும்? நீங்கள்தானே முன்னின்று இதைச் செய்யவேண்டும்' என்று முனி பதிலே கூறவில்லை. உடனே சிரித்துக்கொண்டே பணத்தை வாங்கச் சென்று சாகிறார்.
இரண்டு பெட்டி நிறைய பணத்தை வைத்துக்கொண்டு, ஒரு குப்பத்திற்கு இவ்வளவு வசதிகளைச் செய்துவிட முடியுமா? ஒரு தேர்தலின் வெற்றியையே தீர்மானிக்கும் அந்தக் குப்பத்தை இவ்வளவு குறைத்து எடை போட முடியுமா? எந்தச் சட்டமன்ற உறுப்பினர், இப்படித் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகப் பணத்தைத் தருவார்? அரசாங்கம், ஒப்பந்தப் புள்ளி கோரிப் பெற்று முறைப்படி நிறைவேற்ற வேண்டிய ஒன்றை இப்படி சின்னப்பிள்ளைத்தனமாகக் காட்டியது ஏனோ? மக்கள் தமக்குத் தாமே நிறைவேற்றுவது என்றால் அதற்கு எதற்காகச் சட்டமன்ற உறுப்பினர்?
எரித்துக் கொல்லப்பட்ட முனி, அதே தோற்றத்துடன் வினுசக்கரவர்த்தியைப் பயமுறுத்துவது; பேய் இருக்கும் அறையில் கற்பூர தீபம் தானாக அணைவது; பயமுறுத்துவதற்கு என்றே டொக் டொக் என்று கதவைத் தட்டுவது; ஒற்றைக் கை மட்டும் நீண்டு சென்று தோளைத் தொடுவது; திடீர் திடீரென அலறுவது; சூனியக்காரி போன்று பாக்கு இடிக்கும் கிழவியைக் காட்டுவது; முறைத்துப் பார்க்கும் வேலைக்காரி; அவளுக்குப் பேய் பிடித்ததாக வேடம் போடும் ஒரு பெண்..... என திகில் சமாசாரங்கள் படத்தில் நிறைய உண்டு.'வர்றாண்டா முனி' என்ற பாடல் மட்டும் பரவாயில்லை; மற்றவை ஐயகோ! சண்டைக் காட்சிகள், நம்பும்படியாக இல்லை. பேய் அடிக்கிற அடியில் இரண்டு தெரு தள்ளி விழுகிறார்கள்; பாவம்! அடி வாங்கியவர்கள் இல்லை; பார்க்கிற மக்கள்! வேதிகாவுக்கு உருப்படியான வேலை எதுவும் இல்லை. வேதிகாவின் குடும்பமோ, அதற்கு மேல் கோமாளித்தனமாக உள்ளது.
படத்தில் லாஜிக் இல்லை; மேஜிக் உண்டு. நடிகராகவும் நடன இயக்குநராகவும் வெற்றி பெற்றுள்ள ராகவா லாரன்ஸின் முதல் இயக்குநர் முயற்சி, கவரும்படி இல்லை. தொழில்நுட்பத் திறன்களை வைத்து மக்களை மேன்மைப்படுத்தாமல் போகலாம்; ஆனால், அவர்ளை மூட நம்பிக்கையில் ஆழ்த்தும் இந்தப் படம், பொழுதைப் போக்கவில்லை; கொல்கிறது.
உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக.... எதிர்பார்க்கலாம்.
நன்றி: தமிழ்சிஃபி
No comments:
Post a Comment