!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> சந்தோஷ் சுப்ரமணியம் திரை விமர்சனம் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, April 18, 2008

சந்தோஷ் சுப்ரமணியம் திரை விமர்சனம்மகனின் அன்றாட நடவடிக்கை முதல்கொண்டு முழு வாழ்வையும் அப்பா தீர்மானித்தால் எப்படி இருக்கும்? இது தான் சந்தோஷ் சுப்ரமணியம்
படத்தின் ஒரு வரிக் கதை. இந்தக் குடும்பக் கதைக்குள் காதலைக் குழைத்து ஒரு சுவையான திரைப்படத்தைக் கட்டி எழுப்பியிருக்கிறார்
இயக்குநர் எம்.ராஜா. தெலுங்கில் பொம்மரில்லு என்ற பெயரில் வெளிவந்து வெற்றி வாகை சூடிய படத்தின் தமிழ் வடிவம் இது.

மகன் சந்தோஷாக ஜெயம் ரவி; அப்பா சுப்ரமணியமாக பிரகாஷ்ராஜ். மகன் என்ன நிறத்தில் சட்டை அணிய வேண்டும் என்பதிலிருந்து கேரம்
விளையாட்டில் அவன் எந்தக் காயை, எப்படி அடிக்க வேண்டும் என்று சொல்வதிலிருந்து படிப்பு, தொழில், கல்யாணம் என அடுத்தடுத்து எல்லா
முடிவுகளையும் அப்பாவே எடுக்கிறார். மகனுக்கு நல்லது செய்வதாக அப்பா நினைக்கிறார். ஆனால், சின்னச் சின்ன மகிழ்ச்சிகளை இழந்துவிட்டு,
வேண்டா வெறுப்பாக மகன் ஒத்துழைக்கிறான்.

தன் வாழ்வில் தொழில், திருமணம் என்ற இரண்டு விஷயத்தில் மட்டுமாவது தன் விருப்பப்படி நடக்க வேண்டும் என்று மகன் நினைக்கிறான். ஆனால்,
அப்பா, மகனுக்கு அவர் விருப்பப்படி ஒரு பெண்ணை நிச்சயம் செய்துவிடுகிறார். இந்நிலையில் தான் மகன், ஹாசினி என்ற பெண்ணை
(ஜெனிலியா) சந்திக்கிறான். தவறுதலாக ஒரு முறை முட்டினால், மறு முறையும் முட்டிக்கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால் தலையில் கொம்பு
முளைக்கும் என்று நம்பும் விளையாட்டுப் பெண் அவள். அவளின் குறும்பும் கள்ளம் கபடம் இல்லா அன்பும் வெள்ளைச் சிரிப்பும் மகனைக்
கவர்கின்றன. இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது.

ஒரு கட்டத்தில் அப்பாவிடம் தான் காதலிக்கும் பெண்ணைப் பற்றிச் சொல்கிறான் மகன். 'அவளை அழைத்து வா. ஒரு வாரம் நம் வீட்டில்
இருக்கட்டும். நம் குடும்பத்திற்கு அவள் ஏற்றவளா என்று பார்க்கலாம்' என்கிறார் அப்பா. சுற்றுலா போவதாகத் தன் அப்பாவிடம் (சாயாஜி ஷிண்டே)
சொல்லிவிட்டு, ஜெயம் ரவி வீட்டிற்கு வருகிறாள் ஜெனிலியா. அங்கு தங்கும் ஒரு வாரத்தில் அந்த வீட்டார் அனைவரின் மனத்திலும் இடம்
பிடிக்கிறாள். ஆனால், தொடரும் சம்பவங்களால் அவளாகவே அந்த வீட்டை விட்டுப் போகிறாள். பிறகு காதலர்கள் எப்படி இணைந்தார்கள் என்பதே
மீதிக் கதை.

இந்தப் படத்தில் ஜெனிலியாவின் நடிப்பு, மிக மிக அற்புதமாக அமைந்துள்ளது. வசீகர அழகு; வாய் நிறைய சிரிப்பு; துருதுரு பேச்சு; சுட்டித்தனம்;
அப்பாவியான பார்வை; கொஞ்சு தமிழ்... என ஒரு மான்குட்டி போல் படமெங்கும் செய்யும் மாயம் செய்கிறார். யார் கை நீட்டினாலும் அவர்களின்
தோளுக்குத் தாவும் குழந்தை போல், எல்லோரையும் ஒன்றாகவே அவர் பார்ப்பது அருமை. தேநீர்க் கடைக்காரர், பானி பூரி விற்பவர், ஐஸ்கிரீம்
விற்பவர் என எல்லோரையும் நட்புடன் பெயர் சொல்லி அழைப்பது அழகு. மகிழ்ச்சியை மட்டுமில்லாமல், சோகம், குழப்பம், கவலை என எல்லா
உணர்வுகளையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார் ஜெனிலியா. இந்தப் படத்துக்காக அவருக்குப் பல விருதுகள் கிடைப்பது உறுதி.

அனைத்துப் பாத்திரங்களையும் ஜெனிலியா தூக்கிச் சாப்பிட்டுவிட்டார். என்றாலும் அவருக்கு அடுத்த படியாக ஜெயம் ரவி, தன் பங்கை நன்கு
நிறைவேற்றியுள்ளார். அப்பாவின் வற்புறுத்தலுக்காகத் தன் ஆசைகளை விட்டுக் கொடுக்கும் ஒவ்வொரு காட்சியிலும் ஒளிர்கிறார். பிரகாஷ்ராஜ்,
சாயாஜி ஷிண்டே, கீதா, எம்.எஸ்.பாஸ்கர், சந்தானம், பிரேம்ஜி உள்ளிட்ட நண்பர்கள்.... என அனைவரும் குறையில்லாமல் நடித்திருக்கிறார்கள்.

ஜெயம் ரவிக்கு நிச்சயிக்கப்பட்ட கீரத், சூரிய ஒளி படாமல் வீட்டுக்குள்ளேயே வளர்ந்த பூச்செடி போல் இருக்கிறார். அவரை இன்னும் நன்றாகப்
பயன்படுத்தி இருக்கலாம். தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. டி.கண்ணனின் ஒளிப்பதிவு நன்று. எம்.எஸ்.பாஸ்கர்,
ஆசிரியராகப் படத்தில் நடித்துள்ளார். இன்னும் எவ்வளவு காலத்துக்கு இப்படிப்பட்ட ஆசிரியர்கள் இருப்பார்களோ! அதுவும் அப்துல் கலாம் போல்
அவர் வேடம் பூண்டது, மிகத் தவறு.

ரீமேக் எனப்படும் மறுஉருவாக்கக் கதைகளை அதிகமாக இயக்கி வெற்றி பெற்றவர், எம்.ராஜா. ஜெயம், எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி,
உனக்கும் எனக்கும் (சம்திங் சம்திங்) என மூன்று வெற்றிப் படங்களை எடுத்த அவருக்கு, நான்காவது படமும் வெற்றிப் படமாக அமைந்துள்ளது. 7
ஆவது நாள் முடிவில் ஜெனிலியா பற்றி முடிவு எடுக்க, ஜெயம் ரவி வீட்டார் கூடியிருக்கின்றனர்; பிரகாஷ்ராஜூம் ஜெயம் ரவியும் தங்கள் கருத்தை
முதலில் பேச முயலுகின்றனர். அப்போது ஜெனிலியாவை முதலில் பேச வைத்தது, இயக்குநரின் முதிர்ச்சிக்குச் சான்று. இந்தப் படத்தின் இறுதிக்
காட்சி, சிறப்பாக அமைந்துள்ளது.

என்.பாஸ்கரின் கதைக்குத் திரைக் கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார், ராஜா. Love Makes Like Beautiful என்ற வாசகத்தைப் படத்தின்
தலைப்புடன் சேர்த்து வெளியிட்டுள்ளார்கள். இதே வசனத்துடன் ஒரு பாடலும் இதில் உள்ளது. சந்தோஷ் சுப்ரமணியம் என்ற தலைப்பே தமிழாக
இல்லாதபோது, துணை வாசகத்தைத் தமிழில் எப்படி எதிர்பார்ப்பது?

நல்ல கதைக்காக, ஜெனிலியாவின் அபார நடிப்புக்காக இந்தப் படத்தைப் பார்க்கலாம்.


நன்றி: தமிழ் சிஃபி

3 comments:

ரவிசங்கர் said...

sify தமிழ்த் தளத்துக்கு ஓடை வசதி தந்தா நல்லா இருக்கும்.

**

ஒரு முக்கிய தமிழ் இணையத்தளத்தில் இயன்ற அளவு நல்ல தமிழில் விமர்சனத்தைக் காண மகிழ்ச்சி

**

நன்றி

Thamizhmaangani said...

//சந்தோஷ் சுப்ரமணியம் என்ற தலைப்பே தமிழாக
இல்லாதபோது, துணை வாசகத்தைத் தமிழில் எப்படி எதிர்பார்ப்பது?//

ஹாஹா.. சரியா சொன்னீங்க.

Ravi said...

Genelia did well in Telugu also.
havent seen the tamil version,
wanna see for Prakashraj's acting..
happy to see some good tamil
in ur review.