திருவெம்பாவை 12
மாணிக்கவாசகர்
பாடியவர்: ஸ்ருதி நடராஜன், டெக்சாஸ்
ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்துஆடும்
தீர்த்தன் நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய்.
நம்மைப் பிணித்த பிறவித் துன்பம் ஒழியும்படி, நாம் மகிழ்ந்து ஆடுகின்ற தீர்த்தமாய் உள்ளவன், அழகிய தில்லையின் கண்ணுள்ள ஞான சபையில் அனலேந்தி ஆடுகின்ற கூத்தப்பிரான். விண்ணுலகத்தையும் நிலவுலகத்தையும் நம் எல்லோரையும், தோற்று வித்தும் நிலை பெறுத்தியும், நீக்கியும், விளையாடுபவனாகிய இறை வனது பொருள் சேர் புகழை உரைத்து, வளையல்கள் ஒலிக்கவும், நீண்ட மேகலை முதலிய அணிகள் அசைந்து ஓசை எழுப்பவும் அழகிய கூந்தலின் மேல், வண்டுகள் எழுந்து முழங்கவும் மலர்கள் விளங்குகின்ற பொய்கையில் ஆடி, நம்மை உடைய இறைவனது பொன் போன்ற திருவடிகளைத் துதித்துப் பெரிய மலைச் சுனை நீரில் மூழ்குவாயாக.
பொழிப்புரைக்கு நன்றி - thevaaram dot org
படத்துக்கு நன்றி - விக்கிப்பீடியா
No comments:
Post a Comment