!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> அஞ்சலி: தென்கச்சி கோ.சுவாமிநாதன் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, September 16, 2009

அஞ்சலி: தென்கச்சி கோ.சுவாமிநாதன்

புகழ் பூத்த பேச்சாளர் - எழுத்தாளர் - சிந்தனையாளர் தென்கச்சி கோ.சுவாமிநாதன், உடல்நலக் குறைவினால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 16.09.2009 அன்று இயற்கை எய்தினார்.

தென்கச்சியாரின் திடீர் மறைவு, அதிர்ச்சி அளிக்கிறது. அவருக்கு அடுத்த வீட்டில் இருக்கும் ஆனந்தன் (நிகழ்ச்சித் தயாரிப்பாளர் (ஓய்வு), சென்னை வானொலி நிலையம்) அவர்களிடம் இப்போது (16.9.2009 மதியம்) பேசினேன்.

"3 நாள்கள் முன்பு வரை நன்றாகத்தான் இருந்தார்; இதயத்தில் வலி ஏற்பட்டதால், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்த்தார்கள். இன்று காலை திடீரென இறந்துவிட்டார். அவர் உடலைக் கும்பகோணம் அருகில் உள்ள கஞ்சனூருக்கு எடுத்துச் செல்கிறார்கள்" என்றார் அவர்.

தென்கச்சியார், மிக எளிய மனிதர்; அதே நேரம் உற்சாகமான நகைச்சுவையாளர். 'உச்சம் அடம் ஞானம் உயிர்ப்பு' என்ற என் இரண்டாம் நூலினைச் சென்னை திருவல்லிக்கேணியில் வெளியிட்டுப் பேசினார். அவர், எனக்குப் பக்கத்து ஊர்க்காரர்; அவரது தென்கச்சிக்கு அருகில் உள்ள கோடாலி கருப்பூரில் பிறந்தவன் நான்.

தென்கச்சி சுவாமிநாதனின் தம்பி வில்வநாதனும் என் தந்தை குப்புசாமியும் ஒரு வகுப்புத் தோழர்கள்; இருவரும் கோடாலி கருப்பூரில் 9ஆம் வகுப்பில் இணைந்து படித்துள்ளார்கள்.

சென்னை வானொலி நிலையத்தில் தென்கச்சியாருடன் பல ஆண்டுகள் பழகியுள்ளேன். ஒவ்வொரு மாதமும் குறைந்தது 6 நாட்கள், அங்கு செல்வேன். வானொலி நிலையத்தில் பல முறைகள் அவரைச் சந்தித்துள்ளேன்.

தேசிய அளவிலான ஆகாசவாணி விருதுக்கு உரிய போட்டி ஒன்றில் நான் தயாரித்த உரைச்சித்திரம் பங்கேற்றது. அப்போது நான் இளையபாரதம் பிரிவில் பகுதிநேரத் தயாரிப்பாளராக இருந்தேன். சென்னை வானொலி நிலையத்தின் இளையபாரதம் பிரிவிலிருந்து சிறந்த உரைச்சித்திரத்தைத் தேர்ந்தெடுத்து, தில்லிக்கு அனுப்ப வேண்டும். அதற்கான நடுவராக இருந்த தென்கச்சியார், என் உரைச்சித்திரத்தைத் தேர்ந்தெடுத்துத் தில்லிக்கு அனுப்பினார்.

நான், அம்பத்தூர் நூலகம் ஒன்றில் உறுப்பினராகச் சேர விரும்பினேன். அதற்கான விண்ணப்பப் படிவத்தில் அரசு (கெஸெட்டட்) அலுவலர் ஒருவரின் கையொப்பம் வேண்டும் என்றார்கள். எனக்காக அதில் தென்கச்சியார் கையொப்பம் இட்டுக் கொடுத்தார்.

அவரை நான் ஒரு முறை, அம்பலம் (31-10-1999) மின்னிதழுக்காகப் பேட்டி எடுத்துள்ளேன். பாருங்கள்:
http://annakannan-interviews.blogspot.com/2005/08/blog-post_112399634088432220.html

அன்னாரின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

11 comments:

வரதராஜலு .பூ said...

:(
அனைவரும் விரும்பிய பேச்சாளர்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

நன்மனம் said...

அன்னாரின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

We have lost one more good orator. May his soul rest in peace.

சந்தனமுல்லை said...

அஞ்சலிகள்!

Radhakrishnan said...

அஞ்சலிகள். சிறந்த நகைச்சுவை உணர்வாளர், நல்ல சிந்தனையாளர்.

வல்லிசிம்ஹன் said...

மிக மிக வருத்தமாக இருக்கிறது. கிட்டத்தட்ட 23 வருடங்களாக வானொலியிலும் தொலைக் காட்சியிலும் அவர் எங்களுக்கு ஒரு குடும்ப உறுப்பினராகவே இருந்தார்.
அவர் சொன்ன கருத்துகள் அனைத்தும் மனதில் நின்று உரம் கொடுத்து வந்தன. அவரது பிரிவு உண்மையாகவே ஈடு செய்ய முடியாது.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஈடு செய்ய முடியாத இழப்பு!

ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்!

:(

butterfly Surya said...

அஞ்சலிகள்!

கண்ணீர் said...

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த மனிதர்.... இன்று எம்முடன் இல்லை என்பது வேதனை அளிக்கிறது.வன்னியில் பதுங்கு குழியிலிருந்து கூட அன்னாரின் "இன்று ஒரு தகவல்" கேட்ட நாட்கள் இன்றும் நினைவில் உண்டு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும் ஈழத் தமிழன்

http://www.youtube.com/watch?v=hmsyVwZkz4E&feature=PlayList&p=BD2875EF0F32A4B0

Venkatramanan said...

//சென்னை வானொலி நிலையத்தில் தென்கச்சியாருடன் பல ஆண்டுகள் பழகியுள்ளேன். ஒவ்வொரு மாதமும் குறைந்தது 6 நாட்கள், அங்கு செல்வேன்//
நீங்க வானொலியில் casualஆக பணிபுரிந்தீர்களோ? (ஆறு நாட்கள் என்று கணக்கு சொன்னதால் ஒரு சுவாரசியத்திற்காகக் கேட்கிறேன்!)

அன்புடன்
வெங்கட்ரமணன்

முனைவர் அண்ணாகண்ணன் said...

ஆமாம் வெங்கட்ரமணன். நீங்களும் அங்கு இருந்தீர்களா?

Venkatramanan said...

அண்ணாகண்ணன்!
(இப்பத்தான் உங்க மறுமொழியைப் பார்த்தேன்!)
நான் ஒரே ஒரு வாரம் கோவை வானொலியில் casualஆக தேர்வு செய்யப்பட்டு மார்க்கெட்டிங்கில் இருந்தேன்! பின்பு நேரம் ஒத்து வராததால் விட்டுட்டேன்!

அன்புடன்
வெங்கட்ரமணன்