!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> இராம.கோபாலன் உடன் அரட்டை அடிக்க ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, June 09, 2008

இராம.கோபாலன் உடன் அரட்டை அடிக்க


'இந்து முன்னணி'யின் மாநில நிறுவன அமைப்பாளர் இராம.கோபாலன்(81), சிஃபி வாசகர்களுடன் அரட்டை அடிக்க இசைந்துள்ளார். ஜூன் 10 அன்று இந்திய நேரப்படி நண்பகல் 12 மணிக்கு அவருடன் நீங்கள் அரட்டை அடிக்கலாம்.

உங்கள் கேள்விகளைத் தொடுக்க வேண்டிய முகவரி: http://sify.com/connect/celebchat/chathome.php

இந்துக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் 'இந்து முன்னணி'யின் மாநில நிறுவன அமைப்பாளர், இராம.கோபாலன். இவர், 1945இல் தொடங்கி, ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் கடந்த 63 ஆண்டுகளாக நெருங்கிய உறவு கொண்டவர். இந்துக்களை மதம் மாற்றுவதை எதிர்ப்பது, மதம் மாறியவர்களை மீண்டும் தாய் மதத்திற்கு அழைத்து வருவது, இந்துமத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் நிகழ்வுகள் எங்கு நடந்தாலும் எதிர்த்துப் போராடுவது எனப் பல பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். 'இந்து ஜாகரன் மஞ்ச்' என்ற அமைப்புக்கு அகில இந்திய வழிகாட்டியாக இருக்கிறார்.

மீனாட்சிபுரம் மதமாற்றம், கன்னியாகுமரி மாவட்டத்தை 'கன்னி மேரி' மாவட்டமாக்க கிறிஸ்தவர்கள் மேற்கொண்ட முயற்சி. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு லட்சம் இந்துக்களை முஸ்லிமாக மதமாற்ற நடந்த முயற்சி, சேலத்தில் ராமர் படத்திற்கு செருப்பு மாலை போட்டு, விநாயகரைச் செருப்பால் அடித்து திராவிடர் கழகம் நடத்திய ஊர்வலம்.... இவை போன்று தமிழகத்தில் நடந்த நிகழ்ச்சிகள், உணர்வுள்ள இந்துக்களை உலுக்கிக் கொண்டிருந்தன. இந்த நிலைமையை மாற்ற ஏதாவது செய்தாக வேண்டும் என்கிற எண்ணம் பலருக்கு ஏற்பட்டது.

1980 பிப்ரவரியில் கரூரில் ஆர்.எஸ்.எஸ்ஸின் மாநில அளவிலான கூட்டம் நடந்தது. இதில் மேற்கூறிய பிரச்னைகள் பற்றி விரிவாக விவாதம் நடந்தது. ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர்கள் யாதவராவ் ஜோஷி, சேஷாத்ரிஜி, சூர்யநாராயணராவ்ஜி ஆகியோர் தமிழகத்தில் நிலவிய இந்த அசாதாரணமான நிலையை மாற்ற ஒரு தனி இயக்கம் தேவை என முடிவு செய்தனர். அதன்படி அந்த கரூர் கூட்டத்திலேயே 'இந்து முன்னணி' என்கிற அமைப்பு தொடங்கப்பட்டது. இதன் மாநில அமைப்பாளராக அப்போது ஆர்.எஸ்.எஸ்ஸின் மாநில இணை அமைப்பாளராக இருந்த இராம.கோபாலன் நியமிக்கப்பட்டார். சில ஆண்டுகள் ஆர்.எஸ்.எஸ்ஸின் மாநில இணை அமைப்பாளர், இந்து முன்னணியின் மாநில அமைப்பாளர் என்று இரண்டு பொறுப்புகளிலும் செயல்பட்டார்.

ஓடாத திருவாரூர் ஆழித் தேரை ஓடச் செய்தது; மண்டைக்காடு கலவரத்தின்போது இந்துக்களுக்காகப் பாடுபட்டது; மீனாட்சிபுரம் மதமாற்றத்தின் போது அதை நாடு தழுவிய பிரச்சினையாக்கி மதமாற்றம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது; வேலூர் கோட்டையில் 400 ஆண்டுகள் சாமி இல்லாத கோயிலில் ஜலகண்டேஸ்வரர் சிலையை பிரதிஷ்டை செய்தது; தமிழகம் முழுவதும் இந்து எழுச்சி மாநாடுகளை நடத்தியது; தமிழகத்தில் வீதிதோறும் விநாயகர் சிலைகளை வலம் வரச் செய்தது... எனப் பலவற்றுக்கு இவரும் காரணமாக இருந்திருக்கிறார்.

அனுமன் ரதம் மூலம் தமிழகத்தில் இந்து எழுச்சியை உருவாக்கினார். திருப்பூரில் 10,008 தாய்மார்களைத் திரட்டி 10,008 திருவிளக்கு பூஜை, குலசேகரப்பட்டினத்தில் 5008, துவரங்குறிச்சியில் 2008 மற்றும் தமிழகம் முழுவதும் பல இடங்களில் 1008 திருவிளக்கு பூஜை நிகழ்த்தியுள்ளார்.
பொள்ளாச்சி - கணபதிபாளையத்தில் மாநில அரசு நிதி உதவியுடன் பசு மாமிச ஏற்றுமதித் தொழிற்சாலை தொடங்கும் முயற்சியை முறியடித்தார்.
பல்வேறு கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டார். ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட இடங்கள்: திருப்பூர் (4 கோடி), வடபழனி (10 கோடி), திருவண்ணாமலை (2 கோடி), தர்மபுரி (9.5 ஏக்கர்), கோபி சமத்துவபுரம் (2.5 ஏக்கர்), இவ்வாறு எல்லா தாலுக்கா, மாவட்டங்களிலும் சொத்துகள் மீட்கப்பட்டன. தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன.

ஆதரவற்ற குழந்தைகளைப் பராமரிக்க பாரதியார் குருகுலம் தொடங்கினார். குழந்தைகளை நல்லவர்களாக உருவாக்குவதற்காகவும் அவர்களிடம் இந்துமதச் சிறப்புகளைப் புரிய வைப்பதற்காகவும் இதுவரை 150 கிராமங்களில் பண்பாட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்து சமுதாயத்திற்காக வேலை செய்யும் தர்மவீரர்களை உருவாக்கும் பாரதப் பண்பாட்டுப் பயிற்சி கல்லூரியை உருவாக்கியுள்ளார்.

செயல் வீரர் மட்டுமின்றி, கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்... எனப் பல முகங்கள் இவருக்கு உண்டு. தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகள் கற்றவர். மலையாளம் பேசத் தெரியும். வட இந்தியர்கள், ஹிந்தியில் பேசும்போது இவர் தமிழில் மொழிபெயர்த்துச் சொன்னதுண்டு. கேரளாவில் பிரசாரக்காக இருந்தவர்.

அவருடைய தலையில் ஒரு பெரிய வடு இருக்கும். அது, 1982இல் மதுரையில் இவர் மீது நடந்த தாக்குதலின் போது பட்ட காயம். இன்றும் அதனால்தான் அந்த வடுவை மறைக்க, தலையில் காவி டர்பன் கட்டுகிறார். இப்போதும் இஸ்லாமிய தீவிரவாதிகளின் குறியாக இருப்பவர்; அதனால் எப்போதும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் இவரைச் சுற்றி இருப்பார்கள்.

சேது சமுத்திரத் திட்டத்தைத் தொடங்கிய போது, ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று முதலில் குரல் கொடுத்தார். ராமர் பாலம் பாதுகாப்பு இயக்கத்தைத் தமிழகத்தில் தொடங்கினார்.

'தசாவதாரம் படத்தில்' இந்து மதத்திற்கு எதிரான காட்சிகளை நீக்க வேண்டும் என அறிக்கை விட்டார். ஏற்கெனவே கமலின் 'மருதநாயகம்' படத்தையும் எதிர்த்தார். 'வணக்கம்மா' படத்தில் ராமர், அனுமார் வேடங்களில் நடிகர்கள், சிறுநீர் கழிப்பது போன்ற காட்சியுடன் சுவரொட்டி ஒட்டப்பட்டது. அதற்குக் கடும் கண்டனமும் போராட்டமும் நடத்தியதால் அந்தப் படத்தின் காட்சிகள் மாற்றப்பட்டன. நடிகர் விஜய் நடித்த 'கீதை' என்ற படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்; அதை அடுத்து, அந்தப் படம், 'புதிய கீதை' என மாற்றப்பட்டது. தனுஷ் நடித்த 'திருவிளையாடல் ஆரம்பம்' என்ற படத்தில் அஜீத், சிவன் வேடத்தில் நடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதை அடுத்து, அந்தக் காட்சிகள் நீக்கப்பட்டன.

அரசியல், கலையுலகம், ஆன்மீகம் என எங்கு இந்து மதத்திற்கு இழுக்கு நேர்ந்தாலும் குரல் கொடுத்து வரும் இராம.கோபாலன் உடன் ஜூன் 10 அன்று இந்திய நேரப்படி நண்பகல் 12 மணிக்கு நீங்கள் அரட்டை அடிக்கலாம்.

உங்கள் கேள்விகளைத் தொடுக்க வேண்டிய முகவரி: http://sify.com/connect/celebchat/chathome.php

இவருடன் உரையாட உங்களிடம் சிஃபி ஐடி இருக்க வேண்டும்.

3 comments:

Anonymous said...

How to get sify id to get joined with the miraculous program.
Kindly help me to get it soon.

தமிழ் பொறுக்கி said...

வணக்கம்... ராம கோபலன் அவர்களக்கு ஒரு இந்துவின் சார்பாக கண்டனம்....
தசாவதாரம் போன்ற படங்கள் வெளிவரும் போது இந்துக்கள் சார்பாக எதிர்க்கும் உரிமை இவருக்கு யார் கொடுத்தது... நானும் இந்து தான்...வரலாறுகளில் உள்ள உண்மை படிக்க பட வேண்டிய ஒன்று.. அதனால் ஒரு வளர்ந்த சமயத்தினர் அடிதிக்கொல்லுவார்கள் என்பது அவர்கள் அறிவிலி என்பதை காட்டுகிறது... அம்மணமாக நடித்த நடிகைகள் அம்மனாக நடித்த போது வராத கோபாலன் இப்போது மட்டும் என்ன..?
ராம நாராயணன் இந்து படங்கலில் எத்தனையோ மூடநம்பிக்கையை கூறும் போது இவர் எங்கே போனார்..?

மதி கெட்டுபோன மத சமயத்தினரை வைத்து மதம் அரசியல் செய்யாதிர்..
இந்து மதம் புனிதமானது.....

this can be publish or not, that is your wish,but i am showing anger as a hindu...

முனைவர் அண்ணாகண்ணன் said...

சிஃபி வாசகர்களின் கேள்விகளுக்கு இராம கோபாலன் அளித்த பதில்களை இந்தப் பக்கத்தில் பாருங்கள்:

இராம கோபாலனின் பதில்கள்