!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> புரட்சியாளர் பாரதிதாசன் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, May 02, 2008

புரட்சியாளர் பாரதிதாசன்

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்,
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!

என் பள்ளிப் பருவத்துப் பேச்சுப் போட்டிகளில் நான் இந்தப் பாடலை முதலில் கூறிய பிறகு, என் பேச்சைத் தொடங்கி இருக்கிறேன். நான் மட்டுமில்லை; ஏனைய மாணவர்களும் பாவேந்தரின் ஏதேனும் ஒரு பாடலைப் பாடித் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அது, பேச்சுக்கு அழகும் கம்பீரமும் சேர்க்கவும் முதலில் நடுவர்களிடம் ஒரு நல்லெண்ணத்தை ஏற்படுத்தவும் பெரிதும் பயன்பட்டது.

தொடர்ந்து அவரின் பாடல்களைப் படித்து அதன் நயங்களில் மனம் சொக்கியது உண்டு. பிறகு இதே தாக்கத்தில், ஆனால், அவருடைய நடையிலிருந்து மாறி இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் என் 18 வயதில் ஒரு பாடல் இயற்றினேன்.

சீனிதனை, வெல்லத்தை, தேங்காய் பர்ப்பி
தீஞ்சுவையை, அதிரசத்தை, மைசூர் பாகை,
தேனதனை, சாங்கிரியை, பஞ்சாமிர்தத்
தித்திப்பை, அல்வாவை, குஞ்சா லாடை,
பானகத்தை, பாதுசாவை, பால்கோவாவை,
பாற்சுவையை இனிப்பென்று சொல்வேன். ஆனால்
வானவளை வளத்தமிழை வண்ணப் பூவை
வாழ்வென்பேன் உயிரென்பேன் வையம் என்பேன்!

இப்படியாக என் தொடக்க காலக் கவிதை முயற்சிகளில் அவரின் பாதிப்பு இருந்தது. பிறகு வேறு திசையில் பயணிக்கத் தொடங்கினேன். ஆயினும் என்பதின் பருவத்தில் பாவேந்தரின் படைப்புகள் எனக்கு உணர்வூட்டியது உண்மை.

பின்னர் என் 20களில், பாவேந்தருடன் நெருங்கி இருந்த சுரதா, பொன்னடியான், ஈரோடு தமிழன்பன் போன்றோருடன் பழகும் வாய்ப்பு கிட்டியது. அவர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளேன். என் இரண்டாம் கவிதைத் தொகுப்புக்குப் பொன்னடியான் அணிந்துரை வழங்கினார். சுரதாவையும் ஈரோடு தமிழன்பனையும் பேட்டி கண்டதுண்டு. தமிழன்பன் கவிதையைப் பெற்று, அமுதசுரபியில் நான் ஆசிரியராக இருந்தபோது வெளியிட்டதுண்டு.

பாவேந்தரின் பெயரன் புதுவை கோ.பாரதியுடன் இணைந்து, சென்னை வானொலி நிலையத்தில் பணியாற்றியுள்ளேன்.

'கனகசுப்புரததினம் எப்படி தன் பெயரை பாரதிதாசன் என்று வைத்துக்கொண்டதன் மூலம் பாரதிக்கு அடுத்தபடியாக பாரதிதாசன் என்று கூறும்படி வைத்தாரோ, அதே பாணியைப் பின்பற்றி நான் சுப்புரத்தின தாசன் என்று வைத்துக்கொண்டேன். இனி வருபவன், பாரதி, பாரதிதாசன், சுரதா என்றுதானே கூறுவான்' என வேடிக்கையாகச் சுரதா என்னிடம் சொன்னதுண்டு.

பாரதிதாசனின் கவிதை வீச்சு, அபாரமானது. அழகுமிகு சொற்செட்டு, கூரிய கருத்துகள், புதுமையான வெளிப்பாடு, சமூகவியல் கண்ணோட்டம்... என அவரின் படைப்புகள் பலவும் அனைவரையும் காந்தமாய்க் கவர்ந்தன. தமிழ், தமிழர், தமிழ்நாடு என்ற மையத்தில் நின்று உலகளாவிய விசாலப் பார்வையால் மக்களை விழுங்கினார்.

கவிதைகளால் பலரையும் ஈர்த்தவர் என்றபோதும் மேலும் பல சிறப்புகளும் அவருக்கு உண்டு. அவர் பாண்டியன் பரிசு என்ற தன் காப்பியத்தைத் திரைப்படமாக எடுக்கத் தானே சொந்தமாகப் பட நிறுவனத்தைத் தொடங்கினார். திரைப் பாடல்கள் புனைந்தார். புதுவையில் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இலக்கியம், திரைப்படம், அரசியல் ஆகிய துறைகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். பெரியாரின் கொள்கைகளைத் தன் பாடல்கள் மூலம் பிரசாரம் செய்து, சமூக விழிப்புணர்வுக்குச் சிறந்த பங்காற்றியவர் இவர்.

இன்றும் திராவிடம், தமிழ், பெரியாரியம், பொதுவுடைமை.... போன்ற பின்புலங்களைக் கொண்டோரின் வீடுகளுக்குச் சென்றால் அங்கே பாரதிதாசனின் புகைப்படம் வீற்றிருப்பதைக் காணலாம். ஹிட்லர் போன்று குறுகிய மீசையும் மூக்கு கண்ணாடியும் முறைப்பான பார்வையும் கொண்ட இவரிடமிருந்து தமிழ் பீரிட்டெழுந்தது! காதலோ, வீரமோ, வன்மையோ, மென்மையோ, மகிழ்ச்சியோ, சோகமோ எந்த உணர்வையும் அவரின் சொற்கள் அற்புதமாக ஏந்தி வந்தன.

புரட்சிக் கருத்துகளைப் பாரெங்கும் பரப்பியதில் அவரது பங்களிப்பு முக்கியமானது. பெண் விடுதலை, சமூக விடுதலை, மண் விடுதலை.... என அவரின் ஒவ்வொரு கருவும் இந்தச் சமுதாயத்தில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன. தொடர்ந்து ஏற்படுத்தியும் வருகின்றன. ஒவ்வொரு தலைமுறைக்கும் புதிய கருத்துகளை அவரின் பாடல்கள் தரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

பாவேந்தர் பிறந்த நாளை முன்னிட்டு 29.4.1995 அன்று சென்னை கடற்கரையில் பாரதிதாசன் சிலைக் கவியரங்கம் நடந்தது. சிலையருகே கவிஞர்கள் கூடி, பாவேந்தரை வாழ்த்திப் பாடுவதாக நிகழ்ச்சி. அதில் நானும் பங்கு பற்றிக் கவிதை பாடினேன்.

அதிலிருந்து சில வரிகள் இங்கே:

பகுத்தறிவற்ற சமுதாயம் அன்று
இருளில் மட்கியது - நீ
வெகுண்டெழுந்து சீறிய சீறலில்
வீரம் வெட்கியது!

பூவுக்குள் எப்படி புயல் வந்ததென்று
பார்த்தோர் வியந்தார்கள் - உன்
பாவுக்குள் அடிக்கடி எரிமலை வெடிப்பதால்
தீயோர் பயந்தார்கள்!

பாரதிதாசன் உண்மையில் புரட்சியாளரே. அவரைப் புரட்சிக் கவிஞர் என்று அழைப்பது சாலப் பொருந்தும்.

இப்படிப்பட்ட புரட்சியாளருக்கு இணைய உலகில்.. தமிழ் உலகம் ம‌டலாடற் குழுவில் தொடர்ந்து விழா எடுத்து வருவதை பாராட்டி மகிழ்கிறேன். தன்னலம் இன்றி, தங்கள் நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டு இப்படியான விழாவினை நடத்தியமை, தமிழ் உலகம் உறுப்பினர்களின் தமிழ் உணர்வையும் தமிழ்க் காதலையும் வெளிப்படுத்தும் இனிய சான்று.

நன்றி: தமிழ் உலகம் மடற்குழுமம்

படத்திற்கு நன்றி: விக்கிபீடியா

No comments: