!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2009/09 - 2009/10 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, September 29, 2009

ஓபன் மென்டார்: இணைய வழியில் இலவசக் கல்வி


ஓபன் மென்டார் (www.openmentor.net) என்பது புரட்சிகரமான, செலவில்லாத, இணையவழிக் கல்வி முறை. எந்தப் பாடத்தையும், எந்த நேரத்திலும், உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் எந்தச் செலவுமே இல்லாமல் கற்கலாம்; அதே போல் கற்பிக்கலாம். 'யாவர்க்கும் இலவசக் கல்வி' என்பதே இந்த இயக்கத்தின் இலக்கு. இதனை சாஃப்ஸ்மித் இன்ஃபோடெக் நிறுவனமும் சென்னை ஆன்லைனும் இணைந்து வழங்குகின்றன.

ஆசிரியர் தினத்தையும் சென்னை ஆன்லைன் 13ஆம் ஆண்டுத் தொடக்கத்தையும் முன்னிட்டு, இந்த இ-கல்வி முறை, சென்னையில் உள்ள இரண்டு பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இ-கல்வி முறையைச் சென்னை, அம்பத்தூர், சேது பாஸ்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் டாக்டர் சேது குமணன், 2009 செப்.5 அன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் சாஃப்ஸ்மித் இன்ஃபோடெக் நிறுவனத் தலைவர் நாகராஜன், அதன் பொது மேலாளர் முருகானந்தம், சென்னை ஆன்லைன் நிறுவனத் தலைவர் இல.ரவிச்சந்திரன், அதன் ஆசிரியர் அண்ணாகண்ணன், சேது பாஸ்கரா பள்ளியின் முதல்வர் செல்வகுமார், துணை முதல்வர் அமரேந்திரன், சேது பாஸ்கரா பள்ளியின் பழைய மாணவர் சங்கத் தலைவர் சுதர்சன் சாந்தியப்பன்.... உள்ளிட்ட பலரும் பங்கேற்றார்கள்.

செப். 5 அன்று காலை 10 மணிக்குச் சென்னை அம்பத்தூர், சேது பாஸ்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் கார்த்திகேயன், ஆங்கில வழியில் 12ஆம் வகுப்புப் படிக்கும் மாணவர்களுக்குக் கணிதத்தில் நிகழ்தகவு குறித்துப் பாடம் நடத்தினார். அதே நாள் காலை 11 மணியளவில் சென்னை, அயப்பாக்கம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ரவிச்சந்திரன், மரபணுப் பொறியியல் குறித்துப் பாடம் நடத்தினார்.

இந்த இணையவழி வகுப்புகளை இரு பள்ளிகளிலும் உள்ள 12ஆம் வகுப்புப் பயிலும் மாணவர்கள் திரை முன் அமர்ந்து கவனித்தார்கள். மாணவர்கள், ஆசிரியருடன் எழுத்து மூலமும் குரல் வழியாகவும் உரையாடினார்கள். கேள்வி கேட்டுப் பதில் பெற்றார்கள். சேது பாஸ்கரா பள்ளி மாணவர்கள், வெங்கடேஸ்வரா பள்ளியின் ஆசிரியர் பாடம் நடத்துகையில் திரையில் அவரை நேரடியாகப் பார்த்தே கற்றார்கள்.

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இந்த முறையை நடைமுறைப்படுத்தினால் பற்பல பயன்கள் விளையும். இருந்த இடத்திலிருந்தே ஆசிரியர் பாடம் நடத்தலாம். அதை மாணவர்களும் இருந்த இடத்திலிருந்தே கவனிக்கலாம். இருவருக்கும் பயணம், நேரம், செலவு, அலைச்சல் மிச்சமாகும்.

இன்னொரு வசதி, ஒரு பள்ளியின் மாணவர்கள், வேறு பள்ளிகளின் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களைக் கவனிக்க முடியும். இதன் மூலம் குறிப்பிட்ட துறையில் ஆசிரியர்களின் நிபுணத்துவம், உலகம் முழுக்கப் பயன்படுகிறது. வேறு மாநிலங்களில், வேறு நாடுகளில் உள்ள ஆசிரியர்களையும் இந்த வகையில் நம் உள்ளூர் மாணவர்களுடன் இணைக்க முடியும். வீடுகளில் இருந்து மாணவர்கள் கற்கும் போது, அவர்களின் பெற்றோரும் இந்த வகுப்புகளைக் கவனிக்க வாய்ப்புண்டு. இதன் மூலம் கல்வியின் வீச்சினை அவர்களும் அறிய முடியும்.

ஆசிரியர் பற்றாக்குறை உள்ள இடங்கள், பல உண்டு. ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகள் என்றே பல உண்டு. இத்தகைய பள்ளிகளுக்கு இந்தக் கல்வி முறை, அற்புத வரம் என்றே கொள்ளலாம். அவர்களுக்கு மட்டுமின்றி, அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் இதனால் நிறைய பயன்கள் உண்டு.

வகுப்பறையில் மாணவர்கள் முன்பு நின்று வகுப்பு எடுக்கையில் சில கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால் கணினி முன் இருந்து, இணைய வழியில் கல்வி கற்பிக்கையில் மேலும் பல சாத்தியங்கள் உண்டு. ஆசிரியர் குரல் மூலமும் பேசலாம்; கரும்பலகையில் எழுதுவது போலவே, pen tablet என்ற கணிப் பலகையில் எழுதலாம்; ஒலி-ஒளிக் கோப்புகளைத் திரையிட்டுக் காட்டலாம்; பவர் பாய்ன்ட் முறையில் சில வகுப்புகளை நடத்தலாம்; அனிமேஷன், கிராஃபிக்ஸ் காட்சிகளையும் திரையில் காட்டலாம்; பாடங்களை மாணவர்களுக்கு எளிதில் விளக்க இந்தக் காட்சி வழிக் கற்பித்தல் பெரிதும் உதவும்.

இ-வகுப்பு இல்லாத நேரத்திலும் மின்னஞ்சலில் கேள்விகளை அனுப்பிப் பதில்களைப் பெறலாம். நல்ல அகலக்கற்றை வசதி இருக்குமானால், மாணவர்களும் ஆசிரியரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தே 'வீடியோ சாட்' மூலம் உரையாட முடியும். அத்தகைய வசதி, எல்லா இடங்களிலும் கிடைக்கும் காலமும் மிக அருகில்தான் உள்ளது.

ஆசிரியர் பயன்படுத்தும் கணினித் திரை, இணையம் வழியாக அனைத்து மாணவர்களின் கணினித் திரையில் தெரியும். அதேபோல், அவர் தன் கணினியில் செய்து காட்டும் அனைத்தும், மாணவர்களின் கணித் திரையிலும் தெரியும். இது, கிட்டத்தட்ட இணையவழி வகுப்பறை (Virtual Class Room) போன்றதே.

இப்படி எண்ணற்ற சாத்தியங்களைக் கொண்ட இந்த இ-கற்பித்தலுக்கு ஏற்ப ஆசிரியர்களும் பள்ளி - கல்லூரி - பல்கலைக்கழகங்களும் தங்களைத் தகவமைத்துக் கொண்டால் பெரிய கல்விப் புரட்சியே நிகழும் என்பது உறுதி. மாணவர்கள் மட்டுமின்றி, வேலைக்குச் செல்பவர்கள், இல்லத்தரசிகள், வாழ்நாள் முழுதும் படிப்பவர்கள் எனப் பலரும் இந்தக் கல்வியைப் பெறலாம். ஒவ்வொரு வகையான மாணவர்க்கும் அவர்களுக்கு ஏற்ற விஷயங்கள் சொல்லித் தரப்படுகின்றன. தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) மாணவர்கள், Java, C, Oracle, SAP, PHP, டாட் நெட் போன்ற பாடங்களைக் கற்கலாம்; கணக்கியல் மாணவர்கள் Tally, பரஸ்பர நிதி, வரி விதிப்பு, காப்பீடு போன்ற பாடங்களைக் கற்கலாம்.

மேலும் கர்நாடக சங்கீதம், பரத நாட்டியம், வாஸ்து உள்பட பல பாடங்களையும் இங்கு கற்றுத் தருகிறார்கள். ஆங்கிலத்திலும் இந்தியிலும் உரையாடக் கற்கலாம்; லினக்ஸ் இயங்கு தளத்தின் அடிப்படைகள், ·போட்டோஷாப், எக்ஸ்செல், வேர்ட், நேர மேலாண்மை, ஆளுமைத் திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றையும் கற்கலாம்; இவை அல்லாமல் உங்களுக்கு ஏதும் புதிய பாடங்களைக் கற்க வேண்டும் என்றால் அது குறித்த உங்கள் ஆர்வத்தினையும் தெரிவிக்கலாம். அதற்கு உரிய ஆசிரியர்கள் கிடைத்ததும் அந்தப் பாடமும் கற்பிக்கப்படும். ஒரே மாணவர் எவ்வளவு வகுப்புகளில் வேண்டுமானாலும் சேர்ந்து பயன் பெறலாம்.

அதே போன்று ஏதேனும் ஒரு துறையில் நல்ல அனுபவம் உள்ளவர்கள், தாங்கள் அறிந்தவற்றைக் கற்றுத் தர வேண்டும் என விரும்பினால், அவர்களும் ஆசிரியர்களாக இதில் பங்கு பெறலாம். புகைப்படக் கலை, சமையல் கலை, தோட்டக் கலை, விவசாயம்.... என உங்களுக்கு எந்தத் துறையைப் பற்றியாவது ஆழ்ந்த அறிவும் அனுபவமும் இருக்குமானால் அவற்றையும் இந்தத் தளத்தின் மூலம் முழு உலகிற்கும் எடுத்துரைக்கலாம். இதில் கற்பவர்களுக்குக் கட்டணம் இல்லை; அது போலவே கற்பிப்பவர்களுக்கும் ஊதியம் இல்லை. ஆனால், ஒருவர் தன் முழு நேரத்தையும் இதற்குச் செலவிட வேண்டியதில்லை. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் என்ற வகையில் வாரத்திற்குச் சில மணி நேரங்கள் செலவிட்டால் போதும். அவரது அறிவு, பலரின் உள்ளத்தில் ஒளிகூட்டும்.

இதற்கென்று தனிச் செலவு ஏதுமில்லை. மாணவர் நோக்கில், அவரிடம் ஒரு கணினியும் இணைய இணைப்பும், தலைப்பேசி (ஹெட்போன்) வசதியும் இருக்க வேண்டும். அகலக்கற்றை இணைய இணைப்பு (பிராட்பேண்ட்), அவசியத் தேவை. dialup இணைப்பு, இந்த இ-வகுப்புக்குப் போதாது. இந்த அடிப்படை வசதிகள் இருந்தால் போதும். அவர், இ-வகுப்புக்குத் தயார்.

அவர், www.openmentor.net என்கிற இணையதளத்திற்குச் சென்று தன் பெயர், மின்னஞ்சல் முகவரி போன்ற தகவல்களைக் கொண்டு பதிய வேண்டும். அந்தத் தளத்தில் ஒவ்வொரு மாதமும், பல்வேறு விதமான பாடங்களில், நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணைப்படி வகுப்புகள் நடைபெறும். அதில் எந்தப் பாடங்களில் அவருக்கு ஆர்வம் இருக்கிறதோ, அதில் சேர்ந்து கற்கலாம். அவர் தேர்ந்தெடுக்கும் பாடம் நடைபெறும் வகுப்பு குறித்த தகவலை அவருக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிப்பார்கள்.

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழங்களிலும் கிட்டதட்ட இதே முறைதான். அங்கு கணினி, இணைய இணைப்புடன் அரங்கு, ஒலிபெருக்கி வசதி, LCD Projector, திரை ஆகியவை இருந்தால் போதும். அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள், ஒரே வகுப்பில் இணைந்துகொள்ளலாம்.

இணையவழி வகுப்பு மட்டுமின்றி, இணையவழித் தேர்வுகள் (online examinations) நடத்தும் வசதியும் இந்தத் தளத்தில் உள்ளது. எல்லாப் பாடங்களிலும், வினாக்கள் தரப்படும், 30 வினாக்களை மாணவர்கள் 30 நிமிடங்களில் விடையளிக்க வேண்டும். இது objective type questions என்று சொல்லப்படுகின்றது. எவ்வளவு மதிப்பெண் பெற்றனர் என்பதும் அவர்களுக்குத் தெரியும். இது போன்ற மாதிரி வினாக்களினால் அவர்கள் தங்கள் திறமையையும், நம்பிக்கையையும் வளர்த்துக்கொள்ள முடியும்.

இந்த இணையவழித் தேர்வு வசதியைச் செல்பேசி மூலமும் இலவசமாகப் பெறலாம். GPRS வசதியுள்ள செல்பேசி ஒன்றின் மூலம் இணையவழித் தேர்விற்கான மென்பொருளைத் தரவிறக்கினால் போதும். பிறகு தேவையான கேள்வித்தாள் தொகுப்பை Openmentor.net தளத்தின் மூலம் நீங்கள் அவ்வப்போது இலவசமாகத் தரவிறக்கிக்கொள்ளலாம்.

இதுதவிர, இதே இணையதளம் மூலமாக வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்களையும் பெறத் திட்டங்கள் வகுத்து வருகிறார்கள். கற்போர், தங்கள் சுயவிவரங்களைப் பதிவு செய்யலாம்; பணியமர்த்த விரும்பும் நிறுவனங்கள், அந்த விவரங்களைக் கவனிப்பார்கள். அதன் மூலம் தகுதி வாய்ந்த நபர்களை நேர்முகத்திற்கு அழைத்துப் பணியில் அமர்த்தும் வாய்ப்பு உண்டு. இந்த நேர்முகத்திற்கு மாணவர்களைத் தகுதிப்படுத்தும் விதமாக மாதிரி நேர்முகத் தேர்வுகளையும் இந்த இணைய தளம் வழங்கி வருகிறது.

முதலில் அடிப்படைக் கல்வி, துறை சார்ந்த படிப்புகள், மொழித் திறன், அது தொடர்பான ஆளுமைப் பயிற்சி, பின்னர் மாதிரி நேர்முகத் தேர்வு, பின்னர் வேலை வாய்ப்பு என அனைத்துச் சேவைகளையும் ஓபன் மென்டார்.காம் ஒருங்கிணைத்து அளிக்கிறது. இவை அனைத்தும் இலவசம் என்பது, நம்புவதற்குக் கடினமாக இருக்கலாம். ஆனால், அதுவே உண்மை.

இந்த ஓபன் மென்டார்.காம் இணையதளத்தினை வடிவமைத்துள்ள சாஃப்ட்ஸ்மித் இன்ஃபோடெக் நிறுவனம், ISO 9001:2000 சான்றிதழ் பெற்றது; பல்வேறு மென்பொருள் சேவைகளை வழங்கி வருகிறது. மென்பொருள் தரச் சோதனை, மென்பொருள் மேம்பாட்டுத் தீர்வுகள் உள்ளிட்ட பல நிலைகளிலான சேவைகளை ஒரு கூரையின் கீழ் சாஃப்ட்ஸ்மித் நிறுவனம் அளித்து வருகிறது. வணிகக் கூரறிவுத் தீர்வுகள், செல்பேசி நுட்பச் சேவைகள், அயலகப் பணி ஒப்படைப்பின் மூலம் பொருள் மேம்பாட்டுத் தீர்வுகள் உள்ளிட்ட சேவைகளையும் வழங்குகிறது. இதன் தலைவர் நாகராஜனும் பொது மேலாளர் முருகானந்தமும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகிறார்கள்.

சாஃப்ட்ஸ்மித் இன்ஃபோடெக் நிறுவனத்துடன் கை கோத்துள்ள சென்னை ஆன்லைன்.காம், 1997 முதல் இயங்கி வருகிறது. இந்தியாவின் முதன்மையான மாநகர இணையதளமாக விளங்குகிறது. 'வாழ்வை எளிதாக்கு' என்பதே சென்னை ஆன்லைனின் இலக்கு. ஏற்கெனவே 10, 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் உள்பட, பல்கலைக்கழகங்கள் பலவற்றின் தேர்வு முடிவுகளையும் பத்தாண்டுகளுக்கும் மேலாக வழங்கி வருகிறது. கல்வியின் மூலம் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என இதன் தலைவர் இல.ரவிச்சந்திரன் ஆழமாக நம்புகிறார்.

ஆசிரியர்கள், கல்வி நிறுவன அதிபர்கள், நிர்வாகிகள், மாணவர்கள், பெற்றோர்கள்.... உள்ளிட்ட ஒவ்வொருவரையும் அழைக்கிறோம். இந்த ஓபன் மென்டார் தளத்தினைப் பயன்படுத்த வாருங்கள். இதில் உங்கள் நண்பர்களையும் இணையுங்கள். கல்வி கற்க இனி எந்தத் தடையும் இல்லை என்ற செய்தியைப் பரப்புங்கள். பட்டணங்கள் முதல் பட்டி தொட்டிகள் வரை கல்விச் சுடர் ஒளிரட்டும்; அறிவு வெளிச்சம், அகிலம் எங்கும் பரவட்டும்.

நன்றி: சென்னைஆன்லைன்.காம்

Saturday, September 19, 2009

அஞ்சலி: வெங்கட். தாயுமானவன்


வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளராக - எழுத்தாளராக - கல்வியாளராக - இயக்குநராகப் பன்முகம் காட்டிய வெங்கட். தாயுமானவன், 18.9.2009 அன்று காலை 11.50 அன்று புற்று நோய் முற்றிய நிலையில் மரணம் அடைந்தார் என்ற செய்தி அறிந்து, பெரும் துயர் உற்றேன்.

அவர், எனக்கு 2009 மே 15 அன்று அனுப்பிய மடல், இதோ:

/===================================

அண்ணா கண்ணன் வணக்கம்,

இணையமும்.. அதன் தமிழும்.. என் ஆயுளை இன்னும் கொஞ்சம் நீட்டித்து வைத்திருக்கிறது என்றால் மிகையில்லை.

தங்கள் பணி குறித்து.. பரவசப்படுகிறது.. மனம்.

எனது வலைபூக்கள்:
www.kvthaayumaanavan.blogspot.com
www.kvthaayu.blogspot.com
www.kvthaai.blogspot.com

எனது தளம்:
www.tamilliterature.net

எனது குழுமங்கள்:
http://groups.google.com/group/palsuvai
http://groups.google.co.in/group/clapboard
--

மீதமுள்ள நாட்களையும்.. பயனுள்ள வகையில் செலவழிக்க விரும்புகிறேன்.

கண்ணன்.. ஆவன செய்யவும்.

நன்றி..!/

===================================


இது, வெங்கட். தாயுமானவன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, எனக்கு அனுப்பிய மடல்.

சுமாராக 10 ஆண்டுகளுக்கு முன் நானும் அவரும் சென்னை வானொலி நிலையத்தில் இணைந்து பணியாற்றினோம். அதன் பிறகு தொடர்புகள் அறுந்தன; அதன் பிறகு 2009 மே மாதம் தான் மின் தமிழ் மூலம் தொடர்பு கிட்டியது. தொலைபேசியில் உற்சாகத்துடன் பேசினார். இணையத்தில் தாம் செய்து வரும் பணிகளை விவரித்தார். நேரில் சந்திப்பதாகவும் கூறினார்.

நாட்களைப் பயனுள்ள வகையில் செலவழிக்க விரும்புவதாக அவர் சொன்ன உடனே, அவரைச் சென்னை ஆன்லைனில் பத்தி எழுத வேண்டினேன். டைஜஸ்ட் அச்சிதழின் கல்விச் சிறப்பிதழுக்கு எழுதுமாறு வேண்டினேன். அதற்கு அவர் எழுதிய கட்டுரை இதோ:

http://www.chennaidigest.in/epaper.aspx?date=5/29/2009&p=5

கல்விச் சிறப்பிதழுக்கு என்ன கருவில் கட்டுரைகள் எழுத விரும்புகிறீர்கள் என அவரிடம் மின் அரட்டையில் உரையாடிய போது, அவர் கூறியது:

"எனக்கு திடீரென ஒரு யோசனை.... அனைவரும் +2 தேறியவர்களைப் பற்றியே சிந்திக்கிறோம்.. தவறியவர்களுக்காக எதுவும் கட்டுரைகள் செய்யக்கூடாதா.. காரணம்... சமுதாய கல்லூரி ஒன்றில் முதல்வராக பணியாற்றியவன் நான்.."

இவ்வாறு அவர், கருத்துரைத்தார். அதைத் தொடர்ந்து அவர், 'கல்வியில் தோல்வி, வாழ்வின் தோல்வி அல்ல!' என்ற கட்டுரையை எழுதி அனுப்பியிருந்தார். இட நெருக்கடி காரணமாக அவரின் ஒரு கட்டுரை மட்டுமே அந்த இதழில் வெளியானது. இந்தக் கட்டுரையைத் தக்க தருணத்தில் வெளியிடலாம் என வைத்திருந்தேன்.

இப்போது அவரின் மறைவுச் செய்தி கண்டு துக்கம் உற்றேன். உடனே அந்தக் கட்டுரையை வெளியிட்டேன். இது அவரின் மறைவுக்குப் பிறகு வெளிவந்துள்ள கட்டுரை.

http://www.chennaionline.com/tamil/literature/Articles/newsitem.aspx?NEWSID=8e164dd6-15a3-4797-9cab-1280f50b10f0&CATEGORYNAME=TTKAT

தனக்குத் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது எனத் தெரிவித்திருந்தார். அவரின் உடல்நிலை குறித்துக் கல்யாண்குமாரின் கட்டுரை வெளியானதும் அவருடன் தொலைபேசியில் உரையாடினேன்.

கடைசியாக, 22.08.2009 அன்று நண்பர் ஒருவரின் திருமணத்தில் கலந்துகொண்ட போது இரவு 9 மணியளவில் அவரிடமிருந்து அழைப்பு வந்தது. முகச் சீரமைப்பு நிபுணர் எஸ்.எம்.பாலாஜியின் தொலைபேசி எண் பெற்றுத் தர முடியுமா? எனக் கேட்டார்.

நான் உடனே 'ஜஸ்ட் டயல்' சேவையை அழைத்து, இந்தத் தேவையைச் சொன்னேன். அவர்கள் உடனே எண், முகவரி கொடுத்ததோடு, அந்த மருத்துவமனைக்கே இணைப்பினை நீட்டிக்கவா என்று கேட்டார்கள். ஆமென்றதும் மருத்துவமனை ஊழியர் ஒருவர் எடுத்து விசாரித்தார். மருத்துவரைக் காலையில் சந்திக்கலாம் என அவர் கூறினார்.

மருத்துவர் தொடர்பு எண்களுடன் எனக்கு வந்த குறுஞ்செய்தியை அவருக்கு மடை மாற்றினேன்; மின்னஞ்சலையும் அனுப்பினேன். அழைத்தும் பேசினேன். அவர் விவரம் கேட்டு, 5 நிமிடங்களுக்குள் அவருக்கு விவரத்தைச் சேர்ப்பித்தேன்.

அவர் மெல்ல தேறிவிடுவார் என நம்பியிருந்தேன். மரணம் வரப் போகிறது என்று தெரிந்தும், நாம் இருப்பதற்குள் ஏதாவது சிறப்பாகச் செய்துவிட வேண்டும் என்ற பரபரப்பினை அவரிடம் கண்டேன். இணையத்தில் அவர் ஏற்றி வைத்தவை எல்லாம் நிலைத்து இருக்குமானால், அவரின் விருப்பம் ஓரளவு நிறைவேறும்.

ராபர்ட் மேயரின் 'ஆற்றல் அழிவின்மை விதி'யின் மீது எனக்குப் பெரும் நம்பிக்கை உண்டு. 'ஒரு ஆற்றல் இன்னொரு ஆற்றலாக மாறுமே அல்லாமல், ஆற்றலை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது' என நான் பள்ளிப் பாடத்தில் படித்த வாசகம், எனக்கு அளப்பரும் உற்சாகத்தை அளித்து வருகிறது.

இங்கு உயிர் அழிவதில்லை; வேறாக மாறுகிறது; உடலும் கூட அழிவதில்லை; இங்கே மண்ணாகவும் காற்றாகவும் அணுக்களாகவும் இங்கே தான் இருக்கிறது என்பது தர்க்கவியல்படி சரி என்ற நம்பிக்கை எனக்குண்டு. மரணம் என்பது முடிவில்லை; மற்றொரு தொடக்கமே என்ற கருத்தையும் ஏற்கிறேன்.

உடல் வலியினால் வேதனையுற்று வந்த வெங்கட். தாயுமானவனுக்குக் கிடைத்தது ஒரு விடுதலை என்றுகூட ஆறுதல் அடையலாம்.

அவர் ஆன்மா அமைதி கொள்ளட்டும்! அவரின் குடும்பத்தினர், மன உறுதி கொள்ளட்டும்!

Wednesday, September 16, 2009

அஞ்சலி: தென்கச்சி கோ.சுவாமிநாதன்

புகழ் பூத்த பேச்சாளர் - எழுத்தாளர் - சிந்தனையாளர் தென்கச்சி கோ.சுவாமிநாதன், உடல்நலக் குறைவினால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 16.09.2009 அன்று இயற்கை எய்தினார்.

தென்கச்சியாரின் திடீர் மறைவு, அதிர்ச்சி அளிக்கிறது. அவருக்கு அடுத்த வீட்டில் இருக்கும் ஆனந்தன் (நிகழ்ச்சித் தயாரிப்பாளர் (ஓய்வு), சென்னை வானொலி நிலையம்) அவர்களிடம் இப்போது (16.9.2009 மதியம்) பேசினேன்.

"3 நாள்கள் முன்பு வரை நன்றாகத்தான் இருந்தார்; இதயத்தில் வலி ஏற்பட்டதால், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்த்தார்கள். இன்று காலை திடீரென இறந்துவிட்டார். அவர் உடலைக் கும்பகோணம் அருகில் உள்ள கஞ்சனூருக்கு எடுத்துச் செல்கிறார்கள்" என்றார் அவர்.

தென்கச்சியார், மிக எளிய மனிதர்; அதே நேரம் உற்சாகமான நகைச்சுவையாளர். 'உச்சம் அடம் ஞானம் உயிர்ப்பு' என்ற என் இரண்டாம் நூலினைச் சென்னை திருவல்லிக்கேணியில் வெளியிட்டுப் பேசினார். அவர், எனக்குப் பக்கத்து ஊர்க்காரர்; அவரது தென்கச்சிக்கு அருகில் உள்ள கோடாலி கருப்பூரில் பிறந்தவன் நான்.

தென்கச்சி சுவாமிநாதனின் தம்பி வில்வநாதனும் என் தந்தை குப்புசாமியும் ஒரு வகுப்புத் தோழர்கள்; இருவரும் கோடாலி கருப்பூரில் 9ஆம் வகுப்பில் இணைந்து படித்துள்ளார்கள்.

சென்னை வானொலி நிலையத்தில் தென்கச்சியாருடன் பல ஆண்டுகள் பழகியுள்ளேன். ஒவ்வொரு மாதமும் குறைந்தது 6 நாட்கள், அங்கு செல்வேன். வானொலி நிலையத்தில் பல முறைகள் அவரைச் சந்தித்துள்ளேன்.

தேசிய அளவிலான ஆகாசவாணி விருதுக்கு உரிய போட்டி ஒன்றில் நான் தயாரித்த உரைச்சித்திரம் பங்கேற்றது. அப்போது நான் இளையபாரதம் பிரிவில் பகுதிநேரத் தயாரிப்பாளராக இருந்தேன். சென்னை வானொலி நிலையத்தின் இளையபாரதம் பிரிவிலிருந்து சிறந்த உரைச்சித்திரத்தைத் தேர்ந்தெடுத்து, தில்லிக்கு அனுப்ப வேண்டும். அதற்கான நடுவராக இருந்த தென்கச்சியார், என் உரைச்சித்திரத்தைத் தேர்ந்தெடுத்துத் தில்லிக்கு அனுப்பினார்.

நான், அம்பத்தூர் நூலகம் ஒன்றில் உறுப்பினராகச் சேர விரும்பினேன். அதற்கான விண்ணப்பப் படிவத்தில் அரசு (கெஸெட்டட்) அலுவலர் ஒருவரின் கையொப்பம் வேண்டும் என்றார்கள். எனக்காக அதில் தென்கச்சியார் கையொப்பம் இட்டுக் கொடுத்தார்.

அவரை நான் ஒரு முறை, அம்பலம் (31-10-1999) மின்னிதழுக்காகப் பேட்டி எடுத்துள்ளேன். பாருங்கள்:
http://annakannan-interviews.blogspot.com/2005/08/blog-post_112399634088432220.html

அன்னாரின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Friday, September 04, 2009

ஆசிரியர் தினத்தில் 2 பள்ளிகளில் இணையவழிக் கல்வி தொடக்கம்

சென்னை ஆன்லைன் மேலாண் இயக்குநர் எல்.ரவிச்சந்திரன் விடுத்துள்ள செய்திக்
குறிப்பு:


ஆசிரியர் தினத்தையும் சென்னை ஆன்லைன் 13ஆம் ஆண்டு தொடக்கத்தையும் முன்னிட்டு, ஓபன் மென்டார் என்ற புரட்சிகரமான, செலவில்லாத, இணையவழிக் கல்வி முறை தொடங்கி வைக்கப்படுகிறது. 05.09.2009 அன்று காலை 10 மணிக்குச் சென்னை, அம்பத்தூர், சேது பாஸ்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் 11 மணிக்குச் சென்னை, அயப்பாக்கம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் இந்த இணையவழிக் கல்வி முறை தொடங்கப்படுகின்றது.

சாஃப்ஸ்மித் இன்ஃபோடெக் என்ற நிறுவனம் வடிவமைத்துள்ள இந்தப் புதிய கல்வி முறை, 2 பள்ளிகளில் தொடங்கப்படுவது, சிறு தொடக்கமே. இந்த முறையை பல பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் விரிவுபடுத்தச் சென்னை ஆன்லைனும் சாஃப்ஸ்மித் இன்ஃபோடெக் நிறுவனமும் முயன்று வருகின்றன. அடுத்து வரும் சில வாரங்களில் / மாதங்களில் இந்தப் புரட்சிகரமான, செலவில்லாத, இணையவழிக் கல்வி முறை, சென்னையிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கல்வி நிறுவனங்களில் அறிமுகப்படுத்தப்படும். ஆயிரக்கணக்கான மாணவர்கள், இதனால் பயன்பெற முடியும்.

இந்தப் புதிய இயக்கத்தின் மூலம், தரமான கல்வியை இந்த உலகின் ஒவ்வொருவருக்கும் எடுத்துச் செல்ல, சென்னை ஆன்லைனும் சாஃப்ஸ்மித் இன்ஃபோடெக் நிறுவனமும் கைகோத்துள்ளன. 'மொத்த உலகும் செலவில்லாமல் கற்கலாம்' என்பதே இந்த இயக்கத்தின் இலக்கு. தகவல் தொழில்நுட்பப் பாடங்கள், பள்ளி / கல்லூரிப் பாடங்கள், கணினி தொடர்பான பயிற்சிகள் போன்றவை, இணையம் மூலமாகக் கற்பிக்கப்படுகின்றன. இணையத்தின் வழி நேரடியாகக் கற்பித்தலும் ஆசிரியரும் மாணவரும் ஊடாடும் தன்மையுமே இந்தக் கல்வி முறையின் சிறப்பு அம்சங்கள். இவை மட்டுமின்றி, இணையவழிக் கல்விக்கான பல பாடங்களையும் குறிப்புகளையும் மாணவர்கள் எந்நேரமும் பெறமுடியும். மேலும் இணையவழியாகவே தேர்வுகளையும் நடத்த முடியும். இந்த அனைத்துச் சேவைகளும் முற்றிலும் இலவசமே. www.openmentor.net, www.chennaionline.com தளங்களில் இவை கிடைக்கும். கணினியும் அகலப்பாட்டை இணைய இணைப்பும் கொண்ட எவர் ஒருவரும், உலகின் எந்தப் பகுதியிலிருந்தும், எவ்வளவு பாடங்களை வேண்டுமானாலும் செலவே இல்லாமல் கற்க முடியும்.

இந்தக் கல்வி முறையைச் சென்னை, அம்பத்தூர், சேது பாஸ்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் டாக்டர் சேது குமணன் தொடக்கி வைக்கிறார்.

05.09.2009 அன்று காலை 10 மணிக்குச் சென்னை அம்பத்தூர், சேது பாஸ்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் கார்த்திகேயன், ஆங்கில வழியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்குக் கணிதப் பாடம் நடத்துகிறார்.

அதே நாள் காலை 11 மணியளவில் சென்னை, அயப்பாக்கம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ரவிச்சந்திரன், உயிரியல் பாடம் நடத்துகிறார்.

இந்த இணையவழி வகுப்புகளை இரு பள்ளிகளிலும் உள்ள பிளஸ் 2 மாணவர்கள் கவனிப்பார்கள்; அவர்களுடன் இணைந்து உலகம் முழுதும் உள்ள ஆர்வமுள்ள மாணவர்கள் இந்த வகுப்புகளைக் கவனிப்பார்கள்.

பொதுமக்கள், பின்வரும் தளங்களில் இந்த வகுப்புகளைக் கவனிக்கலாம்:

https://www2.gotomeeting.com/register/648461050 - காலை 10 மணிக்குக் கணிதப் பாடம்

https://www2.gotomeeting.com/register/642375122 - முற்பகல் 11 மணிக்கு உயிரியல் பாடம்

ஓபன் மென்டார் என்பது என்ன?

'மொத்த உலகும் செலவில்லாமல் கற்கலாம்' என்ற இலக்குடன் இயங்கி வரும் புரட்சிகரமான இணையவழிக் கல்வி இயக்கம், இது. சாஃப்ஸ்மித் இன்ஃபோடெக் என்ற நிறுவனம், இதை வடிவமைத்துள்ளது.

* இணையவழிக் கல்வியானது, வகுப்பறைக் கல்விக்குக் கூடுதல் வலிமை சேர்க்கக்கூடியது.
* எந்த ஒரு பள்ளியும் கல்லூரியும் இதில் இலவசமாக இணையலாம்.
* எந்த ஆசிரியரும் தன்னார்வலரும் இதன்வழி கற்பிக்கலாம்.
* இணையவழித் தேர்வுகள் நடத்தலாம்.
* உலகின் எந்தப் பகுதியிலும் உள்ள எவரும் கற்கலாம்.
* இவை அனைத்தும் முற்றிலும் இலவசம்!

மேலும் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ளுங்கள்:

சுப்பிரமணியம் - 9840664030
முருகானந்தனம் - 97909 87713


சென்னை ஆன்லைன் குறித்து:

1997 முதல் இயங்கி வரும் சென்னைஆன்லைன்.காம், இந்தியாவின் முதன்மையான மாநகர இணையதளம்; இணையத்தின் முன்னோடிகளுள் ஒன்று; சென்னையைப் பற்றிய எந்தச் செய்திக்கும் வாசகர்கள் நாடும் முதல் இணையதளமாக இது விளங்குகிறது. உலகம் முழுவதும் உள்ள இலட்சக்கணக்கான வாசகர்களின் அன்புக்கு உரிய தளமாக விளங்குகிறது. வாழ்வை எளிதாக்கு (Make Life Easy) என்பதே சென்னை ஆன்லைனின் இலக்கு. தொழில்நுட்பத்தின் மூலம் இதைப் பேரளவில் சாதிக்க முடியும் எனச் சென்னை ஆன்லைன் நம்புகிறது. இப்போது ஓபன் மென்டார் என்ற புதிய இணையவழிக் கல்வி முறையைப் பள்ளிகளில் தொடங்கிவைத்து வருகிறது. சென்னை ஆன்லைன் தொடங்கப்பெற்ற அதே செப்டம்பர் 5 அன்று இந்த இணையவழிக் கல்வியும் தொடங்கப்பெறுவது மிகப் பொருத்தமானது.

சாஃப்ஸ்மித் இன்ஃபோடெக் குறித்து:

ISO 9001:2000 சான்றிதழ் பெற்ற சாஃப்ட்ஸ்மித் நிறுவனம், பல்வேறு மென்பொருள் சேவைகளை வழங்கி வருகிறது. மென்பொருள் தரச் சோதனை, மென்பொருள் மேம்பாட்டுத் தீர்வுகள் உள்ளிட்ட பல நிலைகளிலான சேவைகளை ஒரு கூரையின் கீழ் சாஃப்ட்ஸ்மித் நிறுவனம் அளித்து வருகிறது. வணிகக் கூரறிவுத் தீர்வுகள், செல்பேசி நுட்பச் சேவைகள், அயலகப் பணி ஒப்படைப்பின் மூலம் பொருள் மேம்பாட்டுத் தீர்வுகள், தரச் சோதனை உள்ளிட்ட சேவைகளையும் வழங்குகிறது. ஓபன் மென்டார் என்ற இணையவழிக் கல்வி இயக்கத்தை வடிவமைத்துச் செயல்படுத்தி வருகிறது.