!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> பெயர்ச் சொற்களை மொழிபெயர்க்கலாமா? ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, November 21, 2012

பெயர்ச் சொற்களை மொழிபெயர்க்கலாமா?

அண்ணாகண்ணன்

(இந்தத் தலைப்பிலான விவாதத்தில் கூகுள் பஸ், வல்லமை குழுமம், கூகுள் பிளஸ் ஆகியவற்றில் ஏற்கெனவே பல முறைகள் எனது கருத்துகளை எடுத்து வைத்துள்ளேன். மீண்டும் மீண்டும் இந்த விவாதம் முன்னெடுக்கப்படுவதால், ஏற்கெனவே வெளியான என் கருத்துகளை இங்கே ஓரளவு தொகுத்து வைக்கிறேன். முழு விவாதம் இங்கே - http://goo.gl/hMOxw)

பெயர்ச் சொற்களை மொழிபெயர்க்கத் தேவையில்லை எனலாமே தவிர, மொழிபெயர்க்கவே கூடாது எனக் கூறுதல் சரியில்லை. தமிழில் பெயர்ச் சொற்களை மொழிபெயர்க்கும் ஒரு மரபு உண்டு. அவை பரந்தேற்பு பெற்றனவா என்பது தனி இழை. ஆனால், அந்த வழக்கத்தைத் தவறு எனக் கூற இயலாது.

Stag brand குடைகளைத் தமிழகத்தில் மான் மார்க் குடைகள் என்றே விளம்பரப்படுத்தப்பட்டன.

சென்னையில் தங்க சாலை என்று வழங்கப்படும் பகுதி, ஆங்கிலத்தில் Mint Street என்றும் யானைக் கவுனி என்று வழங்கப்படும் பகுதி, ஆங்கிலத்தில் Elephant gate என்றும் மொழிபெயர்த்தே வழங்கப்பெறுகின்றன.

பெயர்ப் பலகைகளைத் தமிழில் வைக்கும் உத்தரவுக்கு அமைய, சென்னையில் வைக்கப்பட்டுள்ள பலகைகள் பலவற்றில் பெயர்ச் சொற்களும் தமிழாக்கம் கண்டிருந்தன.

கடந்த வாரம் சென்னையில், பெரம்பூரைக் கடந்து வந்தபோது, அங்கே ஒரு கிறித்தவ ஜெபக் கூடத்தைக் கண்டேன். அதில் ஆங்கிலத்திலும் தமிழிலும் அதன் பெயரை எழுதியிருந்தார்கள். தமிழில் கன்மலை என்றும் ஆங்கிலத்தில் ஏதோ stumbling stone என்றும் எழுதியிருந்ததாக நினைவு. பாமரத் தமிழர்கள் உச்சரிக்கக் கடினமான அந்தச் சொல்லுக்குப் பதில், எளிதாகச் சொல்வதற்கு வசதியாகக் கன்மலை (கல் மலை) என்று குறித்துள்ளார்கள் என நினைத்துக்கொண்டேன்.

இன்றும் கோவையில் Good Shepherd High School, நல்ல ஆயன் உயர்நிலைப் பள்ளி என்றே குறித்துள்ளனர். 2010இல் கோவை சென்ற போது இதைக் கவனி்த்தேன். உங்களைப் போன்றவர்களுக்குக் காட்டுவதற்கு என்றே நண்பர் - ஓவியர் தி.சின்னராஜ் அவர்களிடம், இதைப் படம் எடுத்து அனுப்பும்படி கேட்டுக்கொண்டேன். 

இது தொடர்பாக, கூகுள் பஸ்ஸில் ஒரு விவாதத்திற்குப் பதில் அளித்திருக்கிறேன். எனவே ஒரு கட்டுரை எழுதும்போது இந்தப் படச் சான்றுகளை அளிக்கலாம் என வைத்திருந்தேன். ஆயினும் சின்னராஜ் எடுத்த படத்தை உங்கள் புரிதலுக்காக, இங்கேயே வெளியிடுகிறேன்.



வேதாசலம், மறைமலையடிகள் எனப் பெயர் மாற்றிக்கொண்டதும் வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார், பரிதிமாற்கலைஞர் ஆனதும் ஒரு வகையில் பெயர்ச்சொல் மொழிபெயர்ப்பே. அது அவர்கள் விருப்பம்.

இது போன்றே பிறரின் பெயர்ச்சொற்களை மொழியாக்கம் செய்வது, அதைப் பயன்படுத்துபவர்களின் தேவையையும் விருப்பத்தைப் பொறுத்தது. ஆங்கிலமே தெரியாத தமிழரிடம் பேஸ்புக் என்று சொன்னால் அதை அவர் இயல்பாக உச்சரிக்க இயலாது. அப்போது தமிழ் உச்சரிப்புக்கு ஏற்றாற்போல் அந்தச் சொல் உச்சரிக்கப்படும். இதற்கு இன்னொரு மாற்று ஏற்பாடே இந்த மொழிபெயர்ப்பு.

சட்டரீதியான ஒப்பந்தங்களில் இவ்வாறு யாரும் எழுதப் போவதில்லை. இது, சாதாரண பயன்பாட்டிலும் புழக்கத்திலும் மட்டுமே உள்ளது. இதைத்தான் பயன்படுத்த வேண்டும் என யாரும் எதையும் திணிக்கப் போவதில்லை. அவரவர், அவரவர்க்கு வசதியான சொல்லால் அதைக் குறிக்கலாம். மூலப் பெயர் எதுவாக இருந்தாலும் செல்லப் பெயரால் அழைப்பது போல், இந்த மொழிபெயர்ப்புகளை  Nick name ஆக வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். இப்போது லாஜிக் சரியாக இருக்கிறதா?

மொட்டை என்றும் சொட்டை என்றும் சிலருக்குப் பட்டப் பெயர் இருக்கும். அதையெல்லாம் அவர்களிடம் கேட்டு, ஒப்புதல் பெற்று வைப்பதில்லை.

சில வணிகப் பெயர்களையும் இப்படித் தனிப் பெயரால் அழைக்கும் வழக்கம் உண்டு. கேபிள் டிவி கனெக்ஷன் கொடுங்க என்று கேட்கும் பலரும் சன் டிவி கனெக்ஷன் கொடுங்க என்றுதான் கேட்கிறார்கள். இதனால் இதர தொலைக்காட்சிக்காரர்கள் வழக்கு தொடுப்பதில்லை. குஷ்பு இட்லியும் நதியா சேலையும் நமீதா சோளியும் அவர்களிடம் ஒப்புதல் பெற்று வைக்கப்பட்ட பெயர்கள் கிடையாது.

ஆணுறைக்கும் மாத விலக்குப் பஞ்சுக்கும் கருத்தடைக்கும் கூட, இப்படி குழூஉப் பெயர்கள் (ஒரு கூட்டத்திற்கு மட்டுமே புரியும் வகையிலான பெயர்கள்) வைக்கப்பட்டதுண்டு. சரோஜாதேவி புத்தகங்களும் அப்படியே. இதற்காகச் சரோஜாதேவி வழக்குப் போடவில்லை.

அண்ணா சாலையை இன்னும் மவுண்ட் ரோடு என்போர் உண்டு. சென்னையை இன்னும் மெட்ராஸ் என்போரும் உண்டு. ஒடிசாவை இன்னும் ஒரிசா என்போர் உண்டு. இதற்காக, அரசுகள், வழக்கு தொடுப்பதில்லை.

ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். பெயர்ச் சொற்களைத் தமிழாக்கத் தேவையில்லை. அதிலும் எல்லா அந்நிய வணிகப் பெயர்களையும் தமிழாக்கம் செய்ய வேண்டிய தேவையில்லை. ஒருவேளை, குறிப்பிட்ட சில சொற்களை அதன் பயனர்கள் தங்கள் தேவை கருதி, தமிழாக்கினால் அதற்குத் தடை போடக் கூடாது. மூஞ்சியிலேயே குத்துவேன் எனக் கிளம்பக் கூடாது. அந்தத் தனி மனித உரிமையைக் காக்கவே இத்தனை கருத்துகளை எடுத்து வைத்தேன்.




முகப்புத்தகம்- Facebook குறும்படம்
பேஸ்புக்கில் பொதுவாக நடந்துகொண்டிருக்கும் ஒரு சைபர் கிரைம் பற்றிய குறும்படம் இது. ஆண்கள் சிலர் பெண்கள் பெயரில் பேஸ்புக் கணக்கை ஆரம்பித்து, பெண்களை போல நடித்து ஆண்களையோ பெண்களையோ ஏமாற்றி பணம் பறிப்பது போன்ற செயல்களை மேற்கொள்கின்றனர். இந்த படத்தில் ஒரு ஆண் மற்றொரு ஆணை பெண்ணை போல நடித்து ஏமாற்றி, கொரியன் போனின் உதவியோடு அவரிடம் பெண்ணின் குரலிலயே பேசி அவரை தான் அனுப்பிய கருப்பு டி-சர்ட்டை போட்டுக்கொண்டு வரவைத்து அவரை அங்கேயே கொலை செய்துவிட்டு பணம்,தங்க செயின், பைக் அனைத்தையும் கொண்டு சென்று விடுவார்கள். இதே போல் ஒருவர் பேஸ்புக்கில் லவ் பண்ணிகொண்டிருப்பார். அவரும் அவரது நண்பர்களும் இந்த செய்தியை செய்தித்தாளில் படித்து விட்டு அதிர்ந்து போவர்கள். அவர்கள் அந்த திருடனை பிடிக்க திட்டமிடுவார்கள். கடைசியில் பார்த்தல் அது நிஜமாஹவே ஒரு பெண். அவர்கள் காதல் என்ன ஆனது அதுவே கதை.


முகநூல் மட்டுமில்லை, முக மண்டலம், முகப்புத்தகம், வதனப் புத்தகம்... எனப் பல செல்லப் பெயர்கள் உள்ளன. 


ஆனால், தேவையில்லை என்பதற்கும் கூடாது என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. கூடாது என்று கட்டுப்படுத்துவதை விட, தேவையில்லை, அப்புறம் உங்க இஷ்டம் என்பதில் சற்று நெகிழ்ச்சி இருக்கிறது. விவாதங்களில் இந்த நெகிழ்ச்சி இருந்தால், மிக எளிதாகக் கருத்துப் பரிமாறலாம்.

பேஸ்புக்குக்குப் பதில் முகநூல் என எழுதுவோர், தங்களுக்கு அந்தச் சொல் வசதியாக இருப்பதாக நினைத்தே அதனைச் செய்கின்றனர். இது குறித்து பேஸ்புக்கே கவலைப்படாத நிலையில், முகநூல் என்ற சொல்லைப் பயன்படுத்தாதவர்கள் கவலைப்படுவானேன்? 

எனக்கு முகநூல் என்று சொன்னால் புரியவில்லை / பொருந்தவில்லை என்கிறீர்களா? சரி, இன்னும் சிறப்பாக எப்படிச் சொல்லலாம் என ஆராயலாம். நான் இதனை முக மண்டலம் என்றுகூட எழுதியதுண்டு. கூகுள் பிளஸ் வந்தபோது, கூகுள் கூட்டல் என்று எழுதியதுண்டு. பிளஸ் என்று தமிழில் எழுதினால் அது Plusஆ, Blessஆ என்ற  மயக்கம் பிறக்கலாம். கூட்டல் என்று எழுதினால் குழப்பம் இல்லையே.

பொதுவாக ஒலிபெயர்க்கலாம். எங்கே சாத்தியமோ, எங்கே தேவை உள்ளதோ அங்கே மட்டும் மொழிபெயர்க்கலாம். இது என் நிலைப்பாடு.

பிராண்ட் நேம் எனப்படும் வணிகப் பெயர்களை மொழிபெயர்ப்பது சட்டப்படி தவறு என்ற வாதம் வைக்கப்படுகிறது. சட்டப்படி இங்கே யாரும் போட்டிக்குக் கடை திறக்கப் போவதில்லை. அதைச் சட்டரீதியாக மொழிபெயர்க்கிறேன். இனி இதையே எல்லோரும் பயன்படுத்த வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தவும் இல்லை. சிலர், இதைச் செல்லப் பெயராகத் தங்களுக்குள் பாவிக்கிறார்கள். அவ்வளவே.

இப்போது கூகுள் என்றால் அது வெறும் நிறுவனப் பெயர் மட்டுமில்லை. அகராதியில் தேடலுக்கான இன்னொரு சொல்லாக அது இடம்பெற்றுவிட்டது. இனி, கூகுளை அந்தக் கோணத்தில் கையாளவும் வாய்ப்புகள் உண்டு. However, it can also be used as a general term for searching the internet using any search engine, not just Google. [http://en.wikipedia.org/wiki/Google_(verb)]

நாளை, பேஸ்புக் என்பதற்கு நிறுவனப் பெயரையும் தாண்டி வேறு பொருள்கள் பிறக்கலாம். அப்போது, அந்த நிறுவனமே அதை எதிர்க்க இயலாது. முகநூல் என்பதற்கும் பேஸ்புக்கைத் தாண்டி வேறு பொருள்களும் பிறக்கலாம். நான் 15 ஆண்டுகளுக்கு முன்பே முகநானூறு என்ற வெண்பாத் தொடரை எழுதினேன். அகம் என்றால் அகநானூறையும் புறம் என்றால் புறநானூறையும் குறிப்பதுபோல், முகநூல் என்றால் இன்னது என்று நாளை அகராதியில் இடம்பெறலாம். பயனர்களின் சுதந்திரத்தில் ஓர் எல்லைக்கு மேல் தலையிட முடியாது. இந்தியாவில் அவசர நிலைக் காலத்தில் செய்தித் தணிக்கை இருந்தபோது, மறைமுகமாகப் பலரும் பெயர்களைப் பயன்படுத்தியதையும் இங்கே நினைவுகூர்கிறேன். 

தமிழர்கள் சிலருக்கு ஆங்கிலம் தெரிந்துவிட்டது என்பதால், உச்சரிக்க வந்துவிட்டது என்பதால் அதையே நிறுவப் பார்க்கிறார்கள். 

சீனத்திலும் அரபியிலும் பிரெஞ்சிலும் ஸ்பானிஷிலும்... இன்னும் ஏராளமான மொழிகளிலும் இருக்கும் வணிகப் பெயர்கள், நாளை தமிழர் மத்தியில் புழங்கும் நிலை வரலாம். அப்போதும் தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள், இந்த மண்ணில் இருக்கலாம். அவர்கள் அவற்றை எப்படி உச்சரிப்பார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள்.

ஙஙாஙிஙீஙுஙூஙெஙேஙைஙொஙோஙௌ

ஞஞாஞிஞீஞுஞூஞெஞேஞைஞொஞோஞௌ

இவற்றுள் பெரும்பாலான எழுத்துகள், தமிழில் எக்காலத்திலுமே புழக்கத்தில் இல்லை. இது குறித்துப் பேரா.இ.அண்ணாமலையிடம் நான் கேட்டதற்கு, எதிர்காலத் தேவை கருதி வைத்திருக்கலாம் என்றார். எனவே, இவற்றைத் தமிழர்கள் எதிர்காலத்தில் உச்சரிக்கப் போகிறார்களா? அவர்களின் நா இயல்புக்கு ஏற்ப, மாற்றி உச்சரிக்கப் போகிறார்களா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.





No comments: