!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> என் அப்பா சீ.குப்புசாமி, அமரர் ஆனார் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, February 13, 2016

என் அப்பா சீ.குப்புசாமி, அமரர் ஆனார்

அண்ணாகண்ணன்


எங்கள் அருமைத் தந்தையார், தமிழாசிரியர் சீ.குப்புசாமி அவர்கள் (71), 27.01.2016 அன்று இறையடி சேர்ந்தார். தோள்பட்டைப் புற்றுநோயால் (Chondrosarcoma) அவதியுற்று வந்த இவர், அந்த வலியிலிருந்து விடுதலை அடைந்தார். கால் நூற்றாண்டுக் காலம் சென்னை அயன்புரத்தில் உள்ள பனந்தோப்பு இரயில்வே காலனி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி, 1994இல் விருப்பு ஓய்வு பெற்றார். இதன் வழி, பல்லாயிரம் மாணவர்களுக்குத் தமிழைக் கற்பித்தார். வகுப்பறையில் அவர் சிறப்புறத் திகழ்ந்ததாக, ஒரே பாடலை விதவிதமான கோணங்களில் விளக்கியதாக, இவர்தம் மாணவர்களும் சக ஆசிரியர்களும் கூறக் கேட்டிருக்கிறேன்.


திருப்பனந்தாள் கல்லூரியில் புலவர் பட்டமும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கல்வியியல் பட்டமும் பெற்றவர். கல்லூரிக் காலம் தொட்டே கதை, கவிதை உள்ளிட்டவற்றை எழுதி வந்திருக்கிறார். திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு, நண்பர்கள் கோரும்போது, உடனே வாழ்த்துப்பா எழுதி அளித்துள்ளார்.


இறப்பதற்கு இரு வாரங்கள் முன்பு கூடச் சில கதைகள் எழுதியதாக அறிந்தேன். அவற்றைப் பதிப்பிப்பதிலும் பகிர்வதிலும் இவர் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை. வீடு மாறுகையில் இவற்றில் பெரும்பாலும் தொலைந்துவிட்டன. இருப்பவற்றைத் தேடித் தொகுக்க வேண்டும்.


என் படைப்புகளை அவ்வப்போது படித்து, விமர்சிப்பார். அவற்றை எனக்கு நேரே அளவாகவே பாராட்டுவார். மிகையான புகழ்ச்சி, கர்வத்தை அளித்து, படைப்பைப் பாதிக்கும் என்பார். 


இவரது பண்பு நலன்களை உடனிருந்து பார்த்து வியந்திருக்கிறேன். எந்த வேலையையும் தாழ்வானது எனக் கருதாது செய்வார். அதிகாலையில் 4-5 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார். வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வார். காய்கறி நறுக்குவதிலிருந்து, சமையல் செய்வது வரை, ஒட்டடை அடிப்பதிலிருந்து, வீட்டைப் பெருக்கிக் கழுவுவது வரை அனைத்தும் செய்வார். வீட்டு விருந்து நிகழ்வுகளில் உணவுப் பந்தி முடிந்த பிறகு, எச்சில் இலையை எடுப்பதற்குப் பணியாளர்களே தயங்கும் நிலையில், தாமே முன்வந்து எடுத்துப் போட்டு, அடுத்த பந்திக்குத் தயார் செய்வார். குடும்பத்துப் பெண்களின் பிள்ளைப் பேற்றுக்குப் பிறகு, குழந்தையின் மலஜலத் துணிகளை அலசிப் போட்டு, உடனிருந்து பார்த்துக்கொள்வார். 




கிராமத்தில் வளர்ந்த இவர், ஓய்வு பெற்ற பிறகும் கூட, அடிக்கடி உறவினர்கள் / நண்பர்கள் வாழும் கிராமங்களுக்குச் செல்வார். அங்கு அனைத்து வேலைகளையும் முகம் சுழிக்காமல் செய்வார். மாட்டுக்கு வைக்கோல் வைத்து, பால் கறந்து, சாணி அள்ளுவதாகட்டும், கலப்பையைப் பிடித்து வயலில் உழுவதாகட்டும், உறவினர் வீட்டில் உள்ள மாவு எந்திரத்தில் நின்று, மிளகாய்ப் பொடி உள்பட அனைத்து மாவுகளையும் அரைத்துக் கொடுப்பதாகட்டும் இவரது உழைப்பு அபாரமானது.



நடை நடை என்று எவ்வளவு தொலைவானாலும் நடந்தே செல்லுவார். இள வயதில் மிதிவண்டி, ரேக்ளா வண்டி எனப் பலவற்றை ஓட்டியுள்ளார். இளம் கன்றுகளை மாட்டு வண்டியில் பூட்டுவதற்கு முன், இந்த ரேக்ளா வண்டியில் பூட்டிப் பழக்குவார்கள். தாமே அத்தகைய ரேக்ளா வண்டிகளை உருவாக்கி, அதில் பல முறைகள் புழுதி கிளப்பிப் பறந்துள்ளார். நீச்சலில் சிறந்த தேர்ச்சி பெற்றவர். தண்ணீரில் மிதப்பார். காசிக்குச் சென்ற போது, கங்கையில் இவ்வாறு மிதந்தார்.



திருமாலிடம் பக்தி கொண்டவர். பல கோவில்களில் திருப்பணிகள் செய்துள்ளார். பரிசாரகராக மடைப்பள்ளிப் பொறுப்பையும் ஏற்றுள்ளார். பலரது வீடுகளில் சிறிய / நடுத்தர அளவிலான நிகழ்வுகளுக்குச் சமையல் பொறுப்பையும் ஏற்றுள்ளார். சமைப்பதுடன் உணவு பரிமாறும் பணியையும் உவந்து செய்துள்ளார். வெளிப்பணியுடன் வீட்டிலும் பற்பல உணவு வகைகளையும் சிற்றுண்டிகளையும் செய்து கொடுத்து அசத்துவார்.



பேரப் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதுடன், அண்டை அயலார் வீட்டுப் பிள்ளைகளுக்கும் ஆசிரியராக விளங்கினார். திருத்தமான கையெழுத்து அவருடையது. தமிழிலேயே கையொப்பம் இடுவார்.





அனைவருடனும் அன்புடன் பழகுவார். யார் வீட்டிலும் உணவருந்துவார். மிகச் சாதாரணமாகவே உடுத்துவார். விலை உயர்ந்த பொருட்களை விரும்ப மாட்டார். சகல விதங்களிலும் எளிமையாக இருந்தார்.


பொடி போடுவதை விட முடிந்த இவரால், மதுப் பழக்கத்தையும் வெற்றிலைப் பாக்குப் பழக்கத்தையும் கடைசி வரை விட முடியவில்லை. மதுவை இவர் குடித்தது போய், பல பத்தாண்டுகளாக இவரை மது குடித்தது. இதிலிருந்து இவரை மீட்க நாங்கள் எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. 


எல்லா இடர்களையும் கடந்து 70 வயது வரை வலிமையுடனும் ஆரோக்கியத்துடனும் இருந்த இவரைப் புற்றுநோய் ஒரே ஆண்டில் சாய்த்துவிட்டது. இவருக்கு ஓமந்தூரார் அரசினர் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உதவிய மருத்துவர் புரூனோவுக்கு நன்றிகள்.


தந்தை மறைந்துவிட்டார் என்பதை என் உள்ளம் செரிக்கவில்லை. அவர் வேறு வடிவில் இங்கே இருக்கிறார் என்றே நம்புகிறேன். தீச்சட்டி சுமந்து, கால் பொரிய நடந்து, அவரது பொன்னுடலுக்குக் கொள்ளி வைத்தேன். ஆனால் அவரது உயிர், இயற்கையுடன் எங்கும் கலந்திருக்கிறது.


மது அருந்துபவர்களே, அதை விட்டுவிடுங்கள். புகை பிடிப்பவர்களே, அதைக் கைவிடுங்கள். புகையிலையை எல்லா வடிவங்களிலும் விலக்குங்கள். மருத்துவர்களே, புற்றுநோய்க்கு விரைந்து மருந்து கண்டுபிடியுங்கள். அதை யாவருக்கும் எட்டும்படியாகச் செய்யுங்கள் என இந்தத் தருணத்தில் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.


தந்தையார் மறைவையொட்டி இரங்கலும் எமக்கு அனுதாபமும் ஆறுதலும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்.

4 comments:

Sachithananthan_Maravanpulavu said...

அண்ணா கண்ணனுக்கு உயிர் தந்தவர், உடல் தந்தவர், உணவு, உடை, உறையில் தந்தவர், உறவுகள் தந்தவர், தமிழ் தந்தவர், பண்பட்ட உள்ளம் தந்தவர், கற்பனைச் சிறகுகளைக் கட்டியவர், சிறகு விரித்துப் பறக்கப் பாராட்டியவர், வினைத் திறன், செயலாற்றல் யாவும் தந்தவர். என் மீது அன்பும் பாசமும் பரிவும் காட்டிய உள்ளங்களைத் தந்தவர், என்னைக் கண்டு உற்சாமடைபவர். சிரிப்பால் மயக்குபவர், அவர் மறைவால் வாடுகிறேன், வருந்துகிறேன், அவர் காட்டிய நல்வழிகளில் தொடர்வதால் மானுடம் உயர்வுறும்.

Chari said...

எனது பெரியப்பா திரு குப்புசாமி அவர்கள், மிகச்சிறந்த மனிதர். அவரது மறைவு சொந்தங்கள் அனைவருக்கும் பேரிழப்பாகும். அவர் தன்னலம் கருதா தகமையர்.நான் அவரது பற்றற்ற தன்மை கண்டு பல சமயம் வியந்துள்ளேன். நமது இல்ல நிகழ்வுகள் எதுவாயினும் மிக்க அன்புடனும்,பக்க பலமாகவும் இருந்தவர். இறுதி காலம் வரை சுதந்திரமாகவும், இந்த வலியுடன் கூட முழுமையான இயக்கத்துடனும் இருந்தார். அவர் எமது தலைமுறையின் சொத்து என்று சொன்னால் அது மிகையல்ல. அவர் இரக்கவில்லை, இங்கு அவரது சேவையை முடித்து, இறைவன் சேவைக்கு சென்றுள்ளார் என்றே கருதுகிறேன்!

Vassan said...

ஆழ்ந்த இரங்கல்கள், திரு. அண்ணா கண்ணன்.

வாசன் & விஜி பிள்ளை
நியு மெக்ஸிக்கோ யூ எஸ்

Nanjil Siva said...

அவருடைய மறைவு வேதனை தருகிறது.ஆழ்ந்த இரங்கல்கள்,