வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளராக - எழுத்தாளராக - கல்வியாளராக - இயக்குநராகப் பன்முகம் காட்டிய வெங்கட். தாயுமானவன், 18.9.2009 அன்று காலை 11.50 அன்று புற்று நோய் முற்றிய நிலையில் மரணம் அடைந்தார் என்ற செய்தி அறிந்து, பெரும் துயர் உற்றேன்.
அவர், எனக்கு 2009 மே 15 அன்று அனுப்பிய மடல், இதோ:
/===================================
அண்ணா கண்ணன் வணக்கம்,
இணையமும்.. அதன் தமிழும்.. என் ஆயுளை இன்னும் கொஞ்சம் நீட்டித்து வைத்திருக்கிறது என்றால் மிகையில்லை.
தங்கள் பணி குறித்து.. பரவசப்படுகிறது.. மனம்.
எனது வலைபூக்கள்:
www.kvthaayumaanavan.blogspot.com
www.kvthaayu.blogspot.com
www.kvthaai.blogspot.com
எனது தளம்:
www.tamilliterature.net
எனது குழுமங்கள்:
http://groups.google.com/group/palsuvai
http://groups.google.co.in/group/clapboard
--
மீதமுள்ள நாட்களையும்.. பயனுள்ள வகையில் செலவழிக்க விரும்புகிறேன்.
கண்ணன்.. ஆவன செய்யவும்.
நன்றி..!/
===================================
இது, வெங்கட். தாயுமானவன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, எனக்கு அனுப்பிய மடல்.
சுமாராக 10 ஆண்டுகளுக்கு முன் நானும் அவரும் சென்னை வானொலி நிலையத்தில் இணைந்து பணியாற்றினோம். அதன் பிறகு தொடர்புகள் அறுந்தன; அதன் பிறகு 2009 மே மாதம் தான் மின் தமிழ் மூலம் தொடர்பு கிட்டியது. தொலைபேசியில் உற்சாகத்துடன் பேசினார். இணையத்தில் தாம் செய்து வரும் பணிகளை விவரித்தார். நேரில் சந்திப்பதாகவும் கூறினார்.
நாட்களைப் பயனுள்ள வகையில் செலவழிக்க விரும்புவதாக அவர் சொன்ன உடனே, அவரைச் சென்னை ஆன்லைனில் பத்தி எழுத வேண்டினேன். டைஜஸ்ட் அச்சிதழின் கல்விச் சிறப்பிதழுக்கு எழுதுமாறு வேண்டினேன். அதற்கு அவர் எழுதிய கட்டுரை இதோ:
http://www.chennaidigest.in/epaper.aspx?date=5/29/2009&p=5
கல்விச் சிறப்பிதழுக்கு என்ன கருவில் கட்டுரைகள் எழுத விரும்புகிறீர்கள் என அவரிடம் மின் அரட்டையில் உரையாடிய போது, அவர் கூறியது:
"எனக்கு திடீரென ஒரு யோசனை.... அனைவரும் +2 தேறியவர்களைப் பற்றியே சிந்திக்கிறோம்.. தவறியவர்களுக்காக எதுவும் கட்டுரைகள் செய்யக்கூடாதா.. காரணம்... சமுதாய கல்லூரி ஒன்றில் முதல்வராக பணியாற்றியவன் நான்.."
இவ்வாறு அவர், கருத்துரைத்தார். அதைத் தொடர்ந்து அவர், 'கல்வியில் தோல்வி, வாழ்வின் தோல்வி அல்ல!' என்ற கட்டுரையை எழுதி அனுப்பியிருந்தார். இட நெருக்கடி காரணமாக அவரின் ஒரு கட்டுரை மட்டுமே அந்த இதழில் வெளியானது. இந்தக் கட்டுரையைத் தக்க தருணத்தில் வெளியிடலாம் என வைத்திருந்தேன்.
இப்போது அவரின் மறைவுச் செய்தி கண்டு துக்கம் உற்றேன். உடனே அந்தக் கட்டுரையை வெளியிட்டேன். இது அவரின் மறைவுக்குப் பிறகு வெளிவந்துள்ள கட்டுரை.
http://www.chennaionline.com/tamil/literature/Articles/newsitem.aspx?NEWSID=8e164dd6-15a3-4797-9cab-1280f50b10f0&CATEGORYNAME=TTKAT
தனக்குத் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது எனத் தெரிவித்திருந்தார். அவரின் உடல்நிலை குறித்துக் கல்யாண்குமாரின் கட்டுரை வெளியானதும் அவருடன் தொலைபேசியில் உரையாடினேன்.
கடைசியாக, 22.08.2009 அன்று நண்பர் ஒருவரின் திருமணத்தில் கலந்துகொண்ட போது இரவு 9 மணியளவில் அவரிடமிருந்து அழைப்பு வந்தது. முகச் சீரமைப்பு நிபுணர் எஸ்.எம்.பாலாஜியின் தொலைபேசி எண் பெற்றுத் தர முடியுமா? எனக் கேட்டார்.
நான் உடனே 'ஜஸ்ட் டயல்' சேவையை அழைத்து, இந்தத் தேவையைச் சொன்னேன். அவர்கள் உடனே எண், முகவரி கொடுத்ததோடு, அந்த மருத்துவமனைக்கே இணைப்பினை நீட்டிக்கவா என்று கேட்டார்கள். ஆமென்றதும் மருத்துவமனை ஊழியர் ஒருவர் எடுத்து விசாரித்தார். மருத்துவரைக் காலையில் சந்திக்கலாம் என அவர் கூறினார்.
மருத்துவர் தொடர்பு எண்களுடன் எனக்கு வந்த குறுஞ்செய்தியை அவருக்கு மடை மாற்றினேன்; மின்னஞ்சலையும் அனுப்பினேன். அழைத்தும் பேசினேன். அவர் விவரம் கேட்டு, 5 நிமிடங்களுக்குள் அவருக்கு விவரத்தைச் சேர்ப்பித்தேன்.
அவர் மெல்ல தேறிவிடுவார் என நம்பியிருந்தேன். மரணம் வரப் போகிறது என்று தெரிந்தும், நாம் இருப்பதற்குள் ஏதாவது சிறப்பாகச் செய்துவிட வேண்டும் என்ற பரபரப்பினை அவரிடம் கண்டேன். இணையத்தில் அவர் ஏற்றி வைத்தவை எல்லாம் நிலைத்து இருக்குமானால், அவரின் விருப்பம் ஓரளவு நிறைவேறும்.
ராபர்ட் மேயரின் 'ஆற்றல் அழிவின்மை விதி'யின் மீது எனக்குப் பெரும் நம்பிக்கை உண்டு. 'ஒரு ஆற்றல் இன்னொரு ஆற்றலாக மாறுமே அல்லாமல், ஆற்றலை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது' என நான் பள்ளிப் பாடத்தில் படித்த வாசகம், எனக்கு அளப்பரும் உற்சாகத்தை அளித்து வருகிறது.
இங்கு உயிர் அழிவதில்லை; வேறாக மாறுகிறது; உடலும் கூட அழிவதில்லை; இங்கே மண்ணாகவும் காற்றாகவும் அணுக்களாகவும் இங்கே தான் இருக்கிறது என்பது தர்க்கவியல்படி சரி என்ற நம்பிக்கை எனக்குண்டு. மரணம் என்பது முடிவில்லை; மற்றொரு தொடக்கமே என்ற கருத்தையும் ஏற்கிறேன்.
உடல் வலியினால் வேதனையுற்று வந்த வெங்கட். தாயுமானவனுக்குக் கிடைத்தது ஒரு விடுதலை என்றுகூட ஆறுதல் அடையலாம்.
அவர் ஆன்மா அமைதி கொள்ளட்டும்! அவரின் குடும்பத்தினர், மன உறுதி கொள்ளட்டும்!
4 comments:
அன்பர் வெங்கட் தாயுமானவனின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.
அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்.
கண்ணன், வேதனை தரும் இச்செய்தியறிந்ததில் இருந்து மனம் சொல்லணாத்துயரத்தில் ஆழ்ந்திருக்க மேலும் அந்த நல்ல உள்ளத்திற்கான தங்களின் மற்றும் அனைவரின் அஞ்சலி படித்து மனம் கனத்து கண்ணீர் துளிக்கின்றது.இதற்கு முன் இந்தளவு மனம் துயரடைந்ததில்லை
அவர் எப்போதும் எல்லோர் மனங்களிலும் வாழ்கிறார்.அவருக்கு என்றும் மரணமில்லை.
உரையாடல் சார்பாக உலக திரைப்படம் திரையிடல் போது தான் முதன் முதலில் அவரை சந்தித்தேன். உலக சினிமாக்களை பற்றியும் தமிழ் திரையுலகில் அவலங்களையும் வெகு நேரம் மனம் விட்டு பேசினோம். பல முறை அலைபேசியிலும் பேசியிருக்கிறேன்.
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.
அனைத்தும் உணர்ந்து கொண்டவராய் அமைதியாக இருந்தார். கடவுள் கருணை காட்டினால் ஏதாவது சாதிப்பேன் என்றும் கூறினார்.
கடவுள் கொடூரமானவன்.
வேதனையுடன்
சூர்யா
அவரின் கனவுகளுக்காகவாவது இறைவன் இன்னும் கொஞ்சம் நாள் கொடுத்திருக்கலாம்...
Post a Comment