!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2009/06 - 2009/07 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, June 27, 2009

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்புகள்

சென்னை வானொலியின் வழக்கமான நிகழ்ச்சிகளுள் ஒன்று, காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்புகள். காணாமல் போனவரின் பெயர், நிறம், உயரம், அடையாளங்கள், தெரிந்த மொழிகள், காணாமல் போன அன்று உடுத்தியிருந்த ஆடை, மனநிலை சரியில்லாதவர் போன்ற குறிப்புகள், தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி ஆகிய விவரங்களே இவற்றில் பெரும்பாலும் இடம் பெற்றிருக்கும்.

இந்த அறிவிப்புகளைக் கேட்கும் பொழுதெல்லாம் எனக்கு ஓர் ஐயம் தோன்றும். வானொலியில் காணாமல் போனவரின் விவரங்களைக் கேட்டு ஒருவரை எப்படி கண்டுபிடிக்க முடியும்? அவர்கள் தெரிவிக்கும் விவரங்களுக்குப் பொருந்துவது போல் லட்சக் கணக்கானவர்கள் இருக்க முடியுமே!

மாநிறம் என்று சொல்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். மாநிறத்திலேயே எவ்வளவோ வித்தியாசங்கள் இருக்குமே. இடது தோளில், வலது தொடையில், முதுகில் ஒரு மச்சம் இருக்கும் எனக் கூறினால், முதலில் அந்த மாதிரி எவ்வளவோ பேருக்கு இருக்க முடியும். இரண்டாவது அவர் ஒழுங்காக ஆடை உடுத்தியிருந்தால் இந்த அடையாளங்கள் வெளியிலும் தெரிய வாய்ப்பில்லை. அடுத்து, காணாமல் போன அன்று உடுத்தியிருந்த உடையைப் பற்றிய குறிப்பு. காணாமல் போன பிறகு சுமார் ஒரு வாரம் கழித்தே இந்த அறிவிப்பு வருகிறது எனில் இவ்வளவு நாளாக ஒரே ஆடையையா உடுத்தியிருப்பார்?

இந்த நிகழ்ச்சியினால், எங்கேனும் ஒருவராவது கண்டுபிடிக்கப்பட்டாரா? கண்டுபிடிக்க முடியுமா? இந்த அறிவிப்பே ஒரு சடங்காகிவிட்டதோ என்பது என் ஐயம்.

இந்தச் சூழ்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன், வெரித்தாஸ் வானொலியில் ஜெகத் கஸ்பார் நடத்திய நிகழ்ச்சி ஒன்றை நினைவுகூர்வது பொருந்தும். ஈழக் கலவரங்களுக்குப் பிறகு வெவ்வேறு நாடுகளுக்கு ஈழத் தமிழ் மக்கள் அகதிகளாகச் சிதறிய காலத்தில் வானொலியில் இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பானது. நாடுகள் தாண்டி ஒலிபரப்பான அந்த நிகழ்ச்சியின் மூலம் தம் உறவினர்கள் எங்கே இருக்கிறார்கள் என அறிந்து உறவுகள் பல இணைந்தன எனப் படித்துள்ளேன்.

இந்த உத்தியின்படி காணாமல் போனவரின் குடும்பத்தினரையே பேச வைத்து, 'உங்களுக்காகக் காத்திருக்கிறோம்.. வந்துவிடுங்கள்' என்பது போல் பேசலாம். மன நிலை சரியில்லாதவர் என்றால், அவரைப் பற்றிய விவரங்களை நுணுக்கமாகச் சொல்லிவிட்டு, 'இவரை எங்காவது கண்டால் சொல்லுங்கள்' என உருக்கமாக வேண்டுகோள் விடுக்கலாம். காணாமல் போனவரின் நெருங்கிய உறவினரே அவரின் வாய்மொழியாகப் பேசினால் அதற்குக் கூடுதல் முக்கியத்துவம் உண்டு. இன்னும் ஒரு படி மேலாக, காணாமல் போனவரின் குரல் பதிவு ஏதும் இருந்தால் அதையும் ஒலிக்கச் செய்து, இந்தக் குரலுடையவரை எங்காவது கண்டால் சொல்லுங்கள் என்றும் கூறலாம். இப்படியெல்லாம் செய்தால் வானொலி வழியாகவும் ஒருவரைக் கண்டுபிடிக்க வாய்ப்புகள் கூடும்.

தொலைக்காட்சியிலும் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்புகள் ஒளிபரப்பாகின்றன. இவையும் ஒரு சடங்காகத்தான் பெரும்பாலும் உள்ளன. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சில நொடிகள் அந்தப் புகைப்படத்தைக் காட்டுகிறார்கள். இதைக் காட்டிலும் இந்த விவரங்களை ஒரே நாளில் பல முறைகள் காட்டி, அந்த உருவத்தை மக்கள் மனத்தில் பதிய வைக்க முயலலாம். மேலும் தொலைக்காட்சிகளில் புகைப்படத்தை மட்டும்தான் காட்ட வேண்டும் என்றில்லை; அவரின் சலன(வீடியோ)ப் படத்தையும் காட்டலாம். இப்படிச் செய்தால் இந்த முயற்சிக்கு நல்ல பயன் கிட்டும்.

அடுத்து, நாளிதழ்களில் காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்கள் புகைப்படத்துடன் வெளியாகின்றன. இவை, ஓரளவுக்கு பார்ப்பவர்கள் மனத்தில் பதியவைக்க உதவுகின்றன. இதே போன்று பேருந்து, தொடர் வண்டிகளிலும் சுரங்கப் பாதைகளிலும் சிலர் துண்டறிக்கைகளாக ஒட்டி வைக்கிறார்கள். இவற்றுக்கு நிச்சயம் பயன் உண்டு.

சுவரொட்டிகளாலும் பயன் உண்டு. ஆனால், இந்த உத்தியைப் பெரும்பாலும் காவல் துறையினரே பயன்படுத்துகிறார்கள். இந்தக் குற்றவாளியைக் காணவில்லை எனச் சுவரொட்டிகள் ஒட்டுகிறார்கள். பொதுமக்களுள் பலரும் இதைப் பெரிதாகப் பயன்படுத்தவில்லை.

தகவல் தொடர்பு வசதி பெருகாத காலத்தில் வானொலி, தொலைக்காட்சிகள் இயங்கிய விதம் வேறு. ஆனால், தகவல் தொடர்பு அபரிமிதமாகப் பெருகிவரும் இந்தக் காலத்தில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்புகள் பல மடங்குகள் மேம்படுத்தப்பட வேண்டும். தொலைக்காட்சி, வானொலியைப் பொறுத்த மட்டிலும் அரசு சார்ந்த ஊடகங்கள் மட்டுமே இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளன. எனவே, இப்போது இவற்றை மேம்படுத்த வேண்டிய முழுப் பொறுப்பும் பிரசார் பாரதி வசமே உள்ளது.

தனியார் ஊடகங்களும் இது தங்களுக்குத் தொடர்பு இல்லாத விடயம் என்பது போல் இயங்கத் தேவையில்லை. பிரமுகர்கள் யாரேனும் காணாமல் போனால், அந்தச் செய்திகளைப் படங்களோடும் சலனப் படங்களோடும் பரபரப்பான செய்தியாக வெளியிடுவோர், பொதுமக்களுள் யாரும் காணாமல் போனாலும் அவர்களைக் கண்டுபிடிக்கச் சிறிதளவாவது உதவலாம். இதற்குக் காவல் துறையினரின் ஒத்துழைப்பு மிக முக்கியம். ஒருவர் காணாமல் போனார் என்பதை வழக்காகப் பதிந்த பிறகே அது பற்றிய அறிவிப்புகளை அவர்கள் வெளியிடுகிறார்கள். இந்த அறிவிப்புகளை அரசு சார் ஊடகங்களுக்கு மட்டும் அளிக்காமல் அனைத்து ஊடகங்களுக்கும் இணைய தளங்களுக்கும் அளித்தால், பெருமளவு மக்களை இந்தச் செய்திகள் எட்டுவதற்கு வாய்ப்பாக அமையும்.

இன்னொன்று, காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்கள் மட்டுமே வந்துகொண்டிருக்கின்றன. கண்டுபிடிக்கப்பட்டவர்கள் விவரங்கள் பெரும்பாலும் வருவதில்லை. ஏன் இந்த ஒரு வழிப் பாதை?!

=========================================
நன்றி: சென்னை ஆன்லைன்

Friday, June 19, 2009

மூன்று விளம்பரங்கள் மீது ஒரு விமர்சனம்

தொலைக்காட்சிகளிலும் வானொலியிலும் அண்மைக் காலத்தில் வெளியான மூன்று விளம்பரங்கள் மீது எனக்குச் சில விமர்சனங்கள் உள்ளன.

முதலாவது மீரா ஜாஸ்மின் தோன்றும் சக்ரா கோல்டு விளம்பரம்.

தாத்தா, 'உள்ளம் உருகுதையா' என முருகர் பாடலை மனமுருகப் பாடுகிறார். பேரப் பிள்ளைகள், அதைக் கேட்க முடியாமல் காதுகளைப் பொத்திக் கொள்கிறார்கள். மருமகளான மீரா, உடனே சக்ரா கோல்டு தேநீர் போட்டு, மாமாவுக்குக் கொடுக்கிறார். அப்படியே, 'அந்தக் காலத்துல நீங்க காலேஜில் பாட்டுப் பாடிக் கலக்கினீங்க இல்ல' என நினைவுபடுத்துகிறார். உடனே தாத்தா தன் மேல் அணிந்திருந்த துண்டை எடுத்துச் சுழற்றி 'நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்' எனப் பாடுகிறார். 'மாமாவை முருக பக்தரிலிருந்து எம்ஜிஆர் ரசிகராக்க ஒரு ஸ்பூன் சக்ரா கோல்டு போதும்' என்கிறார் மீரா.

இந்த விளம்பரத்தில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளன. முதலில் பக்திப் பாடலைக் கேட்டால் குழந்தைகள் காதுகளைப் பொத்திக்கொள்வது. மாநகரத்தில், மேற்கத்திய தாக்கம் உள்ள மிகச் சில குழந்தைகள் மட்டுமே இந்த மாதிரி பாடல்களை விரும்பாமல் இருக்கலாம். மற்றபடி வானொலி, தொலைக்காட்சி, தெருமுனை, கோயில்கள்... என ஏராளமான இடங்களில் பக்திப் பாடல்கள் ஒலித்தபடி உள்ளன. சிலருக்கு அதன் ஒலி அளவு சிக்கலாக இருக்கலாமே தவிர, அவர்கள் கூட அதனை ரசிக்கவே செய்வார்கள்.

இரண்டாவது முரண், எம்ஜிஆர் பாடல் என்றால் இந்தக் காலக் குழந்தைகளுக்குப் பிடிக்கும் என்பது. குத்துப் பாட்டு, கானா பாட்டு என வேகமான தாளகதி உள்ள பாடல்களை அவர்கள் விரும்பலாமே தவிர அது எம்ஜிஆர் பாடல் மீதான ஈர்ப்பாகிவிட முடியாது.

இப்படிப்பட்ட விளம்பரத்தை ஒரு முருக பக்தர் பார்த்தால் அவர் அந்தத் தேநீர்ப் பொடியை வாங்குவாரா? இது, தமிழர்களின் உணர்வுகளை (சென்டிமென்டை) கேலி செய்வது போல் இல்லை? சில நொடிகளில் வரக்கூடிய ஒரு விளம்பரப் படம், யாரையும் புண்படுத்தாத மாதிரி இருக்க வேண்டாமா? அப்போதுதானே அவர்களின் வியாபாரம் வளரும்! விளம்பரக் கருவை யோசிப்பவர்கள், இதை எப்படி மறந்தார்கள் என்பது என் ஆச்சரியம்!

அடுத்து, ஹமாம் விளம்பரம்.

மகளைச் சோப்பு வாங்க அனுப்புகிறார் அம்மா. மகளும் மிதிவண்டியில் செல்கிறார். ஆகா, என்ன சோப்பு எனச் சொல்ல மறந்துட்டேனே! அவள் ஏதாவது ஒன்றை வாங்கிட்டு வந்தால் அவளுக்குப் பரு, தேமல் போன்றவை வந்திடும்; அவளுக்குத் தன்னம்பிக்கையே போயிடும் என்றபடி கடைக்கு ஓடுகிறார். அதற்குள் மகள் வீட்டுக்கு வந்துவிடவே, அங்கு ஓடுகிறார். மகள் தானாகவே ஹமாம் சோப்பு வாங்கியதைக் கண்டதும்தான் தாய்க்கு நிம்மதி. இப்படி ஒரு விளம்பரம்.

இதிலும் ரொம்பவே மிகைப்படுத்திய காட்சிகள் உள்ளன. வேறு சோப்பு பயன்படுத்திய உடனேயே தோல் நோய்கள் வந்துவிடும் என்பது ஒன்று; ஒவ்வொருவரின் தோல் வாகிற்கு ஏற்பவே இதன் எதிர்வினைகள் இருக்கும். சிலருக்குச் சில சோப்புகள் ஒத்துப் போகலாம்; சிலருக்கு ஒத்துப் போகாமலும் இருக்கலாம். இப்படி மிகச் சிலருக்கு மட்டுமே பொருந்தக்கூடிய தன்மையை ஒரு விளம்பரத்தின் மையப் பொருளாக எடுத்துக்கொள்வது நல்லதில்லை. அதிலும் இதற்காக அவர்கள் வரைந்து காட்டியுள்ள படம், நன்றாகவே இல்லை. இந்த விளம்பரத்தில் உள்ள இன்னொரு சிக்கல், இப்படியான தோல் நோய்கள் ஏற்பட்டால் ஒருவரின் தன்னம்பிக்கையே போயிடும் என்பது. இதுவும் மிகைப்படுத்திய காட்சி. எத்தனை குறைகள் இருந்தாலும் அவற்றைப் புறந்தள்ளி வென்று காட்டும் மனிதர்கள் மத்தியில் இந்தச் சிறு விடயங்களுக்காகத் தன்னம்பிக்கையே போயிடும் எனக் காட்டுவது ஏற்புடையது இல்லை.

அடுத்து அயோடின் உப்புக்காகச் சென்னை வானொலி நிலையம் ஒலிபரப்பி வரும் ஒரு விளம்பரம்.

'நான் அப்பா ஆகப் போறேன்' என உற்சாகக் கூக்குரல் இடும் ஒருவரை அவரின் நண்பர் கேட்கிறார். 'குழந்தை நல்லா வளர உன் மனைவி அயோடின் உப்பு சாப்பிடணுமப்பா' என்கிறார். 'அதற்கு நிறைய செலவு ஆகுமே' என முதலாமவர் கேட்க, 'ஒரு கட்டு பீடிக்கு ஆகும் செலவை விட ஒரு வாரத்திற்கு ஆகும் அயோடின் உப்பின் செலவு குறைவுதான்' என்கிறார். இதைக் கேட்டதும் முதலாமவர், 'அயோடின் உப்பின் விலை இவ்வளவு மலிவா! இவ்வளவு ஆதாயமா!' என்கிறார். புகை பிடிப்பதைக் கட்டுப்படுத்த அரசு எவ்வளவோ நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், தெரிந்தோ தெரியாமலோ ஒரு கட்டு பீடியும் மிகவும் மலிவாக இருப்பதாக இந்த விளம்பரம் உணர்த்துகிறது.

இதே போன்ற இன்னொரு அயோடின் உப்பு விளம்பரத்தில் பெண்மணி ஒருவர் கூறுகிறார். 'வைத்தியரய்யா, நான் அம்மா ஆகப் போறேன். குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பிறக்க ஆசீர்வாதம் பண்ணுங்க; வாரா வாரம் ஒன்னே கால் ரூபாய் உண்டியலில் போடுறேன்' என்கிறார். அதற்கு அவர், அயோடின் உப்பு பயன்படுத்திச் சமைக்கச் சொல்கிறார். 'அதற்கு நிறைய செலவு ஆகுமே' எனப் பெண் கேட்க, 'வாராவாரம் நீ உண்டியலில் போடும் பணத்தைவிட ஒரு வாரத்திற்கு ஆகும் அயோடின் உப்பின் விலை குறைவுதான்' என்கிறார். முன்னுள்ள அயோடின் உப்பு விளம்பரத்தை விட, இரண்டாவது அயோடின் விளம்பரம் தேவலாம்.

வானொலி, தொலைக்காட்சிகளில் பல நல்ல விளம்பரங்களும் வந்த வண்ணம் உள்ளன. ஆயினும் பொருத்தமில்லாத சிலவும் வெளிவரத்தான் செய்கின்றன. விளம்பர எழுத்தாளர்களும் தயாரிப்பாளர்களும் விளம்பர நிறுவனங்களும் இன்னும் ஆழமாகச் சிந்திப்பது அவர்களின் வணிகத்திற்கு நல்லது.

நன்றி: சென்னை ஆன்லைன்

Sunday, June 07, 2009

கவிஞர் ராஜமார்த்தாண்டனுக்கு அஞ்சலி

தமிழின் முக்கியமான இலக்கியத் திறனாய்வாளரும் கவிஞருமான ராஜ மார்த்தாண்டன், சாலை விபத்தில் மறைந்த செய்தி துயரம் அளிக்கிறது. 60ஆம் திருமணம் நடந்து, ஓராண்டு கழித்து இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

காலச்சுவடு பத்திரிகை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த அவர், 06.06.2009 அன்று சாலையைக் கடக்கும்போது, பேருந்து மோதி மரணம் அடைந்துள்ளார்.

கொல்லிப்பாவை
இதழ் ஆசிரியராகவும் தினமணி நாளிதழில் உதவி ஆசிரியராகவும் பணியாற்றியவர்.

அப்படியே நிற்கட்டும் அந்த மரம் (கவிதைகள், அஜிதா பதிப்பகம்), என் கவிதை (கவிதைகள்), ராஜமார்த்தாண்டன் கவிதைகள் (கவிதைகள், தமிழினி வெளியீடு), கொங்குதேர் வாழ்க்கை - 3 (தொகுப்பு, தமிழினி), புதுக்கவிதை வரலாறு (திறனாய்வு, தமிழினி), புதுமைப்பித்தனும் கயிற்றரவும் (திறனாய்வு, தமிழினி) ஆகிய நூல்களின் ஆசிரியர்.

மகனுக்கும் மகளுக்கும் திருமணம் முடித்து, ஓரளவு தன் குடும்பக் கடமைகளை நிறைவு செய்துள்ளார். இலக்கியவாதிகள் பலருடனும் நெருங்கிய நட்புப் பூண்டவர்.

தினமணி அலுவலகத்தில் அவர் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய போது, பல முறைகள் அவரைச் சந்தித்து உரையாடியிருக்கிறேன். பழகுவதற்கு இனிய மனிதர். மிக எளிய தோற்றம் கொண்டவர். அதிர்ந்து பேசாதவர். கவிஞர் என்ற முகத்தைத் தாண்டி, அவருக்குள் இருந்த இலக்கியத் திறனாய்வாளர் என்ற முகம், தாமதமாகத்தான் வெளிப்பட்டது. இந்த வகையில் அவரின் முக்கியமான நூல்களைத் தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

குடிப்பழக்கத்திற்கு அவர் அடிமையாகாமல் இருந்திருந்தால் தமிழுக்கு இன்னும்கூட நன்மை விளைந்திருக்கும்.

அவர் ஆன்மா, அமைதி கொள்ளட்டும்.