!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> மூன்று விளம்பரங்கள் மீது ஒரு விமர்சனம் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, June 19, 2009

மூன்று விளம்பரங்கள் மீது ஒரு விமர்சனம்

தொலைக்காட்சிகளிலும் வானொலியிலும் அண்மைக் காலத்தில் வெளியான மூன்று விளம்பரங்கள் மீது எனக்குச் சில விமர்சனங்கள் உள்ளன.

முதலாவது மீரா ஜாஸ்மின் தோன்றும் சக்ரா கோல்டு விளம்பரம்.

தாத்தா, 'உள்ளம் உருகுதையா' என முருகர் பாடலை மனமுருகப் பாடுகிறார். பேரப் பிள்ளைகள், அதைக் கேட்க முடியாமல் காதுகளைப் பொத்திக் கொள்கிறார்கள். மருமகளான மீரா, உடனே சக்ரா கோல்டு தேநீர் போட்டு, மாமாவுக்குக் கொடுக்கிறார். அப்படியே, 'அந்தக் காலத்துல நீங்க காலேஜில் பாட்டுப் பாடிக் கலக்கினீங்க இல்ல' என நினைவுபடுத்துகிறார். உடனே தாத்தா தன் மேல் அணிந்திருந்த துண்டை எடுத்துச் சுழற்றி 'நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்' எனப் பாடுகிறார். 'மாமாவை முருக பக்தரிலிருந்து எம்ஜிஆர் ரசிகராக்க ஒரு ஸ்பூன் சக்ரா கோல்டு போதும்' என்கிறார் மீரா.

இந்த விளம்பரத்தில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளன. முதலில் பக்திப் பாடலைக் கேட்டால் குழந்தைகள் காதுகளைப் பொத்திக்கொள்வது. மாநகரத்தில், மேற்கத்திய தாக்கம் உள்ள மிகச் சில குழந்தைகள் மட்டுமே இந்த மாதிரி பாடல்களை விரும்பாமல் இருக்கலாம். மற்றபடி வானொலி, தொலைக்காட்சி, தெருமுனை, கோயில்கள்... என ஏராளமான இடங்களில் பக்திப் பாடல்கள் ஒலித்தபடி உள்ளன. சிலருக்கு அதன் ஒலி அளவு சிக்கலாக இருக்கலாமே தவிர, அவர்கள் கூட அதனை ரசிக்கவே செய்வார்கள்.

இரண்டாவது முரண், எம்ஜிஆர் பாடல் என்றால் இந்தக் காலக் குழந்தைகளுக்குப் பிடிக்கும் என்பது. குத்துப் பாட்டு, கானா பாட்டு என வேகமான தாளகதி உள்ள பாடல்களை அவர்கள் விரும்பலாமே தவிர அது எம்ஜிஆர் பாடல் மீதான ஈர்ப்பாகிவிட முடியாது.

இப்படிப்பட்ட விளம்பரத்தை ஒரு முருக பக்தர் பார்த்தால் அவர் அந்தத் தேநீர்ப் பொடியை வாங்குவாரா? இது, தமிழர்களின் உணர்வுகளை (சென்டிமென்டை) கேலி செய்வது போல் இல்லை? சில நொடிகளில் வரக்கூடிய ஒரு விளம்பரப் படம், யாரையும் புண்படுத்தாத மாதிரி இருக்க வேண்டாமா? அப்போதுதானே அவர்களின் வியாபாரம் வளரும்! விளம்பரக் கருவை யோசிப்பவர்கள், இதை எப்படி மறந்தார்கள் என்பது என் ஆச்சரியம்!

அடுத்து, ஹமாம் விளம்பரம்.

மகளைச் சோப்பு வாங்க அனுப்புகிறார் அம்மா. மகளும் மிதிவண்டியில் செல்கிறார். ஆகா, என்ன சோப்பு எனச் சொல்ல மறந்துட்டேனே! அவள் ஏதாவது ஒன்றை வாங்கிட்டு வந்தால் அவளுக்குப் பரு, தேமல் போன்றவை வந்திடும்; அவளுக்குத் தன்னம்பிக்கையே போயிடும் என்றபடி கடைக்கு ஓடுகிறார். அதற்குள் மகள் வீட்டுக்கு வந்துவிடவே, அங்கு ஓடுகிறார். மகள் தானாகவே ஹமாம் சோப்பு வாங்கியதைக் கண்டதும்தான் தாய்க்கு நிம்மதி. இப்படி ஒரு விளம்பரம்.

இதிலும் ரொம்பவே மிகைப்படுத்திய காட்சிகள் உள்ளன. வேறு சோப்பு பயன்படுத்திய உடனேயே தோல் நோய்கள் வந்துவிடும் என்பது ஒன்று; ஒவ்வொருவரின் தோல் வாகிற்கு ஏற்பவே இதன் எதிர்வினைகள் இருக்கும். சிலருக்குச் சில சோப்புகள் ஒத்துப் போகலாம்; சிலருக்கு ஒத்துப் போகாமலும் இருக்கலாம். இப்படி மிகச் சிலருக்கு மட்டுமே பொருந்தக்கூடிய தன்மையை ஒரு விளம்பரத்தின் மையப் பொருளாக எடுத்துக்கொள்வது நல்லதில்லை. அதிலும் இதற்காக அவர்கள் வரைந்து காட்டியுள்ள படம், நன்றாகவே இல்லை. இந்த விளம்பரத்தில் உள்ள இன்னொரு சிக்கல், இப்படியான தோல் நோய்கள் ஏற்பட்டால் ஒருவரின் தன்னம்பிக்கையே போயிடும் என்பது. இதுவும் மிகைப்படுத்திய காட்சி. எத்தனை குறைகள் இருந்தாலும் அவற்றைப் புறந்தள்ளி வென்று காட்டும் மனிதர்கள் மத்தியில் இந்தச் சிறு விடயங்களுக்காகத் தன்னம்பிக்கையே போயிடும் எனக் காட்டுவது ஏற்புடையது இல்லை.

அடுத்து அயோடின் உப்புக்காகச் சென்னை வானொலி நிலையம் ஒலிபரப்பி வரும் ஒரு விளம்பரம்.

'நான் அப்பா ஆகப் போறேன்' என உற்சாகக் கூக்குரல் இடும் ஒருவரை அவரின் நண்பர் கேட்கிறார். 'குழந்தை நல்லா வளர உன் மனைவி அயோடின் உப்பு சாப்பிடணுமப்பா' என்கிறார். 'அதற்கு நிறைய செலவு ஆகுமே' என முதலாமவர் கேட்க, 'ஒரு கட்டு பீடிக்கு ஆகும் செலவை விட ஒரு வாரத்திற்கு ஆகும் அயோடின் உப்பின் செலவு குறைவுதான்' என்கிறார். இதைக் கேட்டதும் முதலாமவர், 'அயோடின் உப்பின் விலை இவ்வளவு மலிவா! இவ்வளவு ஆதாயமா!' என்கிறார். புகை பிடிப்பதைக் கட்டுப்படுத்த அரசு எவ்வளவோ நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், தெரிந்தோ தெரியாமலோ ஒரு கட்டு பீடியும் மிகவும் மலிவாக இருப்பதாக இந்த விளம்பரம் உணர்த்துகிறது.

இதே போன்ற இன்னொரு அயோடின் உப்பு விளம்பரத்தில் பெண்மணி ஒருவர் கூறுகிறார். 'வைத்தியரய்யா, நான் அம்மா ஆகப் போறேன். குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பிறக்க ஆசீர்வாதம் பண்ணுங்க; வாரா வாரம் ஒன்னே கால் ரூபாய் உண்டியலில் போடுறேன்' என்கிறார். அதற்கு அவர், அயோடின் உப்பு பயன்படுத்திச் சமைக்கச் சொல்கிறார். 'அதற்கு நிறைய செலவு ஆகுமே' எனப் பெண் கேட்க, 'வாராவாரம் நீ உண்டியலில் போடும் பணத்தைவிட ஒரு வாரத்திற்கு ஆகும் அயோடின் உப்பின் விலை குறைவுதான்' என்கிறார். முன்னுள்ள அயோடின் உப்பு விளம்பரத்தை விட, இரண்டாவது அயோடின் விளம்பரம் தேவலாம்.

வானொலி, தொலைக்காட்சிகளில் பல நல்ல விளம்பரங்களும் வந்த வண்ணம் உள்ளன. ஆயினும் பொருத்தமில்லாத சிலவும் வெளிவரத்தான் செய்கின்றன. விளம்பர எழுத்தாளர்களும் தயாரிப்பாளர்களும் விளம்பர நிறுவனங்களும் இன்னும் ஆழமாகச் சிந்திப்பது அவர்களின் வணிகத்திற்கு நல்லது.

நன்றி: சென்னை ஆன்லைன்

18 comments:

sahaathevan said...

விளம்பரங்களே மிகைப் படுத்தலாக உள்ளது.
"இப்போ வீட்டிலே கிடைக்கும்"
என்று என் பதிவில் நான் எழுதியதை பாருங்களேன்.
சகாதேவன்

தீபக் வாசுதேவன் said...

ஒரு செய்தி சில பேர் சொல்வார்கள். விளம்பரத்தில் ஒரு சாதனத்தை எடுத்துக் கூறும் மாடல்கள், தாங்கள் அதை பயன்பதுவதில்லை என்று! இது சும்மா மக்களை ஏமாற்றும் கண்கட்டு வித்தை தான்.

சென்ஷி said...

//முதலாவது மீரா ஜாஸ்மின் தோன்றும் சக்ரா கோல்டு விளம்பரம்./

சக்ரா கோல்டு விளம்பரத்துல மீரா ஜாஸ்மின் வர்றாங்களா.. பயபுள்ளைங்க ஒருத்தன் கூட என்கிட்ட சொல்லவே இல்ல. யு டியுப்ல அந்த லிங்க் கிடைக்குமா?!

ஆயில்யன் said...

////முதலாவது மீரா ஜாஸ்மின் தோன்றும் சக்ரா கோல்டு விளம்பரம்./

சக்ரா கோல்டு விளம்பரத்துல மீரா ஜாஸ்மின் வர்றாங்களா.. பயபுள்ளைங்க ஒருத்தன் கூட என்கிட்ட சொல்லவே இல்ல. யு டியுப்ல அந்த லிங்க் கிடைக்குமா?!///

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்! (ஊர்ல இல்லன்னா நம்மளை மறந்துடுவாங்க போல! - நாட்ல நடக்கிற ஒரு நல்லது கெட்டது வெளியில வரமாட்டிக்கிதே!)

சென்ஷி said...

//அப்போதுதானே அவர்களின் வியாபாரம் வளரும்! விளம்பரக் கருவை யோசிப்பவர்கள், இதை எப்படி மறந்தார்கள் என்பது என் ஆச்சரியம்!//

டீயையெல்லாம் குழந்தைங்க குடிக்கறது கம்மி!.. ஒரு வேளை இது அதிமுக ரத்தத்தின் ரத்தங்களுக்காக உருவாக்கின விளம்பரப்படமா இருக்கலாம்..

ஆனாலும் மீரா ஜாஸ்மின் நடிச்ச டீயாச்சே.. கண்டிப்பாக விளம்பரத்தை பார்த்துட வேண்டியதுதான் :)

Thamiz Priyan said...

////முதலாவது மீரா ஜாஸ்மின் தோன்றும் சக்ரா கோல்டு விளம்பரம்./

சக்ரா கோல்டு விளம்பரத்துல மீரா ஜாஸ்மின் வர்றாங்களா.. பயபுள்ளைங்க ஒருத்தன் கூட என்கிட்ட சொல்லவே இல்ல. யு டியுப்ல அந்த லிங்க் கிடைக்குமா?!///

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!

Thamiz Priyan said...

ஆனாலும் மீரா ஜாஸ்மின் நடிச்ச டீயாச்சே.. கண்டிப்பாக விளம்பரத்தை பார்த்துட வேண்டியதுதான் :)

சென்ஷி said...

//இரண்டாவது முரண், எம்ஜிஆர் பாடல் என்றால் இந்தக் காலக் குழந்தைகளுக்குப் பிடிக்கும் என்பது. குத்துப் பாட்டு, கானா பாட்டு என வேகமான தாளகதி உள்ள பாடல்களை அவர்கள் விரும்பலாமே தவிர அது எம்ஜிஆர் பாடல் மீதான ஈர்ப்பாகிவிட முடியாது./

அது உங்களுக்கு தெரியுது. எம்ஜி ஆர் பாட்டை ரீமிக்ஸ் செஞ்சு கொல்ற இந்த யுக மக்களுக்கு தெரிய மாட்டேங்குதே..

ஆனாலும் மீரா ஜாஸ்மின் எப்படி டான்ஸ் ஆடியிருப்பாங்க. அந்த பாட்டுக்கு??

சென்ஷி said...

@ ஆயில்யன்..

//(ஊர்ல இல்லன்னா நம்மளை மறந்துடுவாங்க போல! - நாட்ல நடக்கிற ஒரு நல்லது கெட்டது வெளியில வரமாட்டிக்கிதே!)//

நீ எதை நல்லதுங்கற.. எதை கெட்டதுல சேர்க்கற??

ஆயில்யன் said...

.// சென்ஷி said...

@ ஆயில்யன்..

//(ஊர்ல இல்லன்னா நம்மளை மறந்துடுவாங்க போல! - நாட்ல நடக்கிற ஒரு நல்லது கெட்டது வெளியில வரமாட்டிக்கிதே!)//

நீ எதை நல்லதுங்கற.. எதை கெட்டதுல சேர்க்கற??//


மீரா வெளம்பரம் - நல்ல விசயம் அதை சொல்லாம மறைக்கிறதுதான்
ரொம்ப்ப்ப்ப்ப் கெட்ட விசயம்ண்ணேஎ!

சென்ஷி said...

//மீரா நடிச்சது நல்ல விசயம் ஆனா அதை சொல்லாம மறைச்சது நொம்ப்ப்ப்ப கெட்ட விசயம்ண்ணே!//


அட ஆமாம்ய்யா.. இதை எல்லாம் பதிவுல பார்த்தாத்தான் தெரிஞ்சுக்க முடியுது. என்ன பாசக்கார பயலுகளோ!

மீரா நடிச்ச விளம்பரத்தை நாம பதிவு பார்த்துத்தான் தெரிஞ்சுக்க வேண்டியிருக்குது. என்ன உலகம்ப்பா இது!

நிஜமா நல்லவன் said...

////முதலாவது மீரா ஜாஸ்மின் தோன்றும் சக்ரா கோல்டு விளம்பரம்./

சக்ரா கோல்டு விளம்பரத்துல மீரா ஜாஸ்மின் வர்றாங்களா.. பயபுள்ளைங்க ஒருத்தன் கூட என்கிட்ட சொல்லவே இல்ல. யு டியுப்ல அந்த லிங்க் கிடைக்குமா?!///

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!

Unknown said...

//அவளுக்குத் தன்னம்பிக்கையே போயிடும் என்றபடி கடைக்கு ஓடுகிறார். //

முதலில் இது ”அவளுக்கு கல்யாணமே நடக்காதே” என வரும் பலர் எதிர்த்ததினால் இப்படி மாற்றியிருக்கிறார்கள் இருந்தும் கேவலமாகத்தான் இருக்கிறது, விஐய் டிவியில் அடிக்கடி ஒளிபரப்பாகும் இன்னொரு விளம்பரம் என்னை மிகவும் கடுப்பேற்றும் தண்ணீரின் குளித்துக்கெண்டிருக்கும பெண்கள் அனைவரும் அந்த ஆணை பார்த்து சூடாகிறார்களாம் அதனால் அந்த தண்ணீர் ஆவியாவது போல் த்தூ என்ன விளம்பரம் இது

வெங்கடேஷ்
thiratti.com

azhagan said...

In the same way, I hate the AXE effect ad, all napkin ads, toothpaste ads(you brush you teeth to attract the opposite sex? not for hygiene?.

லக்கிலுக் said...

//இப்படிப்பட்ட விளம்பரத்தை ஒரு முருக பக்தர் பார்த்தால் அவர் அந்தத் தேநீர்ப் பொடியை வாங்குவாரா?//

அண்ணே! இந்த லெவலுக்கெல்லாம் லாஜிக் பார்த்தீங்கன்னா ஆட் ஏஜென்ஸியை எல்லாம் மூடிட்டு போயிட வேண்டியதுதான் :-)))))

Anonymous said...

அண்ணே கொஞ்சம் பேரு யோசிச்சு வெச்சிருந்ததை இவ்வூடகம் மூலமாக வெட்ட வெளிச்சம் ஆக்கிட்டீங்க...

அதிகப் பிரசங்கி தனத்திற்கு மன்னிக்கவும்...மனதில் கூறியதை சொல்லிவிட்டேன்.

Anonymous said...

அதிலும் அந்த ஹமாம் சோப் விளம்பரம். அந்த தாய் தன் மகள் ஏதோ தவறாக விஷத்தையே சாப்பிட்டுவிட்டது போல் துடிப்பது ரொம்பவே ஓவர். எரிச்சலே மிஞ்சுகிறது.

ஏற்கெனவே மார்க்கெட்டில் பிரபலமான இருக்கும் ஹமாம் சோப்புக்கு இப்படி ஒரு விளம்பரம் தேவையா?

வனம் said...

வணக்கம் அண்ணாகண்ணன்

ம்ம்ம்
//கொஞ்சநாள் ஊர்ல இல்லன்னா நம்மளை மறந்துடுவாங்க போல! - நாட்ல நடக்கிற ஒரு நல்லது கெட்டது வெளியில வரமாட்டிக்கிதே//

ஆனா ஹமாம் விளம்பரம் ரோம்ப அதிகம்தான்

தடைகள் மீறும் வலிமையை உருவாக்கும் விளம்பரங்களுக்கு மத்தியில் இது மிகவும் மோசம்

இராஜராஜன்