தமிழர்களிடம் ஒரு நல்ல வழக்கம் உண்டு. ஒருவரைச் சற்றே குறைசொல்லும் முன், முதலில் அவரை வாழ்த்திவிட்டு, பிறகே அதைச் சொல்வார்கள். 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்கவாசகர், இதை நயமாகச் சொல்கிறார்.
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழி ஈதென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஒப்பற்ற ஒளிப்பிழம்பை, நிகரற்ற கருணையை உடைய சிவபெருமானின் இணையற்ற புகழைப் பாடினோம். உனக்குக் கேட்கவில்லையா? வாழ்க, இது என்ன உறக்கமோ? வாய்திறந்து பேசு என்கிறார். இது என்ன உறக்கமோ எனக் குட்டுவதற்கு முன், வாழ்க என வாழ்த்துகிறார்.
உறங்குவது போலும் சாக்காடு என வள்ளுவர் சொல்கிறார். எனவே உறங்குவோரை, உறங்கச் செல்வோரை, உறங்கி விழிப்போரை நாம் எப்போதும் வாழ்த்தியே தொடங்க வேண்டும். அது நல்லதிர்வுகளைத் தோற்றுவிக்கும். இதுபோல், விடைபெற்றுச் செல்வோரை, வெளியே புறப்படுபவரை, புதிய செயல் செய்யத் தொடங்கும் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு முறையும் நாம் வாழ்த்த வேண்டும்.
திருவெம்பாவையின் இந்த நயமான பாடலை, ஸ்ருதி நடராஜன் (டெக்சாஸ்) குரலில் கேளுங்கள்.
No comments:
Post a Comment