கயாஸ் தியரி (chaos system) எனப்படும் தொடர்பியல் தத்துவத்தில் படம் தோய்ந்துள்ளது. ஒரு சிறிய மாற்றம் கூட கால ஓட்டத்தில் கணிக்க முடியாத பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதே கயாஸ் தத்துவம். ஒரு பட்டாம் பூச்சியின் சிறகசைப்பு, காற்று மண்டலத்தில் ஏற்படுத்தும் சிறு மாற்றம் கூட, காலப் பெருவெளியில் ஒரு சூறாவளி ஏற்படக் காரணம் ஆகலாம். 12ஆம் நூற்றாண்டில் ஒரு கற்சிலையைக் கடலில் தள்ளியதால் 21ஆம் நூற்றாண்டில் சுனாமி நிகழ்கிறது. நம்ப முடியவில்லையா? நம்ப வைத்திருக்கிறார்கள் தசாவதாரத்தில்.
12ஆம் நூற்றாண்டில் இரண்டாம் குலோத்துங்க சோழன் (நெப்போலியன்), சைவத்தை வளர்க்க, வைணவத்தை ஒழிக்க முயல்கிறான். அதன் தொடர்ச்சியாக, சிதம்பரத்தில் பள்ளிகொண்ட ரங்கநாதப் பெருமாளை நாட்டை விட்டு வெளியேற்ற உத்தரவிடுகிறான். அதை வீர வைணவரான ரங்கராஜ நம்பி (கமல்) கடுமையாக எதிர்க்கிறார். அதனால், நாராயணனுடன் சேர்த்துக் கட்டப்பட்டு அவரும் கடலில் வீசப்படுகிறார். நம்பியின் மனைவி கோதையும் (அசின்) அக்கணமே இறக்கிறாள்.
அங்கு ஆழ்கடலில் அமிழும் ரங்கநாதர், 2004இல் சுனாமியின் போது கரையேறி வந்து மக்களைக் காக்கிறார். 12ஆம் நூற்றாண்டில் கடற்கரையில் பிரியும் கமலும் அசினும் 21ஆம் நூற்றாண்டில் மீண்டும் கடற்கரையிலேயே இணைகிறார்கள். இங்கு மட்டுமல்லாது, படம் முழுக்கவே பெருமாள் ஒரு பாத்திரமாகவே தொடர்ந்து வருகிறார். கொடுங்கிருமி, பெருமாள் விக்கிரகத்தினுள் அடைக்கலம் ஆவதும் படம் முழுக்க, அந்தச் சிலையைத் தூக்கிக்கொண்டு கமலும் அசினும் ஓடுவதும் பொருள் நிறைந்தது. பிளெட்சர் துரத்தும்போது கோவிந்த் பாலத்திலிருந்து குதிக்கையில் ஒரு லாரியின் மேல்பகுதியில் விழுகிறார். அந்த லாரியில் ஸ்ரீராமஜெயம் என்று எழுதப்பட்டுள்ளது. இப்படி பெருமாள் பெருமை பாடும் பக்தி முகம், இந்தப் படத்துக்கு உண்டு. இந்தப் பக்திக் கதைக்குள் வேறு பல கதைகள் உண்டு.
பார்க்க: தசாவதாரம் சிறப்பிதழ்
21ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் விஞ்ஞானி கோவிந்த் ராமசாமி (கமல்) ஒரு கிருமியைக் கண்டுபிடிக்கிறார். அது வெளிப்பட்டால் கோடிக்கணக்கான மக்கள் உடனே மரிப்பார்கள் என்ற நிலையில் கோவிந்தின் விஞ்ஞானக் குழுவின் தலைவர் அதைத் தீவிரவாதிகளுக்கு விற்கப் பார்க்கிறார். அதை அறிந்த கோவிந்த், அதை எடுத்துக்கொண்டு ஓடுகிறார். அவரிடமிருந்து அதைக் கைப்பற்ற பிளெட்சர் (கமல்) என்ற அமெரிக்கர் துரத்துகிறார். கோவிந்த், திருட்டு விமானம் ஏறி, சென்னைக்கு வருகிறார். அங்கு உளவுத் துறை அதிகாரி பல்ராம் நாயுடு (கமல்) விசாரிக்கிறார். கோவிந்த், அங்கிருந்து தப்பி, சிதம்பரத்துக்கு வருகிறார். அங்கு கிருஷ்ணவேணி பாட்டி(கமல்)யிடம் அஞ்சலில் கிருமி வந்து சேர்கிறது. அதைப் பாட்டி, பெருமாள் விக்கிரகத்தினுள் வைத்துவிடுகிறார். விக்கிரகத்துடன் கமல் ஓடுகையில் இந்தப் பாட்டியின் பேத்தி ஆண்டாள் (அசின்) உடன் வருகிறார். கடைசியில் கிருமி யார் கையில் சிக்கியது?, அதன் விளைவு என்ன?, அது எப்படி சரி ஆயிற்று என்பதுடன் படம் முடிகிறது.
இந்தக் கிருமி விரட்டல் கதைக்கு இடையில் பல கிளைக் கதைகள் உள்ளன. தலித் தலைவர் வின்சென்ட் பூவராகன்(கமல்), மணல் கொள்ளையைத் தடுக்கப் போராடுறார். பஞ்சாபி பாப் பாடகர் அவதார் சிங் (கமல்) புற்றுநோயால் ரத்தம் கக்கியபடி பாட்டுப் பாடுகிறார். 7 அடி உயரத்தில் வரும் கலிஃபுல்லா கான் (கமல்), மசூதியில் அடைக்கப்படுகிறார். அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் (கமல்), கிருமி ஆராய்ச்சிக்குப் பல கோடி நிதி ஒதுக்குகிறார். அமெரிக்காவில் கோவிந்தின் நண்பனின் மனைவியாக யுகா என்ற ஜப்பானியப் பெண் வருகிறார். கோவிந்தைக் கொல்ல வந்த பிளெட்சர், யுகாவைக் கொல்கிறார். எனவே ஜப்பானில் உள்ள யுகாவின் அண்ணன் ஷிங்கென் நரஹஷி(கமல்), தன் தங்கையைக் கொன்றவனைப் பழிவாங்கப் புறப்படுகிறார்.
இப்படி 10 படங்களாக எடுக்க வேண்டியதை ஒரே படமாக எடுத்தால் எப்படி இருக்கும்? அதுதான் தசாவதாரம். இந்தப் பத்து கதாபாத்திரங்களையும் ஒரு வார காலத்திற்குள் ஏதோ ஒரு வகையில் ஒன்றுடன் ஒன்று இணைத்து ஒரு கதையை எடுப்பது எவ்வளவு பெரிய சவால்! இந்தச் சவாலைத் துணிச்சலாக எதிர்கொண்டுள்ளார்கள் கமலும் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரும்.
கமலின் 10 அவதாரங்கள்
கமல் 1 (ரங்கராஜ நம்பி):
12ஆம் நூற்றாண்டுக் காட்சிகள் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளன. கிராஃபிக்சும் அருமை. ரங்கராஜ நம்பியின் நாமம், திரண்ட தோள்கள், பெருமாள் பக்தி... அனைத்தும் குறைவான காட்சிகளிலேயே அழகாகக் காட்டப்பட்டுள்ளது. சைவத்துக்கு மாறினால் உயிர் பிழைக்கலாம் என்ற நிலையில் மதம் மாறாமல் 'ஓம் நமோ நாராயணா' என்கிறார். அதையடுத்து நம்பிக்குச் சித்திரவதை தொடங்குகிறது. அவரது முதுகை 4 கம்பிகளால் கட்டி அந்தரத்தில் தொங்க விடுகிறார்கள். அவர் உயிரோடு இருக்கையிலேயே அவர் மகனே அவருக்கு இறுதிச் சடங்கு செய்கிறான். இறுதியில் நம்பியும் நாராயணனுடன் சேர்த்துக் கட்டப்பட்டு கடலில் இறக்கப்படுகிறார். நம்பியின் மனைவி கோதையும் அக்கணமே மரிக்கிறாள். படம் வெளிவருவதற்கு முன்னால் வைணவத்துக்கு இந்தப் படம் இழுக்கு சேர்க்கிறது என்று வழக்கு தொடுத்தார்கள். வைணவரின் மதப் பற்றினைச் சொல்லும் படம், சைவர்களின் மதத் திணிப்பை, அநாகரிகமான தண்டனைகளை எடுத்துரைக்கிறது. நல்லவேளை, சைவர்கள் இதற்காக வழக்கு தொடுக்கவில்லை.
கமல் 2 (கோவிந்த் ராமசாமி):
அமெரிக்க உயிரி ஆய்வகத்தில் வேலை. கொலைகாரக் கிருமியைத் தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றப் படம் முழுக்க ஓடுகிறார். சுவரில் பல்லி மாதிரி ஒட்டிக்கொண்டு நிற்கிறார். பாலத்திலிருந்து குதிக்கிறார். ஓடும் ரெயிலில் ஏறுகிறார். மோட்டார் சைக்கிளில் பறக்கிறார். படத்தை இழுத்துச் செல்லும் மையப் பாத்திரம் இது. அசினுடன் நெருக்கம் கொள்கிறார். அது, கடைசியில் காதலாக மாறுகிறது. ஐயங்கார் பெண்ணாக அசின் பொருந்துகிறார். பெருமாளே என்ற அவரின் தவிப்பு நன்று. சிலையை மணலில் புதைக்கும் இடத்தில் 'மங்களா சாசனம்' எனப் பாடிய பிறகு புதைக்கச் சொல்வது, அவரின் பக்தி உணர்வைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
கமல் 3 (கீத் பிளெட்சர்):
முறுக்கேறிய கட்டுடல்; வேகமான அசைவுகள்; தவறாத குறி; தொழில்நுட்பத் தேர்ச்சி; சர்வ சாதாரண கொலைகள்; ஒயிலான ஆங்கிலம்; அதீத புத்திசாலித்தனம்.... இவற்றின் கலவையே பிளெட்சர். அமெரிக்க சிஐஏ அமைப்பின் முன்னாள் ஊழியர். கிருமியுடன் கோவிந்த் தமிழ்நாட்டுக்குச் சென்றதும் இவரும் பின்தொடர்கிறார். அவருக்கு மொழிபெயர்ப்பாளராக மல்லிகா ஷெராவத் உடன் வருகிறார். ஆனால், சிதம்பரத்தில் மல்லிகா கொல்லப்படுகிறார். மொழி புரியாத பிளெட்சர், கோவிந்தையும் கிருமியையும் விரட்டும் காட்சிகள் அபாரம். தனி மனித இராணுவம் என்பது போல், தன்னந்தனியாகவே துணிச்சலுடன் அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் விறுவிறு.
கமல் 4 (வின்சென்ட் பூவராகன்):
மணல் கொள்ளையை எதிர்க்கும் நேர்மையான அரசியல்வாதி இவர். தலித் தலைவராக இவருடைய கண் பார்வை, உடல் மொழி அனைத்திலும் வித்தியாசம் காட்டியுள்ளார் கமல். மணல் கொள்ளையைப் பூமித் தாயைக் கற்பழித்தல் என்று வர்ணித்து, அதைத் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பாகக் காட்டும் துணிச்சல் அருமை. அவருடைய தொண்டராகப் பாடலாசிரியர் கபிலன் தோன்றுகிறார். கடைசியில் சுனாமியில் இவர், மணல் கொள்ளையரின் குடும்பத்தைக் காப்பாற்றிவிட்டு மரிக்கிறார். இவர் பேசும் வசனங்களும் இவரின் உணர்வுகளும் அழகாக வந்துள்ளன.
கமல் 5 (பல்ராம் நாயுடு):
உளவுத் துறை அதிகாரியாக இவரின் நடிப்பு, அருமை. இந்தியாவிலேயே அதிகம் பேசப்படும் மொழி, இந்திக்கு அடுத்து தெலுங்குதான் என இவர் பெருமை கொள்வதும் தெலுங்குக்காரர்களைக் கண்டு அன்பும் நெருக்கமும் கொள்வதும் இயல்பாக உள்ளன. தெலுங்குப் பற்றினைக் காட்டியதோடு, இவரை ஒரு கோமாளியாக இயக்குநர் காட்டிவிட்டார். இது, சிரிப்பை வரவழைக்கும் அதே நேரம் இந்திய உளவுத் துறையின் மதிப்பைக் குறைப்பதாக உள்ளது. மேலும் படம் முழுக்கவே காவல் துறையினர் அனைவரும் மோசமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளனர். எளிதில் ஏமாற்றப்படுபவர்களாகவும் பலவீனர்களாகவும் அப்பாவிகளாகவும் காட்டியிருக்கிறார்கள். இது, உண்மைக்கு மாறானது மட்டுமில்லை; உலக அரங்கில் கேவலம் தருவது.
தசாவதாரம்: TNS விமர்சனம்
இவர்களைத் தவிர ஜப்பானிய தற்காப்புக் கலை வீரர், 7 அடி உயர கலிஃபுல்லா கான், அவதார் சிங், ஜார்ஜ் புஷ் ஆகிய பாத்திரங்களுக்காகக் கமல் கடுமையாக உழைத்திருந்தாலும் அந்தப் பாத்திரங்கள், தேவையற்ற இடைச் செருகலாக உள்ளன. கலிஃபுல்லா கான், ஜார்ஜ் புஷ், ஜப்பானிய வீரர் ஆகிய தோற்றங்களில் செயற்கைத்தனம் தெரிகிறது. அதுவும் ஜார்ஜ் புஷ், என்ஏசிஎல்(NaCl) என்றால் என்னவெனக் கேட்பதும் அணுகுண்டு வீசலாமா எனக் கேட்பதும் அவரின் தரத்திற்கும் பதவிக்கும் பொருந்தவில்லை.
தசாவதாரம்: மஞ்சூர்ராசா விமர்சனம்
படம் முழுக்க மனநிலை சரியில்லாதவராக வரும் கிருஷ்ணவேணி பாட்டி, கடைசியில் பூவராகன் இறந்து கிடப்பதைப் பார்த்து, ஆராவமுதா என மடியில் போட்டு அழுவது உருக்கமானது. படத்தின் கதை, திரைக் கதை, வசனம் ஆகியவற்றைக் கமல் இயற்றியுள்ளார். வசனத்தில் பல இடங்களில் நகைச்சுவை மின்னல். ஹிமெஷ் ரேஷமையாவின் இசையில் 'கல்லை மட்டும்', 'முகுந்தா முகுந்தா' ஆகிய பாடல்கள் பெரிதும் கவர்கின்றன. ரவிவர்மனின் ஒளிப்பதிவு, படத்திற்குப் பெரும் துணையாக, தூணாக உள்ளது.
70 கோடி செலவில் பிரமாண்டமாக உருவான இந்தப் படம், மீண்டும் பார்க்கத் தூண்டும் வகையில்தான் உள்ளது. சுனாமி வந்ததை நியாயப்படுத்தி இருப்பது, நன்று.
10 பாத்திரங்கள் என முடிவு செய்து கதையை அமைத்திருப்பது, தைத்த சட்டைக்கு ஏற்ப, உடம்பை வளைத்துக்கொள்வது போல் உள்ளது. ஆயினும் இதிலும் தன் முத்திரையைக் கமல் பதித்துள்ளார். உலகில் முதல் முறையாக ஒரே படத்தில் 10 வேடங்களில் நடித்த சாதனையைக் கமல் செய்துள்ளார். இப்போது அகல உழுதிருக்கிறார்; அவர் ஆழ உழவேண்டும் என்பதே உண்மையான திரை ஆர்வலர்களின் விருப்பம்.
நன்றி: தமிழ் சிஃபி
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Saturday, June 21, 2008
தசாவதாரம் திரை விமர்சனம்
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 9:23 PM
Labels: திரை விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Good review. We need variety. Let's enjoy both wide and deep ideas.
Post a Comment