2010 ஆகஸ்டு 10 அன்று மாலை, சென்னை, பாரி முனையில், ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்ற வாராந்தர நிகழ்வுக்குச் சென்றேன்.
இந்திய விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானி நெல்லை சு.முத்து தலைமை வகித்தார். சங்க இலக்கியத்தில் வானவியல் குறிப்புகள் என்ற தலைப்பில் முனைவர் ஐயம்பெருமாள், காட்சியுரை நிகழ்த்தினார்.
இவர், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநராகப் பணிபுரிகிறார்.
“விரி கதிர் மதியமொடு வியல்விசும்பு புணர்ப்ப,
எரி, சடை, எழில்வேழம் தலையெனக் கீழ் இருந்து
தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்
உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர,
வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள்தெரி
புந்தி மிதுனம் பொருந்த, புலர்விடியல்
அங்கி உயர் நிற்ப, அந்தணன் பங்குவின்
இல்லத் துணைக்கு உப்பால் எய்த, இறை யமன்
வில்லின் கடை மகரம் மேவ, பாம்பு ஒல்லை
மதியம் மறைய, வரு நாளில் வாய்ந்த
பொதியில் முனிவன் புரை வரைக் கீறி
மிதுனம் அடைய, விரிகதிர் வேனில்
எதிர்வரவு மாரி இயைக என இவ் ஆற்றால்
புரைகெழு சையம் பொழிமழை தாழ
நெரிதரூஉம் வையைப் புனல்”
என்ற பரிபாடலின் காலத்தினைக் கணக்கிட முடியும் என்றார். வான மண்டலம் இப்போது எப்படி உள்ளது நம் கண்களுக்குத் தெரிகிறது. இது போல் இறந்த காலத்தி்ல் ஒவ்வொரு நாளும் எப்படி இருந்தது, எதிர்காலத்திலும் எப்படி இருக்கும் எனக் காண முடியும். காட்டும் இந்தக் குறிப்பிட்ட பரிபாடல் காட்டும் வானத் தோற்றத்தைக் கணக்கில் கொண்டு பார்க்கையில், இக்காட்சி, கி.பி. (பொது ஆண்டு) 634 ஜூன் 17 அன்றைய தேதிக்குப் பொருந்துவதாக உள்ளது என ஐயம்பெருமாள் கூறினார். எனவே பரிபாடல், 3 முதல் 7ஆம் நூற்றாண்டு வரையான காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றார் அவர்.
மேலும் திருவள்ளுவரின் ‘அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல மறுவுண்டோ மாதர் முகத்து’, இளங்கோவடிகளின் ‘திங்களைப் போற்றுதும்’, ‘ஞாயிறு போற்றுதும்’, மாணிக்கவாசகரின் ‘அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்’, ஆண்டாளின் ‘வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’… உள்ளிட்ட பாடல்களையும் மேற்கோள் காட்டிப் பேசினார்.
சிவன் உருவில் பிரபஞ்சத் தோற்றம் வரையப்பெற்றதாகப் படத்துடன் விளக்கினார். கோயில்களில் நவகிரகங்களை உருவாக்கிய பண்டைத் தமிழர்கள், சிறந்த வானவியல் அறிவு பெற்றிருந்தனர் என்றார். தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு தொடங்குவதாகக் கூறினார்.
தலைமையுரை நிகழ்த்திய நெல்லை சு.முத்து, தாம் இது வரை 103 நூல்கள் எழுதியிருப்பதாகக் கூறினார். அவற்றுள் 50க்கும் மேற்பட்டவை அறிவியல் நூல்கள் என்றார்.
‘வலவன் ஏவா வான ஊர்தி’ என்ற சங்க இலக்கிய வரிகளைச் சுட்டிய இவர், இந்த ஆளில்லா வானூர்தி என்பது, விமானம் போன்றது என்பதை விட, ஏவூர்தி (ராக்கெட்)யாக இருக்கலாம் என்றார்.
‘அம்மி மிதித்து அருந்ததி பார்த்து’ என்ற தொடரை விளக்கிய இவர், அருந்ததியைப் பகலில் பார்க்க முடியாது என்பதால், அந்தக் காலத்தில் இரவில் திருமணங்கள் நிகழ்ந்துள்ளதை இவ்வரியின் மூலம் அறியலாம். மேலும் அருந்ததி என்ற விண்மீன் மிகச் சிறியது. எனவே அதை ஒருவர் பார்க்க முடியுமானால், அவரின் கண் பார்வை கூர்மையாக உள்ளதை அறிந்துகொள்ளலாம் என்பதற்காக இந்த வழக்கம் தோன்றியிருக்கலாம் என்றார். உடு மண்டலம் உள்ளிட்ட சில நல்ல தமிழ்ச் சொற்களை நினைவூட்டினார்.
பட்டிமன்றத்தின் செயலர் பக்தவத்சலம் வரவேற்புரை ஆற்ற, புலவர் கிருஷ்ணமூர்த்தி நன்றி நவின்றார்.
சிறப்புரை நிகழ்த்திய ஐயம்பெருமாள், ‘சங்க இலக்கியத்தில் வானவியல் குறிப்புகள்’ என்ற தலைப்பினைத் தேர்ந்தெடுத்துள்ளார். ஆனால், சங்க காலத்தைத் தாண்டியும் அவர் சான்றுகள் உரைத்தார். இது, தலைப்பினை விட்டுச் சற்றே வெளியே சென்றது போல் இருந்தது.
பரிபாடலின் அந்தப் பாடல், 7ஆம் நூற்றாண்டு என இவர் உரைக்க, இராம.கி. வேறு ஒரு குறிப்பினை அவர் வலைப்பதிவில் காட்டியுள்ளார்.
இந்தப் பாடலில் வரும் வானியல் நிகழ்வு கி.மு.161 ஆம் ஆண்டு, கலியாண்டு 2941, பிரமாதி ஆவணித்திங்கள் 12 ஆம் நா: வியாழக்கிழமை, சதுர்த்தசி திதி அவிட்ட நாள்காட்டு கூடிய நாள் என்று சொல்லுவதாக 1969இல் வெளிவந்த சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக பரிபாடற் பதிப்பு கூறுகிறது.
http://valavu.blogspot.com/2008/01/6.html
படங்கள்: அண்ணாகண்ணன்.
1 comment:
நன்றி உங்கள் கருத்துரைக்கு
Post a Comment