!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, June 05, 2005

தமிழில் மிதிவண்டி உதிரி பாகங்கள்



அண்ணாகண்ணன்

மூன்று மாதங்களுக்கு முன் முதல்வர் ஜெ. ஜெயலலிதா, சட்டப் பேரவையில் பேசினார். விவாதத்திற்கு இடையில் 'சைக்கிள் ஸ்பேர் பார்ட்சுகள் நூற்றினைத் தமிழில் சொல்ல முடியுமா?' எனக் கோ.க. மணியிடம் கேட்டார். அதற்கு அவரால் உடனே பதில் சொல்ல முடியவில்லை.

கடந்த இரண்டு வாரங்களாக இது குறித்துத் தொடர்ந்து சிந்தித்து வந்தேன். மிதிவண்டி உதிரி பாகங்களுக்கான ஆங்கிலப் பெயர்களை முதலில் பட்டியலிட்டேன்; http://www.firstflightbikes.com உள்பட பல்வேறு இணைய தளங்களில் தேடினேன். தொழிற்கருவிகள், துணைப் பொருள்கள், செய்யும் வேலைகள் ஆகியவற்றையும் சேர்த்துக்கொண்டேன். பிறகு, அவற்றுக்குப் பொருத்தமான தமிழ்ச் சொற்கள் குறித்து ஆராய்ந்தேன். என் இளவல், எந்திரப் பொறியாளர் பிரசன்னா ஒத்துழைத்தார்.

உதிரி பாகங்களை அவற்றின் உருவம், செயல்பாடு, பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தமிழாக்கியுள்ளேன். பெரும்பாலும் காரணப் பெயர்களாக வருமாறு அமைத்துள்ளேன். மிதிவண்டியின் முன்பகுதியிலும் பின்பகுதியிலும் உள்ளவற்றைத் தனித்தனியே கூற வேண்டியுள்ளது. ஏனெனில் அவை, ஒரே மாதிரியானவை அல்ல. முன்னதைப் பின்னதன் இடத்திலோ, பின்னதை முன்னதன் இடத்திலோ பயன்படுத்த இயலாது. எனவே, இரண்டும் தனித்தவை ஆகின்றன. ஆகவே, தனித் தனிப் பொருட்களாகக் காட்டியுள்ளேன். இப்போதைக்கு 153 சொற்கள் கிடைத்துள்ளன. அவை பின்வருமாறு:

Tube - மென் சக்கரம்
Tyre - வன் சக்கரம்
Front wheel - முன் சக்கரம்
Rear wheel (or) Back wheel - பின் சக்கரம்
Free wheel - வழங்கு சக்கரம்
Sprocket - இயக்குச் சக்கரம்
Multi gear sprocket - பல்லடுக்குப் பற்சக்கரம்
Training wheels - பயிற்சிச் சக்கரங்கள்

Hub - சக்கரக் குடம்
Front wheel axle - முன் அச்சுக் குடம்
Rear wheel axle - பின் அச்சுக் குடம்
Rim - சக்கரச் சட்டகம்

Gear - பல்சக்கரம்
Teeth - பல்
Wheel bearing - சக்கர உராய்வி
Ball bearing - பந்து உராய்வி
Bottom Bracket axle - அடிப்புறத் தண்டியக்கட்டை அச்சு
Cone cup - கூம்புக் கிண்ணம்
Mouth valve - மடிப்பு வாய்
Mouth valve cover - மடிப்பு வாய் மூடி

Chain - சங்கிலி
Chain link - சங்கிலி இணைப்பி
Chain pin - இணைப்பி ஒட்டி
Adjustable link - நெகிழ்வு இணைப்பி
Circlip - வட்டக் கவ்வி
Chain lever - சங்கிலி நெம்பி

Frame - சட்டகம்
Handle bar - பிடி செலுத்தி
Gripper - பிடியுறை
Cross Bar - குறுக்குத் தண்டு
Cross Bar cover - குறுக்குத் தண்டு உறை
Sissy Bar - சிறுமியர் இருக்கைத் தண்டு

Dynamo - மின் ஆக்கி
Head light - முகப்பு விளக்கு
Danger light (or) Light reflector - அபாய விளக்கு (அ) ஒளிதிருப்பி
Rearview Mirror - பின்காட்டி

Back Carrier - பொதி பிடிப்பி
Front Carrier Basket - பொதி ஏந்தி
Carrier support legs - பொதி பிடிப்பித் தாங்கு கால்கள்
Side box - பக்கவாட்டுப் பெட்டி

Stand - நிலை
Side stand - சாய்நிலை
Speedo meter (Odo meter) - வேகம்காட்டி
Fender - வண்டிக் காப்பு
Derailleurs - பற்சக்கர மாற்றி
Peg - ஆப்பு
Air pump - காற்றழுத்தி
Shock absorber - அதிர்வு ஏற்பி

Break - நிறுத்தி
Break shoes - நிறுத்துக்கட்டை
Break wire - நிறுத்திழை
Break Lever - நிறுத்து நெம்பி
Front break ankle - முன் நிறுத்துக் கணு
Back break ankle - பின் நிறுத்துக் கணு
Disc brake - வட்டு நிறுத்தி
Break connecting links - நிறுத்தி இணைப்பிகள்

Pedal - மிதிக்கட்டை
Reflecting Pedal - ஒளிதிருப்பி மிதிக்கட்டை
Pedal cover - மிதிக்கட்டை உறை
Pedal cup - மிதிக்கட்டைக் குமிழ்
Pedal rod - மிதிக்கட்டைத் தண்டு
Spindle - சுழலும் மிதிக்கூடு

Seat (Saddle) - இருக்கை
Seat Post - இருக்கை தாங்கி
Baby Seat - குழந்தை இருக்கை
Seat cover - இருக்கை உறை
Leather Seat - தோல் இருக்கை
Cushion seat - மெத்திருக்கை

Washer - நெருக்கு வில்லை
Tension washer - மிகுநெருக்கு வில்லை
Screw - திருகுமறை
Nut - ஆணி இறுக்கி
Bolt - திருகாணி
Spring - சுருள்
Bush - உள்ளாழி
Lever - நெம்பி
Rust - துரு
Balls - பொடிப்பந்துகள்
Crank - வளைவு அச்சு
Rivet - கடாவு ஆணி
Axle - அச்சு
Spring chassis - சுருள் அடிச்சட்டம்
Nose spring - சுருள் முனை
Fork - கவை
Horn - ஒலியெழுப்பி
Cable - கம்பியிழை
Knuckles - மூட்டுகள்
Clamp - கவ்வி
Ring - வளையம்
Hole - ஓட்டை
Hook - கொக்கி
Spokes - ஆரக்கால்கள்
Spoke guard - ஆரக் காப்பு
Spoke fixing screw - ஆரக்கால் திருகாணி
Spanner - மறைதிருகி
Spokes spanner - ஆரக்கால் மறைதிருகி
Screw driver - திருப்புளி
Tools - கருவிகள்
Pocket tools - பையடக்கக் கருவிகள்

Front Mud Guard - முன் மணல் காப்புறை
Back mud guard - பின் மணல் காப்புறை
Chain Guard - சங்கிலிக் காப்புறை
Dress Guard - ஆடைக் காப்புறை
Gloves - கையுறை
Head set - தலைக்கவசம்
Wrist band - மணிக்கட்டுப் பட்டை

Bell - மணி
Bell lever - மணி நெம்பி
Bell cup - மணி மூடி
Bell spring - மணிச் சுருள்
Bell frame - மணிச் சட்டகம்
Bell rivet - மணி கடாவி
Bell fixing clamp - மணிப் பொருத்தி

Lock - பூட்டு
Lock fixing clamp - பூட்டுப் பொருத்தி
Key - சாவி
Key chain - சாவிக் கொத்து
Chain lock - சங்கிலிப் பூட்டு

Inner wire - உள்ளிழை
Electrical parts - மின்னணுப் பாகங்கள்
Lighting Spoke - ஒளிரும் ஆரக்கால்
Spokes with balls - மணிகோத்த ஆரக்கால்
Extra fittings - கூடுதல் பொருத்திகள்

Foot rest - கால்தாங்கி
Baby foot rest - குழந்தைக் கால்தாங்கி
Water bottle - தண்ணீர்க் குடுவை

Racing cycle - பந்தய மிதிவண்டி
Mini cycle - சிறு மிதிவண்டி
Mountain cycle - மலை மிதிவண்டி
Foldable cycle - மடக்கு மிதிவண்டி
Wheel chair - சக்கர நாற்காலி
Beach cruiser - கடற்கரைத் துரிதவண்டி
One-wheel cycle - ஒரு சக்கர மிதிவண்டி
High-tech bike - அதிநுட்ப வண்டி
Kid cycle - சிறுவர் மிதிவண்டி
Ladies cycle - மகளிர் மிதிவண்டி
Tri cycle - முச்சக்கர வண்டி (அ) பொதி மிதிவண்டி
Cycle with motor - உந்து மிதிவண்டி

Inflating - காற்றடித்தல்
Patch - பட்டை
Patching - பட்டை வைத்தல்
Patch work - சிறு வேலை (அ) சில்லறை வேலை
Over hauling - முழுச் சீரமைத்தல்
Painting - வண்ணம் தீட்டல்
Lubrication - எண்ணெய் இடல்
Wheel bend removal - கோட்டம் எடுத்தல்

Puncture - துளை
Puncture closure - துளைமூடல்
Puncture lotion - துளைமூடு பசை
Emory paper (Abrasive sheet) - தேய்ப்புப் பட்டை (உப்புத் தாள்)
Wooden mallet - மரச் சுத்தி

Grease - உயவுப் பசை
Lubricant oil - உயவு எண்ணெய்
Waste oil - கழிவு எண்ணெய்

இந்தச் சொற்களை விடச் சிறந்த - பொருத்தமான சொற்கள் உங்களுக்குத் தோன்றினால் தெரிவியுங்கள்; மாற்றலாம். இவை தவிர மேலும் உள்ள சொற்களை, படிக்கிற நீங்கள் தெரிவியுங்கள். அவற்றையும் தமிழாக்க முயல்வோம். முதலில் சொற்களை வரையறுப்போம்; பின்னர் அவற்றைப் பயன்படுத்துவோம்.

6 comments:

சீமாச்சு.. said...

வேற ஏதாவாது நல்ல வேலயா இருந்தாப் பாருங்க அண்ணா கண்ணன். இதெல்லாம் கொஞ்சம் அதிகம் தான்.
தமிழ் மொழியை முன்னேற்றுகிற வேலையை விட்டுவிட்டு தமிழ்நாட்டையும், மக்களையும், முன்னேற்றுகிற வேலை
இருந்தால் பாருங்க. மக்கள் முன்னேறணும், தேசம் முன்னேறணும்.. இதெல்லாம் நடந்தால் மொழி தானாக முன்னேறும்.
வீடே ஆடுதாம்.. இவரு ஜன்னலுக்கு என்ன பெயிண்ட் அடிக்கலாமுன்னு ஐடியா கொடுக்கறாரு...
இதுக்கு ஒர்த்தர் வேற ஜால்ரா..."ரொம்ப தேவையான ப்திவு என்று.." என்னத்தச் சொல்ல..
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு..


posted by: Seemachu

சீமாச்சு.. said...

அய்யோடா..! voice on wings !! உங்க பயத்துக்கு ஒரு அளவேயில்லாம்ப் போயிடுச்சே..!
எப்படி எப்படி..? தமிழ் முன்னேறிடுச்சின்னா.. ஆங்கிலம் தெரிஞ்சவங்களோட 'இரும்புப்பிடி.." விலகிடும் என்று அச்சமா..?
அத்தைக்கு மீசை முளச்சிட்டா. .அவங்களும் சித்தப்பாவாகி... என்கூட..நான் அடிக்கற தம்முல ரெண்டு பஃப் வேற கேப்பாங்களேன்னு
பயமா..? ஆண்டவா.. இந்த மாதிரி ஆளுங்க கிட்டேருந்து இந்தியாவாக் காப்பாத்துடா ஆண்டவனே...

ஐயா....இந்தகாலத் தமிழகமும், எதிர்காலத்தமிழகமும் படித்து முன்னேறிய தமிழரிடமிருந்து சில எதிர்பார்ப்புகளை வைத்திருக்கிறது..
அது நிச்சயமாக. சைக்கிளில் போடும் க்ரீசுக்கு சுத்தத் தமிழ்ப்பெயர் "உயவுப்பசை" என்று வரையறைகளை எதிர்பார்த்தல் இல்லை...
நாளைக்கு நான் வளர்ந்து பெரியவனானால்.. எனக்கான வேலை வாய்ப்புக்களும், சுயமுன்னேற்றத்திற்கான ஃபார்முலாக்களும் தான்..
சுருக்கமாச் சொல்லப்போனா.."சோத்துக்கு வழி சார்..சோத்துக்கு வழி.." உயவுப்பசை சோறு போடாது..

மறுபடியும் சொல்றேன்.."அன்பின் அண்ணாக்கண்ணன்.. போய் வேற வேலையிருந்தால் அதைப் பாருங்கள்..இதையெல்லாம்.. அந்த உருப்படாத
அரசியல்வாதிகள் பார்த்துக் கொள்வார்கள்.."
என்றென்றும அன்புடன்,
சீமாச்சு....

posted by: seemachu

Voice on Wings said...

சீமாச்சு, நீங்கள் கிண்டலடிப்பதாக நினைத்துக் கொண்டு கொடுத்த உவமையிலிருந்து ஒரு உண்மை புலப்படுகிறது. அது, இரண்டு பஃப்களை இழக்கத் தயாராக இல்லாத சுயநலத்தால், அத்தை அத்தையாகவே தொடரவேண்டுமென்று விரும்பும் மன நிலை.

நீங்கள் கூறும் சோத்துக்கு வழிதான் எல்லா போராட்டங்களுக்குமான உந்துதல். இவ்வழி ஆங்கிலம் தெரிந்த ஒரு சிறுபான்மைக்குக் கிடைத்தால் போதுமென்று நீங்கள் நினைக்கலாம். அண்ணா கண்ணன் போன்ற மற்ற சிலர், இவ்வழி பரவலாக கிடைக்க ஆவன செய்ய வேண்டுமென நினைக்கலாம். "உயவுப் பசை" நிச்சயமாக மிதிவண்டி மற்றும் ஏனைய வாகனங்களை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுக்கு சோறு போடும். 'க்ரீஸ்' என்பதைத் தெரிந்திருக்கும் பத்து தமிழர்களை விட கொஞ்சம் கல்வியறிவுடன் "உயவுப் பசை" என்பதை அதன் பயன்களோடு புரிந்து கொள்ளும் நூறு தமிழர்கள் இருக்கும் நிலை மிகவும் சிறந்தது.

ஒருவன் ஆங்கில அறிவு என்ற ஒரே தகுதியால் வேலையில் அமர்ந்திருக்கும் நிலை மாறி, அவனுக்கு நிகரான அல்லது அவனைக் காட்டிலும் அதிகமான துறைசார் வல்லமை (domain expertise) பெற்றிருக்கும் (ஆங்கில அறிவில்லாத) பலரோடு போட்டியிடும் நிலை நிச்சயமாக அவனுக்கு சாதகமான ஒன்றல்ல. ஆனால், இந்தியாவுக்கு சாதகமானதே - தகுதியுள்ளவர்கள் பணியில் அமர்வது என்ற வகையில். யாரிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்ற வேண்டுமென்பதை பார்வைக்கு விட்டு விடுகிறேன்.

Unknown said...

அண்ணாக் கண்ணன் மிக நல்ல முயற்சி. அருமை., தொடருங்கள்., தமிழ் நாட்டை ஆண்டு கொண்டு, தமிழுக்காக ஒரு துரும்பையும் கிள்ளிப்போடாமல்., எதிர்கட்சியை எள்ளி நகையாடுவது என்னவகை நியாயம்?. நல்ல முயற்சிகளுக்கு எப்போதும் எதிர்ப்பு சொல்லும் கூட்டங்கள் கத்துவதைக் காதில் வாங்காமல், இப்படிப்பட்ட ஆக்கப்பூர்வ முயற்சிகளில் இறங்கி நம்மாளான பங்களிப்பை செய்து கொண்டிருப்போம். இந்த முயற்சியை கேலி செய்பவர்களின் குரைப்பை ஒரு நாளும் இலட்சியம் செய்யாதீர்கள். அய்யா சாமிகளே! ராமதாசு பண்ணுனாதான் தாண்டுகிறீர்கள். நம்மிள் ஒரு சகோதரர் செய்யும் போது பாராட்ட மனமில்லாவிட்டாலும் பாதகமில்லை., வாயை மூடிக்கொண்டிருத்தலே தமிழுக்கு நீங்கள் செய்யும் மகத்தான சேவை!!.

posted by: மரம்

Anonymous said...

Keep posting stuff like this i really like it

சோலை said...

வணக்கம்,தங்களின் இந்த முயற்சிக்கு பாராட்டுகள் தொடருங்கள் இந்த பணியையும்... நன்றி