உலக விருதுகள் பெற்ற ராம் படத்தை இயக்கிய அமீரின் அற்புதமான இன்னொரு படைப்பு, பருத்திவீரன்.
எடுத்தவுடனே கிராமத்துத் திருவிழாவில் தொடங்கும் கதை, புழுதி பறக்கும் ஒரு வட்டாரத்துக்குள் நம்மை வாழ வைத்துவிடுகிறது. சாதிய வேர்பிடித்த மண்ணில் வெட்டும் குத்தும் எவ்வளவு மலிவானவை என்பதைப் படம் உடைத்துச் சொல்கிறது. காட்சிக்குக் காட்சி அமீரின் நேர்த்தியும் படக்குழுவின் உழைப்பும் வெளிப்படுகிறது.
கலப்புத் திருமணம் செய்துகொண்ட பெற்றோருக்குப் பிறந்தவன் பருத்திவீரன் (கார்த்தி); ஒரு விபத்தில் அவன் தாயும் தந்தையும் மாண்டுவிட, சிறுவயது முதல் அநாதையாகத் திரியும் அவனுக்கு சித்தப்பா செவ்வாழை (சரவணன்)தான் ஒரே ஆதரவு. கலப்புத் திருமணம் செய்ததால் அவர்களுடன் பரம்பரைப் பகைமை பாராட்டும் பொன்வண்ணன். அவன் மகள் முத்தழகு (பிரியாமணி). சிறுவயதில் முத்தழகின் மேல் அன்பு பாராட்டிய பருத்திவீரன், ஒரு சமயத்தில் அவள் உயிரையும் காப்பாற்றுகிறான். அதனால் முத்தழகு, அவனையே மனத்தில் வரித்துக்கொள்கிறாள்.
வாலிப வயதில் பருத்திவீரன் சண்டியர் ஆகிறான்; அடிக்கடி சிறைவாசம் செல்கிறான். 'என்ன சித்தப்பு! மாறி மாறி தேனி, ராமநாதபுரம், மதுரை ஜெயில்தானா? ஒரு முறையாவது சென்னை ஜெயிலுக்குப் போயிடணும். கை உயர்த்தி டாட்டா காட்டணும், டிவிக்கு எல்லாம் பேட்டி கொடுக்கணும்' என ஒரு இலட்சியத்தை அவன் விவரிக்கையில் அவன் பாத்திரம் தனித் தன்மை பெற்றுவிடுகிறது.
இத்தகைய சூழலில் அவன் முத்தழகை நினைத்தும் பார்க்கவில்லை. ஆனால் முத்தழகோ, அவனையே நினைத்துக்கொண்டு அவன் பின்னே அலைகிறாள். முதலில் அவளை மறுக்கிற பருத்திவீரன், பிறகு அவள் காதலைப் புரிந்து தானும் காதல் வயப்படுகிறான். 'இனிமே நீ ஒத்தையாத் திரியவேணாம்; இங்கேயும் (காதல்) வந்திருச்சுல்ல' என்று அவன் கூறுவது அழகு. ஆயினும் இந்தக் காதலுக்கு முத்தழகின் வீட்டில் பயங்கர எதிர்ப்பு. அதை மீறி இளம் ஜோடி இணைந்தார்களா என்பதே படத்தின் கதை.
சூர்யாவின் தம்பி கார்த்தி அறிமுக நாயகன். அப்படி சொல்ல முடியாத படிக்குப் பாத்திரத்தைக் கச்சிதமாக உள்வாங்கி கார்த்தி நடித்துள்ளார். தொடைக்கு மேல் ஏற்றிக் கட்டிய வேட்டி, முரட்டுத் தாடி, உடல் மொழியிலேயே பேசும் லாகவம், குடி-கூத்தி-அடிதடி-ஆட்டம்பாட்டம்... என எந்த இடத்திலும் அந்நியம் தெரியாமல் ஒரு கிராமத்துச் சண்டியராகக் கார்த்தி ஜமாய்த்துள்ளார். அவருடன் இணைந்தே இருக்கும் சரவணன், ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார். அவர் வயதிற்கு ஏற்ற பொருத்தமான பாத்திரம்.
கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ள பிரியாமணி, பிரமாதப்படுத்தி இருக்கிறார். 'உம்மேல உசுரையே வச்சிருக்கேன்' எனக் கார்த்திக்குப் புரியவைத்து, கல்லான அவன் மனத்தையும் கரைத்துவிடுகிறார். எந்த மேக்கப்பும் இல்லாமல், மிகச் சாதாரண தோற்றத்திலேயே தன் ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளார். தான் நினைத்ததை அடைய எதையும் செய்யும் துணிச்சல், வீரம், தெறிக்கும் சொற்கள்... என அவரின் பாத்திரமும் கச்சிதம். மதுவைக் கொடுத்துக் கார்த்தியை மயங்கவைத்து, அவன் மார்பில் தன் பெயரைப் பச்சை குத்தும் காட்சி அருமை.
நாட்டுப்புறக் கலைக்கும் பாடல்களுக்கும் பருத்திவீரன் படம், புத்துயிர் ஊட்டியுள்ளது. 'ஊரோரம் புளியமரம்' பாடலும் 'டங்காடுங்கா' பாடலும் தாளம் போட்டு ஆடவைக்கும் அசத்தல் பாட்டுகள். 'அறியாத வயசு' என இளையராஜா பாடுவது, கேட்க இனிமை.
படம், மேலும் பல வகைகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இயல்பான பேச்சு வழக்கு, தத்ரூபமான காட்சியமைப்பு (ஒளிப்பதிவு - ராம்ஜி), அருமையான பாடல்கள் (சினேகன்), பின்னி எடுக்கும் பின்னணி இசை (யுவன்சங்கர் ராஜா), வித்தியாசமான படத் தொகுப்பு (சுதர்ஸன்)..... படத்தின் மகுடத்தில் பல மயிலிறகுகள்.
இயல்பான கிராமத்து நகைச்சுவைக்குக் கஞ்சா கருப்பு, குட்டிச்சாக்கு விமல்ராஜ், பொணந்தின்னி, பிரியாமணியின் அம்மாவாக வரும் சுஜாதா, சிறுவயது பருத்திவீரனும் முத்தழகுமாக நடித்தவர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள் பாண்டி, லட்சுமி..... என ஒவ்வொரு பாத்திரமும் படத்துக்கு வலிமை சேர்க்கின்றன.
படத்தின் முடிவு, இதயத்தைக் கனக்க வைக்கிறது. 'நாளைக்கு எனக்குக் கல்யாணம்டா' என பிரியாமணி சொல்லச் சொல்லக் கேட்காமல், 'சூப்பர் ஐட்டம்' என நாலு பேர் மாறி மாறி அவரை வன்புணர்கிறார்கள். முன்பொரு முறை அதே இடத்தில் பருத்திவீரன், வேறொரு உண்மையான ஐட்டத்துடன் படுத்து எழுகிறான். எவ்வளவோ முறைகள் அந்த இடத்தில் பருத்திவீரன் படுத்திருக்கிறான். ஆனால், அதே இடத்தில் அவன் காதலி மானம் இழக்கிறாள். 'இது வரைக்கும் நீ செஞ்ச பாவத்தையெல்லாம் என்கிட்ட மொத்தமா இறக்கி வச்சுட்டாங்க' என்று பிரியாமணி கதறுகிறார். இந்தச் செய்தியை அழுத்தமாகச் சொல்லத்தான் இந்த நீளமான பாலுறவுக் காட்சியை இயக்குநர் அனுமதித்திருக்கிறார் என்று தோன்றுகிறது.
பருத்திவீரன், அவசியம் பார்க்க வேண்டிய படம்.
நன்றி: தமிழ்சிஃபி
1 comment:
நல்ல விமர்சனம். நல்ல படம்.
Post a Comment